யோகமும் கொண்டாட்டமும் – கடிதங்கள்

அன்பு மிகு ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,

எங்காவது என்றாவது ஒரு நாள் தொலைந்து தான் போனால் என்ன? என்னை நானே தொடர்ந்து கேட்டபடியே இருந்தேன். எத்தனையோ தனி பயணங்கள் மேற்கொண்டு இருந்தாலும், கடந்த 10 வருடங்களாக எங்கும் தனி பயணம் மேற்கொள்ளவில்லை. பத்ம வியூகத்தில் மாட்டிக் கொண்ட அபிமன்யுவை போல சுழன்று அடிக்கும் உணர்வு குவியல்களை மேலும் மேலும் தாங்கவே இயலாத ஒரு நிலை. எங்கு செல்வது? யோகா கற்றல் மட்டும் அல்லாது, குருவுடன்  உரையாடல்கள் உண்டு என்ற வரி என்னை மிகவும் ஈர்த்தது. புறப்பட்டேன்

பயிற்சியிடத்தில் காலடி எடுத்து வைத்ததுமே நீலமும், பச்சையும் மனதை நிறைக்க எண்ண அலைகள் குறைய துவங்கின. புத்தரும், சரஸ்வதியும் புன்னகைக்க எனக்கும் மெல்லிய புன்னகை தோன்றியது

ஒவ்வொரு கற்றலும், உரையாடலும் மனதிற்கும் உடலுக்கும் அத்துணை வலு சேர்ப்பவையாக இருந்தன. ஒரு உரையாடல் நேரத்தில், என் 30 வருட வலிகளின் ஆரம்பத்திற்கு, அதை பற்றிய என் கேள்விக்கு, குருவிடம் இருந்து ஒரு பதில் வந்தது. மனம் விக்கித்து நின்றது. என்ன ஒரு விடுதலை! ஆம்! சொற்கள் எத்தனை ஆற்றுபடுத்துகின்றன! அதுவும் குருவின் சொற்கள்! என் கண்களில் ஈரம் கசிந்தபடி இருந்தது

உணவு இடைவேளையின் போது அங்கிருக்கும் புத்தரை ஒரு கோட்டோவியம் வரைந்தேன் அவர் முன்பு அமர்ந்தபடி, புத்தரின் ஆசிர்வாதமும், மழை சாரலின் ஆசிர்வாதமும் இணைந்து கொண்டன என் ஓவியத்தில்.

அந்தர் மௌனாதியானத்தின் போது வெகு தொலைவு வெறும் கால்களில் நடந்து போனேன். தனியே பரந்த நீல வானத்தின் கீழ், நான் ஒன்றுமே இல்லை என்றபடி அமர்ந்து இருந்தேன். என் இடது கையில் இரு வெள்ளை நிற பட்டாம்பூச்சிகள் சில நொடிகள் அமர்ந்துவிட்டு சென்றன. விவரிக்க இயலாத ஆச்சரியமும், ஆனந்தமும்..  

நான் தொலைத்த என்னுள் இருக்கும் சிறு குழந்தையை சிறிது சிறிதாக மீட்க ஆரம்பித்து இருக்கிறேன்அன்பு நன்றிகள் ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கும், குரு சௌந்தர் அவர்களுக்கும், திருமதி சாரதா அவர்களுக்கும், அந்தியூர் மணி அவர்களுக்கும், உணவளித்த அன்னை சரஸ்வதிக்கும், பங்குகொண்ட அனைத்து இனிய தோழிகளுக்கும், அங்கிருக்கும் புத்தருக்கும், சரஸ்வதிக்கும், நீலமும், பச்சையும் நிறைந்த நித்யவனத்திற்கும்!

பின் குறிப்பு: நான் வரைந்த ஓவியத்தை இத்துடன் இணைத்துள்ளேன்

லலிதா ராகவன்

வணக்கம். என் இனிய நாட்களின் நினைவுகள் சில.

மிக பரபரப்பான, பொறுப்புக்கள் நிறைந்த  வாழ்க்கை . பணி ஓய்வின் பின் வெறுமை. பல வகையில் முயன்றும், அலை பாயும் எண்ண ஓட்டங்கள், சலனங்கள் அமைதி இன்மை வெறுமை.

அந்த நேரத்தில் யோகமுகாம் அறிவிப்பு கண்டவுடன் சேர முடிவு செய்தேன்.ஆனால், என் கேட்டல் குறைபாடு காரணமாக , ஏற்பார்களா, என்னால் முடியுமா என குழப்பங்கள்.ஆதரவாக வந்த பதில் மகிழ்ச்சி அளித்தது .60 வயதில் முதல்முறையாக தனிப் பயணம்! எங்கும் அன்பான உதவி கரங்களின் தரிசனம்

 ஈரோடில் சிறிய அளவே பரிச்சயமானவர் அன்புடன் வரவேற்று இரவு தங்கல். காலை கரூர் பாலு வின் உதவி உடன் வெள்ளி மலைப் பயணம்.முகாமில் பெரும் பகுதி இளைய பாரதம் . திரும்ப குழப்பம், தயக்கம். குருவை அணுகி பேச, அவரின் ஆதுரமான சொற்கள் ஊக்கம் அளித்தது.

வகுப்பு ஆரம்பமான உடனே, அவர் எங்களை முழு ஈடுபாடு வரவழைத்து, சம்பவங்கள், கதைகள் , உரையாடல்கள் வழியாக யோகா பயணத்தில் கை பிடித்து நடக்க வைத்தார்.குருவே போற்றி 

மனத்தின் ஆற்றல், முன்முடிவு இல்லாத அணுகுமுறை, விடாமுயற்சியின் அவசியம், ஆனந்தம் என நாம் நினைப்பதின் புரிதல் என எம் ஆசிரியர் அன்பாக விவரிக்க செல்ல வேண்டிய பாதை அழகாக மாறியது .

பின், முத்திரைகள்,மூச்சு பயிற்சி, , யோகநித்திரை என நேரங்கள் அமைதியை நோக்கி நகர, ஆனந்தம்.

எல்லாவற்றிற்கும் சிகரம், முடியுமா என நான் நினைத்த அந்த த்யான நேரங்களில் நிறைவு, திளைப்பு , அந்த முற்றிலும் மாறுப்பட்ட அனுபவம்

வெகு நாட்களுக்குப் பிறகு மன அமைதி எனக்களித்த குருவுக்கு வந்தனம்!அழகான இயற்கை சூழல், அன்பான நட்புக்கள், எளிய உணவு,தங்குமிடம் என் அனைத்தும் சிறப்பு.எல்லாம் வல்ல அந்த ஓரபஞ்ச சக்தியிடமும், குருவிடமும் இந்த இனிமையான தொடக்கம் மென்மேலும் வளர,சிறக்க பிரார்த்தனைகள்

அனுபவம் கிடைக்க உதவிய நன்றிகள் பல .

பிரபா சுந்தர்

முந்தைய கட்டுரைகனவுகளைப் பயில்தல்
அடுத்த கட்டுரைகா.அப்துல் கபூர்