ஆலம், கடிதங்கள்

அன்புள்ள ஆசிரியருக்கு,

நான் பல வருடங்களாக தங்களது எழுத்துக்களை வாசித்து வருகிறேன். உங்கள் வலைதளத்தை வாசிக்காமல் ஒரு நாள் கூட இருந்தது இல்லை. சில வருடங்களுக்கு முன்பு நீங்கள் வயநாடு வந்து கல்பற்றா நாராயணன் அவர்களின் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பொழுது நேரில் சந்தித்தேன். அன்று உங்களுடன் நிறைய பேச வேண்டும் என்று நினைத்தாலும் என்னால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. மனைவி மகனை உங்களுக்கு அறிமுகப்படுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டதே நிறைவை தந்தது

எத்தனையோ தடவை கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்தாலும் தயக்கம் காரணமாக எழுதியதில்லை

ஆலம் படிக்கத் தொடங்கியதில் இருந்து சுமார் 30 வருடங்களுக்கு முன் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது எனது சொந்த ஊரின் அருகே நடந்த சம்பவங்கள் நினைவிற்கு வருகின்றன

என் அப்பா அப்பொழுது எனது ஊரிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கமுதியில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து கொண்டிருந்தார்கள். வட்டாரத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்தையும் பார்வையிடுவதற்காக ஜீப்பில் செல்லும் பொழுது அங்குள்ள சுடுகாடுகளில் சில பிணங்களை புதைத்த அல்லது எரித்த இடங்களில் மண் குவியலாக குவித்து வைக்கப்பட்டிருக்குமாம். மழையால் காற்றால் அல்லது நாய்களால் அந்த மண்குவியல் கலைக்கப்பட்டு இருந்தால் மறுநாள் உறவினர்கள் வந்து அந்த குவியலை மீண்டும் குவித்து வைத்து விட்டு செல்வார்களாம். எனது அப்பா ஜீப் டிரைவரிடம் அது குறித்து விசாரித்த பொழுது அவர் சொன்னாராம் ஐயா இது குமிய குமிக்கிறது என்று சொல்வார்கள். யாராவது கொல்லப்பட்டு இறந்தால் அவர்களை புதைத்த அல்லது எரித்த அன்று முதல் அந்த இடத்தில் அவருடைய உறவினர்கள் மண் குவியல் குவித்து வைப்பார்கள். கொன்றவர்களுடைய தரப்பில் யாரையாவது ஒருவரை கொன்றால்தான் மண் குவித்து வைப்பதை நிறுத்துவார்கள். இந்தக் குவியல் அவர்களுக்கு பழிவாங்கும் நினைவை கொடுத்துக் கொண்டே இருக்கும் என்று சொன்னாராம். எத்தனை கொலை நடந்தாலும் எதிர் தரப்பிலும் அத்தனை கொலைகளை திருப்பி செய்வார்கள்

அதே காலகட்டத்தில் ஒரு நாள் அப்பாவின் அலுவலகத்திற்கு முன்பு பட்டப்பகலில் நடு ரோட்டில் வைத்து ஒரு ஆளை வெட்டிக்கொன்று தலையை தனியாக எடுத்து சென்று முச்சந்தியில் வைத்து விட்டு சென்றார்களாம். கொல்லப்பட்டவரும் ஏற்கனவே கொலைகள் செய்தவர். அதற்கு பழி வாங்கவே கொல்லப்பட்டார்

மறுநாள் அந்த ஆளுடைய ஈமச்சடங்கு முடித்துவிட்டு அவருடைய தாய் மாமன் எனது அப்பாவை வந்து பார்த்திருக்கிறார் அப்பாவிற்கு அவர் முன்பே அறிமுகமானவர். நம்ம பையன போட்டாய்ங்க. அவங்கள்ள ரெண்டு மூணு பேரையாவது நாங்க போடாம விடமாட்டோம் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். இரண்டு தரப்பும் ஒரே ஜாதி. தூரத்து சொந்தங்கள்.

ஆனால் அன்று இரவு அவர்கள் கிராமத்திற்கு நடந்து செல்லும் போது வழியிலேயே அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்த ஆள் உட்பட எட்டு பேரை வெட்டி  கொன்று விட்டார்கள் எதிர் தரப்பினர். இவர்கள் எதிர்த்தரப்பை ஏதாவது செய்வதற்கு முன்பு இந்த குடும்பத்தில் உள்ள ஆண்கள் அனைவரையும் கொன்று விட்டார்கள். அந்த சமயத்தில் அனைத்து நாளிதழ்கள் வார இதழ்களில் இந்த சம்பவம் தலைப்புச் செய்தியாக வந்தது. அந்த சமயத்தில் என்னை மிகவும் பாதித்த சம்பவமாக இருந்தது. மீண்டும் என்னை அதே மன நிலைக்கு கொண்டு சென்று விட்டீர்கள்

ஆனால் இப்பொழுது கமுதி எவ்வளவோ மாறிவிட்டது என்று கேள்விப்பட்டேன்.

அன்புடன்

காந்தநாதன்

வயநாடு

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு

ஆலம் நாவல் தொடரை நேற்று மாலை ஒரே அமர்வில் படித்து முடித்தேன்.அதன் இன்னொரு அத்தியாயத்தை

இன்று அதிகாலை வாசித்து விட்டு எழுதுகிறேன்.இந்தப் பகுதியில் ஒரு பெரிய வீச்சு இருப்பதாக தோன்றியது.

புது அலுவலகம்அதில் உள்ள சவால்கள்உதவியாளர் அறிமுகம் அவருக்கு ஒரு பின்புலம்மிக சாதாரணமாக அவரை எண்ணுவதுகோப்ரா அவர்களை சந்தித்து விட்டு வந்தபின் ஏற்படும் மாற்றம்அவர் குரல் தெளிவாகி வருவதுவழக்கில் உள்ள புள்ளிகள் தெளிவாவதுமறுபடியும் என்னவாகும் என்ற ஒரு கேள்வி

என பல்வேறு விஷயங்களை தொட்டு இருக்கிறீர்கள் .மிகச் சிறந்த நாளாக இன்றை மாற்றி விட்டீர்கள் .

நாளைக்கு காத்திருக்கிறேன் .

குமார் சண்முகம் 

முந்தைய கட்டுரைகோழிக்கோடின் சிற்பங்கள்
அடுத்த கட்டுரைக.சீ.சிவக்குமார், நினைவு, ஒரு கடிதம்