சஞ்சய் சுப்ரமணியம்

மதிப்புக்குரிய சஞ்சய்,

என்னுடைய பிரியத்திற்குரிய பாடகரான நீங்கள் என் இணையதளத்தைப் படிப்பது பெருமை. மகிழ்ச்சி. ஒரு ரசிகனின் வணக்கங்கள்.

யுவன் சந்திரசேகர் என் நண்பன். அவன் உங்களைப்பற்றி நிறையச் சொல்லியிருக்கிறான். அவன் வீட்டுக்கு நீங்கள் சென்றதை புல்லரித்துச் சொன்னது நினைவில் இருக்கிரது. இசையில் நீங்கள் நம் காலத்து நாயகன்.

ஜெ

திரு ஜெமோ அவர்களே

 

தங்களிடமிருந்து கிடைத்த இந்த அஞ்சலைக் கண்டதும் புல்லரித்துவிட்டது. நீங்களும் இந்த தமிழ் இலக்கிய உலகின் நாயகன் என்பது என்னையும் சேர்த்து எல்லோரும் அறிந்த விஷயம். என்னுடைய தமிழ் இலக்கிய அறிவும் வாசிப்பும் மிகக் குறைவுதான். நான் தமிழை ஒரு கல்வி  என்ற முறைகளில் தான் பயின்றேன். ஒரு நகர சூழ்நிலையில் பிறந்து வளர்ந்து ஆங்கிலத்தைய் பிரதானமாகக் கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் கடந்த 4/5 வருஷங்களாக கொஞ்சம் கொஞ்சம் தமிழ் வாசிப்பு அதிகரித்திருக்கிறது.

உங்களுடைய இணையதளத்தை அடிக்கடி படிப்பதுண்டு. குறிப்பாக உங்களுடைய “கன்னியாகுமரி” “சுந்தர ராமசாமி” என்ற நூல்களைப் படித்து ரசித்தேன். உங்களுடைய எழுத்தக்களில் இருக்கும் நவீனம் என்னைப்போன்ற எழுவதுகளில் தமிழ் படித்துவிட்டு மறந்தவர்களுக்கு கொஞ்சம் மலைப்புத்தான். நான் இன்னும் தி ஜ போன்றவர்களின் தமிழ் நடையிலிருந்து  இந்த  நூற்றாண்டுக்கு வரவில்லை என்று சொல்ல வேண்டும். ஆனால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் கண்டிப்பாக வந்து விடுவேன்.
சுந்தர ராமசாமி நினைவில் என்ற நூல் என்னை மிகவும் கவர்ந்தது. அதில் இருக்கும் எதார்த்தமும் ஆவேசமும் என்னை ரொம்பவும் பாதித்தது. அதே சமயத்தில் இந்த தமிழ் இலக்கிய சூழலில் இவ்வளவு விஷயங்களை வெளிப்படையாக எழுதுவதும் எனக்கு ஆச்சிரியமாகத் தான் இருக்கிறது. எங்கள் இசை உலகில் நாங்கள் இதயெல்லாம் பேசுவோம் ஆனால் எழுத மாட்டோம். ஆனால் நீங்கள் எழுத்தாளர்கள் ஆகையினால் எழுதுகிறீர்கள். ஒரு விஷயத்தில் இதைப் போல் எழுதுவதனால் ஒரு ஏமாற்று உலகில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றுதான் தோன்றுகிறது.
கொஞ்சம் அதிகமாக எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன். எதோ உங்களிடிமிருந்த இதைக் கண்டதும் ஒரு ஆவேசத்தி எழுதிவிட்டேன். போரடித்துவிட்டேன் என்றால் மன்னிக்கவும்.

 

Sanjay

அன்புள்ள சஞ்சய்,

உங்கள் கடிதம் கண்டு  எனக்கு ஏற்பட்ட உவகையை நீங்கள் கற்பனைசெய்ய முடியாது. உங்கள் பல்லாயிரம் ரசிகர்களில் வரிசையில்கடைசிப் படிகளில் நிற்கக்கூடிய எளிய, தீவிர ரசிகன் நான்.

கலை நம்மை அடிமையாக்கிவிடுகிறது. கல்வி, ஞானம், புகழ் அனைத்தையும் கழற்றி வீசிவிட்டு பூரணமான அடிமையாக என்னை உணரும் தருணம் இசை கேட்பதில் எனக்கு இருக்கிறது. அதிகாரத்துக்கும் பணத்துக்கும் அடிமையாவதில் எத்தனை இழிவு இருக்கிறதோ அதனைவிடப் பல மடங்கு மகத்துவம் கலைக்கு அடிமையாவதில் இருக்கிறது.

