அகழ் நாள்தோறும்

அன்புள்ள ஜெ,

சில மாதங்கள் முன்னால் நீங்கள் பெங்களூர் வந்திருந்தபோது நானும் அனோஜனும் உங்களை வந்து சந்தித்தோம். “அகழ்இதழ் பற்றி உரையாட வாய்ப்பு ஏற்பட்டது. இணைய இதழ்களின் பொதுவான உள்ளடக்கம், வாசக எதிர்பார்ப்பு, சூழலின் எதிர்வினை என்று பல்வேறு விஷயங்களை தொட்டு அப்பேச்சு நீண்டது. வாசகர்களை சென்றடைதல், உரையாடலை தோற்றுவித்தல்இவையிரண்டுமே பிரதானமான பேசு பொருட்களாக இருந்தன.

இன்று தமிழில் வெளியாகக் கூடிய இணைய கலை இலக்கிய சிற்றிதழ்களில்அகழ்பரவலாய் கவனம் பெறுகிறது. எதிர்வினைகள் அதை வெளிப்படுத்துகின்றன. ஆனால் ஒப்பீட்டளவில் கௌரவமானதாய்  தெரியும் இந்த வாசக எண்ணிக்கையேக்கூட லட்சியமாய் சொல்லத்தக்கது அல்ல. இந்த நிலையில்தான் அன்றைய உரையாடலில் நீங்கள் சொன்ன கருத்துக்கள் மேலதிக யோசனைகளுக்கு வழிவகுத்தன.

இன்று தமிழில் மிக அதிக எண்ணிக்கையில் வாசகர்களைபெரும்பகுதி இளைஞர்களைகொண்டிருக்கும் எழுத்தாளரான நீங்களே, சமகால வாசிப்பு சூழல் பற்றி கடுமையான விமர்சன பார்வையை வெளிப்படுத்தியது கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. “தீவிரமான விஷயங்கள் மேல் ஆர்வம் குறைந்து வருகிறதுஎன்றும்தமிழே படிக்கத் தெரியாமல் ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறதுஎன்றும் அடிக்கடி குறிப்பீட்டீர்கள். “ஏற்கனவே இருக்கிற வாசகர்களோடு உரையாடுவதைவிடவும் புதிய வாசகர்கள் உருவாகிறார்களா என்று பார்ப்பதே சரியான அளவுகோல்என்றீர்கள்.

மேற்கொண்டு வாசகர் தரப்பின் நியாயங்களையும் பேசினீர்கள். தகவல் பெருக்கத்தில் எதையும் தேடி கண்டைவதே ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. இத்தனை இதழ்கள் இத்தனை ஆக்கங்களை ஒரே மாதிரி கொட்டினால் வாசகர்கள் பெரும்பாலானவற்றை படிக்காமல் போகவே வாய்ப்பதிகம். “இது பின் நவீனத்துவவாதிகள் சரியாக யூகித்திருந்த ஒரு நிலை. வெளிச்சத்தால் கண்கள் குருடாவது”. உடன், இன்றைய தேதியில் ஒரு மாதம் என்பது மிக நீண்ட காலம். மாதாந்திரிகளையே முழுமையாக வாசிக்கிற நிலை மாறிவருகிறது. அதனாலேயே ஒவ்வொரு இதழிலும் சில ஆக்கங்கள் மட்டும் கவனம் பெறுகின்றன.  முன்னால் காலாண்டு வெளியீடாக ஒரு சிற்றிதழ் வரும். மூன்று மாதங்கள் அதை பொறுமையாக வாசிப்பார்கள். இப்போது மின்சாதன, தொடுதிரை வாசிப்பில் அந்த இயங்குமுறையே சாத்தியம் கிடையாது.

மேற்கொண்டு, உங்கள் இணையத்தளம் தொடர்ச்சியாக எப்படி வாசகர்களால் படிக்கப்படுகிறது என்பதையும் பல்வேறுபட்ட உரையாடல்களுக்கான களமாக இருக்கும்போதும் அது வாசகர்களை அன்னியப்படுத்தாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டினீர்கள். விளக்கவும் செய்தீர்கள். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ஆக்கங்கள் வெளியிடுவதனால், தினசரி ஒரு குறிப்பிட்ட கால அளவை வாசகர்களால் திட்டவட்டமாக ஒதுக்க முடிகிறது. கவனம் செலுத்தி வாசிக்கும் பழக்கம் உருவாகிறது. வாசகர்களை தக்கவைக்கும்படியும் அமைகிறது. “ஜெயமோகன்.இன் ஒரு பத்திரிக்கை போல வெற்றிகரமாக செயல்பட இதுவும் ஒரு காரணம். பிரசுரம் சார்ந்த ஒரு திட்டமிடல் இருக்கிறது. தொடர் பதிவேற்றம் இன்றைக்கு அவசியம்

அன்றைய உரையாடலில் நீங்கள் குறிப்பிட்ட, மேலேயுள்ள கருத்துக்களை சுருக்கமாக இப்படியும் தொகுக்கலாம். “இதழ்எனும் வடிவத்தைவிடவும்இணையதளம்எனும் வடிவம் கலை இலக்கியம் சார்ந்த வாசிப்புக்கு உகந்ததாக இருக்கலாம். வாசகர்களின் கவனத்தையும் ஞாபகத்தையும் பெறலாம்.

