பாலை மலர்ந்தது – 5

பத்மநாபபுரத்தில் தங்கியிருந்த காலகட்டத்தில் என் விருந்தினர் அனைவருக்கும் அரண்மனையைச் சுற்றிக்காட்ட அழைத்துச்செல்வது என் வழக்கம். சைதன்யா மிக உற்சாகமாகஇதோ பாருங்க, இதான் ராணி தூங்குற எடம்!’ என கிரீச்சிட்டு அழைத்துச்செல்வாள். 

ஒருமுறை ராய் மாக்ஸம் அதை பார்த்துக்கொண்டிருந்தபோது அருகே வந்த ஓர் அமெரிக்க இந்தியர் வெள்ளையரை குளிர்விக்கும் பணிவுடன்இதெல்லாம் சின்ன அரண்மனைநான் வெர்சேய்ல்ஸை பார்த்துக்கொண்டிருந்தபோது…” என ஆரம்பிக்க ராய் கடும் சீற்றத்துடன் முகம் சிவக்க அவரிடம் அப்பால் செல்லுமாறு சொல்லிவிட்டார். ராய் இந்தியாவைப்பற்றிய இளக்காரங்களை சற்றும் பொறுத்துக்கொள்ள மாட்டார்

நானும் உலகமெங்கும் அரண்மனைகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நான் பார்த்த அரண்மனைகளிலேயே சிறியது பத்மநாபபுரம் அரண்மனையே. அது 1600களில் கட்டப்பட்டது. முற்றிலும் மரத்தாலானது. அன்றைய இந்திய வாழ்க்கைச்சூழலுடன் இணைந்தது. மிதமான ஒளியமைப்புக்காகவும், குறைவான இடத்தை சிறப்பாகப் பயன்படுத்தியிருப்பதற்காகவும் புகழ்பெற்றது. (பத்மநாபபுரம் அரண்மனை)

இந்தியாவில் நமக்கு மிகப்பெரிய அரண்மனைகள் இருந்திருக்க வாய்ப்பு குறைவு. மிகப்பெரிய இல்லங்களே இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அதற்கான தேவை இல்லை. நாம் இயல்பாக ஆண்டில் பெரும்பாலான நாட்களில் வெளியே வாழும் வசதி கொண்டவர்கள்.  அத்துடன் நம் கட்டுமான முறையும் பெரும்பாலும் கருங்கல்லை நம்பியது. அது அகன்ற அமைப்புகளுக்கு உகந்தது அல்ல. 

ஆகவே நம் கட்டிடங்கள் எல்லாமே சிறியவை. ஆலயங்கள்கூட. பத்தாம் நூற்றாண்டில்தான் நம் ஆலயங்கள் பெரியதாகத் தொடங்குகின்றன. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் நம் கட்டிடங்கள் பெரியதாகின்றன. ஆயினும் நமக்கு கிடைக்கும் மிகப்பெரிய மாளிகைகள் கூட உலக அளவுகோலின்படி சிறியவைதான்.

ஆனால் ஐரோப்பியக் கட்டிடக்கலை மிகப்பெரிய மாளிகைகளை கிமு ஒன்றாம் நூற்றாண்டு முதலே உருவாக்கிக்கொண்டது. ரோமாபுரியின் கட்டிடங்கள் மிகப்பெரியவை. அக்கட்டிடக்கலை அராபியக் கட்டிடக்கலை வழியாக அங்கே சென்றது என்பதற்குச் சான்று கும்மட்டங்கள் மற்றும் செங்கல்வளைவுகள். ஐரோப்பியக் கட்டிடக்கலையில் இவை அடிப்படையான வரைவுகள். மிகப்பெரிய தேவாலயங்கள் எல்லாமே செங்கல் வளைவுகளின் பெருந்தொகை என்னும் அமைப்பு கொண்டவை. (செயிண்ட் பீட்டர்ஸ் கதீட்ரல்) 

கும்மட்டங்கள், வளைவுகள் ஆகியவை செங்கல்லைக்கொண்டே மிகப்பெரிய  அளவிலான கூரைகளை உருவாக்க வழிவகுப்பவை. இந்த கட்டுமானமுறையே அராபியஐரோப்பிய கட்டிடக்கலையை மிகப்பெரும் பாய்ச்சலுக்கு இட்டுச்சென்று மிகப்பெரிய உள்ளளவு கொண்ட மாளிகைகளை உருவாக்க வழிவகுத்தது. அந்த கட்டிட  முறை இந்தியாவில் முகலாயர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் சிறந்த உதாரணம் கோல் கும்பாஸ் மசூதி.

