பூன் முகாம், கடிதங்கள்

வணக்கம் ஜெ

இந்த அக்டோபர் மாதம் 6, 7 தேதிகளில் பூன் முகாமில் கலந்துகொள்ளும் வாய்ப்புப் பெற்றவர்களில் நானும் ஒருவன். சென்ற வருடம் தவற விட்டதால், இந்த முறை பூன் முகாம் அறிவிக்கப்பட்ட போது உடனே பதிவு செய்துகொண்டேன். மனைவி தாமரையும் வெண்முரசு வாசகி, அவருக்கும் முகாமுக்கு வர விருப்பம். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டியிருந்ததால் எங்களில் ஒருவர் மட்டும் பங்கெடுக்க முடியும் என்ற நிலை. கடந்த பத்து ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் உங்கள் எழுத்தைப் படித்துக் கொண்டிருக்கும், மானசீக உரையாடலில் கற்றுக்கொண்டிருக்கும் எனக்கு உங்களோடு மூன்று நாட்கள் உடனிருக்கும் வாய்ப்பு எவ்வளவு மதிப்புடையது என்று தெரியுமாதலால் என்னைப் போக சொன்னார்

 உண்மையில் பல மாதங்களாகவே இந்த நாட்களுக்காக காத்திருக்க தொடங்கியிருந்தேன், 5-ஆம் தேதி கிளம்பும்போதே பேரும் கொண்டாட்ட மனநிலையும் கூடவே கொஞ்சம் பதட்டமும் சேர்ந்து கொண்டது. சார்லட் விமான நிலையத்தில் இறங்கியதும் பூன் வரை காரில் சேர்ந்து செல்லும் நண்பர்களுடன் இணைந்து கொண்டேன். நான், பாஸ்டன் வேல்முருகன், மாண்ட்ரீல் ராமன் ஆகியோருக்கு பாஸ்டன் பாலாதான் ஓட்டுநர். ஒரு வாடகைக் காரை எடுத்துக்கொண்டு உள்ளே அமர்ந்து மற்ற நண்பர்களிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்துவிட்டு, வண்டியை கிளப்பப் பார்த்தார் பாஸ்டன் பாலா. கியர் விழவில்லை. ஒரு பத்து நிமிடம் நான்கு எஞ்சினியர்கள் சேர்ந்து என்னவெல்லாமோ செய்தோம். கூகிளில் கூட தேடினோம். கடைசியில் வண்டியை ஸ்டார்ட் செய்யவில்லை என்று கண்டுபிடித்தோம். ஒரு பெரிய சிரிப்புக்குக்கு அப்புறம் இதை முகாமில் போய் யாரிடமும் சொன்னால் நம் விஷ்ணுபுர வழக்கப்படி நாங்கள் நால்வரும் ஒரு தொன்மமாக ஆகிவிடுவோம் என்பதால் மூச்சுவிடுவதில்லை என்று முடிவு செய்து கொண்டோம்

காரிலேயே இலக்கிய பேச்சு தொடங்கிவிட்டது. ஒவ்வொருவரும் என்ன படிக்கிறோம் என்று பேசி, பாலாவின் சொல்வனம் இதழ், உங்களின் எழுத்து, சிறுகதைகளில் எது பிடிக்கும் என்று பேசிக்கொண்டு இருந்தோம், குமிழ் மற்றும் குருவி சிறுகதைகள் பற்றி விரிவாக பேசினோம். பாலா ஒரு இலக்கிய விமரிசனம் ஏன் முக்கியம் என்றும், அவர் அனுபவத்தில் மாறி வரும் இலக்கிய சூழல் பற்றி சொன்னார், மற்றபடி எங்களை பேசவிட்டு வேடிக்கை பார்த்தார். மற்ற மூவரும் அதி உற்சாகமாக பேசிக்கொண்டு இருந்தோம்

 உண்மையில் அடுத்த மூன்று நாட்களும் மாறாத ஒன்று, இங்கு வந்த எழுவது பேரும் காலை எழுவது முதல் ஒருவருக்கொருவர் பேசிப்பேசி இனித்து மேலும் பேசிக் கிறங்கினோம், மயங்கி உறங்குவது வரை. தயக்கமில்லாமல் கலந்து பழகி நட்புக்கொண்டாட இப்படி ஒரு கூட்டம் கிடைத்தது இதற்கு முன்பு எப்போதோ படிக்கும் காலத்தில். வழக்கமாக அமெரிக்காவில் கூடுகைகளில் பேசும் வேலை, விசா, சொத்து, கார் தற்பெருமைகள் எதுவும் இங்கு பேசுபொருள் இல்லை. நான் மட்டும் இது போன்ற உள்ளூர் கூடுகைகளில் தனியன் மற்றும் பேச்சை, மற்ற ஆட்களை தவிர்த்து ஓடுபவன் என்று நினைத்தேன், பூன் வந்த நண்பர்கள் பலர் இப்படி என்று இங்கு வந்து அறிந்தேன். ஆனால் இங்கு எல்லோரும் வேறொருவராக இருந்தோம், பேச, கேட்க, கற்க, பிறரோடு இணைந்து சிரிக்க விழைந்தோம்

உண்மையில் இந்த குழுவில் எவரும் சாதாரணர்கள் இல்லைசமூக நோக்கிலும், தொழிலும், இலக்கிய பங்களிப்பிலும் பலர் சாதனையாளர்கள். அந்த வேறுபாடு சிறிதும் பாரா குமுகம் இது

