ஆசிரியருக்கு,
அமெரிக்காவில் இலையுதிர் காலம் மனதிற்கு இனியது. மரங்களின் வண்ணப் புன்னகைகளை எங்கும் காணலாம். மொத்த சூழலும் நிறங்களடர்ந்த ஒரு ஓவியத்தைப் போல காட்சியளிக்கும். வடக்குப் பகுதியில் தொடங்கும் இந்த நிற மாற்றம் தெற்கு நோக்கி சில வாரங்களில் நகரும். கொலம்பஸ் நகரிலிருந்து பூன் முகாம் நோக்கி ஏழு மணிநேரம் காரில் பயணம். சாலைகளெங்கும் புதிதாக சுதந்திரம் பெற்ற இலைகள் எனது வாகனத்தை வழிமறித்து துரத்திக்கொண்டிருந்தன. கிராமத்துக்குள் அரிதாய் நுழையும் வாகனத்தைச் சூழ்ந்து ஓடிவரும் சிறுவர்கள் என இலைகளை கற்பனை செய்துகொண்டேன். மாலை நான்கரை மணியளவில் முகாமிற்கான இடத்தை அடைந்தேன், சில நண்பர்கள் எனக்கு முன்னரே வந்திருந்தனர்.
இந்த முறையும் Cabin என்றழைக்கப்படும் மர வேலைப்பாடுகளால் ஆன மலை பங்களாவில் முகாமை ஒருங்கிணைத்திருந்தனர். தங்குவதற்காக அருகருகில் வசதியான நான்கு மலை வீடுகள். இலக்கிய அமர்வுகளுக்காக மைய பங்களாவின் அருகில் Barn என்று சொல்லத்தக்க ஒரு கூடம். பங்களாவைச் சுற்றிய சரிவுகளில் சீரான வரிசைகளில் கிருஸ்துமஸ் மரங்கள் டிசம்பர் மாதம் நோக்கி வளர்ந்துகொண்டிருந்தன. மெல்லிய அக்டோபர் மாதக் குளிரில் மரங்கள் இலைகளைத் துறக்க தயாராக இருந்தன. மொத்த சூழலும் ‘வாழ்வு இனியது அற்ப மானுடா’ என அறிவித்துக்கொண்டிருந்தது.
வியாழன் இரவு உணவு மேசைக்கு அருகில் நண்பர்கள் சிலருடன் நீங்கள் இசை குறித்தும் இசை விமர்சனம் குறித்தும் ஆற்றிய உரை பல புதிய திறப்புகளை அளித்தது. ஒரு இசை விமர்சகன் பரந்துபட்ட அனுபவங்களையும், தத்துவப் புரிதலையும், வாசிப்பையும் கொண்டிருக்கவேண்டிய அவசியம் குறித்து பேசினீர்கள். மேற்கில் இத்தகைய விமர்சகர்கள் உள்ளனர் என்றும், நம் சூழலில் இசை குறித்து எழுதப்பட்டவை குறை நோக்கு கொண்டவை என்றும் கூறினீர்கள். சுந்தர ராமசாமி சுப்புடு போன்ற இசை விமர்சகர்கள் மீது வைத்த கடும் விமர்சனப் பார்வையையும் பகிர்ந்துகொண்டீர்கள். இசை போன்ற ஒரு அருவமான கலையை, பல்வேறு ராகங்களை, பருவடிவமானவற்றுடன் ஒப்பிட்டது நான் இதுவரை எண்ணிப் பார்த்திராத ஒரு கோணம் (‘மேற்கத்திய இசை ஒரு நீர்க் குமிழியைப் போன்றது’).
முதல் நாள் நிகழ்வுகள், வெள்ளி –
முதல் நாள் அமர்வுகளை ராஜன் சோமசுந்தரம் ஆய்ச்சியர் குரவையிலிருந்து ஒரு பாடலைப் பாடி துவக்கிவைத்தார். ஒவ்வொரு அமர்வுக்கு முன்னரும் நண்பர்கள் பழனி ஜோதி, சங்கர் கோவிந்தராஜ் ஆகியோர் பாடல்களைப் பாடி தொடக்கிவைத்தனர். நண்பர் ஸ்கந்த நாராயணன் மிருதங்கம் வாசித்து மயக்கினார்.
