ஓர் அட்டை ஒரு கடிதம்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

கு.அழகிரிசாமி நூற்றாண்டு நினைவு நூலகம் அறச்சலூர் அரசுப்பள்ளியில் துவங்கும் நிகழ்வுக்காக அப்பள்ளியில் தங்கியிருந்தேன். என் பால்யகாலத்தில் நான் பயின்ற பள்ளிக்கூடம். சுவரோவியங்கள் வரைதல், சிலைபீடம் கட்டுதல், பள்ளிவளாகத்தை சீரமைப்பது, கிணற்றை புனரமைப்பது என ஒருவார காலம் அங்கேயே தங்கி இரவுபகலாக பணிசெய்தோம். வாசிப்பு இயக்கம், திரையிடல் என இனிவரும் ஒருவருட காலத்து செயற்திட்டங்களை மனிதல்கொண்டு ஒவ்வொரு பணியையும் பார்த்துப்பார்த்து முடித்தோம். ‘யான் அறக்கட்டளை’ நண்பர்களின் ஒத்துழைப்பில் ஓர் பெருங்கனவு நிறைவேறியுள்ளது.

அவ்வாறு அறச்சலூர் பள்ளிக்கூடத்தில் தங்கியிருந்த ஓரிரவில், நான் படித்த வகுப்பறையின் மேசையொன்றில் இந்தப் புத்தகத்தைப் பார்த்தேன். மனதில் ஒருவித நிறைவை முழுதாக உணர்ந்த தருணம் அது. பதினொன்றாம் வகுப்புக்கான கோனார் தமிழ் உரை புத்தக அட்டையில் தாகூர், நம்மாழ்வார் இவர்களின் படங்களுடன் உங்கள் படமும் வண்ணத்தில் அச்சாகியிருந்தது. ‘படைப்பின் நிமிர்வு’ என எனக்குள் சொல்லிக்கொண்டேன். தனது கனவுக்காகத் தன்னை அர்ப்பணித்துப் பயணிப்பவனை நிச்சயம் வழித்தோன்றல்கள் பின்தொடர்வார்கள். இலக்கியம் எனும் இயக்கத்தின் வழியாக நீங்களளித்த மீட்புக்கான ஓர் அடையாளக்குறியீடாக இதை உருவகித்துக் கொண்டேன்.

கோனார் தமிழ் உரையை முதன்முதலில் உருவாக்கிய ஐயம்பெருமாள் கோனார் அவர்களைக் குறித்தும் தமிழ்.விக்கியில் முழுப்பதிவு தரப்பட்டிருந்தைக் கண்டபோது அச்செயல் தமிழ்ச்சூழலில் தவிர்க்கமுடியாத இணையக் கலைக்களஞ்சியமாக நிலைபெறும் எனத் தோன்றியது. ஒருசில மனிதர்களின் நினைவில் மட்டுமே எஞ்சிய ஆளுமைகளும் அவர்களது வாழ்வும் இன்று உங்களாலும் உங்கள் நண்பர்களாலும் இணையக் கட்டுரைகளாக பொதுவெளியில் பரவலடைகின்றன.

இந்திய படைப்பாளிகளாகப் பேருயரத்தைத் தொட்டவர்களை அடுத்த தலைமுறை இளஞ்சமூகத்திற்கு முன்னிறுத்தும் ஓர் நற்செயற்பாடாக அமைகின்றன கோனார் தமிழ் உரையின் அட்டைப்படங்கள் . இனி வருங்காலங்களில் எழுதவரும் எத்தனையோ இளம் மனங்கள் வென்றுகடக்க வேண்டிய உச்ச எல்லைகளாக உங்கள் புனைவுகள் விரிந்துநிற்கின்றன. யானை டாக்டர் கதைவழியாக உங்கள் படைப்புமனம் பள்ளிக்காலத்திலேயே குழந்தைகளுக்கு அறிமுகமாகத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் உங்கள் முகம் அவர்களுக்கு அறிமுகமாவதை அவசியமென நினைத்த அந்த பதிப்பகத்தாருக்கு எங்கள் வணக்கங்கள்.

இசைஞானி இளையராஜாவின் தன்விதிகள் பற்றிய ஓர் உரையில் நீங்கள் “ஒரு கலை உன்னுடையதென்றால் அதற்கு மிச்சமின்றி உன்னைக் கொடு” எனக் குறிப்பிடுவீர்கள். அவ்வகையில், இக்கூற்றுக்கு இலக்கியத்திற்கான சாட்சியாக எங்களால் உங்களைச் சுட்டமுடியும். ‘தான் நம்பும் கலைக்காகத் தன்னை மிச்சமின்றி கொடுத்த’ எத்தனையோ ஆசிரியர்களின் நிறைவரிசை எங்களுக்கு உண்டு என்கிற நம்பிக்கை தருகிற நிறைவுணர்வு பெருமிதமளிக்கிறது.

~

நன்றியுடன்,
சிவராஜ்
குக்கூ காட்டுப்பள்ளி

முந்தைய கட்டுரைசியாட்டிலில் ஓர் உரை -’மூன்று அறிதல் முறைகள்’
அடுத்த கட்டுரைஓவியங்களை அறிதல்- கடிதம்