ஒரு கலைஞனுக்கும் நமக்குமான உறவு என்பது அத்தனை அந்தரங்கமானது. சொல்லப்போனால் அதை அந்தக் கலைஞனிடம் பகிர்ந்துகொள்வதேகூட கூச்சம் அளிக்கக் கூடிய அளவுக்கு அந்தரங்கமான ஒன்று அது. உங்கள் வசியம் செய்யும் குரலுடன் நீங்கள் எனக்கு மிக மிக அருகே இருக்கிறீர்கள்.

நான் இசைகேட்கும் வழக்கமே இல்லாத குடும்பப் பின்னணி கொண்டவன். நான் மலையாளப்பின்னணி கொண்டவன் என்று தெரிந்திருக்கும் பொதுவாக கேரளத்தில் இசையின் இடத்தை கவிதையை பாடுதல் — அதை chanting என்றுதான் சொல்ல வேண்டும் – வகிக்கிறது. என் அம்மாவுக்கு கவிதைகளில் ஈடுபாடு இருந்தது. இலக்கியத்தில் பெரிய வாசகி. ஆனால் இசையில் எளிய அறிமுகமே இல்லை. எனவே எனக்கும் இசைப்பழக்கமே இல்லை.

நான் என் திருமணத்துக்குப்பின் 1993 வாக்கில்தான் இசை கேட்க ஆரம்பித்தேன். அதற்கு என் மனைவிதான் காரணம். மகாராஜபுரம் சந்தானம் வழியாகவே நான் இசைக்குள் நுழைந்தேன். அக்காரணத்தாலேயே எனக்கு அவர் மீது பெரும் பற்று இன்றும் உண்டு. அவர் இலக்கியத்தில் தி.ஜானகிராமன் போல என்பார் சுந்தர ராமசாமி. அவர் வழியாக எளிதாக உள்ளே நுழையலாம். அவரை வெகுவாகத் தாண்டிச் சென்றாலும் அவரை நிராகரிக்க முடியாது.

அந்நாட்களில் நான் என் மாபெரும் ஐதீக நாவலான ‘விஷ்ணுபுரம்’ எழுதிக்கொண்டிருந்தேன். என் கற்பனையில் விரிந்த மாபெரும் நகரத்தில் நான் வாழ்ந்துகொண்டிருந்தேன். அது ஒருவகை உல்லாசம், ஒருவகை வதை. அந்நாவலின் அத்தனை உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும் நானும் அடைவேன். அந்நாட்களில் என்னை சமநிலைக்குக் கொண்டுவர இசை பெரிதும் உதவியது.

அப்போது சென்னையில் மியூசிக் அக்காதமி அருகே உள்ள ஒரு கடையில் உங்கள் ஒலிநாடா ஒன்றை வாங்கினேன். உங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது அப்போது. அட்டையில் உங்கள் படம் எனக்கு பிடித்திருந்தது. நல்ல முகம் என்பதனால் மட்டும் அதை வாங்கி பலநாள் அப்படியே வைத்திருந்தேன். இசையைப்பற்றி எதையும் வாசிப்பதோ விவாதிப்பதோ என் வழக்கம் அல்ல. ஒரு நாள் நள்ளிரவில் அந்த ஒலிநாடாவைப் போட்டுக்கேட்டேன்.

தர்மபுரியில் ஒரு வாடகைவீட்டில் முதன் முதலாக இருளில் உங்கள் குரலைக் கேட்டதை இப்போதும் என்னால் சொற்களால் காட்சியாக ஆக்க முடியும். ஒலிக்கருவியின் சின்னஞ்சிறு செங்கனல் முத்துக்கள். அந்த மெல்லிய ஒளியிலேயே அதன் மேலே இருக்கும் சிறிய படம் தெரிந்தது. பச்சை நிற தழல் போல குதித்தாடிய ஒளிச்சுட்டி. சுவர்களிலெல்லாம் நிரப்பி அறையை நிறைத்த உங்கள் குரல். அதிலுள்ள ‘சீதாபதே’ என்ற கீர்த்தனை என்னை ஒருவகை வெறிக்கு ஆளாக்கியது.

என் முதல் எண்ணம் ‘என்ன ஒரு இளமை!’ என்பதுதான். ஏனென்றால் நான் அதுவரை கேட்ட குரல்கள் அனைத்துமே முதுமையானவை. கர்நாடக சங்கீதத்தில் உள்ள பிர்காக்கள் குரலை மேலும் முதுமையாக ஆக்குகின்றன. உங்கள் குரல் பளீரென்று கண்ணை நிறைக்கும் ஒளியுடன் கண்ணாடிப்பொழிவாகக் கொட்டும் சிற்றருவி போல் இருந்தது. கன்றுக்குட்டிபோல இயல்பான துள்ளல். உங்கள் குரலில் எப்போதும் ஒரு புன்னகை இருந்துகொண்டிருக்கிறது.