முதல் அமர்வாக உங்களுடைய உரை. இலக்கிய இயக்கங்கள் எப்படி தன்னியல்பாகத் தொடங்கி அதற்கான ஒரு மைய இடத்தையும் படைப்பாளிகளின் வரிசையையும் பெறுகிறது என்பதை லண்டனில் நிகழும் இலக்கிய சுற்றுலாவைச் சொல்லி விளக்கினீர்கள். ஒரு இலக்கிய வாசகனின் தனிமையையும், அவனுக்கு அவ்வப்போது ஏற்படும் உளச் சோர்வுகளையும் சொல்லி இது போன்ற இலக்கியத்துக்கான கூடுகைகள் வாசிப்பையும் சிந்தனைகளையும் சிதறாமல் குவிக்க உதவுகிறது என்றும் குறிப்பிட்டீர்கள்.
கா.நா.சு, சுந்தர ராமசாமி என்ற வரிசையில் இன்று சுனில் கிருஷ்ணன் ஒருங்கிணைக்கும் மரப்பாச்சி மற்றும் ஜப்பானில் ரா. செந்தில்குமாரின் துளிக்கனவு இலக்கிய கூடுகைகள் வரை ஒரு வரைபடத்தை அளித்தீர்கள். ஆனால் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கூடுவது போதாது என்றும் இன்னும் குறைந்த இடைவெளிகளில் சந்திப்புகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கவேண்டிய அவசியத்தையும் உணர்த்தினீர்கள், குறிப்பாக நேரடியாக சந்தித்துக்கொள்வது. விஷ்ணுபுரம் அமைப்பு ஈரோட்டிலும் கோவையிலும் ஒருங்கிணைக்கும் நிகழ்வுகளையும் எதிர்கால கனவுகளையும் பகிர்ந்துகொண்டீர்கள். நண்பர்களின் சில கேள்விகளுடன் இந்த அமர்வு நிறைவுபெற்றது.
தமிழ் சிறுகதைகள் –
அடுத்த அமர்வு சிறுகதைகளுக்கானது. கு. அழகிரிசாமியின் ‘திரிபுரம்’ கதை குறித்து மதுநிகா தன் எண்ணங்களை முன்வைத்தார். மதுநிகா குறைந்த சொற்களில் மிகத் தெளிவாக தன்னுடைய பார்வையைப் பகிர்ந்துகொண்டார். அவருடைய உரையில் கூர்ந்த இலக்கிய வாசிப்பும், தன் எண்ணங்களை முன்வைத்துப் பழகிய உள்ளமும் வெளிப்பட்டது. நண்பர்கள் இந்த கதையை ஒட்டிய சிறுகதைகளாக புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’ மற்றும் வண்ணநிலவனின் ‘எஸ்தர்’ சிறுகதைகளை குறிப்பிட்டார்கள். நீங்கள் ‘எஸ்தர்’ சிறுகதை வரட்சியைப் பின்புலமாகக் கொண்டது என்றும் அது பஞ்சம் குறித்த ஒன்றல்ல என்றும் விளக்கினீர்கள்.
ஆஸ்டின் சௌந்தர் ‘உடன்போக்கு’ சிறுகதையை ஒட்டி தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். இந்த சிறுகதையைத் தேர்ந்தெடுத்த பின்புலத்தை விளக்கினார். முசிறி, துறையூர் போன்ற இலக்கியத்தில் அதிகம் பேசப்படாத நிலப்பகுதிகளின் கதைகளையும், மக்களின் வாழ்வையும் கமலதேவி முன்வைக்கிறார் என்றும், இந்த கதையில் அடியோட்டமாக சமூகச் சிக்கல்கள் பேசப்படுவைதையும் குறிப்பிட்டார். கமலதேவியின் மற்ற சிறுகதைகளிலும் இதே பண்புகள் அமைந்திருப்பதை விளக்கினார். நண்பர்கள் பலர் சிறுகதையை ஒட்டி தம் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
நண்பர் முத்து காளிமுத்து விஷால் ராஜாவின் ‘திருவருட்செல்வி’ சிறுகதை குறித்து பேசினார். இந்த கதையில் கடனுடன் இறந்துபோன தந்தையும், கடனை அடைக்க நகரத்துக்கு வேலைக்கு வரும் ஒரு இளம் பெண்ணின் கதையும் சொல்லப்படுகிறது. பெண்கள் இதுபோன்ற சூழல்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அதைக் கையாள முனைப்புடன் உழைக்கிறார்கள் என்றும் எதிர்வினைகள் வந்தன. ஒரு கதையை வாசகனுக்கு கடத்த உரையாடல்களின் பங்கு என்ன என்பது போன்ற கேள்விகள் வந்தன. அது ஆசிரியனின் படைப்புள்ளம் சார்ந்த தேர்வு என்றும், குறிப்பிட்ட விதிமுறைகள் கிடையாது என்றும் விளக்கினீர்கள், சில எடுத்துக்காட்டுகளையும் முன்வைத்தீர்கள்.
