பூன் முகாம், கடிதம்

பூன் முகாம் 2023ல் வெர்ஜினியாவில் இருந்து 8 வாசகர்கள் கலந்து கொண்டோம். அருகருகே இருந்தாலும் இலக்கிய முகாம் நோக்கிய பயணமே எங்களை சந்தித்துக் கொள்ள வைத்தது.

7 மணி நேர பயணத்தில் நண்பர்களுக்குள் வாசிப்பினை ஓட்டிய பேச்சு நடந்ததுவேல்முருகன் எழுத்தாளர் முத்துநாகுவின்  ‘சுளுந்தீநாவலையும்பா.கண்மணியின்இடபம்’  நாவலையும் அறிமுகம் செய்தார். அவரது விரிவான உரை கேட்ட பின்னர் அந்த நாவலை வாசிக்க வேண்டும் என முடிவு எடுத்துக் கொண்டேன்அந்நாவலை ஒட்டி திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளின் அனுபவத்தினை மோகன் பகிர்ந்துக் கொண்டார். ஸ்வர்ணா ரவிக்குமார் அமெரிக்க எழுத்தாளர் ஷெர்லி ஜாக்சன் குறித்து தன் வாசிப்பினை பகிர்ந்துக் கொண்டார். அடுத்த முறை எழுத்தாளர் ஹெலன் பிலிப்ஸ் பற்றி அவர் பேச வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.

நண்பர் விஜய் சத்தியாவும், ராஜேஷும் ஆழ்வார் பாசுரங்கள் பற்றி பேசி வந்தார்கள். ராஜேஷ் ஆழ்வார் பாசுரங்கள், கம்பராமாயணம் இரண்டையும் பேச வல்லவர். பின்னர் ராஜி முகாமில் விவாதிக்க போகும் சிறுகதைகள் பற்றி சுருக்கமான அறிமுகம் தர அதை பற்றி விவாதம் நடந்தது. பூன் நோக்கிய பயணமே முகாமுக்கு செல்லும் மனநிலையை பட்டைத் தீட்டுவதாக அமைந்தது.

சென்ற வருடம் பூன் முகாமுக்கு சீக்கிரம் வந்தமையால், ஆசிரியருடன் பேச முடிந்தது. இந்த முறை வெர்ஜினியா அணி தாமதமாக வந்தமையால், வந்த இரவு ஆசிரியருடன் பேச இயலவில்லை. அமெரிக்க விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தில் இந்நிகழ்வினை ஒருங்கமைக்கும் சௌந்தரும், ராஜனும் முகாமில் தங்கும் இடங்கள், விதிமுறைகள் பற்றி அறிவுறுத்த அன்று இரவு முடிந்தது.

மறுநாள் காலை செவ்வனே இலக்கிய முகாம் துவங்கியது. இலக்கிய வட்டம் என்பது தனது எல்லைகளை விரித்துக் கொள்ளக் சாத்தியங்கள் உண்டு என்பதை பற்றி ஆசிரியர் பேசினார்கலை மனிதர்களை இணைக்கும், செயல் வேகம் கொடுக்கும், கலாச்சார பரிவர்த்தனைகளை உருவாக்கும், நல்ல உறவுகளை வளர்க்கும் என்பதை தெரிந்துக் கொள்ள முடிந்தது

முதல் அமர்வில் தமிழக சிறுகதைகள் பற்றி பேசினார்கள். மிக்சிகனில் இருந்து வந்திருந்த மது திரிபுரம் கதை பற்றி பேசினார்அக்கதை நிகழ்ந்த காலக்கட்டம், பஞ்சம் தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்ட விதம் பற்றியெல்லாம் நண்பர்கள் விரிவான சித்திரம் வைத்தார்கள். ஆசிரியர் திரிபுரத்தில் சிரிப்பால் எரிக்கப்பட்டதை சொல்லி, அது இக்கதையில் கு.அழகிரிசாமியால் எவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என விளக்கினார்அடுத்து கமலதேவியின் உடன்போக்கு கதை பற்றி சௌந்தர் பேசினார்அக்கதையில் வரும் உறவு முறைகள், காலமாற்றங்கள் பற்றி பேச்சு நடந்தது . ஆசிரியர் கதையில் மெட்டபோர்கள் எவ்வாறு பயன்படுத்தப் பட வேண்டும், அதன் எல்லை என்ன என்பதை பற்றி சொன்னார். விஷால் ராஜாவின் திருவளர்ச்செல்வி பற்றி நார்த் கரோலினாவின் முத்து பேசினார்

