ஓவியங்களை அறிதல்- கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

இந்த முகாமிற்கான அறிவிப்பில் இது நவீன ஓவியக்கலை மற்றும் புகைப்படக் கலையை ரசிக்கும் பயிற்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பயிற்சியை அப்படி சொல்லி சுருக்க முடியாது. இது ஓவியம், புகைப்படம், சிற்பம் என வடிவங்களை தாண்டி நூல், நிலம், மரம், மகரந்தம், குப்பை, பிரபஞ்சம் என எல்லாவற்றையும் கொண்டு கலைஞன் படைக்கும் ‘Images-ஐ ரசிக்கும் பயிற்சி’. இல்லை, அப்படியும் சொல்லி விடமுடியாது. ரசிப்பதை தாண்டி இது ஒரு சிந்தனை பயிற்சி, ஆழ்ந்து கவனிப்பதன் பயிற்சி. ‘Images-ஐ தியானிக்கும் பயிற்சி’ என்று சற்று தயங்கி முழுமை பெறாத தலைப்பாய் முன்வைப்பேன்.

நான் கல்லூரியில் கற்றது கணக்கியல் தான் என்றாலும் கலையில் நான் கொண்ட தேடலால், கொச்சினில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் Biennale என்ற கலை கண்காட்சியில் 2022 Dec – 2023 April வரை தன்னார்வலராக செயலாற்றினேன். நிறைய கலைஞர்களை சந்தித்தேன். அங்கு கற்றவை நிறைய இருந்தாலும், சில நவீன கலைப்படைப்புகளை காணும் போது, இது எப்படி கலையாகும்? இதற்கு என்ன அர்த்தம்? இதில் என்ன கூற வருகிறார் படைப்பாளி? என்றெல்லாம் பல குழப்பங்களுமாய் கேள்விகளுமாய் என்னுள் கிறுக்கி கொண்டிருந்தேன். இந்த கேள்விகள் அனைத்திற்கும் ஆசிரியர் ஏ.வி. மணிகண்டன் பதில் கூறி, அதையும் undercutting என உடைத்து உடைத்து புதிதாய் ஒரு புரிதலை ஏற்படுத்தி விட்டார். அந்த ஐந்து மாதங்களை விட இந்த மூன்று நாட்களில் நான் கற்றுக் கொண்டவை மிகுதி.

இந்த முழுமை பார்வை இல்லாமல் இருந்திருந்தால் நான் வாசிக்க நேர்ந்திருக்கும் சில விஷயத்தை அளவுகோலாகக் கொண்டு மற்ற அனைத்தையும் அளவிடத் தொடங்கி இருப்பேன்.

கலை என்றால் என்ன? என்ற அளவுகோலை வரலாற்றின் ஊடாக மறுபரிசீலினை செய்து கொண்டே வந்தார். கலை பற்றிய முன் முடிவுகளைக் களைந்து அதை உள்வாங்குவதற்கு தயார் செய்யும் முன்னுரை, ஐரோப்பிய கலை வரலாறு, கலையை எவ்வாறு வாசிப்பது என்ற பயிற்சி – என்ற விரிவான பாகங்களாய் இந்த முகாம் அமைந்தது.

ஏன் கலையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்? கலை என்றால் என்ன? இந்திய கலைக்கும் ஐரோப்பிய கலைக்குமான வேறுபாடு? கலையை எப்படி அணுகுவது? என ஒரு தெளிவான பார்வையை ஏற்படுத்திய பின்னரே வகுப்பை தொடங்கினார்.

முக்கியமான பங்களிப்பாற்றிய கலைஞர்களாகிய Steve McCurry, Marry Ellen Mark போன்றவர்கள் நேர்மையாக முன்வைக்கும் படைப்புகளிலும், அவர்களது கலாச்சார பின்புலம் எவ்வாறு அவர்களை Intellectually Blind ஆக்குகிறது என்பதன் மூலம் ‘நான் தூய innocence வழியாகவே ரசிப்பேன்’ என்பதன் அபத்தத்தை உணர்த்தினார்.

மனிதனுக்கு சுய-கால பிரக்ஞை உருவாகி, மதம், அரசன், இயற்கை, சாமானியன், சுய வெளிப்பாடு என வளர்ந்து முதன்முதலாக வண்ணத்தை வண்ணமாகவும், ஒளியை ஒளியாகவும் கண்டு, அப்படியும் காணத்தான் முடியுமா? என முட்டி நின்று, இன்று அதனிலும் வளர்ந்து நிற்கிறது கலை.

காலந்தோறும் கலைஞன் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பவன். கலைஞன் ஆழ்ந்த அறிதலுக்கும், தனிப்பட்ட தேடலுக்கும், சமகால தீர்வுகளுக்கும், தத்துவ கேள்விகளுக்கும் என கலையில் நெடுந்தூரம் செல்கிறான்.

சமூகத்தின் கண்ணாடியாய் அதை பிரதிபலிப்பதும், சமூகத்தின் கண்ணாய் அதன் பார்வையை தீர்மானிக்கவும், மாற்றவும் செய்கிறது என்று கலை வரலாற்றையும், வரலாற்றை மாற்றி அமைப்பதில் கலையின் பங்களிப்பையும் விளக்கினார்.

பெண் கலையில் சித்தரிக்கப்பட்ட வரலாறு, வரலாற்றில் பெண் கலைஞர்களின் இடம் என்னவென்று விரிவாக பேசினார்.

வரலாறு வாழும் தொடர்ச்சியாக நம் அன்றாடத்தை பாதித்துக் கொண்டே இருக்கும் இடங்களை தொட்டுக் காட்டினார். பன்னிரண்டாம் நூற்றாண்டின் Gothic ஆலய யுக்தியை பயன்படுத்தி, இன்று பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகள் நம்மை சூழ்ந்து, கீழே குனிந்து, சிறிய மனிதனிடம், ‘இதோ இந்த பொருளை நீ வாங்கினால், இந்த பிரம்மாண்டத்தில் நீயும் ஒரு பகுதி’ என கூவுகிறது.