ஆனால் ஐரோப்பா அதை மிகப்பிரம்மாண்டமாக விரித்தெடுத்ததுபோல இந்தியாவில் நிகழவில்லை. இந்தியாவுக்கு ஐரோப்பியர் வந்தபோது அவர்கள் கட்டிய தேவாலயங்களிலேயே செங்கல்வளைவுக்கூரை என்னும் அமைப்பு உள்ளது. வடக்கன்குளம், ராஜாவூர் போன்ற ஊர்களிலுள்ள தேவாலயங்கள் குறிப்பிடத்தக்கவை. (வடக்கன்குளம் தேவாலயம்)

நாங்கள் பொன்னியின்செல்வன் சினிமாவுக்காக ஆய்வு செய்தபோது தமிழகத்தின் தொன்மையான மாளிகைகளின் கூரை எந்த வடிவில் இருந்திருக்கக்கூடும் என்பது பெரிய வினாவாக இருந்தது. அதிகமான இடம் கொண்ட நம் கட்டுமானம் என்பது, இப்போது கிடைப்பது, மன்னார்குடி ராஜகோபாலசாமி ஆலயத்தின் புறத்தே உள்ள மண்டபம்தான். ஆனால் அது பலநூறு கருங்கல்தூண்களும், தூண்களுக்குமேல் இணைக்கப்பட்ட கருங்கல் சட்டங்களும் கொண்டது. கல்மண்டபங்களின் இணைப்புதான் அது. ஒற்றைத் திறந்தவெளி கொண்ட கட்டுமானம் அல்ல. 

(கடைசியில் அன்றே செங்கல் கும்மட்டம் இருந்தது என்று காட்டிவிடுவோம் என முடிவெடுக்கப்பட்டு முகலாயக் கட்டிடக்கலை கொண்ட ஓர்ச்சா, குவாலியர் ஆகிய இடங்களில் முகலாயப்பண்பாட்டுச் சின்னங்கள் மறைக்கப்பட்டு பொன்னியின் செல்வன் எடுக்கப்பட்டது)

அராபியக் கட்டிடக்கலை மாபெரும் மசூதிகள், மாளிகைகள் ஆகியவற்றுக்காக புகழ்பெற்றது. ஆனால் மாபெரும் கோட்டைகளை அவர்கள் உருவாக்குவது வளமான நிலமான இந்தியாவுக்கு வந்தபின்னர்தான். பாலைவனத்தைவிட பெரிய கோட்டை ஏதுமில்லை.

ஆனால் துருக்கியின் கலிஃபாவின் அரண்மனைகள் உலகமெங்கும் அரண்மனைகளுக்கே முன்னுதாரணமாக அமைந்தவை. ஷாஜகானின் அரண்மனை அவற்றை நோக்கிய ஒரு முயற்சி. வெர்சேய்ஸ் கூட துருக்கிய பாதுஷாவின் மாளிகைக்கு நிகரான ஒன்றை கட்டிவிடவேண்டும் என்னும் கனவில் இருந்து உருவானதே.

அந்தக் கனவு அராபிய ஷேக்குகளுக்கும் இருப்பது இயல்பே. துபாய் – அபுதாபி வழியில் அவர்களின் ஓர் அரண்மனையையும் ஒரு கோட்டையையும் பார்த்தேன். இரண்டுமே மிகச்சிறிய மண்சுவர்களாலான கட்டுமானங்கள். கோட்டை அங்கிருந்த ஒரே ஒரு நீரூற்றை பாதுகாப்பதற்காகக் கட்டப்பட்டது. அரண்மனை ஒரு மதில்சூழ்ந்த சிறு கட்டிடம் மட்டுமே. ஓங்கி மழை பெய்தால் கரைந்துவிடக்கூடியது.

