மழைக்குளிரும் காடும் – சக்திவாசா

காடு வாங்க

காடு ஜெயமோகன் மின்னூல் வாங்க

அன்புள்ள ஜெ

உங்களுக்கு எழுதும் கடிதங்களனைத்தும்  உணர்வெளிச்சியின் ஏதொவொரு உச்சத்தில் தான் நிகழ்கின்ற. அதனாலேயே நாட்கள் கழித்து இதை எழுதுகிறேன். காடு. காடு வாசித்தேன். அதிக நாட்கள் எடுத்துக்கொண்டன மொழியினால். இருப்பினும் உள் செல்ல செல்ல அதுவும் பழகியது. ஒளிர்ந்து மறைந்த மிளாவின் பச்சைக் கண்களை பார்த்தபின் அப்படியே காட்டை விட்டு வெளியேறி சில தினங்களுக்குப் பின் திரும்பினேன். கிரியின் வாழ்க்கை தோல்விகரமான வாழ்க்கையோ என்றால் ஆம் பைத்தியம் போல் அலைந்து மட்டுமே இருந்திருக்கிறான் என தோன்றும் அப்படியல்ல வெற்றிகரமான ஒரு வாழ்க்கை தான் என்றால் ஆம் அதுவும் பச்சை உண்மை என்றே தோன்றும் .

எனக்குள் காதல் குறித்தான ஒரு தீர்க்கமான கருத்து நம்பிக்கை ஏதோவொன்று இருந்தது.  காமத்தின் உச்சமே காதல் அல்லது காதலின் அதிதீவிரத்தை அவளிடம் காமம் மூலமே வெளிப்படுத்த இயலும் என்றெல்லாம். ஆனாலும் நான் அறிந்திருந்தேன் காதல் காமத்தோடு முடிவடைவதில்லை குறிப்பாக காமத்தின் எல்லையில் அது மென்மேலும் பரந்து விரிவடையுமென அறிந்ததை உணர்ந்த கணம் புன்னகைத்தேன்… “திண்ணையில் அமர்ந்து பார்த்தேன். முற்றத்தில் இரு தேன் சிட்டுகள் எழுந்து அமர்ந்து சிறகு விடைத்து ‘சிட் சிட் ‘ என்று ஒலி எழுப்பிச் சலிக்காமல் சோராமல் விளையாடின. விளையாடுவதுதான் உயிர்களின் இயல்பான காதல். விளையாட்டு என்பது ஒருவரின் அருகாமையை பிறர் கொண்டாடுவது. ஒருவரைப் பிறர் ஓயாது சுற்றி வருவது இல்லை, காலத்தையும் காற்று வெளியையும் இருவர் மட்டுமாக நிரப்ப முனைவது அது. எங்குமிருக்க எப்போதுமிருக்கத்

துடித்துத் தாவிப் பறந்து அலைவது. காதலித்து விளையாடும் உயிர்கள் கடவுளிடம் சொல்கின்றன இதோ இருக்கிறோம். ஆம் இருக்கிறோம். இருந்து கொண்டிருக்கிறோம். வேறு ஒன்றுமே இன்றி இருப்பது மட்டுமாக இருக்கிறோம். இதோ பார், ஒன்றுமே நிகழாமல் அனைத்தையும் நிகழ்த்தும் காலம் சென்று கொண்டிருக் கிறது”356-357

ஒரு கதையின் முடிவில் ஒரு மாற்றம் நிகழும் எதையாவது ஒன்றை விட்டுச்செல்லும் இதுவரை அவ்வாறாகதான் வாசித்தறிந்திருந்தேன். ஆனாலும் காடு காடு போல் பல்வேறு தளங்களில் விரிவடைந்து கொண்டேயிருக்கிறது. மேஸ்திரி ரெசாலம்  அந்த தேவாங்கிற்காக ஏன் அவ்வளவு மெனக்கெட்டார் என்பதை  உணர்ந்தபோது கண் ததும்பியது. குட்டப்பன் மிகவும் இனக்கமாகிக் கொண்டார் ஏனோ. அய்யர் ஒரு எதார்த்தமான கவிதை. அவர் ஒரு சாமியாரைப் போல் மாறியதிலும் ஆச்சரியம் இல்லை. அவருக்குள் ஏதோ ஒன்று எப்பொழுதும் இருந்து கொண்டேயிருந்திருக்கிறது.அவரால் அதை அடையவே முடியவில்லை என்றாலும் தீரா பசியேதானே வாழ்க்கை என தோன்றியது. காடு காட்டுத்தனம் நகரம் நாகரீகாகம் இரண்டுமே அதன் உச்சங்களில் சரியானது அல்ல என தோன்றியது. என் அகத்தின் அடி ஆளத்தில் ஒளிந்திருக்கிறாள் நீலி இன்னமும் அவளின் துல்லியமான முகத்தை எங்கும் தேடிக்கொண்டேயிருக்கிறேன். காட்டில் இருந்த அனைவரின் மேலும் சூழ்நிலைகளுக்கேற்றவாறு கசப்பு வந்து நீங்கியது. ஆனால் நீலி மட்டும் அந்த காட்டுத் தேன் போல் இனித்துக் கொண்டேயிருக்கிறாள் . நீலி அவளே அனைத்துமான அந்த காடு காடே நீலி. மேனனின் மனைவியை பற்றிய பக்கங்களில் தொடைகளுக்கு நடுவே சதை புடை புடைக்க சட்டென நீலியின் கூக்குரல் எங்கோ ஒலிக்க மீண்டேன். ஜுலை1 கொடைக்கானல் சென்றிருந்தேன் அங்கு தான் காடு வாசிக்க துவங்கினேன். இடையில் தொழிலின் மீதான தீவிரத்தால் அதிக நாட்கள் எடுத்து கொண்டேன் முடிக்க. ஆகஸ்ட் கடைசி வாரத்தில் முடித்தேன். இந்த மாத இறுதியில் வால்பாறை செல்கிறேன் அந்த கிளர்ச்சியிலேயே இதை எழுதி கொண்டிருக்கிறேன். நான் அறிவேன் ஏழாம் உலகத்திற்கு என்னால் மீண்டும் செல்லவே இயலாது. ஆனால் காடு இனி என் வாழ்நாள்நெடுகிலும் உடன் வரும்.

சக்தி வாசா

முந்தைய கட்டுரைஇலக்கியக் கூட்டங்கள், பெண்கள்
அடுத்த கட்டுரையுவன், கடிதங்கள்