தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் – பூன் 2023

ஜெயமோகன் பதிவுபூன் முகாம் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)

பையணைப்‌ பஃறலைப்‌. பாந்தள்‌ ஏந்திய
மொய்ந்நிலத்‌ தகளியில்‌: முழங்கு: நீர்நெயின்‌
வெய்யவன்‌ விளக்கமா மேருப்‌ பொன்திரி
மைஅடுத்‌ தொத்தது மழைத்த வானமே

(உரை): ஆதிசேடன்‌ தாங்கும்‌, இந்த நிலமேஅகலாகவும்‌; கடலே நெய்யாகவும்‌, மேருமலை திரியாகவும்‌, ஞாயிறு.விளக்காகவும்‌. அமைந்திருக்க: அந்த விளக்குப்‌ புகையினால்‌, வானம்‌ இருண்டது. போன்று வானத்தில்‌ முகில்‌ மூட்டம்‌ காணப்‌ பட்டது.

மேகமூட்டம் என்பதை விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் என நினைக்கிறேன். அமெரிக்கத் தமிழர் கடல்நீர்; அதில் அகல் விளக்கின் குழிவில், இலக்கியத்தை விரும்புவோர் என்னும் நெய்யினை சிக்கெனப் பற்றிக் கொண்டு பூன் மலை என்கின்ற பொன்திரி கொழுந்து விட்டெரியவே அதிலிருந்து கிளம்பிய சிந்தனை மூட்டமே மேகமூட்டம் எனலாமா?

அதன் தொடர்ச்சியாக திசையைக் காண்பிக்கும் கொல்லன், அந்த மேகக்கூட்ட மழைக் காலத்துக் கரிய மேகமாகிய கரிக் குவியலில் வாடைக் காற்றாகிய பெரிய ஊதுலைத் துருத்தியின் வலிமையைக் கொண்டு ஊதி, மின்னல் நெருப்பெழச் செய்து வெளிப்படுத்துகினற கொல்லன்பட்டரையாகப் பார்க்கிறார் கம்பர்:

மாதிரக் கருமகன் மாரிக் கார்மழை
யாதினும் இருண்ட விண் இருந்தைக் குப்பையின்
கூதிர் வெங்கால் நெடுந் துருத்திக் கோள் அமைத்து
ஊது வெங்கனல் உமிழ் உலையும் ஒத்தவே.”

இந்த மாதிரி எல்லாம் வெம்மையான நெருப்புச் சுடர்கள் பொறி பறக்கும் என எண்ணி என்னுடைய கம்பளிச்சட்டையை கழற்றி விட்டு ஒயிலாகக் குளிரில் நின்றிருந்தேன். உஷ்ணம் மூளைக்குள் அனலாக தகித்தாலும் நெஞ்சில் கபம் தங்கி ஜலதோஷம் பிடித்துக் கொண்டது. அடுத்த முறை மறக்காமல் தலைக்கு குல்லா, காதுக்கு மஃப்ளர், கழுத்துக்குப் போர்வையுடன் பவ்வியமாகச் செல்ல வேண்டும்.

அறிவுப்பூர்வமான தருக்கத்திற்கும், எதார்த்தத்திற்கும்இடையே உள்ள உறவை ஜெயமோகனின் மொழியில் அவரின் நூல்களின் வாயிலாகவும் சொற்பொழிவுகளின் மூலமாகவும் அன்றாடப் பதிவுகளின் வழியாகவும் நுழையலாம். எனினும், மொழி என்பது பேசப்படுவது. அந்த மொழியை அவரின் நேரடி பிரவாகமாக, ஊற்றாகக் கிடைப்பதற்கு இந்த பூன் முகாம் அரிய வாய்ப்பு.