அதன்பின் இத்தனை வருடங்களில் தொடர்ச்சியாக உங்களைக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். இருமுறை உங்கள் கச்சேரிகளைக் கேட்டிருக்கிறேன். நான் நல்ல இசைரசிகன் அல்ல. என் நண்பர்கள் யுவன் சந்திரசேகர், ஷாஜி போன்ற பலர் மிகச்சிறந்த இசை ரசிகர்கள். நா.மம்முது , சுரேஷ் கண்ணன் போன்றவர்கள் இசை நுட்பங்களை ஆராய்ந்தறிந்தவர்கள். அவர்கள் பேசுவதைக் கேட்கும் இடத்திலேயே நான் எப்போதும் இருக்கிறேன். என்னால் ராகநுட்பங்களுக்குள் செல்லவே முடிந்ததில்லை. என்னால் அடையாளம் காணப்படும் ராகங்களே மிக மிகக் குறைவுதான். கர்நாடக சங்கீதம் தவிர வேறு எந்த இசைமரபையும் என்னால் உணர முடிவதில்லை.

ஏன் என்று நான் என்னைக் கேட்டுக்கொண்டதுண்டு. சுந்தர ராமசாமி என்னிடம் அதற்கான காரணத்தைச் சொன்னார். எனக்கு செவிசார் நுண்ணுணர்வு மிகவும் குறைவு. என்னுடைய நுண்ணுணர்வு மொழியையும் காட்சிகளையும் சார்ந்தது. இதை நீங்கள் என் எழுத்தையும் யுவன் சந்திரசேகர் எழுத்தையும் ஒப்பிட்டு நோக்கி அறியலாம். நான் என் கதைகளை அப்படியே கண்ணில் காட்டிவிடுவேன். நுண்மையான தகவல்களுடன் ஒரு கனவுபோல, திரைப்படம்போல மொழுயால் நிகழ்ச் செய்வேன். உணர்ச்சிகளைச் சொல்ல வேண்டிய இடத்தில் மொழியை கட்டற்று தன்னிச்சையாக பாயவிட்டுவிடுவேன். அந்தத்திறன் என்னுடைய பலவீனமும்கூட.

நான் இசையை எப்படிக் கேட்கிறேன் என்று சுந்தர ராமசாமியுடம் பலமுறை சொல்லியிருக்கிறேன். விஷ்ணுபுரம், காடு போன்ற நாவல்களிலும் எழுதியிருக்கிறேன். அதை நீங்கள் அறிந்தால் வேடிக்கையாக இருக்கக் கூடும். நான் இசையை காட்சிவடிவங்களாகவே உணர்வேன். ‘வாதாபி கணபதிம்’ என்று பாடினால்  இருட்டுக்குள் பல அசைவுகள் நிகழ்வதுபோல கருமை நெளிய போல யானை நடக்கும் காட்சி. ஆனந்தபைரவி என்றால் சட்டென்று கிளையை சற்றே உலுக்கி சிறகசையாமல் மேலே எழும் பறவை. இந்த காட்சிகளுக்கு தர்க்கமே கிடையாது. தன்னிச்சையாக பிம்பங்கள் கொட்டிக்கோண்டே இருக்கும். விழிப்புநிலைக் கனவுபோல. இது பல்லாயிரம் பேர் கூடியிருக்கும் கச்சேரியிலும் நிகழும்.

ஆகவே நான் கேட்கும் இசையே வேறு. நீங்கள் ஒரு நீண்ட ஆலாபனை வழியாக துல்லியமான கணக்குகளுடன் ஒரு ராகபாவத்தை கட்டி எழுப்பிக்கொண்டிருக்கும்போது நான் ஒரு பெரும் கோபுரத்தைக் கண்டுகொண்டிருக்கலாம். நீங்கள் உச்சத்துக்கோ நுண்மைக்கோ செல்லும்போது நான் அது என்ன என்று தெரியாமலேயே புல்லரிப்பு கொள்வேன். அதுதான் என் இசை அனுபவம். நான் இசை கேட்பதுகூட இசையின் ஒரு வகைதான் என்றார் ராமசாமி. ‘கணக்குகளுக்குள்ளே போகாதீங்கோ அப்றம் உங்க கனவெல்லாம் போயிடும்’ என்றார்.

