பெண்களுக்கான உலகம் -கடிதம்

அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு

கடந்த வார இறுதியில் நடந்த பெண்களுக்கான யோக பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். வெள்ளி மதியம் வரை மனம் ஒன்றவில்லை.முதல் முறையாக மகளை தனியே கணவர் பொறுப்பில் விட்டு செல்லும் தவிப்பு , ரயில் தட்கல் சிக்கல்கள் , ஈரோட்டில் இருந்து நித்யவனம் செல்லும்  ஏற்பாடுகள் என கடைசி நொடி வரை நிச்சயமின்மை இருந்தது.அதற்கு முந்தைய வாரம் , ஆலய கலை முகாமுக்கு சித்தன் போக்கு சிவன் போக்கு என்று கிளம்பி சென்ற கணவரை நினைத்து கொஞ்சம் புகைச்சலும் வந்தது

எல்லாம் ஈரோடு வரும் வரை ….அதன் பின் தனியே எந்த பொறுப்பும் இல்லாமல் செய்யும் பயணங்களுக்கே உரிய இனிய நிம்மதி. சிறிய குதூகலத்துடன் காரில் நிகழ்விடம் வந்து சேர்ந்தோம்.வந்தவுடன்  சூடான இட்லி சாம்பார் தேங்காய் சட்னிஅதில் இருந்து ஆரம்பித்தது சின்னச்சிறு இனிமைகளால் மட்டும் கோர்க்கப்பட்ட 2.5 நாட்கள்.

ஆசிரியர் திரு சௌந்தர் ராஜன் அவர்களின் சிரித்த முகமும் மிக தெளிவான கற்பித்தல் முறையும் எங்கள் ஒவ்வொரு சிறிய சந்தேகத்தின் போது அவர் கொண்டிருந்த பொறுமையும் ஒரு தனி பதிவுக்கானது.யோகா பற்றி ஏற்கனவே சேமித்திருந்த மிகைப்பட்ட மற்றும் தவறான தகவல்கள் அழிந்து ,யோகா பற்றிய தெளிந்த புரிதல்களும்  இதில் இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் எனும் மன உறுதியும் ஏற்பட்டது

ஒரு இடத்தில் ,நிகழ்ச்சியில் , தருணத்தில் பெண்ணால் அளிக்கப்படும் பிரகாசத்திற்கு ஈடு இல்லை12 இல் இருந்து 60 வயது வரை உள்ள  பெண்கள்பொறுப்புகள் கடமைகள் அற்று ஒரு முற்றிலும் குதூகல மனநிலையில் மட்டுமே உள்ள  பெண்கள்அதிலும் மாலை  நேர தேனீர் இடைவேளையின் போது ஏற்படும் சிரிப்பும், சத்தமும்கூட்டமாக இரை  கொத்தும் கிளிகூட்டத்தை  நினைவுபடுத்தும் எத்தனை வெளிச்சமாய் இருந்திருக்கும் ?

ஆயினும் வகுப்பின் போது கவனம் சிதறாமல் இயல்பாய்  கவனிக்க முடிந்தது .இரு காரணிகள்

1.பயிற்சியின்  மேல் அனைவருக்கும் இருந்த உறுதி

2.ஆசிரியரின் கற்பித்தல் முறை

இதமான குளிர்,வசதியான தங்குமிடம் ,மிக நேர்த்தியான நிர்வகிப்பின் மூலம்  கனிவை காண்பித்த திரு அந்தியூர் மணி அவர்கள் என நிறைவாய் இருந்தது (அவரின் கவனிப்பில் அனைவரும் எப்போதும் சாப்பிடும் அளவை விட ஒரு கை கூடவே சாப்பிட்டோம்)

தென் கொரியாவில் பிரத்யேக postpartum care centres உண்டுஒரு spa அல்லது உயர்தர விடுதி அங்கே தாயின் வேலை 5 முறை சமச்சீர் உணவு உண்டு உறங்கி மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புவதே. அதற்கு இணையான அனுபவம் என்று தோன்றியது.தோழி ஒருவர் விளையாட்டாக யானைகளின் புத்துணர்ச்சி முகாம் போல என்று சொன்னார்.முதலில் சிரித்தாலும் எனக்கு அது சரி என்று தோன்றியது..யானை என்றால்  எனக்கு நினைவில் வருவது குறும்பு குட்டியுடன் கூடிய பெண் யானை தான்.மகிழ்ச்சியான,ஆரோக்கியமான பெண்கள் யானையை போல சமுகத்துக்கு மங்கலம் சேர்ப்பவர்கள் அல்லவா ?

