சாம்ராஜின் கலை – மணிமாறன்

அன்புள்ள ஜெ,

எழுத்தாளர் சாம்ராஜ் ஒவ்வொரு முறையும் என்னை வியப்படைய செய்கிறார். முதலில், அவர் எழுதிய “அவள் நைட்டி அணிந்ததில்லை” என்ற கவிதையை படித்து வியந்தேன். பிறகு அவருடைய “13” என்ற சிறுகதையை படித்து வியந்தேன். இப்போது “மூவந்தியில் சூலுறும் மர்மம்” என்ற இந்த கட்டுரை தொகுப்பினை படித்து வியக்கிறேன்.

இந்த ஒற்றை நூல் எனக்கு பல அருமையான படைப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு கட்டுரையும் மிகவும் நேர்த்தியாகவும் கூர்மையோடும் எழுதப்பட்டுள்ளது. இடையிடையே வரும் பகடிகள் புன்னகைக்க வைக்கின்றன. அவ்வப்போது கண்கலங்காமலும் இல்லை.

கட்டுரைகள் ஒவ்வொன்றும் எப்பக்கச் சாய்வுமின்றி நேர்மையின் கூரோடு இருப்பதனால், சொற்கள் அதன் மாயவித்தையை நிகழ்த்திக் காட்டுகின்றன.

மலேசிய கவிதைகளை பற்றி அவர் எழுதிய ‘அந்தக் கப்பல் வந்துகொண்டே இருக்கிறது’ என்ற கட்டுரை எனக்கு நல்லதொரு திறப்பாக அமைந்தது. எது கவிதை, எது கவிதை இல்லை என்பதை பற்றிய புரிதலை எனக்கு ஏற்படுத்தியது.

செல்வம் அருளானந்தம் என்ற எழுத்தாளரை எனக்கு நேற்றுவரை தெரியாது, ஆனால் இன்றோ அவருடைய ‘எழுதித் தீராப் பக்கங்கள்’ மற்றும் ‘சொற்களில் சுழலும் உலகம்’ புத்தகங்களை படிக்காமல் என் கட்டை வேகாது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. ‘கண்ணீர் உறையும் கணங்கள்’ கட்டுரை ஏற்படுத்திய தாக்கம் அப்படிப்பட்டது.

”’ஆறு’ தலைமுறையின் கதை” என்ற கட்டுரையை படித்துவிட்டால், முகிலினி நாவலை நம்மால் படிக்காமல் இருக்கவே முடியாது. அப்படியொரு அருமையான எழுத்து.

விரைவில் சாம்ராஜ் அவர்களுடைய முதல் நாவல் வெளிவர இருக்கிறது. நான் எப்போதும் போல் வியப்படைய காத்திருக்கிறேன்.

– மணிமாறன்

முந்தைய கட்டுரைConflating Hinduism with Vedic religion is a dangerous distortion
அடுத்த கட்டுரைஆ. சதாசிவம்