ஆகவே அபுதாபியின் ஆட்சியாளர் குவாஸிர் அல் வாடன் (Qasr Al Watan) என்னும் மாபெரும் மாளிகையை தனக்காகக் கட்டிக்கொண்டமை புரிந்துகொள்ளக் கூடியதுதான். 2019ல்தான் இந்த அரண்மனை பொதுப்பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டது. 2010ல் இதன் கட்டுமானப்பணி தொடங்கியது. 2017ல் முடிவுற்றது. இரண்டு ஆண்டுக்காலம் அபுதாபியின் மன்னர்குலம் விருந்தினரை உபசரிக்குமிடமாகவும், விருந்தினர்கள் தங்குமிடமாகவும் இருந்தது.

நவீனத்தொழில்நுட்பம், அதன் கட்டுமானப்பொருட்கள் தொன்மையான அராபியக் கலையை சந்தித்ததன் விளைவு இந்த அரண்மனை. 38000 சதுரமீட்டர் அளவுள்ளது. கிட்டத்தட்ட ஒரு சிறிய கிராமம் அளவுக்கே இடம் கொண்டது. வாசலில் இருந்து மின்கலப்பேருந்தில் உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். பிரம்மாண்டமான சலவைக்கல் முகப்பு. இருபுறமும் பூங்காக்கள். உள்ளே திறந்து கொண்டே இருக்கும் மாபெரும் கூடங்கள்.

முகலாயர் காலம் முதல் இந்தியாவில் தங்கரேக்கு அமைத்தல் என்னும் கலை மலர்ச்சி பெற்றது. முகலாயர் அதை சீனர்களிடமிருந்து கற்றனர். தங்கத்தை மிகமிகமிக மெல்லிய தகடாக தட்டி விரித்து வெப்பத்துடன் ஊதி மரத்தின்மேல் படியச் செய்தல். சீனர்களிடமிருந்து அராபியர் வழி அக்கலை ஐரோப்பாவுக்குச் சென்றது. இன்று ஐரோப்பிய தேவாலயங்களின் ஓவியங்கள் மற்றும் சிலைகள் முதல் திபெத்திய புத்தர்ச்சிலைகள் வரை அந்தக் கலை பெருகிப் பரவியிருக்கிறது

அபுதாபியின் இந்த அரண்மனையை தங்கத்தின் பொலிவு என்று சொல்லலாம். பளிங்குச் சுவர்களில் தங்கநிறமான அலங்காரங்கள் இந்த அரண்மனையின் அழகு. கண்களுக்குள் தங்கம் பெய்வதுபோல. தங்கம் மீது என்றுமே மானுடன் பெரும் பித்து கொண்டுள்ளான். அது செல்வம் என்பதனால் மட்டுமல்ல. அது நெருப்பின் நிறம். அந்தியின் நிறம். தளிரின் நிறம். ஆகவே இளமையின் நிறம்.

Nature’s first green is gold என்பது ராபர்ட் ஃப்ரோஸ்டின் கவிதை. அவரே Nothing gold can stay என்றும் சொல்கிறார். உண்மை. ஆனால் உலகமெங்கும் கலையின் கனவென்பது கணநிகழ்வுகளை காலமின்மையில் நிறுத்துவதுதான்.

ரெபாபா. வயலின் போலத்தான். ஆனால் குடத்துக்கு பதில் தோல்பரப்பு.

அந்த மாபெரும் மாளிகையில் காலோய நடந்துகொண்டே இருந்தோம். ஒரு பொற்சிற்பமாக ஷேக் சையத் அவர்களின் பொன்மொழி அமைக்கப்பட்டிருந்தது. விண்ணில் இருந்து விழுந்த ஒரு பொற்துளி.

அரசகுடிக்கு பரிசாக வந்த பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகம். எங்கும் செல்வம். செல்வம் கண்கூசவைக்கிறது, ஆனால் அதுவே கலையென்றாகும்போது அழகென்றாகிறது. ஆணவம் கனிவுகொள்கையில் அணைக்கும் தன்மையை அடைவதுபோல.