கலை மறுமலர்ச்சி இந்தியாவில் ஏன் நடக்கவில்லை, அப்படி நடந்தால், நாம் உலகிற்கு என்ன பங்களிப்பை ஆற்ற முடியும் என்பதான அரவிந்தரின் ‘Renaissance in India’ என்ற கனவை‌ காட்டினார்.

‘Running Fence’ – Christo and Jeanne-Claude. இது 40 கி.மீ செல்லும்  வெள்ளை துணி வேலி. இப்படைப்பு  அங்கு நிகழ்வதற்கு முன் அது ஒரு அழகான நிலக்காட்சி.  ஆனால் இது அங்கு எழுப்பப்பட ஏன் நான்கரை வருடங்கள் ஆகின? இரண்டே வாரங்களில் அகற்றப்பட்ட இது எழுப்பப்படுவதற்கு ஏன் மூன்று மில்லியன் டாலர்கள் செலவாகியது? வேலி என்பது எல்லையா? ஒரு வேலி தான் பிரிக்கிறதா? அது கல்லாகவும் கம்பியாகவும் தான் இருக்குமா? கல்லை விட கடினமான எத்தனையோ வேலிகளை நாம் இங்கே வார்த்தைகளால், சட்டத்தால் பதித்து வைத்திருக்கிறோம்.  இவ்வாறு இருக்க ஒரு வேலியால் இணைக்க முடியுமா? இந்த படைப்பு எழுப்பப்படுவதற்கான காலகட்டத்தில் அந்த கலைஞர்கள் இந்த மக்களிடையே அனுமதி வாங்க, ஒருங்கிணைக்க என அவர்களுடன் உரையாடி, அந்த நான்கு வருடத்தில் அவர்களை ஒன்று திரட்டி, அந்த மக்களின் மனதில் உள்ள வேலியை அகற்றி அவர்களை இணைத்து விட்டனர். இப்படைப்பை புரிந்து கொள்ள துவங்கியவுடன் பார்வைக்கு புலப்படாத எவ்வளவு வேலிகள் நம் மனதில் இருக்கும்? அதை கலைஞன் தானே புலப்படுத்த வேண்டும்.

கலையை எப்படி ரசிப்பது என்ற பயிற்சி  ஆசிரியரிடம் நேரில் மட்டுமே பெறக்கூடிய ஒன்றாக இருந்தது. இது ஒரு பேரனுபவமாக அமைந்தது. எந்த புத்தகத்திலும் பெற முடியாத ஒன்று. ஒரு கலை படைப்பில் இருந்து நாம் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்று காட்டினார். ஆனால் தொடர்பற்ற அர்த்தங்களை அதன் மீது ஏற்றுவது ஒரு பிழை. அதன் வரலாற்று கலாச்சார பின்புலத்தோடு, அந்த Image-இன் இயல்புக்கேற்ப, அதில் இருப்பவற்றைக் கொண்டே வாசிக்க வேண்டும். ஒரு பார்வையாளனாக எந்த படைப்பில் எதை பார்ப்பது என்ற புரிதலே ஒரு கலை, அக்கலையை கற்றுக் கொடுத்தார்.

‘Rothko chapel’ என்ற படைப்பை பார்த்ததும் வெறும் கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஓவியமாக தோன்றியது. இரண்டு உலகப்போர்கள் முடிந்த காலகட்டத்தில் மனிதன் பெரும் அவநம்பிக்கையில் இருக்கிறான், அடுத்து வியட்நாம் போர், கடவுள் இறந்துவிட்டதன் வெறுமையை உணர்கிறான். அப்படியான ஒரு யுகத்தின் துக்கத்தில் வரையப்பட்டது இது. ஆனால் இது முற்றிலும் வண்ணம் இல்லாத கருப்பு அல்ல. ஒரு துளி வண்ணம் இருக்கிறது. இது ஒரு துளி நம்பிக்கையா? அல்லது முழுமையான இருள் கவிழ்ந்து கொண்டிருக்கிறதா? இது அந்த யுகத்தின் மௌனமாய் என் முன் நிற்கிறது. என்னை கேள்வி கேட்கிறது.

இந்த மூன்று நாட்கள் போதவில்லை. ஆசிரியர் அள்ளிக் கொண்டு வந்த செல்வத்தில், நேரமின்மை காரணமாக சிலவற்றை கடந்து சென்றோம். அந்த விடுபட்ட பக்கங்கள் என்னை ஏங்க வைக்கிறது.
இன்னும் ஆழமாக கலையையும், வரலாற்றையும், கவிதையும், இலக்கியத்தையும் ரசிக்க ஒரு வழி பிறந்திருக்கிறது.

ஆசிரியர் ஏ.வி. மணிகண்டன் அவர்களுக்கும், இந்த வாய்ப்பளித்த உங்களுக்கும் நன்றி ஜெ.

அருண்மொழி

 

ஓவியப்பயிற்சிக்குப் பின்…ஒரு கடிதம்  

ஓவியம்- கடிதம்

கண்களைக் கண்டடைதல், கடிதம்

சித்திரம் பயில்தல், கடிதம்

ஓவியத்தினூடாக அறிதல், கடிதம்

ஓவியக்கலைப் பயிற்சி, கடிதம்

ஓவியக்கல்வி, புதிய தலைமுறை- கடிதம்

ஓவியங்களை அறிதல்- கடிதம்

முந்தைய கட்டுரைஓர் அட்டை ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர்:இல.சுபத்ரா