நினைவுக்கும், நிஜத்திற்கும் வந்து சேர சில நாட்கள் பிடித்தது. பொதுவாகவே வாசிப்பு, இலக்கியம், அழகியல், கோட்பாடுகள் சார்ந்து பேச நினைக்கும் மனதுக்கு அமெரிக்க வீடுகள் மிக அரிதாகவே இடம் கொடுக்கின்றன. அதனாலேயே வாசிப்பு சார்ந்து இயங்குபவர்களை ஸ்லீப்பர் செல்ஸாகவே நான் பார்ப்பதுண்டு. கண்டுகொள்வதும் அரிது. கண்டுகொண்டாலும் பரஸ்பரம் இலக்கிய குசலம் விசாரிப்பதும் அரிது. எப்படியோ முட்டி மோதி வெளிவந்ததால் அறுபத்தி ஐந்துக்கும் மேற்பட்டவர்களை பூன் முகாமில் சந்தித்தேன். சென்ற முறை கோவிட் என்னை தடுத்துவைத்திருந்தது. இந்த முறை, மிகவும் ஜாக்கிரதையாகவே இருந்தேன். யாரோ ஒருவர் இருமினாலும், பூன் நியாபகம் வந்தது.
மத்திய ப்ளோரிடாவிலிருந்து பூன் வந்து சேர 10 மணி நேரத்திற்கும் மேல் ஆனது. விமானப் பயணம் செய்திருக்கலாம். என் அலுவல் முழுவதும் விமானப்பயணம் நிறைந்தது. விமான ஓட்டியாக அல்ல, ஆனால், அமெரிக்கா முழுவதும் நிறைந்துள்ள அலுவல் பணி மற்றும் முகம் கொண்டு முகம் காண காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் காரணத்தினால், விமானமே சரி வரும். பூன் முகாமிற்கு அப்படி சென்று அவசரகதியில் இறங்கி, குசலநலன்கள் விசாரிப்பதிலும் மற்றும் வாசிப்பின் செவிச்சொல் கேட்பதிலும் ஆர்வம் இல்லை. பத்து மணி நேர பயணத்தை, எட்டு மற்றும் இரண்டு மணி நேரமாக வகுத்துக்கொண்டு, அலுவல் வேலைகளை ஒவ்வொரு மைல் கல்லிலும் உதறிக்கொண்டு வந்தேன். யூடியூப்பின் உதவி இல்லாமல் இது சாத்தியமல்ல. பல உரைகளை கேட்டபடி வந்தாலும், ஒரு உரை இப்பொழுதும் ரீங்காரம் இடுகிறது. உரையென்று சொல்ல இயலவில்லை. யூவல் நோவஹ் ஹராரியின் பொங்கிவரும் வருத்தமாக இருந்தது. செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒருவராக இருக்கிறார். இதற்கு முன் லட்சியவாத போக்கில் வந்த எந்த ஒரு படைப்பிலும் மனிதனின் முடிவு தான் முன்னின்று இருக்கும், ஆனால், செயற்கை நுண்ணறிவு இப்படியே போனால், அது முடிவெடுக்கும், மனிதன் பின் நகர்வான் எனும் கூற்று சிறிது பயத்தையே அளித்தது. ஸ்டியரிங்கை என் அறிவைக்கொண்டு முடிவெடுத்து வந்ததில் ஆசுவாசமாகவே உணர்ந்தேன். ஷார்லர்ட் விமான நிலையத்தில் பாடகர், ஓவியர், வாசகர் (மற்றும் வருங்கால நடனமணி என்று உங்களால் ஆசிர்வதிக்கப்பட்ட) சங்கரையும், சிறுகதைகள் பற்றி தன் பார்வையை மிகச்சரியாக வைக்கும் மதுனிகாவையும் (அவர் எப்போதும் உங்களின் அருகேயே உட்கார்ந்திருந்த வயிற்றெரிச்சலையும் இப்போதே கொட்டிவிடுகிறேன்), மிச்சிகன் தமிழ் ஆர்வலர்கள் குழுவை (இது பற்றி தனியே எழுதுகிறேன்) ஐந்து ஆண்டுகளாக நடத்தி வரும் ராம் குமாரையும், அதே என் உணர்வுடன், என் முடிவுடன் நகர்ந்த காரில் பூன் வந்து சேர்ந்தோம். இடையே பாலாஜி உணவகத்தில் எங்கள் நுண்ணறிவு சற்றே பிசகி, சாப்பிடாமல் நகர்ந்ததை எண்ணி வருந்தினோம்.
பூன் வந்து சேர்ந்த முதல் செல்ஸ் கூட்டணி நாங்களாக இருந்தோம். பின்னோக்கி பார்த்தால், அந்த அமைதியான இடம் மூன்று நாட்களுக்கு உச்சபட்ச லட்சியப்போக்குடன் பேசிக்கொண்டே இருந்தது. மனிதர்களின் கண்கள் நோக்கியும், அவர்களின் சுவாசம் கொண்டும் புரிந்து கொள்ளும் இயற்கை, அங்கே நடந்த ஆர்பரிப்பை அடுத்த அக்டோபர் வரையிலும் நினைவு கொள்ளும். நான்கு வீடுகளில் ஒரு வீட்டிற்கு அதிக ஈர்ப்பு விசை, அங்கே தான் அந்த ஊஞ்சலும் இருந்தது. யாரும் இல்லாத பொழுதில் ஆடிக்களித்த சங்கர், அதன்பின் அந்த ஊஞ்சல் ஒருவராலும் சீண்டப்படாததை கவனித்தார் என நினைக்கிறேன். ஈர்ப்பு விசை அங்கிருந்த ஒருத்திருந்த மனம். இப்பொழுதும் அந்த ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கும்.