வெண்முரசு, முதற்கனல் நாவல் –
வெண்முரசு நாவலுக்கென தனி அமர்வு நிகழ்ச்சி நிறையில் இருந்தது. பொதுவாக உங்களுடைய நாவல்கள் விஷ்ணுபுரம் கூடுகைகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால் வெண்முரசு போன்ற ஒரு சமகால காவியம் தொடர்ந்து விவாதிக்கப்படவேண்டிய அவசியத்தை ஆஸ்டின் சௌந்தர் விளக்கினார்.
மதிய உணவுக்குப் பின் நண்பர் மதன் முதற்கனலில் ஆழ்படிமங்கள் என்ற தலைப்பில் உரையாடினார். உளவியலாளர் கார்ல் யுங்கின் தீவிர வாசகர். கார்ல் யுங்கின் நூல் ஒன்றின் சில அத்தியாயங்களை தமிழில் மொழிபெயர்க்கும் வேலைகளில் இருக்கிறார். கார்ல் யுங் முன்வைத்த ‘அனிமா’ மற்றும் ‘அனிமஸ்’ என்ற பகுப்பை முதற்கனலில் பீஷ்மர் மற்றும் அம்பையின் கதாப்பாத்திரங்களுடன் பொருத்தி தன் உரையை நிகழ்த்தினார். மிகச் செறிவான உள்ளடக்கம் கொண்ட உரை. வெண்முரசு நாவலை நோக்கி இந்தக் கோணத்தில் இதுவரை கட்டுரையோ உரையோ வெளிவந்துள்ளதா என்பது தெரியவில்லை. ஆனால் மதனுடைய இந்த முயற்சி நம் முன் வீற்றிருக்கும் எண்ணற்ற சாத்தியங்களை உணர்த்தியது.
முதற்கனலில் உருவகங்கள் என்ற தலைப்பில் ஜெயஸ்ரீ உரையாடினார். தமிழ் விக்கியின் பங்களிப்பிற்காக அயராது பணியாற்றுபவர்களில் ஒருவர். மிகச் சரளமாக முதற்கனலின் சில நிகழ்வுகளையும், கதாப்பாத்திரங்களையும் முனவைத்து தன் உரையை ஆற்றினார். உரை முதற்கனல் தாண்டி வெண்முரசு நாவல்களில் சிலவற்றையும் தொட்டுச் சென்றது.
ஆஸ்டின் சௌந்தர் தன்னுடைய முன்னோர்கள் பாம்புகளாகவே இருந்திருக்கவேண்டும் என்ற எண்ணம் தனக்குள் இருப்பதாக கூறினார். நீங்கள் பாம்புகள் எனும் தொன்மம் இந்தியா மட்டுமல்லாது உலகலாவிய பண்பாடுகள் அனைத்திலும் மிக முக்கிய இடம் வகிப்பது என்று விளக்கினீர்கள்.
கம்பராமாயணம் –
கம்பராமாயண அமர்வு நண்பர்கள் விசு, பழனி, பிரபு, விஜய் ரங்கநாதன், ராஜி, ராதா சௌந்தர் ஆகியோரின் பங்களிப்புடன் நிகழ்ந்தது. பழனி, ராஜி, ராதா சௌந்தர் சில பாடல்களைப் பாடியும், விஜய் மற்றும் பிரபு வாசித்தும் காட்டினார்கள். நீங்கள் கம்பராமயணப் பாடல்களை கவிதைகளின் உள்ளடக்கங்களைக் கண்டுகொள்வதைப் போல அணுக வேண்டும் என்று கூறினீர்கள். நண்பர் விஜய் சங்க இலக்கியப் பாடல்களில் பல ‘உலகு’ என்ற வார்த்தையில் தொடங்குவதாக கூறினார். நீங்கள் ‘நீலம்’ நாவலும் உலகு என்ற வார்த்தையில் தொடங்குவதை குறிப்பிட்டீர்கள்.