அன்று மதிய உணவு உண்ணாமலேயே கிளம்பி துபாய்க்குச் சென்றோம். துபாயில் லவண்டர் என்னும் விடுதியில் எங்களுக்கு அறை போடப்பட்டிருந்தது. அங்கே பிட்ஸா வரவழைத்து சாப்பிட்டு, குளித்து உடைமாற்றி அன்று மாலை நிகழவிருந்த விழாவுக்கு சித்தமானோம். நாஞ்சில்நாடன், சுகிர்தராணி, இளங்கோ கிருஷ்ணன், அமிர்தம் சூரியா ஆகியோர் ஏற்கனவே வந்து அந்த விடுதியிலேயே தங்கியிருந்தார்கள்.

மாலை விழா The Bristol Deira என்னும் விடுதியின் அரங்கில் நிகழ்ந்தது. வழக்கமாக இலக்கிய விழாக்கள் வெளிநாடுகளில் இருவகையில் நிகழும். ஒரு பெரிய கலைவிழாவின் ஒரு பகுதியாக இலக்கிய விழா இருக்கும். கலைவிழாவுக்கு பெருந்திரளாக வந்திருப்பார்கள். அவர்களுக்கு இலக்கியமும் இலக்கியவாதிகளும் தேவையற்ற தொல்லை. அரசியல், சினிமா சார்ந்த பெருந்தகைகள் கொண்டாடப்படுவார்கள். ஊடே பொறுமையிழந்த அரங்கினர் முன்னர் ஒருவகை கேலிக்கூத்தாக இலக்கியப் பேச்சுக்கள் நிகழும். அவ்விழாவுக்கே புரவலர் அமைவார்கள்.

சான்யோ டாஃப்னி

அல்லது மிகச்சிலர் மட்டுமே பங்கெடுக்கும் இலக்கிய நிகழ்வுகள் நிகழும். அதற்கு புரவலர் இருக்க மாட்டார்கள். இலக்கிய ஆர்வலரின் கைக்காசில் அவ்விழா நிகழும். விஷ்ணுபுரம் இலக்கிய விழா பெரிய நிகழ்வு, ஆனால் இலக்கிய வாசகர்களின் கொடையால், புரவலர்கள் இன்றி நிகழ்கிறது. அது தமிழ்ச்சூழலில் ஓர் அரிய நிகழ்வு. அ.முத்துலிங்கம் அவர்களின் இலக்கியத் தோட்டம் முன்னெடுக்கும் கனடா இலக்கிய விருதுவிழா இதைப்போன்ற இன்னொரு அருநிகழ்வு.

ஆனால் அமீரக  விழா முழுக்க முழுக்க இலக்கிய விழாவாக நிகழ்ந்தது. அதேசமயம் பெருந்திரளாக பங்கேற்பாளர்கள் இருந்தனர். பல புரவலர்கள் இருந்தனர். இத்தகைய ஒரு நிகழ்வு தமிழகத்திலும் வெளியிலும் இதுவரை இல்லாதது. அதற்காகவே அந்த புரவலர்களும், ஒருங்கிணைப்பாளர்களும் பாராட்டத்தக்கவர்கள். என் உரையில் அதை குறிப்பிட்டுச் சொன்னேன்.

துபாயின் இந்த அமைப்பு ‘பரணி’ என்னும் குழு. சான்யோ டாஃப்னி, தேவா சுப்பையா, சங்கர் மகாதேவன் ஆகியோர் இதன் முதன்மை செயல்பாட்டாளர்கள். சென்ற சில ஆண்டுகளாக இவர்கள் துபாயில் இலக்கிய விழாக்களை ஒருங்கிணைக்கிறார்கள். பொதுவாக தமிழில் பேசப்படும் இலக்கிய அரசியல்கள், காழ்ப்புகளுக்கு அப்பால் இருக்கிறார்கள். அவற்றை அறியாதவர்களும் கூட. ஆகவே அவர்களிடம் இலக்கியம் பற்றிய நம்பிக்கையும், நேர்நிலை நோக்கும் உள்ளது.