வாழ்க்கையின் மிகப்பெரிய கேள்விகளுக்கு தத்துவம் நுண்ணறிவை வழங்க முடியுமா? அதை வெளிப்படுத்த மொழியின் எல்லை என்ன? மீமெய்யியலும் நெறிமுறைகளும் வெறும் முட்டாள்தனமான பேச்சுதானா? இவற்றை நேரே எதிர்கொண்டு அதற்கான பதில்களை உணர்த்தும் பேச்சு, இந்தச் சந்திப்பின் உச்சகட்டம். அவர் அர்த்தமுள்ள மொழியின் எல்லைகளை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டு, உணர்வை முட்டாள்தனத்திலிருந்து பிரிக்க மெய்யியலை வாயிற்கதவாக்கும் விரிவுரையைத் தந்ததுவிடையில்லா வினாக்களுக்கு விவாதங்களை உள்ளுக்குள் புலப்பட வைத்த தருணம் ஆகி நிறைந்து நிற்கிறது.

சென்ற முறை வந்தவர்களைப் பற்றிய விரிவான பதிவை, ஒவ்வொருவரைப் பற்றிய சிறு குறிப்பையும் எழுத முடிந்தது. இந்த முறை (கிட்டத்தட்ட) அத்தனை பேரும் மீண்டும் வந்தது ஜாக்பாட். நீண்ட கால உறவுகளை, பால்ய காலத் தோழமைகளை மீண்டும் காணும் சந்தோஷம். சென்ற வருடம் ஐம்பது என எல்லை வைத்திருந்தார்கள். இந்த வருடம் எழுபது. அந்த எண்ணிக்கையும் சட்டென்று நிரம்பி காத்திருப்பு பட்டியல் நிரம்பி வழிந்தது. அந்த எழுபதில் ஒருவராக இடம் கிடைத்தது மகிழ்ச்சியைத் தந்தது.

சென்ற ஆண்டு பதிந்ததுவளநீர்ப் பண்ணையும் வாவியும் | snapjudge.blog

ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்திருந்தார்கள். விமானம் வரும் நேரம் பார்த்து, ஒத்த காலத்தில் வந்து சேர்பவர்களை வாசஸ்தலத்திற்கு அழைத்துச் செல்லும் கார்கள்; வேளா வேளைக்கு உணவு, காபி, டீ, சிற்றுண்டி; அனைவருக்கும் சௌகரியமான ஓய்வெடுக்கும் வசதி; பக்கத்து பக்கத்தில் குடில்கள்; ஆசானுடன் அதிகாலை முதல் பின்னிரவு நள்ளிரவு வரை நேரம் கழிக்கும் வாய்ப்புகள்; விடிய விடிய நட்புகளுடன் அளவளாவும் தனிமைசென்ற ஆண்டைப் போலவே இவ்வளவு சிறப்பாக செய்து முடித்திருக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் ஒத்த மனதுடன் போட்டி போட்டுக் கொண்டு நிகழ்ச்சியை ஜமாய்த்தார்கள்.

இந்த மாதிரி மாநாடு என்றால் அதற்கான பேச்சாளர்கள் அதிமுக்கியம். ஒவ்வொருவரும் காத்திரமாக தயாரித்து வந்திருந்தார்கள். கச்சிதமாகப் பேசினார்கள். இத்தனை பரந்துபட்டத் தலைப்புகள் ஆயிற்றே! எவ்வாறு பேரவையில் எல்லாவற்றையும் அகல உழப் போகிறார்கள்? மீண்டும் கருத்தரங்கை களை கட்ட வைப்பார்களா? என்னும் அச்சம் இல்லாவிட்டாலும், சென்ற ஆண்டு மாதிரியே சுவாரசியமாகவும் ஆழமாகவும் நயமாகவும் கலந்தாய்வார்களா என்னும் முன்னுதாரணம் சற்றே நிழலாடிக் கொண்டிருந்தது. இந்த முறையும் புடமிட்ட பொன் ஆக ஜொலிக்க வைத்தார்கள்.

எல்லோருக்கும் நன்றி. ஒருவருக்காகக் கூடுகிறோம். அவரின் நிழலில் தழைக்கிறோம். அடுத்த சந்திப்பை எதிர்நோக்குகிறோம்.

எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே.
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ.”

பாலா

பாஸ்டன்

முந்தைய கட்டுரைகவிதைகள் இதழில்…
அடுத்த கட்டுரைசினிமா உலகம்