தமிழ் வாசிப்பு சூழல் பற்றிய அன்றைய உரையாடல், எவரிலும் உடனடியாக எதிர்மறை எண்ணத்தை உருவாக்க வல்லது. நீங்கள் ரயிலேறி சென்ற பிறகு, அனோஜன்மறைமுகமாய் சைட்ட இழுத்து மூடுங்கோ எண்டா சொல்றார்?” என்று சிரிக்காமலேயே கேட்டார். ஆனால் இணையதளமாய் செயல்படுவது பற்றி தொடர்ந்து உரையாடினோம். அந்த கோணத்தில் ஏற்கனவே சிதறலாக யோசித்திருந்தபடியால்,  எனக்கும் நீங்கள் சொன்னதே சரி என்று பட்டது.  “லிட் ஹப்”  இணையதளம் ஞாபகம் வந்தது. அப்படியொரு இணையதளமாக, சேகரம் போல செயற்பட்டால் நல்லது என்றே தோன்றியது. ஏற்கனவேஅருஞ்சொல்”, “கிழக்கு டுடேபோன்ற இணையதளங்கள் சமூக அரசியல் மற்றும் கலாச்சார பரப்புகளில் அப்படி இயங்குகின்றன. வேறு தளங்களும் இருக்கலாம். “அகழ்அந்த வரிசையில் சேர்கிறது.

தொடர்ந்து நண்பர்களுடன் கலந்தாலோசித்து, நம்பிக்கை பெற்றுநம்பிக்கைக் கொள்ளச் செய்து பங்களிப்பை கோரியதில் இப்போதுஅகழ்தளத்தில் ஒவ்வொரு மறுதினமும் ஒரேயொரு ஆக்கம்வீதம் பதிவேற்றம் செய்ய முடிவு செய்துள்ளோம். ஒருநாள் விட்டு ஒரு நாள் கட்டுரை, சிறுகதை, கவிதை போன்றவற்றை வாசிக்கலாம். ஒரேயொரு ஆக்கம் மட்டுமே வெளியிடப்படுவதால் வாசகர்கள் கவனம் எடுத்து படிக்கலாம். கவிஞர் சபரிநாதனின்டிராகுலாவின் சிரிப்புமுதல் கட்டுரையாக வெளியாகியிருக்கிறது.

https://akazhonline.com/?p=4873 

o

இந்த ஆண்டு ஜனவரி முதலாகஅகழ்இதழின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்று அதன் உருவாக்கத்தில் பங்களிப்பாற்றி வருகிறேன். தற்செயலாகவே இணைய நேர்ந்தது. போன வருடம் அனோஜன்அகழ்பற்றி கருத்து கேட்டபோதுதொடர்ச்சியாக வெளிவந்தால் நன்றாக இருக்கும்என்று நட்பு அடிப்படையில் சொன்னேன். தொன்றுதொட்ட தமிழ் சிற்றிதழ் மரபின் வழிதோன்றலாய் வெவ்வேறு கால இடைவெளிகளில்அகழ்வெளிவந்துக் கொண்டிருந்தது. உடனே இதழுக்கு ஆக்கங்கள் சேகரிப்பதில் உள்ள சிக்கல்களை அனோஜன் சொல்ல அந்த பேச்சு எப்படியோ வளர்ந்து நானும் ஆசிரியர் குழுவில் சேர்ந்துவிட்டேன். எட்டு இதழ்கள் கொண்டு வந்தாகிவிட்டது.

புதிய வடிவத்துக்கு போவதற்கு முன்னால் சின்னதாக சுய பரிசீலணையும் தேவைப்படுகிறது. எட்டு மாதங்களாக இதழை தரமாக கொண்டு வந்திருக்கிறோமா என்று முதலில் கேட்டு பார்க்கிறேன். ஆம் என்று பதில் சொல்லவே துணிச்சல் வருகிறது. உண்மையில் என்னுடைய வேலை அதிகம் கிடையாது. அனோஜனே முக்கியமான பணிகளை மேற்கொள்கிறார். சரியான நண்பர்களை உள்ளே இழுத்ததுபேசுபொருட்கள் சார்ந்த சில திட்டங்களை முன்வைத்ததுஇவை மட்டுமே நான் செய்தவை. அப்புறம் உள்ளடக்கத்தின் அளவை குறைத்து சீர்படுத்தினோம்.