இந்த விழாக்களை நான் முக்கியமானவையாக நினைப்பதே இதனால்தான். இலக்கியத்திற்குள் நமக்குத்தேவை வரையறுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள், புறவயமான நெறிகளின் அடிப்படையில் நிகழ்த்தும் தீவிரமான விவாதங்கள். மற்றும் திட்டமிடப்பட்ட பயிற்சி வகுப்புகள். அவற்றை ஆண்டு முழுக்க விஷ்ணுபுரம் சார்பில் ஒருங்கிணைக்கிறோம். கூடவே நமக்கு இலக்கியக் கொண்டாட்டங்களும் தேவை. அவற்றில் பெருந்திரளாக மக்கள் கலந்துகொண்டாகவேண்டும்.

ஏனென்றால் இன்று மிக வேகமாக இளைய தலைமுறை இலக்கியத்தில் இருந்து அகன்றுகொண்டிருக்கிறது. வாசிப்பே இல்லாமலாகிக் கொண்டிருக்கிறது. வெறுந்தொழில்நுட்பப் பயிற்சியும் அது சார்ந்த பொழுதுபோக்குகளும் நம் வாழ்க்கையென ஆகிக்கொண்டிருக்கிறது. இப்போக்கு தொடர்ந்தால் நாம் இன்றைய தொழில்நுட்பச் சிறுநாடுகளின் வாழ்க்கைக்குள் சென்றுவிடுவோம். உழைப்பும் சூதாட்டமும் மட்டுமே வாழ்க்கை என ஆகிவிடும்.

அப்படி ஆகிப்போன நாடுகள் கொரியா போன்றவை. அவை தங்கள் சமூகத்திற்குள் மீண்டும் கலாச்சாரச் செயல்பாடுகளை புகுத்த பெரும் பணத்தைச் செலவிட்டுக்கொண்டிருக்கின்றன. மாபெரும் இலக்கிய – கலாச்சார நிகழ்வுகளை ஒருங்கிணைக்கின்றன. ஆனால் விலகிச்சென்றுவிட்ட ஒரு தலைமுறையை மீட்டு கொண்டுவருவது எளிதல்ல.

நமக்கிருக்கும் பெரும்பிரச்சினை அரசியல். அரசியல் என்பது இன்று அதிகாரவிழைவு கொண்ட தரப்புகள் தங்களை இரு துருவங்களாக ஆக்கிக்கொண்டு நிகழ்த்தும் உச்சகட்ட போர். அந்த போரில் ஈடுபட்டவர்களால் பிற எதையுமே கவனிக்கமுடியாது. எல்லாவற்றையும் அந்த துருவப்படுத்தலுக்கு உள்ளாக்காமலிருக்கவும் இயலாது. அவர்கள் கலையிலக்கியச் செயல்பாடுகள் அனைத்தையும் சிதைப்பவர்கள்.

அத்துடன் இப்படி அரசியலை கைக்கொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் பல்வேறுவகையில் உளச்சோர்வும் தனிமையும் கொண்ட நடுவயதினர். எங்கும் எதிலும் எந்த சாதனையும் செய்ய முடியாதவர்கள், அதை தாங்களே உணர்ந்தவர்கள்.எல்லாவற்றிலும் அவர்கள் உருவாக்கும் எதிர்மனநிலையும் காழ்ப்புகளும் சோர்வும் இளைய தலைமுறையை விலக்கிவிடக்கூடியவை என்பதை கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கிறேன். ஏன் இளையதலைமுறை முகநூலை விட்டு தப்பியோடுகிறது என்று பார்த்தாலே நான் சொல்வது புரியும்

இன்று உருவாக்கவேண்டியது நம்பிக்கையை, மகிழ்ச்சியான சூழலை. உரையாடலுக்கான வெளியை. அவநம்பிக்கையும் சோர்வும் பரப்புபவர்களிடமிருந்து விலகியே அவற்றை அடையமுடியும்.நான் விழாக்களை நோக்கி ஈர்ப்படைவது இதனால்தான். ஒவ்வொரு விழாவுக்குப் பின்னரும் அதை ஒருங்கிணைப்பவர்களை நோக்கி சோர்வுவாதிகளின் கசப்பும் காழ்ப்பும் விமர்சனமாகவும் நையாண்டியாகவும் வந்துசேரும். அதை முற்றாகப் புறக்கணித்துக் கடந்துசென்றுதான் அவர்கள் தங்கள் பங்களிப்பை ஆற்றமுடியும்.