கம்பராமாயண அமர்வின் முக்கியத்துவம் நன்றாகப் புரிகிறது. ஆனால் இந்த நிகழ்வின் வெற்றி மேடையில் உள்ளவர்களின் பங்களிப்பைத் தாண்டி, அவையில் உள்ள எங்களைப் போன்றவர்களின் ஆர்வத்தையும் சார்ந்திருகிறது என்பதே உண்மை.
நாவல்கள் –
மாலையில் நாவல்கள் குறித்த இரண்டு அமர்வுகள். ‘ஆழி சூழ் உலகு’ நாவல் குறித்து நண்பர் பழனி ஜோதி உரையாடினார். தானக்கே உரிய குரலுடன், தீவிரமாக நாவல் குறித்த தன் பார்வையை முன்வைத்தார். தொடக்கத்தில் அந்த நாவலுக்குள்ளும், கதைக் களத்துக்குள்ளும் செல்ல சற்று தடுமாறியதாகவும், பின் நாவல் தன்னை முழுதாக உள்ளிழுத்துக்கொண்டதாகவும் சொன்னார். நீங்கள் ‘டி குரூஸ்’ என்ற பெயருக்கான காரணங்கள் மற்றும், போர்ச்சுகீசியர்களின் வருகை, மரக்காயர்கள் எப்படி கடலோர கிராமங்களில் வரிவசூல் செய்தனர் என்ற வரலாற்றையும் விவரித்தீர்கள். இந்த நாவல் தனக்கே உரிய உள்ளடக்கத்தையும் அழகியலையும் கொண்டது என்றும், நாவலில் படிமங்கள் மற்றும் புனைவுத் தருணங்களுக்கான எண்ணற்ற சாத்தியங்களையும் குறிப்பிட்டீர்கள்.
அடுத்த நாவல் அமர்வில் நண்பர் விவேக் தல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு (Resurrection) குறித்து பேசினார். அமெரிக்க விஷ்ணுபுரம் குழுவை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஆளுமைகளில் ஒருவர். அயல் இலக்கியம், தத்துவம், கலை சினிமா, இசை என பல தளங்களின் ஆர்வலர். நாவலின் சுருக்கத்தைச் சொல்லி, இந்த நாவல் தல்ஸ்தோயின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு தருணத்தை ஒட்டி எழுதப்பட்ட ஒன்று என்ற இணைத் தகவலையும் பகிர்ந்துகொண்டார். நாவல் நிகழ்ந்த காலத்தின் ஒரு சித்திரத்தையும் அளித்தார். அவருடைய உரை நேர்த்தியான வடிவத்துடனும், ஆழந்த பார்வையுடனும் அமைந்திருந்தது. நீங்கள் இங்கு புத்துயிர்ப்பு அடைவது நெகுல்டாஃப் மட்டுமல்ல, மசலோவாவும்தான் என்று உங்கள் பார்வயை முன்வைத்தீர்கள்.
மாலை நடைக்கு சாலையில் ஆழமான ஒரு சரிவை நோக்கிச் சென்றோம். நண்பர்கள் பலர் மீண்டும் மேடேறுவதற்கு தயக்கப்பட்டு நின்றுவிட்டனர், எஞ்சிய சிலருடன் திரும்பினோம். நீங்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் மேட்டில் ஏறிக்கொண்டிருந்தீர்கள். உங்களுடன் நான், ராஜன், நண்பர்கள் லக்ஷமன் தசரதன், ஸ்ரீராம் ஆகியோர் சற்று ஆழ்ந்த மூச்சுடன் நடந்துகொண்டிருந்தோம். (நான் – “ராஜன் இப்ப ஒரு பாட்டு பாடுங்க பாப்போம்”. ராஜன் – “பாட்டா இப்பவா?” . நீங்கள் – “பாடலாமே! அந்தநாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே…“).