அகழ்இதழ்களை வாசிக்கும் ஒருவர், குறிப்பிட்ட எழுத்தாளர்களின் தொடர் பங்களிப்பை சுலபமாக அடையாளங் கண்டுவிட முடியும். நவீன தமிழ் நெடுங்கவிதைகள் சார்ந்து ஷங்கர்ராமசுப்ரமணியனும் காண்பியல் கலை சார்ந்து ஏ.வி.மணிகண்டனும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார்கள். நான் மூன்று சிறுகதைகள் எழுதினேன். மேலும் கட்டுரை எழுதுவதோடு மொழிபெயர்ப்புகளும் செய்தேன். அஜிதன் மூன்று கதைகள் எழுதினார். மணவாளன் கதகளி பற்றி கட்டுரை எழுதினார். பி.கெ.பாலகிருஷ்ணன் கட்டுரையை மொழிபெயர்த்தார். ஜனார்த்தனன் இளங்கோ தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புகள் செய்தார். டி.எஸ்.எலியட்,டெர்ரி ஈகிள்டன், வாலேஸ் ஸ்டீவன்ஸ், சார்லஸ் சிமிக், ஷீமஸ் ஹீணி, ஐசக் பாஷவிஸ் சிங்கர் என்று உலகின் தலைசிறந்த ஆளுமைகளை மொழிபெயர்த்து வெளியிட்ட நிறைவிருக்கிறது.

இவற்றுக்கு அப்பால் விரிவான நேர்காணல்களை பிரசுரித்தோம். அனோஜன் மாஜிதாவை நேர்காணல் செய்தார். வே.நீ.சூர்யா கண்டராதித்தனை நேர்கண்டார். சுனீல் கிருஷ்ணன் யுவன் சந்திரசேகரை எடுத்த பேட்டி வெளியானது. நான் சுகுமாரனிடம் மேற்கண்ட விரிவான பேட்டி பலரையும் சென்றடைந்தது. சுரேஷ்குமார் இந்திரஜித், இசை,சாம்ராஜ், .துரை, வயலட், பாலசுப்ரமணியன் பொன்ராஜ் , ஜிப்ரி ஹாசன், பாரி, ஜா.ராஜகோபாலன், சுரேஷ் பிரதீப் என்று பலரும் பங்களிப்பாற்றினார்கள். அவர்களுடைய தரமே இதழின் தரமாகவும் உருமாறியது.

குறிப்பிட்டு சொல்லும்படியான ஆக்கங்கள் இல்லாமல் ஓர் இதழும் வெளியாகவில்லை.போதாமைகளும் இருக்கின்றன. தேர்வுகள் இன்னமும் தமிழ் ருசியை வெளிப்படுத்தலாம். பலதரப்பட்ட அறிவுத் துறைகளை உள்ளடக்கலாம். அதற்கான முயற்சிகள் செய்யப்படாமல் இல்லை. காண்பியல் கலை, கதகளி ஆகியவை பற்றியெல்லாம் நேரடியாக கட்டுரைகள் வருவது ஒரு தொடக்கமே. ஆனால் தூரம் அதிகம். போலவே இதழுக்கென்று தனித்த நோக்கமும் குணமும் திரள்வதில்  நிச்சயமாக இடைவெளிகள் உள்ளன.  கால நகர்வில் இன்னும் மேம்படும் என நம்புகிறேன்.

o

அகழ்இணையதளத்தில் இனி தொடர்ந்து பதிவேற்றப்படும் ஆக்களுங்கான அறிவிப்பை பெற, வாசகர்கள் மின்னஞ்சல் முகவரியை பதித்துக் கொள்ளலாம். (அறிவிப்பு அஞ்சல், விளம்பரம் என ஸ்பாமிலோ பிரமோஷனிலோ போய் விழக்கூடும். கவனிக்க). புதிய வடிவம் முந்தையதைவிட சிறப்பாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வாசகர்களிடம் இந்த தகவலை கொண்டு போய் சேர்ப்பதே முதல் சவால். இது ஒரு பரிசோதனை முயற்சியே. சூழலில் எதிர்வினைகள் வரவேற்கப்படுகின்றன. நேர்மறையாக இருந்தாலும் சரி. எதிர்மறையாக இருந்தாலும் சரி.

