மதிப்பிற்குரிய ஜெ அவர்களுக்கு வணக்கம்,
உண்மையில், அம்மாவை எங்கேனும் அழைத்துச்செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் நான் வெள்ளிமலை வந்தேன். ஏற்கனவே பள்ளிக்காலத்திலேயே அடிப்படை ஆசனப்பயிற்சிகள் பெற்றிருப்பதாலும் அலுவல் சார்ந்தும் வீடு சார்ந்தும் நிறைய பிரயாணங்கள் செய்வதாலும் இந்த யோக முகாமில் தனிப்பட்ட வகையில் நான் பெறுவதற்கு என்ன இருக்கப்போகிறதென்னும் அசுவாரஸ்யத்துடன்தான் அங்கு கிளம்பினேன். நான் பிறந்தது மூணாறு என்பதால் மலைப்பகுதிக்குச் செல்கிறோம் என்னும் காரணமும் என்னைப் பெரிதாகக் கிளர்த்தவில்லை.
ஆனால் முகாம் இறுதியில் நினைத்துப் பார்த்தால் மனம் தேம்பும் அளவிற்கு நெகிழ்ந்திருந்தேன் அங்கே. அங்கே என்னால் அடைய முடிந்த அமைதிதான் அதற்குக் காரணம். பெரும்பாலான எனது சமகாலத்தவர்கள் போல நானும் எப்போதும் தொலைபேசியை எடுத்துப் பார்த்துக்கொண்டிருக்கும் பழக்கம் உடையவள்தான். அது அங்கே சாத்தியப்படவில்லை. இரண்டு மணிநேர வகுப்பு என்றால் அந்நேரம் முழுவதும் அலைபேசி தொலைவில் எங்கோ இருந்தது. வகுப்பு முடிந்ததும் அலைபேசியைக் கையில் எடுத்தாலும் அதில் நோடிஃபிகேஷன்கள் எதுவும் இல்லை. ஏனென்றால் பெரும்பாலான இடங்களில், குறிப்பாக பயிற்சியும் வகுப்புகளும் நடந்த இடத்தில் நெட்வொர்க் இல்லை. என்னவொரு ஏகாந்தம்.
அடுத்ததாக, குருஜி சௌந்தர் அவர்கள் எங்களைக் கைக்கொண்ட விதம். உங்களுக்குப் பிறர் அனுப்பிய கடிதங்களில் கூறியது போல அவரிடம் மிகுந்த நட்புணர்வு வெளிப்பட்ட போதும், எங்கள் அனைவரையும் கட்டுக்குள் வைக்கிற கண்ணுக்குத் தெரியாத ஒரு ஒழுங்கையும் அச்சூழல் முழுவதிலும் அவரால் சாத்தியப்படுத்த முடிந்தது. முகாமிற்கு உடன் வந்திருந்த ஒரு ஆசிரியை கூறியது போல, தேவையற்ற ஒரு வார்த்தையைக்கூட அவர் கூறவில்லை. 50 பெண்களை இரண்டு முழுநாட்கள் ஒரே ஆளாகக் கையாள்வதென்பது சாதாரணமா என்ன! தான் பயிற்றுவிக்கிற கலையில் அவருக்கிருந்த தேர்ச்சியும் எங்களது கேள்விகளைக் கையாள்வதில் இருந்த நிதானமும்தான் அதற்குக் காரணமாய் இருக்கும்.