மூன்று கதைகள் தமிழகத்தின் குறுக்கு வெட்டு சித்திரம் ஒன்றை தற்செயலாக உருவாக்கின. இளைய தலைமுறை எழுத்தாளர்கள் சம கால சமூகத்தினை யதார்த்தமாக காட்சிப்படுத்துவது பற்றி தெரிந்துக் கொள்ள முடிந்தது.  பெண்கள் வாழ்வு தமிழகத்தில் நகர்வதை பற்றிய தொகுப்பு சித்திரமாக அமைந்தது என்பதை நண்பர்கள் சுட்டிக் காட்டினார்கள். எனக்கும் அக்கருத்து உடன்பாடாக இருந்தது.

அடுத்த நிகழ்வு முதற்கனல் பற்றி நிகழ்ந்தது. முதற்கனலின் படிமங்கள் பற்றி மதன் பேசினார். அவர் யூங்கின் ஆழ்படிமங்கள் கோட்பாட்டினை எடுத்து அதை முதற்கனலில் பொருத்தி தனது உரையை வடிவமைத்து இருந்தார். கோட்டுப்பாடு சார்ந்த கட்டுரையை எளிமையான மொழியில் விளக்கினார்.

அதன் பின்னர் பாஸ்டனில் இருந்து வந்திருந்த ஜெயஶ்ரீ வெண்முரசின் பல உப கதைகளை பற்றி விளக்கி ஒட்டுமொத்த சித்திரத்தினை காண்பதை அந்த உபக்கதைகள் எவ்வாறு உதவுகின்றன என சொன்னார்

ஒருபுறம் மேலை மரபின் யூங் கோட்பாட்டில் விளக்கம், மறுபுறம் காவியத்தின் suggested meaning என்பதை புரிந்து கொள்ள அதன் லட்சணத்தினை சுட்டும் உபகதைகள் எவ்வாறு உதவுகின்றது என ஒரு உரை. அதன் தொடர்ச்சியாக வெண்முரசின் பாம்புகள் வரும் காட்சிகள் பற்றி ஆசிரியர் சொன்னார்.  

அடுத்துக் கம்பராமாயண நிகழ்வு இருந்தது. இந்த முறை போர்லாண்டின் பிரபு முன் நின்று ஒருங்கமைத்தார். நியுஜெர்சி பழனி , வெர்ஜினியா ராஜி, ஆஸ்டின் ராதா சௌந்தர், கலிபோர்னியாவின் விசு, விஜய் ஆகியோர் உடன் நின்றனர். இந்த முறை பழனியும், இசை அமைப்பாளர் ராஜனும் தேர்ந்தெடுக்கப்பட்ட பால காண்ட பாடல்களை பாட்டாக பாடவும் ஏற்பாடு செய்தமையால் நல்ல பாடல்களுடன், விளக்கங்களுடன் நிகழ்வு நடந்ததுமேலும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் பற்றியும் ஆசிரியர் சொன்னார். கம்பராமாயணத்தின் கவிதை நயம், சொல் நயம், காட்சி அமைப்பு பற்றிய கவனம் எப்படி ஓருங்கமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

முதல் நாளின் கடைசி நிகழ்வாக நாவல் நிகழ்வு இருந்தது. நியுஜெர்சி பழனி ஜோ டி குரூசின் ஆழி சூழ் உலகு குறித்த விரிவான உரை ஒன்றை நிகழ்த்தினார். உரையாற்றுகையில் மிகவும் நெகிழ்வுடன் பேசினார். அந்நாவலில் வரும் நெய்தல் உலகம் எனக்கு புதிது. வாசிக்க நினைத்து வாங்கி அதன் மொழியால் தாண்ட முடியாமல் இருந்தது. பழனியின் உரை படிக்க உந்துதல் தந்தது