துபாய் இலக்கிய விழாவில் அமிர்தம் சூரியா முதலில் உரையாற்றினார். அதன்பின் அவருடன் ஓர் இலக்கிய உரையாடல் நிகழ்ந்தது. அதன்பின் நாஞ்சில்நாடன். பின்னர் நான். அதன்பின் சுகிர்தராணியும் இளங்கோ கிருஷ்ணனும். ஒவ்வொருவருக்கும் கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம். நடுவே துபாயின் கலைக்குழுக்களின் நடனங்கள், பாடல்கள். நெடுநேரம் ஆகப்போகிறது, கூட்டம் முழுமையாகக் கலையப்போகிறது என எதிர்பார்த்தேன். ஆனால் கலையவில்லை. மாலை ஐந்தரை மணிமுதல் இரவு பத்து வரை நிகழ்ச்சியில் அனேகமாக மொத்தக்கூட்டமும் இருந்தது.

துபாயில் இப்போது செப்டெம்பர் மாத பருவநிலை மாற்றம். கோடையிலிருந்து குளிர் நோக்கிச் செல்கிறார்கள். ஆகவே எங்கும் பாலிதீன் போல ஒரு மென்நீராவிப்படலம் மூடியிருந்தது. தாகம் இருந்துகொண்டே இருந்தது. நீர் ஏராளமாக குடிக்கத் தோன்றியது. ஆனால் குளிரூட்டப்பட்ட அறைக்குள் சென்றதும் கழிப்பிடம் சென்றுகொண்டே இருந்தாகவேண்டிய நிலை.

கழிப்பிடம் செல்லும்போது ஏராளமான வாசகர்கள் வந்து சூழ்ந்துகொண்டனர். ஏராளமானவர்கள் என் இணையதளத்தின் வாசகர்கள். அமீரகம் வந்து பல ஆண்டுகளாகியும் அவர்கள் கலந்துகொள்ளும் முதல் இலக்கியவிழா அது என்றனர். ஓர் உயர்தர விடுதிக்குள் நுழைவது அதுவே முதல்முறை என்று சிலர் சொன்னார்கள். பலர் என் நூல்களை கையோடு கொண்டுவந்து கையெழுத்து பெற்றுக்கொண்டனர். அத்தனை பெருந்திரளாக அங்கே வாசகர்கள் இருப்பது வியப்பளித்தது.

ஒவ்வொருவரும் அன்று ஒவ்வொரு முறையில் சிறப்பாகப் பேசினார்கள். நாஞ்சில்நாடனின் உரை நான் நன்கறிந்தது. சுகிர்தராணியின் உரையை முதல்முறையாகக் கேட்கிறேன். அழுத்தமான உச்சரிப்பும், தெளிவான நிலைபாடுகளும் கொண்ட சரளமான உரை. அமிர்தம் சூரியா பொதுவாசகர்களுக்கு இலக்கியத்தை அறிமுகம் செய்யும் உரையை ஆற்றினார் என்றால் இளங்கோ கிருஷ்ணன் இலக்கியமேடைகளுக்குரிய தீவிரமான உரையை நிகழ்த்தினார்.

ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகை வினாக்கள். நான் தமிழ்ச்சமூகம் தன் பொருளியல் நெருக்கடிகளை இப்போது மெல்ல கடந்துவருவதைப் பற்றிச் சொன்னேன். அடுத்தபடி நவீன உலகத்தின் கலாச்சாரத்தை உள்வாங்கிக்கொள்வதும் அதற்குப் பங்களிப்பதும் தான் என்றேன். இப்போது உழைப்பாளிகளாக, தொழில்நுட்பம் அறிந்தவர்களாகவே உள்ளோம். இது முதல்படி. அடுத்தபடி என்பது கலை, இலக்கியம் வழியாக மேலே செல்வதே. வணிகரீதியாகக்கூட அதுவே முன்னே செல்லும் வழி என்றேன்.

அதற்குரியது பழம்பெருமை பேசுவது அல்ல. வெற்றுப்பெருமிதங்கள் அல்ல. ஓயா அரசியலும் அல்ல. உலகின் கலையிலக்கியப் பாரம்பரியத்தை, உலகளாவிய நவீனக் கலையிலக்கியத்தை பயில்வது. அதை நம் குழந்தைகளுக்குக் கொண்டுசெல்வது. அதில் சாதனைகளைச் செய்வது. நம் சாதனைகளை உலகளாவக் கொண்டுசெல்வது. அதற்குரிய கல்வியை நாடுவதே நாம் செய்யவேண்டியது. பண்பாட்டுக் கல்வியே நாம் நாடவேண்டியது.