இரவு உணவிற்குப் பிறகு நண்பர் பிரபு இயக்கிய ‘In the Beginning’ என்ற குறும்படம் திரையிடப்பட்டது. போர்ட்லண்ட் நகரில் சிறைவாசிகள் சிலரை வைத்து எடுக்கப்பட்ட, சுயாதீன திரைப்படங்களுக்கே உரிய திரைமொழி கொண்ட ஒரு படம். இசை, ஓவியம், திரைப்படம், மொழிபெயர்ப்பு என பல தளங்களில் இயங்கிக்கொண்டிருப்பவர்கள் இணைந்திருப்பது விஷ்ணுபுரம் குழுவின் பரந்த முகத்தைக் காட்டுகிறது.
இரவு பதினொன்றரை மணி வரை நீங்கள் பல்வேறு தலைப்புகளில் தளர்வில்லாமல் உரையாடினீர்கள். நீங்கள் சொல்லும் பேய்க் கதைகள் மீது விஷ்ணுபுர நண்பர்களுக்கு பெரு விருப்பு. இரண்டு பேய்க் கதைகளைக் கூறினீர்கள். தனித்த மலைமாளிகையில், குறைந்த விளக்கு வெளிச்சத்தில், மெல்லிய இரவுக் குளிருடன், மரங்களின் இலை உரசல்களுடன் பேய்க் கதைகள் கேட்பது ஒரு பிரத்யேக அனுபவம். பின்னர் பல்வேறு நகைச்சுவைக் கதைகளைப் பகிர்ந்துகொண்டீர்கள், நண்பர்கள் வெடித்துச் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
நண்பர்கள் ஷங்கர் பிரதாப், மதன், அருண் (ஓவியர்), செந்தில், சீனி, மகேந்திரன் ஆகியோருடன் அறையைப் பகிர்ந்துகொண்டேன். அறை முழுக்க வசதியான அடுக்கு மெத்தைகள். மூன்று நாட்களும் எங்களுக்குள் பலதரப்பட்ட இலக்கிய உரையாடல்களை இரவு ஒன்றரை மணிவரை நிகழ்த்திக்கொண்டோம். இவர்களுடன் நண்பர் விவேக்கும் இணைந்துகொண்டார். முதல் நாள் கவிதை விவாதத்திற்கு ஆத்மாநாம், இசை மற்றும் ஃபிராங்க் ஒஹாரா என மூன்று கவிஞர்களின் கவிதைகளை வாசித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டோம். இரவு ஒரு மணிக்கு கவிதைகளை வாசித்து விவாதிப்பது எனக்கு முதல் முறை, கடைசியாகவும் இருக்காது. மூன்று நாட்களும் நான்கு மணிநேர உறக்கம்தான், ஆனாலும் அமர்வுகளில் சோர்வில்லாமல் உற்சாகமாக பங்கெடுக்க முடிந்தது.
இரண்டாம் நாள் நிகழ்வுகள், சனிக்கிழமை –
சனிக்கிழமை குளிர்ந்த வானிலையும் பலத்த காற்றுமாகத் தொடங்கியது. மரங்களிலிருந்து இலைகள் விடுபட்டு நாள் முழுக்க காற்றில் அலைந்துகொண்டிருந்தன. அனைவரும் அடர் உடைகளுடன் நிகழ்வுகளை எதிர்கொண்டோம்.
தத்துவம், ஜெயமோகன் –
இரண்டாம் நாளின் முதல் அமர்வாக அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த தத்துவம் குறித்த உங்கள் உரை. எந்த ஒரு கருத்தையும் தத்துவப்படுத்த தனி மனிதர்களை நீக்கிவிட்டு மானுடம் நோக்கிய பொதுவான ஒன்றாக மாற்றிக்கொள்வது அடிப்படை என்று குறிப்பிட்டீர்கள், அதற்கு எடுத்துக்காட்டுகளையும் அளித்தீர்கள். ஒரு கருத்தை எதிர்கொள்கையில் மனதில் உதிக்கும் Fallacies குறித்தும் பேசினீர்கள். ஈரோடு மலைத் தளத்தில் விஷ்ணுபுரம் குழு சார்பாக ஒருங்கிணைக்கப்படும் தத்துவ வகுப்புகள் குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டீர்கள். தத்துவம் குறித்த கேள்விகளையும் தவிர்த்துவிட்டீர்கள், முறையான புரிதல் இல்லாமல் மற்றவர்களுடன் உரையாடுவது கூட எதிவிளைவுகளையே உருவாக்கும் என்று கூறினீர்கள். தத்துவக் கல்வி என்பது முறையாக குருவின் மூலமாகவே கற்றுக்கொள்ளப்படவேண்டும் என்றும், மேற்கிலும் இதே வழிமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் சொன்னீர்கள்.