இசைகேட்கும்போது எனக்குள் இப்படி பிம்பங்கள் பெருகும் இயல்புதான் தியானத்தில் எனக்கு பெரும் தடையாகவும் இருந்தது — நீடிக்கவும்செய்கிறது. இதை ஓர் அக இயல்பு என்று மட்டும்தான் சொல்ல வேண்டும்.

நான் இசையைக் கேட்டு உணர்ச்சி வசப்படுவதில்லை. யுவன் சந்திரசேகர் பேசும்போது தழுதழுப்பான். எனக்கு இசை ஒரு துல்லியமான தியான அனுபவம்தான். நான் மதுரை சோமுவையும் கேட்டு ரசிப்பேன். ஆனால் அவரது அந்த பக்திப்பெருக்கு இசையின் ஒரு முகம் மட்டும்தானா என்ற எண்ணம் ஏற்படவும் செய்யும். சந்தானமும் அப்படித்தான். ஆனால் உங்கள் குரல் , உச்சரிப்பு எதிலுமே பக்தியின் நெகிழ்ச்சி இல்லை. அது உங்கள் இளமையின் விளைவு.லுங்கள் பாடுமுறையில் அழகனுவம் மட்டுமே உள்ளது, தழுதழுப்பு இல்லை. உங்கள் இசையின் மிகச்சிறந்த இயல்பு என்று நான் எண்ணுவது இதையே .நம் காலகட்டத்து பாடகர்களில் முதலிடத்தில் உங்களை வைப்பதற்கான நியாயமும் இதுவே.

யானையின் கம்பீரமும் மயிலின் நளினமும் அழகு என்று சொல்கிறோம். தந்தநிறமான ஒரு புத்தம்புதிய கார் தன்னை சுற்றியுள்ள அனைத்தையும் தன் மீது வளைந்து பிரதிபலிக்கச் செய்தபடி சத்தமில்லாமல் வந்து நிற்பதைக் காண்பதும் பெரும் அழகனுபவமே. நவீனமான அழகனுபவம் ஓன்றை உங்கள் குரலால் உருவாக்க முடிந்திருக்கிறது. பல மேதைகள் திகழ்ந்த கர்நாடக சங்கீத உலகில் அதுவே உங்கள் தனித்தன்மை, சாதனை. அதனாலேயே என்னைப்போன்ற ஒருவருக்கு நீங்கள் நெருக்கமானவராக ஆகிறீர்கள்.

இது என் மனப்பிரமையாக இருக்கலாம். இசை தெரிந்தவர்கள் சிரிக்கவும்கூடும். ஏனென்றால் உங்களைப் பற்றி எழுதும்போதும் ‘சாருகேசி மல்லிகை போல சோபித்தது’ என்பதுபோல சம்பிரதாயமான பாராட்டுகளைத்தான் நாளிதழ்களில் எழுதுகிறார்கள். என்னைப்பொறுத்தவரை இது நான் ரசிக்கும் அம்சம். இசை அருவமான ஒன்றாகையால் நாம் நினைப்பதை அது காட்டுமோ என்னவோ. ஆனால் நான் உங்கள் இசைநாடாக்களை என் குருவான நித்ய சைதன்ய யதிக்கு கொண்டு வந்து கொடுத்திருக்கிறேன். அவர் உலக இசைமரபுகளை முறைப்படிக் கற்றவர். அவரும் என்னிடம் ‘He is modern’ என்று சொன்னதை நினைவுகூர்கிறேன்.

என் இசைகேட்கும் முறையும் கொஞ்சம் விபரீதமானது. ஒரு மனநிலையில் ஒரு குரல் என்னை வசீகரிக்கும்போது அப்படியே மணிக்கணக்கில் உள்ளே சென்றுவிடுவேன். என்னால் திரும்பி வரமுடியாது. இரவெல்லாம் ஒரே ஒலிநாடாவை மீண்டும் மீண்டும் கேட்டதுண்டு. இரவு முழுக்க கேட்டு மறுநாள் பகலிலும் கேட்டதுண்டு. உடல் சோர்ந்து களைத்து சரியவேண்டும். அதுதான் எல்லை. அப்படி என்னை மீண்டும் மீண்டும் பைத்தியத்தின் விளிம்புகளில் உலவ விடுகிற பல குறுந்தகடுகள் உங்களுடையவை.

எத்தனையோ உக்கிரமான மகத்தான தருணங்கள். அவற்றுக்காக நான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். அந்த நன்றி எத்தனையோ மனங்கள் குரல்கள் வழியாக உங்களை வந்தடைந்திருக்கும் இசைக்குச் சொல்லும் நன்றி

ஜெ

http://tamizhile.blogspot.com/

 

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைபேரா.நா.தர்மராஜன்