என்னிடம் கேட்கப்பட்ட வினாக்களில் என் வாசகர்களல்லாதவர்களின் வினா என்பது ஒன்றே. ஒருவர் ‘பண்பாடு என்பது என்ன?’ என்றார். அக்கேள்வியே அவர் எவர் என்பதை காட்டிவிட்டது. பொதுவாக பெரிதாக ஒன்றும் தெரியாதவர்கள், ஓர் அரங்கில் பேச்சாளர்களை மடக்குவதாக எண்ணி கேட்கும் கேள்விகளில் ஒன்று அது. இலக்கியமென்றால் என்ன, அழகியலென்றால் என்ன, கவிதை என்றால் என்ன என்று கேட்பார்கள். அடிப்படையான ஒன்றைக் கேட்டுவிட்டோம், மடக்கிவிட்டோம் என எண்ணிக்கொள்வார்கள்.

நான் அவரை கடந்துசென்றேன். ஆனால் என்றேனும் அவர் சிந்திக்கக்கூடுமென்றால் அவருக்கான ஒரு தொடக்கத்தை அளிக்கவேண்டும் என்றும் விரும்பினேன். “பண்பாடு என்பது ஒரு கருத்துருவம். Concept. அன்பு, கருணை, நீதி, அறம் என பல கருத்துருவங்கள் சமூகத்தில் உள்ளன. அவற்றைப் பற்றிப் பேசும்போது ஓர் அரங்கில் உருவாகும் பொதுப்புரிதலின் அடிப்படையிலேயே உரையாடல் நிகழமுடியும். பண்பாடென்றால் என்ன என்று நீங்களும் நானும் கொள்ளும் பொதுவான அடிப்படைப் புரிதல்தான் அது” என்றேன்

“கருத்துவங்களை பொதுஅரங்கில் விவாதிக்கலாகாது. அப்படி விவாதித்தால் ஆளுக்கொரு வரையறை அளிக்கமுடியும். ஒருவர் என்ன சொன்னாலும் அதை இன்னொருவர் மறுக்கவும் முடியும். ஏனென்றால் அவை கண்கூடானவை அல்ல. ஒரு சமூகத்தின் பொதுப்புரிதல் வழியாகவே உருவாகி வருபவை. உரையாடலில் எவரானாலும் அந்தப் பொதுப்புரிதலையே முன்வைக்கிறார்கள். அதற்கு மேல் அதை வரையறை செய்வதாக இருந்தால் அது தத்துவ விவாதம். அது தத்துவ அரங்கில், இணையான தத்துவப் பயிற்சி கொண்டவர்கள் நடுவேதான் நிகழமுடியும்” என்றேன்.

ஆனால் அவர் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. அது அவரே இளங்கோ கிருஷ்ணனின் பேச்சுக்கு ஆற்றிய எதிர்வினையில் இருந்து தெரிந்தது. என்னிடம் கேட்கப்பட்ட வினாகளில் பல வெண்முரசு வாசகர்களால், வெண்முரசு சார்ந்து கேட்கப்பட்டவை. அரிஷ்டநேமிக்கும் கிருஷ்ணனுக்குமான முரண்பாடு பற்றிய ஒரு வினா மிக அடிப்படையானது, ஆழமானது. ஒரு பொது அவையில் விரிவாக விவாதிக்கப்படவேண்டியது அல்ல. அதைச் சுட்டி அந்த பொதுவாசகர்  “ஏன் எல்லாரும் மகாபாரதம் பற்றியே பேசுகிறீர்கள்?” என்று அவர் கேட்டார்.