ஆங்கில, அறிவியல் புனைக்கதைகள் –
ஆங்கில மற்றும் அறிவியல் புனைக்கதைகளுக்கான அமர்வுகள் தொடர்ந்தன. நண்பர் நிர்மல் ஷெர்லி ஜாக்சன் எழுதிய ‘The Lottery’ என்ற கதை குறித்து உரையாடினார். வெண்முரசின் தீவிர வாசகர், தொடர்ச்சியாக வெண்முரசு குறித்த பார்வைகளை குழுவில் பகிர்ந்துகொண்டிருப்பவர். இந்திய தத்துவம், அயல் இலக்கியம் ஆகிய தளங்களில் ஆர்வம் உள்ளவர். இந்த சிறுகதை எழுதப்பட்ட சூழல், இதன் ஆசிரியருக்கு வந்த கடுமையான எதிர்வினைகள் என கதைக்கான பின்புலத்தை விவரித்தார். தன்னுடைய உரையை கதையின் சிறு உள்ளடக்கத்தை அளித்து முடித்துக்கொண்டார். இந்த கதை அமெரிக்காவில் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்துகொண்டேன்.
அருண்மொழி நங்கை கதையில் வெளிப்படும் வன்முறை மனிதனின் ஆதிப் பண்புகளில் ஒன்று என்றும், உர்சுலா லெ கெய்ன் எழுதிய ‘The Ones Who Walk Away from Omelas’ சிறுகதையுடன் கொண்ட ஒற்றுமையையும் குறிப்பிட்டார். நீங்கள் உர்சுலாவின் சிறுகதை ‘Lottery’ சிறுகதையின் தொடர்ச்சிதான் என்று சொன்னீர்கள். எழுத்தாளர் சுஜாதா இதை தமிழில் மொழிபெயர்த்த செய்தியையும் பகிர்ந்துகொண்டீர்கள்.
ஆர்தர் சி கிளார்க் எழுதிய அறிவியல் புனைக்கதை ‘The Nine Billion Names of God’ குறித்து நண்பர் விஜய் ரங்கராஜன் உரையாடினார். தன்னுடைய பார்வையை சிறப்பாகவே முன்வைத்தார். பல கோணங்களில் ஊகங்களைத் தோற்றுவிக்கும் ஒரு சிறுகதை. நண்பர்களின் எதிவினைகள் அதை உணர்த்தின. நீங்கள் இந்த கதையின் முடிவு ஓ ஹென்றி கதைகளைப் போல வாசகனை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நோக்கில் எழுதப்பட்ட ஒன்றுதான் என்று குறிப்பிட்டீர்கள். மேலும் இந்த சிறுகதை நீங்கள் நடத்திய ‘சொல்புதிது’ சிற்றிதழில் எம். எஸ். அவர்களின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த செய்தியைப் பகிர்ந்துகொண்டீர்கள்.
கவிதைகள் –
மதிய உணவுக்குப் பிறகு கவிதைகளுக்கான நேரம். கவிஞர் வேணு தயாநிதி கவிதைகளின் பல்வேறு வகைமைகள் மற்றும் அவற்றின் பரிணாமங்கள் குறித்து உரையாடினார். கணிப்பொறியில் பவர் பாயிண்ட் வாயிலாக கருத்துக்களைத் தொகுத்துக்கொண்டு பேசியது அவருடைய அறிவியல் பின்புலத்தை உணர்த்தியது. மிக உற்சாகமான உடல்மொழியுடன் சரளமாக உரையாடினார், அவையினரும் உரையை ஊக்கத்துடன் கவனித்தனர்.
அடுத்து ஆங்கில கவிதைகளுக்கான அமர்வு. எமிலி டிக்கின்சனின் கவியுலகம் குறித்து ரெமிதா சதீஷ் பேசினார். தெளிவான ஆங்கிலத்தில் எமிலி டிக்கின்சனின் கவிதைகள் குறித்த ஒரு முழுச் சித்திரத்தை அளித்தார். தர்க்கங்கள் நீங்கிய பாவனைகளற்ற உளம் சார்ந்த வெளிப்பாடாக அவருடைய உரை அமைந்திருந்தது. ஒரு கவியை முழுதாக உள்வாங்கிக்கொண்டு, அந்த உலகில், கவிதைகள் அளிக்கும் மயக்கத்தில் அலைபாயும் ஒருவரால் மட்டுமே இத்தகைய உரையை அளிக்க இயலும். எனக்கு அவர் மீது சற்று பொறாமையும் ஏற்பட்டது. இதே போல ஒரு கவியின் கவிதைகளை மனதில் சுமந்துகொண்டு பித்துடன் அலையவேண்டும் என எண்ணிக்கொண்டேன்.