காலை முதல் மாலை வரை (மன்மதன் பாடல் மனதுக்கு வரத்தான் செய்கிறது) கடந்த பத்தாண்டுகளில் நடக்காத ஒன்றாக, மூளையும் மனதும் ஒருங்கே இணைந்திருந்தது. ஹராரி அவ்வப்போது நினைவுக்கு வந்தார். எந்த செயற்கை நுண்ணறிவில் இழைத்தாலும் பல்வேறுபட்ட மனங்களை, ஒற்றைப்பார்வைக்கும் ஒற்றை சரடுக்கும் அடிபணிய வைக்க முடியாதென நினைத்தேன். தோற்றம் குறித்த பல்வேறு முகங்களை ஜெனிசிஸ் எப்படி கையாண்டிருக்கிறது என்று கூறி இருந்தீர்கள். கூட்டு இயல்பில் தனியே எனக்கு தெரிந்தது இது தான். ஆதிமனிதர்கள் பசித்திருந்த பொழுது, எதிரே கண்ட மான் மீது வைத்திருந்த பசி ஈர்ப்பு, அதை செரிக்கும் வரையில் இருந்திருக்கும். அப்போதிருந்த தோற்றம் கண்ட காலத்தின் லட்சியவாதம் தான், இப்போதும் அத்தனை நிகழ்வுகளிலும் ஈர்ப்புடன் வைத்திருந்தது என எனக்கான பாடமாக எடுத்துக்கொள்கிறேன். இவை செரிக்கப்படப்போவதில்லை. செரித்தாலும், புவிஈர்ப்பு விசையின் எதிரே சென்று தலைமேல் தான் உட்கார்கிறது.
சிறு வயதில் சக்கரை என்பது என் செல்லப்பெயர். என் மகள்கள் ஒரு வார்த்தையை அதிகம் புழங்குவார்கள். அதிலும் உணவு பற்றிய விவாதங்களில். ஜிக்கிலி ஜிக்கிலி என்பது தான். கேட்கும்பொழுதில் ஒரு ரீங்காரம் படர்கிறது. இலகுவான உணவுப்பண்டங்களை அனைத்தும் அவர்கள் எப்பொழுதும் கவர்ந்து கொண்டே இருக்கிறார்கள். சக்கரை மூட்டை பாதி ஜிக்கிலி போல இருந்ததாலோ என்னவோ, நானும் இளம் வயதில் பொதுக் பொதுக் என்று இருந்ததாலோ என்னவோ, எனக்கு அப்படி ஒரு பெயர். இலகு என்பது வாழ்க்கையின் கூறு என்பது எப்போதும் கிடைக்கும் பாடம். ஆனால், அமெரிக்க வாழ்க்கை எத்தனை பேருக்கு (பெரும்பாலும் ஐடி துறையில் உள்ளவர்களை குறிப்பிடுகிறேன்) இப்படி இலகு என்ற ஒன்றை ஒவ்வொரு நாளும் விதிக்கிறது என்பதில் பெரும் ஐயம் எனக்கு உண்டு. அஜைல் என்றொரு வார்த்தை எங்கள் அலுவலக வாழ்வில் விட்டு நீங்காத ஒன்று. அதன்படி தான் மென்பொருள் கட்டுமானங்கள் இப்பொழுது நிகழ்கின்றன. அதில் இலகு என்ற வார்த்தைக்கு கொஞ்சம் கூட இடம் இல்லை. பூன் முகாம் காலை வேளையில் கொடுக்கும் இலகு, மற்றும் மாலை வேளையில் கொடுக்கும் இலகும் அளப்பரியது. வட்டப்பாதையில் வட்டம் பெரிதல்ல, ஆனால் அதன் மையம் தான் வட்டத்தை வட்டமாக்குகிறது. இலகும் மையமும் ஒருவராகவே அல்லது ஒன்றாகவே இருந்தது.
முகாமில் நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் மளிகைக்கடை லிஸ்ட் போல போடாமல், ஒவ்வொன்றிலும் எனக்கான அடுத்த ஒன்றை எடுத்துக்கொள்வதில் தான் சில வாரங்கள் செல்லும் என நினைக்கிறேன். இப்போதிருக்கும் என் தன்னறிவில் ஒன்று எப்போதும் நிலைத்திருக்கும். லட்சியவாதம் ஒற்றப்படை அல்ல, ஆனால், ஒன்றில் நிகழ்வது, பலவற்றில் உயிர்த்திருப்பது.
நான் எப்பொழுதுமே ட்ரீமர் என்று சொல்லியிருந்தீர்கள். என் நினைவில் இப்பொழுது அந்த ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கும் நிழல் தெரிகிறது. அதன் மேல் இருக்கிறேன். கனவுகளை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கிறேன்.
நன்றி,
லக்ஷ்மண் தசரதன்