இளங்கோ கிருஷ்ணன் “மகாபாரதத்தை புராணமாக நவீன இலக்கியவாதிகள் பேசுவதில்லை. செவ்விலக்கியமாகவும், ஆழ்படிமங்களின் தொகையாகவுமே பேசுகிறார்கள். அப்படி செவ்விலக்கியங்களை விவாதிப்பதும் மறு ஆக்கம் செய்வதும் உலகமெங்கும் நிகழ்வது. ஏனென்றால் அதனடிப்படையிலேயே நம் மனம் அமைந்துள்ளது. அதை மாற்றி யோசிப்பதும் அதனால்தான்” என்றார்.

”அப்படியென்றால் ஏன் சிலப்பதிகாரம் பற்றி பேசவில்லை?” என்றார் அந்த வாசகர். இளங்கோ  ”அதைப்பற்றியும் பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள்” என்றார். இளங்கோ கிருஷ்ணனே சிலம்பின் மறு ஆக்கமாக கதைகளை எழுதியிருக்கிறார். நான் கொற்றவை எழுதிய பின்னரே வெண்முரசு எழுதினேன். அந்த பொதுவாசகர் அதையெல்லாம் அறிந்திருக்கவில்லை. ஆகவே அந்த வினாவுடன் இளங்கோ சட்டென்று அந்த வாசகர்மேல் ஆர்வமிழந்ததை காணமுடிந்தது.

வெளியே பேசும்போது ஒரு வாசகர் “இப்டி இருக்காங்க… அரசியல் நிலைபாடு மட்டும்தான் இருக்கு. வர்ரப்ப சும்மா விக்கிப்பீடியாவிலே அந்த எழுத்தாளர் பத்தி பாத்திட்டுக்கூட வரமாட்டாங்களா?” என்றார்.

நான் “இது ஒரு கார்னிவல்… பொதுவிழா. இதில் எல்லாருக்கும் இடமுண்டு. பலருக்கு இலக்கியமே இப்போதுதான் அறிமுகமாகியிருக்கும். இப்படித்தான் இலக்கியம் சென்று சேர முடியும். இது தீவிரமான இலக்கிய விவாத அரங்கு அல்ல. அனைவரும் பங்குகொள்ளலாம் எனும்போதே அதற்கு ஒரு பொதுத்தன்மை வந்துவிடுகிறது. உண்மையில் இப்படி ஒரு பொதுச்சபையின் கேள்விகள் இந்த அளவுக்கு கூரியவையாக, படிப்பின் பின்புலம் கொண்டவையாக இருந்தது மிகமிக ஆச்சரியமானது” என்றேன்.

“அந்தக் குறிப்பிட்ட வாசகரின் கேள்வி விதிவிலக்கு. அது இலக்கியமறியாத ஒருவர் கேட்டதுதான். ஆனால் இலக்கியமறியாத பலர் உள்ளத்தில் அக்கேள்வி இருந்திருக்கும். அவர்களுக்கு விடையும் கிடைத்திருக்கும்” என்றேன்.

இலக்கியவிழாக்களின் இடமே இதுதான். இலக்கியத்துக்கு தீவிர இலக்கியக்கூடுகைகள் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு இந்தவகை விழாக்களும் முக்கியமானவை. ஆகவேதான் உலகமெங்கும் அவை நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

இலக்கியவிழாக்களின் பிரம்மாண்டம், கொண்டாட்டம் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட வேண்டியவைதான். அவைதான் விழாவாக அதை ஆக்குகின்றன. கூடவே எத்தனைபேருக்கு அது பயனளித்தது என்பதும் முக்கியம்.

வெளியே நான் வாசகர்களைச் சந்தித்தபோது விழாவின் பயனை உணர்ந்தேன். ஏராளமானவர்கள் என்னை பலகாலமாக வாசிப்பவர்கள். அவர்களுக்கு ஓர் சந்திப்புக் களியாட்டாக அது அமைந்தது. பலர் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொண்டனர்.

கூடவே பலர் புதியவர்கள் என்பதையும் கண்டேன். அவர்களுக்கு சட்டென்று இலக்கியத்தின் ஒட்டுமொத்தம் அறிமுகமாகியது. அவ்வகையில் நான் கலந்துகொண்ட இலக்கிய விழாக்களில் இது முக முக்கியமான ஒன்று.

(மேலும்)

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர், சந்திரா
அடுத்த கட்டுரைநிலைபெயராமையை நோக்கி ஒழுகிச் செல்லல் -ரம்யா