எங்கள் யாருக்குள்ளும் எந்த வகையான(கல்வி, வேலை, திறமை, வயது) ஏற்றத்தாழ்வும் வெளிப்படுவதற்கான சூழல் எதுவுமே அங்கு ஒரு துளி கூட இல்லை. அலுவலகம் passion என ஈடுபடுகிற எல்லா இடத்திலும் தன்னை நிரூபிக்க முனைகிற என் போன்ற ஒருவருக்கு அது மிகுந்த ஆசுவாசத்தை நல்கியது. வெறும் அமைதி மட்டுமே. புறத்தில் மட்டுமின்றி அகத்திலும் அமைதி. அதுதான் என்னை அழச்செய்திருக்கும் என நினைக்கிறேன். அடையாளச் சுமைகள் எதுவுமற்றவளாக உணர்ந்தேன் அங்கே. என் 12 வயது மகளும் கூட அங்கே மிக இலகுவாக உணர்ந்தாள் என்றே தோன்றுகிறது. எப்போதும் என் பின்னாலேயே திரிகிறவள் அங்கே ஆசனம் செய்யும் போது உறங்கும்போது என எப்போதுமே என்னைத் தேடவில்லை. என் அருகில் உறங்கவில்லை, என் வரிசையில் அமரவில்லை. மற்றவர்களுடன் வெகு இயல்பாகக் கலந்து கொண்டாள். அம்மாவிற்கு மட்டுமின்றி அவளுக்குமே இந்தப்பயணம் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.
பெண்கள் மட்டும் கலந்துகொள்ளும் முகாம் என்பதும் இதற்கெல்லாம் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. ஆடை குறித்தோ தோற்றம் குறித்தோ பயிற்சிகள் குறித்தோ எந்த சங்கோஜமுமின்றி வெகு இயல்பாக இருந்தோம் அனைவரும். இம்முகாமின் என்னுடைய இன்னொரு take awayவும் இருக்கத்தான் செய்தது. எண்ணங்களைக் கவனித்தல் என்பதுதான் அது. ஒரு செயலை உண்மையில் செய்வதற்குச் செலவாகும் ஆற்றலைவிட அதைப்பற்றி நாம் மனதிற்குள் நிகழ்த்தும் உரையாடலுக்குத்தான் அதிகம் ஆற்றல் செலவாகிறது என்னும் விஷயம்தான் அது. நாம் மனதிற்குள் எப்போதும் ஓயாமல் சிந்தித்துக்கொண்டே இருக்கிறோம். அதில் பெரும்பாலானவை தேவையற்றவை. ’சாக்ஷி பாவம்’ என்று சொன்னார் குருஜி. கவனித்தல். எண்ணங்களைக் கவனித்தல். இந்த மூன்று நாட்களிலேயே, அப்படி கவனிப்பதன் வாயிலாக ஏராளமான தேவையற்ற எண்ணங்களைக் கண்காணிக்கவும் அவற்றின் வரவைக் குறைக்கவும் முடிகிறது.வாழ்வின் இரண்டாம் பகுதிக்குள் நுழைகிற இந்த வயதில் இது எனக்கு நானே வழங்கிக்கொள்கிற ஒரு முக்கியமான பரிசாகத் தோன்றுகிறது.
உங்களது இணையதளத்தில் வந்திருக்காவிட்டால் நான் இதில் கலந்துகொள்வது குறித்துச் சிந்தித்திருக்க மாட்டேன். இணையதளங்களில் கண்ணில் படும் ஏராளமான வகுப்புகளில் ஒன்றெனக் கடந்து சென்றிருப்பேன். எனவே உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமைதிநிறைந்த ஒருஇடத்தில் இது நிகழ்வதைச் சாத்தியப்படுத்தியதற்கும், இலக்கியம் சார்ந்து மட்டுமின்றி ஆன்ம அமைதி சார்ந்தும் பொறுப்பெடுத்துக்கொண்டு இது போன்ற நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதற்கும் மிக்க நன்றி.
முகாமில் கலந்துகொண்ட எல்லோருமே பயிற்சிகளைத் தீவீரமாகக்கவனித்துக் கற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. அதுவும் இம்முகாமின் வெற்றிக்கு ஒரு காரணம். தினம் காலையில் ஒன்றேகால் மணி நேரம் பயிற்சிக்காகச் செலவழிப்பது என்பது அதிகமாக இருக்கிறதே எனக்கேட்டபோது அதற்குச் சில மாற்று வழிகளைச் சொல்லிவிட்டு இறுதியாக, ‘தீவிரமாக முனையாத எதுவும் கைகூடாது’ எனச்சொன்னார் குரு சௌந்தர். சரிதான்.
பணிவன்புடன்,
சுபத்ரா.