எடித் வார்ட்ரென், சில்வியா பிளாத் என பெண் எழுத்தாளர், கவிஞர்களின் வரிசையைக் குறிப்பிட்டீர்கள். சில்வியா பிளாத்தின் கவியுலகம் எமிலி டிக்கின்சனை விட சற்று குறைந்த ஒன்று என்று குறிப்பிட்டீர்கள். எமிலி டிக்கின்சனை நம் மரபில் ஆண்டாளுடன் ஒப்பிடலாம் என்று சொன்னீர்கள். தர்மபுரியில் வேலை செய்த நாட்களில் எமிலி டிக்கின்சனின் கவிதைகளை நண்பர்களுடன் ஒரு நாள் முழுக்க வாசித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டீர்கள்.
கவிஞர் இசை கவிதைகள் குறித்து வெங்கட் பிரசாத் உரையாடினார். சொல்வனம் இதழில் அவருடைய சில கவிதைகள் வெளிவந்துள்ளன. இசையின் கவிதைகளை தன் வாழ்வின் அனுபவங்களுடன் பிணைத்து உரையை அமைத்திருந்தார். முதல் முறை மேடையில் உரையாடுபவருக்குரிய தயக்கங்கள் ஏதுமில்லாமல் தன் தரப்பை அழகாக முன்வைத்தார். நீங்கள் இசையின் கவிதைகளை குறிப்பிடுகையில் ‘பகடி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது சரியல்ல என்றும், பகடியில் எப்போதுமே ஒரு எதிமறை அம்சம் ஒளிந்துகொண்டிருக்கும் என்று குறிப்பிட்டீர்கள். கவிதைகளை என்றுமே தலைப்புகளை ஒட்டியே வாசிக்கவேண்டும் என்றும் விளக்கினீர்கள்.
தமிழில் கவிஞர் இசையின் கவிதைகளுக்கு ஒரு நீண்ட மரபு உள்ளது என்றும், அவரை கவிஞர் ஞானக்கூத்தனுடன் ஒப்பிடலாம் என்றும் கூறினீர்கள். ஞானக்கூத்தனின் சலவைக்கல் குறித்த ஒரு கவிதையை முழுதாகச் சொல்லி இருவருடைய கவிதைகளிலும் வெளிப்பாட்டு முறையில் உள்ள ஒற்றுமையை நிறுவினீர்கள்.
இசை –
அடுத்த அமர்வு ‘Music Appreciation and Review’ என்ற தலைப்பில். ராஜன் சோமசுந்தரத்திடம் கேட்கவேண்டிய கேள்விகளை நண்பர்கள் முன்னரே தொகுத்து அனுப்பியிருந்தனர். அவற்றை ரெமிதா சதீஸ் ஒருங்கிணைத்தார். ராஜன் நண்பர்களின் கேள்விகளுக்கு தன்னுடைய பார்வையையும், இசை வாழ்வில் கடந்து வந்த அனுபங்களையும் பகிர்ந்துகொண்டார். கிராமி போன்ற இசைக்கான விருதுகள் அமெரிக்காவில் எப்படி வழங்கப்படுகின்றன, ஒரு மெட்டு நகலெடுக்கப்படுகிறதா, அதை எப்படி உணர்ந்துகொள்வது என்பது போன்ற கேள்விகள். சில சுவாரசியமான தமிழ் சினிமாப் பாடல்களின் எடுத்துக்காட்டுகளை முன்வைத்து பதில்களை வழங்கினார். தற்போது இசையமைத்து முடித்திருக்கும் மலையாளத் திரைப்படம் குறித்தும் பேசினார். நீங்கள் இந்தியா முழுக்க கிராமத்திய இசையின் மெட்டுகளும் அவற்றின் போக்கும் ஒரே போலிருப்பதை விளக்கினீர்கள்.