டால்ஸ்டாய்ஸின் புத்துயிர்ப்பு நாவல் பற்றி நார்த் கரோலினாவின் விவேக் பேசினார். அவர் பெரிய டால்ஸ்டாய் ரசிகர். அந்த நாவல் அவருக்கு மனதுக்கு உகந்த நாவல், அந்நாவலின் எல்லா கதாபாத்திரங்கள் குறித்தும் பெரிய சித்திரம் அளித்தார். புத்துயிர்ப்பு பெற்றது யார் என எல்லாரும் விவாதம் செய்தார்கள்நெகிழ்தோவும், கத்துஷாவும் இரவு உணவுக்கு கூட வருவார்கள் என நினைக்கும் அளவுக்கு உரையும், விவாதங்களும் நிகழ்ந்தது.

இரவு உணவு, பின்னர் பேய்க் கதைகள், ஜெர்மன் ரொமாண்டிசம் பற்றி பேச்சு என அன்று இரவு சென்றதே தெரியவில்லை.

மறுநாள் துவங்கியதும் ஆசிரியர் தத்துவம் என்றால் என்ன, தத்துவப்படுத்துதல் என்றால் என்ன என்பதை பற்றி விரிவாக பேசினார். துவக்க நிலை மாணவர்களுக்கான அறிமுகம் என்ற அளவில் தனது உரையை மையப்படுத்திக் கொண்டார்.

இன்றைக்கு அமெரிக்க இலக்கியம் முதல் அமர்வில் இருந்தது. அமெரிக்காவின் மிக முக்கிய சிறுகதைகளில் ஓன்றானதி லாட்டரிகுறித்து நான் பேசினேன். சுட சுட விவாதம் நடந்தது. ஆசிரியர்ஸ்கேப் கோட்டிங்பற்றி சொல்லி முடித்து வைத்தார்நண்பர் விஜய்நைன் பில்லியன் நேம்ஸ் ஆப் காட்பற்றி பேசினார். அந்தக் கதை பற்றி அலசோ அலசென அலசி நண்பர்கள் காயப்போட்டார்கள். ஆசிரியர் நடத்திய சொல் புதிது இதழில் எம்.எஸ் மொழிபெயர்ப்பில் அந்தக் கதை வந்ததை பற்றி தெரிந்துக் கொள்ள முடிந்தது

இரண்டாம் நிகழ்வு கவிதை நிகழ்வு. மின்னியாபோலிசின் வேணு தயாநிதி, நார்த் கரோலினாவின் விபி, ரெமிதா என மூவரும் சேர்ந்து அமைத்துக் கொண்டார்கள்வேணு தயாநிதி கணிணியெல்லாம் வைத்துக் கொண்டு புரோபஷனால் அக்கடெமிக் பேச்சு போல கவிதை பற்றிய அறிமுகம் செய்தார். டி.எஸ்.எலியட் சாமியாக இறங்கி வந்து தமிழில் பேசினால் இப்படித்தான் இருக்கும் என நினைத்துக் கொண்டேன். எமிலி டிக்கின்சன் கவிதைகள் குறித்து ரெமிதா வகுப்பு எடுத்தார்அவர் கையில் புத்தகம் வைத்துக் கொண்டு கணீர் குரலில் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட உரையை அளிக்கையில் இது போல ஒரு புரோபசர் எனக்கு கல்லூரியில் வகுப்பெடுக்க இல்லையே என தோன்றியது

கவிஞர் இசையின் கவிதைகளை பற்றி விபி பேசினார். அதில் உள்ள ஹுயுமர், காட்சிகள் பற்றி பேசினார். அவர் உதாரணத்துக்கு பயன்படுத்திய கவிதைகள் இசையின் கவிதை குறித்த அணுகுமுறையை தெளிவாக காட்சிப்படுத்தியதுவிஷ்ணுபுர அமெரிக்க இலக்கிய வட்டத்தின் கவிஞரான பாலாஜி ராஜு தன் பங்குக்கு இசையின் காந்தி பற்றிய கவிதையை சொன்னார். பச்சக்கென மனதில் ஒட்டிக் கொண்டது. வீட்டில் வந்தும் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது.