 நீங்கள் உங்கள் எழுத்துக்களால், உரைகளால் அளிக்கும் அறிவு, வாழ்வியல் நெறிகள், மதிப்பீடுகள், விழுமியங்கள் இவற்றுக்கெல்லாம் வாழ்நாளெல்லாம் நன்றி சொல்வேன். அதற்கு மேலும் இப்படி ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி அளித்து இந்தியாவில் இருந்து வந்து உடனிருந்து வழி நடத்துகிற உங்களுக்கு மென்மேலும் அன்பும் நன்றிகளும். இந்த முகாமில் உங்களை முதன்முதலில் நேரில் பார்க்கிறேன். பல முறை பலரும் சொல்லிக் கேட்டதுதான் என்றாலும் உடன் இருக்கும் அனுபவம் பெரும் பரவசமே. உற்சாகமும் சிரிப்புமாக இருந்தீர்கள். ஒவ்வொரு அமர்வின் இறுதியிலும் தேவையான வழிகாட்டல், தொகுத்துத் தருதல், மேம்படுத்துதல் என்று ஒரு மூத்தோராக, மாதிரி மனிதராக நின்றீர்கள். என்ன, உங்களோடு மாலை நடையில்தான் நாங்கள் பலர் அந்த செங்குத்தான சாலையில் உடன் வர முடியாமல் திணறினோம். ஒரு முப்பது பேரில் ஆரம்பித்து மூன்று பேரில் முடித்தோம்.  

நான் உங்களோடு பேசிய ஓரிரண்டு முறையும் படபடத்து உளறினேன். முதல் நாள் நீங்கள் காரில் இருந்து இறங்கிய போதே நண்பர்கள் எல்லாம் சூழ்ந்து கொண்டோம். கை கொடுத்து ஏதோ சொன்னேன். என்ன சொன்னேன் என்று கூட பின்னர் யோசித்தால் நினைவு இல்லை

 முகாமில் அமர்வுகள் ஒவ்வொன்றும் மிக சிறப்பாக இருந்தது, நடத்திய நண்பர்கள் அந்தந்த பொருளில் ஆழமான வாசிப்பு கொண்டிருந்தார்கள், பங்கேட்பாளர்களிடம் இருந்து நல்ல கேள்விகள் வந்தன. அமர்வின் முன் பாடல் மற்றும் இசையுடன் தொடங்கி வைத்தவர்கள் மிக மேம்பட்ட அனுபவத்தை வழங்கினார்கள். இதில் பலர் கூட்டத்தில் இருக்கும்போது சாதாரணமாக பேசிக்கொண்டு இருந்துவிட்டு, அங்கு போய் நின்ற சில வினாடிகளில் அவர்களில் இருந்து வேறொருவர் வெளிப்பட்டு பிரகாசித்தபோது பிரமிப்பாக இருந்தது

6-ஆம் தேதி ஆரம்பிக்கும்போது உங்கள் உரையில் ஒரு அமர்வில் எப்படி கவனிப்பது, எப்படி ஒருவரின் கருத்தை சுருக்கிச் சொல்லி, அதை மறுத்து உரைப்பது என்பது மிக உபயோகமாக இருந்தது. கம்பராமாயண அமர்வில் பாடல்கள் சரியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. காவிய சுவையை எப்படி அடைவது என்று சொல்லி அதை மெருகேற்றினீர்கள். வெண்முரசு அமர்வில் நான் மூன்று முறை வசித்து இருக்கும் முதற்கனலில் மேலும் நான் அறியாத பல அடுக்குகளை அறிமுகப்படுத்தினார்கள் மதனும் ஜெயஸ்ரீயும், அடுத்து வந்த சிறுகதைகள் மற்றும் நாவல் அமர்வுகள் நல்ல விவாதங்களை உள்ளடக்கி இருந்தது. என் வாசிப்பை கூர்படுத்திக்கொள்ள உதவியது

 6-ம் தேதி எனக்கு ஓரளவு பழகிய களம் என்றால், 7-ஆம் தேதி ஆங்கில நாவல்கள், ஆங்கில நாடகம், இலக்கியம் என்று கொஞ்சம் அன்னியமான அமர்வுகள். ஆனால் இதற்கு முன் தயாரிப்பாக படைப்புகள் சிலவற்றை படித்திருந்தேன். நிர்மல், விஜய், ராம்குமார், அருண்மொழி மேடம், மகேந்திரா எல்லோரும் அடித்து ஆடினார்கள். குறிப்பாக கவிதைகளுக்கான அமர்வு. வேணுவின் அறிமுகமும், ரெமிதா மற்றும் வெங்கட்டின் ஆழமான உரைகளும் வெறுமே வாசித்து நன்றாக இருக்கிறது அல்லது இல்லை என்பதை தாண்டி அதில் உள்ள நுட்பங்கள் மற்றும் வகைகளைப் புரிந்து கொள்ள உதவியது. பல மாதங்கள் அல்லது வருடங்கள் செலவிட்டு அறிந்துகொள்ள வேண்டிய நுணுக்கங்களை தொண்ணூறு நிமிடங்களில் ஒவ்வொரு அமர்வும் வழங்கின

இந்த முகாம் நடத்த பல மாதங்களாக பெரும் உழைப்பை நல்கிய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியும் அன்பும். தங்குமிடம், உணவு, சிற்றுண்டி என்று ஓடி ஓடி உழைத்தார்கள். அதனால் ஒரு சிலரால் சில அமர்வுகளில் பங்கெடுக்க முடியாமல்கூட ஆனது, விடுபடும் என்பதால் பெயர்களை குறிப்பிடுவதை தவிர்க்கிறேன். உங்கள் அனைவர் முகங்களையும், செயலூக்கத்தையும் மனம் நிறைந்த நன்றியுடன் நினைக்கிறேன்.

பணிவன்புடன்,

பாலா நாச்சிமுத்து

முந்தைய கட்டுரைமதுரை புத்தகக் கண்காட்சியில்…
அடுத்த கட்டுரைசினிமா- கடிதம்