Hamlet –
மாலை அமர்வாக அருண்மொழி நங்கை ஷேக்ஸ்பியரின் ‘ஹாம்லெட்’ குறித்து உரையாடினார். அவருடைய இயல்பான படபடக்கும் வேகத்துடன் ஹாம்லெட் குறித்த விரிவான தொகுப்பை அளித்தார். ஹாம்லெட் முழுமையான படைப்பாக அன்றைய இலக்கியவாதிகளால் ஏற்றுக்கொள்ளப்படமால் போனதையும் குறிப்பிட்டார். நாடகம் எனும் கலைவடிவம் ஏன் அன்றைய சூழலில் பிரபலமாக இருந்தது என்பதையும் விளக்கினார்.
தொழில்நுட்பம் –
அடுத்ததாக தொழில்நுட்பம் குறித்த அமர்வு, ‘Technology Impact’ எனும் தலைப்பில் அமைந்திருந்தது. நண்பர் கனடா மகேந்திரன் சரளாமாக உரையை எடுத்துச் சென்றார். தமிழ் விக்கிக்கு தொடக்கத்தில் தளம் அமைத்துக் கொடுத்தவர். தொழில்துறை தாண்டி பேசுவது இதுவே முதல் முறை என்றும் குறிப்பிட்டார். Large Language Models எனும் கருத்தை முன்வைத்து செயற்கை நுண்ணறிவு, Google Search என்று அவருடைய உரை நகர்ந்தது. நீங்கள் இது போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மொழியியலில் ஆற்றவேண்டிய பங்கை சுருக்கமாகச் சொன்னீர்கள்.
மாலை நடை, இரவு உணவுக்குப் பிறகு உங்களுடன் பரந்த கேள்விகளுடன் ஒரு உரையாடல். நண்பர்கள் மீண்டும் பேய்க்கதை கூறுமாறு வேண்டினார்கள், நீங்களும் சொன்னீர்கள். உரையாடல் ஈரட்டியில் உள்ள சோளகர்கள், திரைப்படம் என்று நகர்ந்துகொண்டிருந்தது. நீங்கள் உங்களுடைய தந்தை மற்றும் தமையனுடைய உடல்மொழியை உற்சாகமா நடித்துக்காட்டினீர்கள். இரவு பதினொன்றரை வரை வெடிச்சிரிப்புகள். பிறகு அரைமனதோடு கலைந்தோம்.
விடைபெறுதல், ஞாயிறு –
ஞாயிறு காலை அனைவரும் ஊருக்கு கிளம்பும் ஆயத்தங்களில் இருந்தோம். நான் ‘பின் தொடரும் நிழலில் குரல்’ நாவலில் உங்களுடைய கையொப்பம் பெற்றுக்கொண்டேன். நாவலின் அட்டைப்படம் குறித்து வினா எழுப்பினீர்கள், நான் நாவலை சென்ற வருடம் வாசித்திருந்தேன், ஆனால் அது நாவலில் ஒரு பகுதியாக இடம்பெற்றிருந்தது நினைவிலில்லை. முந்தைய நாட்களில் அட்டைப்படங்கள் எப்படி வடிவமைக்கப்பட்டன என்று விளக்கினீர்கள். எனக்கு ‘புறப்பாடு’ நாவலின் சென்னை அத்தியாயங்கள் நினைவுக்கு வந்தன. அருண்மொழிய நங்கை அவர்களிடம் ‘பெருந்தேன் நட்பு’ நூலில் கையொப்பம் பெற்றுக்கொண்டேன். நண்பர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன்.
கடந்த இரு ஆண்டுகளில் கோவை, ஈரோடு, பூன் என விஷ்ணுபுரம் அமைப்பின் நான்கு பெரிய இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அமைந்தது எனது நல்லூழ். மூன்று நாட்களின் நினைவுகளும் மனதில் அலையடிக்க, அடுத்த ஆண்டுக்கான எதிர்பார்ப்புகள் ஊடாட, நிறம் மாறிக்கொண்டிருந்த மரங்களை நோக்கிக்கொண்டு வடக்கு நோக்கி பயணித்தேன். முகாமை ஒருங்கிணைக்க உதவிய தோழமைகளையும் நன்றியுடன் எண்ணிக்கொண்டேன்.
அன்பும் நன்றிகளும்,
பாலாஜி ராஜூ