மஞ்சள் என்று சொல்லி விட முடியாதபடிக்கு

ஒரு வித மரக்கலரில்

இடையே கொஞ்சம் பச்சை வாங்கி

சிவந்த பொன்னிறத்தில்

கிறங்கடிக்கும் வாசனையுடன்

நடுமத்தியில்

அளவானதான அழகான ஓட்டையோடு

நாவூறித் ததும்பச் செய்யும்….

உலகத்தை  வெல்வது கிடக்கட்டும்

முதலில்

இந்த உளுந்து வடையை வெல்

அடுத்த நிகழ்வு இசை பற்றியது. ரெமிதா ஒருங்கமைக்க ராஜன் பதில் சொல்ல நிகழ்ந்தது. பல கேள்விகள் பாரம்பரிய இசை , நவீன இசை, திரை இசை பற்றி எழும்பின, பல தெளிவுகள் கிடைத்தது

அடுத்த நிகழ்வு ஷேக்ஸ்பியரின் ஹேம்லட் பற்றியதுஅருண் மொழி நங்கை பேசினார்கள். பெரியக் கோட்டுச்ச்சித்திரம் அளித்து, பின்னர் அதை தாக்கம், பாத்திரப் படைப்பு, டிராஜிடியின் பங்கு,ப்ராய்டின் பார்வை என எல்லாவற்றையும் தொகுத்து விரிவாக்கினார்.

வேன்கோவரினை சார்ந்த மகேந்திரா லார்ஜ் லாங்க்வேஜ் மாடல் குறித்த டெக்னிக்கல் உரையை அளித்தார். தெளிவான விளக்கம், சுருக்கமான சித்திரம் கிடைத்தது. லாங்க், பரோல் என காலையில் வேணு தயாநிதி கவிதை உரையில் விளக்கியதை இந்த மாடலுக்குள் கொண்டு வந்து நண்பர்கள் பல விளக்கங்களை அளித்தார்கள்ட்ரான்ஸ்லேஷன் போன்ற பணிகளில் இந்த லார்ஜ் லாங்க்வேஜ் மாடல் எவ்வாறு பயன்படக் கூடும் என்பதை தெரிந்துக் கொள்ள முடிந்தது.

பின்னர் இரவு உணவு, ஆசிரியருடன் இனிய கலந்துரையாடல் என இரண்டாம் நாளும் கழிந்தது.

மூன்றாம் நாள் காலை பிரிய மனமின்றி ஊரில் இருந்து கிளம்பி வந்தோம். இலக்கியத்தில் திறமையும், வாசிப்பும், எழுத்து வன்மையும் கூடிய நண்பர்கள் மத்தியில் இரண்டு நாள் சென்றதே தெரியவில்லை. ஆசிரியரின் விஷ்ணுபுரம் இதற்கு தளமாக அமைந்தது. விஷ்ணுபுரம் 2000த்தில் எனக்கு நாவலாக அறிமுகமானது, எனது சிந்திக்கும் போக்கின் மீது ஓங்கி இடித்து கலைத்து போட்டது. இன்றைக்கு 23 வருடம் கழித்து இத்தனை இனிய நட்பு சூழலை உருவாக்கிக் காட்டியுள்ளது. ஒரு நாவல் ஈக்கோ சிஸ்டம் உருவாக்கும். இத்தனை பெரிய தாக்கம் செலுத்தும் என கற்பனை கூட செய்து பார்த்தது இல்லை. இன்று நிகழ்கின்றது. இன்னமும் வாசிக்க வேண்டும், எழுதக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற உத்வேகம் அளிக்கின்றதுதமிழில் சிந்திக்க, பேச, எழுத, கலையை காண, விவாதிக்க விஷ்ணுபுரத்தின் பெயரால் அமைந்த இலக்கிய வட்டம் பேரூதவி செய்கின்றது.

நிர்மல்

முந்தைய கட்டுரைஅமெரிக்க உரை, அறிவிப்பு
அடுத்த கட்டுரைமுடியாட்டம், கடிதம்