வாசக பரவலாக்கம் சார்ந்து தமிழ் சிற்றிதழ் வட்டத்தில் ஒரு மனத்தடை உண்டு. எனக்கு அதில் உடன்பாடில்லை. அதே நேரம் தீவிரமான எழுத்துக்களுக்கான வாசகப் பரப்பை மிகையாக கற்பனை செய்துகொள்வதோ எதிர்பார்ப்பை வளர்ப்பதோ பயனற்றது. இரண்டு நோக்குகளிலும் எல்லைகள் உண்டு. ஒன்று இருட்டில் மூடிக் கொள்வது என்றால் இன்னொன்று வெற்று விளம்பர மோகம். இது எந்த எழுத்துச் செயல்பாட்டுக்கும் பொருந்துகிற, அடிக்கடி ஞாபகம் மூட்டிக் கொள்ள வேண்டிய பழைய விதி என நினைக்கிறேன். சூழலோடு உரையாட விரும்பும்போதும் அடிப்படை தீவிரத்திலும் ஆழத்திலும் மாற்றம் வராமல் பார்த்துக் கொள்ளுதல். இல்லாவிடில் ஆதார இயல்பே திரிந்துவிடக்கூடும். சமூக வலைத்தளம் ஓர் எழுத்தாளரின் மொழி நடையினையே சிதைத்துவிடுவது போல.

ஏற்கனவே சொன்னது போல, நண்பர்களின் ஒத்துழைப்பினாலேயேஅகழ்இதுவரை தொடர்ந்து வெளி வந்திருக்கிறது. விஷ்ணுபுரம் அமைப்பு வழியே அறிமுகமானவர்களின் எண்ணிக்கை இதில் கணிசமானது என்பதை சொல்லாமல் இருப்பது தார்மீகம் கிடையாது. கூடவே உங்கள் இணையதளம் வழியாகவே தொடர்ந்துஅகழ்பக்கங்களுக்கு கவனம் சேர்ந்திருக்கிறது என்பதையும். இரண்டுக்குமே நன்றி ஜெ!

இனி அகழ் வெளி வரவும் நண்பர்களின் துணை தேவை. சிறுகதைகவிதைகளோடு வெவ்வேறு துறை சார்ந்த கட்டுரைகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. நிச்சயமாக பிரசுரத்திற்கென்று சில அளவுகோல்கள் உள்ளன. சில விதிமுறைகளும் தனிப்பட்ட முடிவுகளும் உள்ளன. உதாரணமாக திரைப்படம் சார்ந்த கட்டுரைகளில் ஆர்வம் வற்றிவிட்டது. பிரசுரிக்கவே கூடாது என்றில்லை. ஆனால் அக்கட்டுரைகளில் எளிதில் போலித்தனம் சேர்ந்துவிடுகிறது. குறைந்த முதலீடு, நிறைய லாபம் திட்டமாகவே தமிழில் இலக்கியத்தை கைவிட்டு திரைப்படம் அல்லது ஓடிடி தொடர் பற்றி எழுத விரும்புகிறார்களோ என்ற வலுவான சந்தேகம் இருக்கிறது. அயல் இலக்கியம் பற்றிய கட்டுரைகளிலும் இத்தகைய பாவனைகளை பார்க்க முடிகிறது. எனவே, பாவனைகள் வரவேற்கப்படுவதில்லை என்று தெரிவிக்கிறோம்.  

இன்று பல்வேறு இணைய இதழ்கள் செயல்படுகின்றன. எல்லா இதழ்களுக்கு பின்னாலும் கடுமையான உழைப்பும் அவரவருக்குரிய லட்சியங்களும் இருப்பதை மறுக்கவே முடியாது. சிற்றிதழ் நடத்துவது எழுத்தாளர்களின் ஆதி பரியந்த தொடர்பு என்றாலும் இவ்வளவு இதழ்களுக்கான தேவையும் எங்கோ இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. காட்சி ஊடகம் ஆயிரங்கால் பூதம் போல எல்லாவற்றையும் ஆக்கிரமித்திருக்கும் நேரத்தில்யுடியூப் சேனல் நோக்கி படையெடுக்காமல், வாசிப்புக்காக மட்டுமே இத்தனை தளங்கள் இயங்குவது நிச்சயம் மிக நல்ல விஷயம். “அகழ்இணையதளமும் இந்த புதிய வடிவில் தொடர்ந்து இயங்க, காலமும் சூழலும் உதவி புரியட்டும். தங்கள் வாழ்த்துக்களையும் மேம்பாட்டுக்கான கருத்துக்களையும் எப்போதும் கோருகிறோம்.

அன்புடன்,

விஷால் ராஜா.

முந்தைய கட்டுரைஇருபதாண்டுகள், எட்டு நூல்கள்.
அடுத்த கட்டுரைதியானமுகாம், கடிதம்