கண் மூடி செய்யும் ஆசனங்களின் பிறகு உள்ளங்கை சூடு தந்து மெதுவாக கண் திறக்க சொல்வார்  ஆசிரியர்.அந்த நிலையில் மாற்றம் சீராக நடக்கஅது மட்டும் நடக்க வாய்க்கவில்லை ..அவசரமாக கிளம்பும் சூழ்நிலை.சென்னையின்  வெக்கையும் சத்தமும் நெரிசலும் முகத்தில் அறைந்தது.ஆயினும் குறை ஒன்றும் இல்லை ..பெண்களுக்கே உரிய இயல்போடு மனம் ஏற்றுக்கொண்டது

இதில் கலந்து கொண்டது என் நல்லூழ்

நன்றி ,

பாரதி செந்தூர்

அன்புள்ள பாரதி,

உண்மையில் என் வாசகிகளாக அறிமுகமாகி, தொடர்ந்து வாசிக்கும் பெண்கள் பலர் உள்ளனர். எல்லா அகவைகளிலும். ஐம்பது வயதுக்குமேல் இலக்கிய வாசிப்பை தொடங்கி வெண்முரசு வாசித்து முடிக்கும் வாசகிகள்கூட உண்டு. இந்த காலகட்டத்தில்தான் பெண்களுக்கு இத்தகைய ஒரு வாழ்க்கை வாய்ப்பு அமைகிறது.இன்று பெண்களுக்கு வாழ்க்கையில் ஓர் இரண்டாவது தொடக்கத்துக்கான இடம் உள்ளது

ஆனால் கணிசமான பெண்களுக்கு அதற்கான களங்கள் இல்லை. ஒன்றுகூட, எதையாவது செய்ய வழிகாட்டல்கள் இல்லை. இந்த முகாம்களின் நோக்கம் அதுவே. யோக முகாம் என்பது ஒரு தொடக்கம். அது பெண்களுக்கு வழக்கமாக இருக்கும் சில உடல் – உள்ளம் சார்ந்த சிக்கல்களை கடப்பதற்கான ஒரு வழிகாட்டி. கூடவே அவர்கள் கூடவும் பேசவும் ஓர் இடம். வீட்டுக்கு வெளியே அவர்களுக்கான ஒரு சுதந்திர வெளி என்பது மிகமிக முக்கியமானது. இதை 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்ந்து எழுதி வந்திருக்கிறேன் (குடும்பத்தில் இருந்து விடுமுறை) விடுமுறைதான். விடுமுறைகள் அன்றாடத்தை மேலும் சிறப்பாக ஆக்குபவை. 

இளம்பெண்களுக்கும் தொழில் சார்ந்த பல புதிய களங்கள் இன்றுள்ளன என்றாலும் கலையிலக்கியம், தத்துவம் சார்ந்த களங்கள் அனேகமாக இல்லை என்னும் நிலையே உள்ளது. ஓர் இளம்பெண் நவீன இலக்கியம், இசை, சினிமா பற்றி அறிய வாய்ப்பே இல்லை. அவர்கள் நம்பி சென்று தங்கும் இடங்களும் குறைவு. அவற்றை நாடும் பெண்கள் மிகக்குறைவு என்றாலும் நாடுபவர்களுக்கு என்று ஓர் இடம் இருந்தாகவேண்டும் என நினைக்கிறோம். இது முதன்மையாக எங்கள் மாபெரும் நட்புக்குழாமுக்குள் மட்டும் நிகழும் முகாம்களே.

இதற்கு அப்பால் மேலும் பல களங்களை உருவாக்கலாமென்னும் எண்ணமும் உள்ளது. ஓவியம், சிறார் இலக்கியம் என பெண்கள் பங்களிப்பாற்றுவதற்கான வாய்ப்புகளை கண்டடைய விரும்புகிறேன். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கவும் திட்டம் உண்டு.

ஜெ

முந்தைய கட்டுரைபொன்னியின் செல்வன், ஓநாய்குலச் சின்னம் – கடிதம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர்: தீபு ஹரி