முடியாட்டம், கடிதம்

ஜெ

வரலாறு முழுக்க குற்றவுணர்ச்சி என்னென்ன விளைவுகளை உருவாக்கியிருக்கிறது என்பது ஒரு முக்கியமான கேள்வி. அடிமைமுறையின் குற்றவுணர்ச்சிதான் ஜனநாயகத்தையும் தாராளவாதத்தையும் உருவாக்கியது என்று ஒரு பேச்சு உண்டு. இந்தியச் சாதிமுறை பற்றிய குற்றவுணர்ச்சியை இன்றுவரை இந்தியச் சமூகத்தில் நம்மால் உருவாக்க முடியவில்லை. அதற்காகத்தான் காந்தி போராடினார். ஆனால் அது ஒரு சிறு எலைட் வட்டத்தைத்தான் பாதித்தது. 

அக்காலத்தைய இலக்கியவாதிகளில் ஒரு சிறுபகுதியினர் மட்டுமே அந்த குற்றவுணர்ச்சியை உருவாக்கும் எழுத்துக்களை எழுதினர். சிவராம காரந்தின் சோமனதுடி, தகழி சிவசங்கரப் பிள்ளையின் தோட்டியின் மகன், கு.ப ராஜகோபாலனின் பண்ணைச்செங்கான் போன்ற ஒரு சில கதைகள்தான் இந்தியாவிலேயே சொல்லும்படியாக உள்ளன. ஏனென்றால் இந்தியாவில் காந்திய இயக்கம் உருவானதுமே அதற்கு எதிரான அடிப்படைவாத இயக்கங்களும் உருவாகிவிட்டன. அவர்கள் அந்தக் குற்றவுணர்ச்சிக்கு நேர் எதிராக பண்டைப்பெருமிதத்தை முன்வைத்தனர். இன்றைக்கு அதுதான் செல்லுபடியாகும் அரசியல். 

அத்துடன் சுதந்திரமும் உடனே கிடைத்தது. அதன்பின் பங்குபோடும் அரசியல். அத்துடன் இட ஒதுக்கீடு வந்தது. அதையே ஒரு பிராயச்சித்தமாகக் கருதி இந்திய சமூகம் அமைதி அடைந்துவிட்டது. அப்படி அமைதியடைய முடியாது, அமைதியடையக்கூடாது என்று இலக்கியம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். ஆழமான குற்றவுணர்ச்சியை நவீன இந்தியச் சமூகம் அடைந்தாகவேண்டும்.

அந்த குற்றவுணர்ச்சியை இன்று இல்லாமகாக்கும் இரண்டு விஷயங்கள் உண்டு. ஒரு விஷயம் தலித் அரசியலில் உள்ள தாக்கும்தன்மை. அது நம்மை குற்றம்சாட்டுகிறது. அதற்கு எதிரான ஒரு மனநிலையை நாம் உருவாக்கிக்கொண்டோமென்றால் மனசாட்சி இல்லாதவர்களாவோம். நம் ஜனநாயகப்பண்பு இல்லாமலாகும். இன்னொன்று நம்மையும் ஒருவகை பாதிக்கப்பட்டவர்களாக எண்ணிக்கொள்வது. இடைநிலைச் சாதியினர் அந்த தந்திரம் வழியாக குற்றவுணர்ச்சியை கடக்கின்றனர். 

குற்றவுணர்ச்சிதான் நம்மை முற்போக்கு பாதையில் கொண்டுசெல்லும். அந்தக்குற்றவுணர்ச்சியின் வெளிப்பாடான கதை என்று நூறு நாற்காலிகள் நாவலைச் சொல்வேன். அந்தவகையில் இன்னமும் தீவிரமான கதை முடியாட்டம். இது இன்னும் கவித்துவமானது. அடிப்படையான ஆர்க்கிடைப்புகளை வைத்து கதையை உருவாக்குகிறது. முடி என்பது  கண்ணகியின் விரித்தகூந்தல், துர்க்கையின் விரித்த கூந்தல் என பல வகையில் விரிவது. கேசி என்பது இந்து மரபில் அசுரர்களின் பெயராகவும் சமண மரபில் தெய்வங்களின் பெயராகவும் உள்ளது.  அந்த குறிப்புகள் எல்லாம் சேரும்போது இந்தக்கதை ஓர் உச்சத்தை அடைகிறது. 

மகத்தான குற்றவுணர்ச்சியின் கதை. தம்புரானுக்கு நங்கேலியிடமிருந்தது அவரே அறியாத அவருடைய ஆழ்மனதின் குற்றவுணர்ச்சி. அது அவருக்கு ஒரு உளச்சிக்கலாகவோ நரம்புச்சிக்கலாகவோ ஆகிறது. கூடவே ஒரு ஆன்மிகதரிசனமாகவும் விடுதலையாகவும் ஆகிறது. தலைமுறைகள் வழியாக அந்த குற்றவுணர்ச்சி வளர்ச்சி அடைந்து நீண்டுகொண்டே செல்கிறது. அந்த கவித்துவம் இந்தக்கதையை மிக முக்கியமான படைப்பாக ஆக்குகிறது.

எஸ்.ராஜகோபாலன்

(மொழியாக்கம்)

அன்புள்ள ராஜகோபாலன்,

நீங்கள் எழுதிய பின்னர்தான் நானும் ஒரு தொன்மக்குறிப்பை இக்கதையுடன் இணைத்துக்கொண்டேன். திருவட்டார் ஆதிகேசவன் கேசன் கேசி என்னும் இரு அரக்கர்களை அழித்து அவர்கள்மேல்தான் பள்ளி கொள்கிறார். அவர்கள் இருவரும் உடல் இல்லாதவர்கள். நீண்ட முடி மட்டுமேயானவர்கள். ஆதிகேசவனின்  மண்ணுக்குள் வேர்களாக கேசனும் கேசியும் இருக்கிறார்கள். 

ஜெ 

முடியாட்டம் – அஜிதன்

முந்தைய கட்டுரைபூன் முகாம், கடிதம்
அடுத்த கட்டுரைதாமரைச்செல்வி