பாலை மலர்ந்தது – 4

கலையை அறிவியலைக்கொண்டு வரையறை செய்யும் ஒரு முறை உண்டு. வெட்டிரும்பு என்னும் கடினமான இரும்பு தமிழகத்தில் பதிநான்காம் நூற்றாண்டில்தான் பயன்பாட்டுக்கு வந்தது. கரியும் இரும்பும் கலந்து உருக்கி நீண்டநாட்கள் மெல்லமெல்ல குளிரவைத்து உருவாக்கப்படுவது. நம்மிடம் உறையடுப்புகள் ஆதிச்சநல்லூர் காலம் முதல் இருந்தாலும் வெட்டிரும்பு அதன் உச்சமாக உருவாகி வந்தது. வெட்டிரும்பு என்பது ஒருவகை எஃகுதான். 

வெட்டிரும்பு இங்கே வரும்வரை தமிழகத்தின் சிற்பங்கள் பெரும்பாலும் மணல்பாறையாலானவை. சோழர்காலச் சிற்பங்கள்போல. வெட்டிரும்பு வந்தபின் கன்னங்கரிய கருங்கல் சிற்பங்களாகத் தொடங்கியது. கருங்கல்லின் கடினத்தன்மையால் அதில் நுணுக்கமான சிற்பவேலைப்பாடுகளை நம்பிச் செய்யமுடிந்தது. கைகளும் கால்களும் தனியாக உந்தி நிற்க முடிந்தது. விரல்களும், விரல்நுனிகளும்கூட தனித்து நிலைகொள்ளலாயிற்று. அத்துடன் கன்னங்கரிய வழவழப்பை சிற்பங்களுக்கு அளிக்க ஆரம்பித்தோம்.

உலகக் கலைவரலாற்றையே அப்படி விளக்குபவர்கள் உண்டு. நவீனத் தொழில்நுட்பம் நம் கலைகளை எப்படி மாற்றுகிறது? எண்ணைச்சாயத்தில் நவீனத்தொழில்நுட்பம் உருவாக்கிய மாற்றம் ஓவியக்கலையையே அடியோடு மாற்றியது. படிகங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் சிற்பக்கலையில் பெரிய மாற்றங்களை உருவாக்கியது. அலுமினியம், எஃகு, கண்ணாடி நம் கட்டிடக் கலையை உருமாற்றியது. இன்று செயற்கைநாரிழை நம் கட்டிடக்கலையை முற்றிலும் உருமாற்றிக் கொண்டிருக்கிறது.

செப்டெம்பர் 23 ஆம் தேதி நண்பர் சித்தநாத பூபதி எங்களை அபுதாபிக்கு வந்து அழைத்துக்கொண்டு துபாய்க்கு வந்தார். துபாயில் தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டத்தை காட்டும் மையமாகவும், தொழில்நுட்பம் உருவாக்கிய கலைத்தன்மையின் அடையாளமாகவும் உள்ள எதிர்காலத்தின் அருங்காட்சியகத்தைப் பார்க்கச் சென்றோம். 

உலகின் மிக விந்தையான, ஆனால் மிக அழகான கட்டிடங்களில் ஒன்று இது. ஒரு மாபெரும் டோனெட் போன்ற அமைப்பு கொண்டது என்பார்கள். எனக்கு ஒரு மாபெரும் சிலம்பு என்னும் எண்ணம் வந்தது. உருக்காலான மேற்கட்டமைப்புக்குள் அலுமினியமும் கண்ணாடியும் கொண்டு செய்யப்பட்ட முதன்மை அமைப்பு. மையமாக கான்கிரீட்டாலான அடித்தளமும் முதுகெலும்பும் அமைந்துள்ளது.

சாலையினூடாகச் செல்லும்போது சற்று சிறியதாக இது தெரியும், ஏனென்றால் சிறிய பொருட்களுக்குரிய அமைப்பு இதற்குள்ளது. ஆனால் அருகே செல்லச் செல்ல எத்தனை பெரியது இது என்னும் வியப்பு உருவாகும். இது துபாய் துணை அதிபரும் முதலமைச்சருமான ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்டோம் (Sheikh Mohammed bin Rashid Al Maktoum) அவர்கள் எழுதிய எதிர்காலம் பற்றிய ஒரு கவிதையை அரபு எழுத்துக்களில் தன்மேல் பொறித்துக் கொண்டிருக்கிறது. உள்ளே சென்று பார்த்தால் அந்த ஒவ்வொரு எழுத்தும் பிரம்மாண்டமான சாளரங்கள் என்பதைக் காணலாம்.

22 பிப்ரவரி 2022 ல்தான் இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. இன்னும் இதன் அருங்காட்சியக வைப்புகள் முடிவடையவில்லை. இனிவரும் உலகுக்கான அறிவியல், பண்பாடு, வாழ்க்கைமுறை ஆகியவற்றைக் காட்டுவதே இதன் நோக்கம். கில்லா கட்டிட வடிவமைப்பாளர்கள் (Killa Design Architecture) என்னும் அமைப்பு இந்த கட்டிடத்தை உருவாக்கியது.  இதன்மேலுள்ள எழுத்துக்கள் இந்த வளைவான வடிவில் எழுத்துருக்கலை நிபுணரான மதார் பின் லஹெஜ் (Mattar Bin Lahej) என்னும் ஓவியரால் உருவாக்கப்பட்டவை. 

மொத்தம் 1024 உருக்குப் பாளங்களாலானது இந்தக் கட்டிடத்தின் மேல்பகுதி. அதை கட்டுவதில் சித்தநாத பூபதியின் நிறுவனமும் பங்களிப்பாற்றியுள்ளது. (பொறியாளர்கள் பிரிட்டனின் Buro Happold நிறுவனம்) ஒவ்வொரு பகுதியையும் மிகச்சரியாகப் பொருத்துவது எந்த அளவுக்குச் சவாலானதாக இருந்தது என்று அவர் சொல்லிக்கொண்டிருந்தார். சில மில்லிமீட்டர் அளவுக்கே அந்தப் பாளங்கள் ஒன்றுடன் ஒன்று விலகமுடியும். இல்லையேல் ஒட்டுமொத்த அமைப்பும் சிக்கலாக ஆகிவிடும்.

எதிர்கால அறிவியல் குறித்த இந்த அருங்காட்சியகம் குறிப்பாகச் சிறுவர்களை உத்தேசித்தது. நுழைவாசலிலேயே எதிர்காலத்தில் வரப்போகும் பறக்கும் டாக்ஸிகளின் வடிவங்கள் பறந்தன. வீட்டுக்காவல் செய்யும் ரோபோட் நாய்கள் வந்து சுற்றிச்சென்றன. லிப்ட்கள் விண்வெளிக் கப்பல்களின் அமைப்பில் இருந்தன. ஓசைகளும் ஒளியுமாக வானில் செல்லும் உணர்வை அளித்தன.

விண்ணிலிருந்து பூமியை பார்க்கும் அனுபவத்தை அளிக்கும் காணொளி, பிரம்மாண்டமான கோளரங்கம் என வான் எனும் பெருவிந்தையை நிகழ்த்திக்காட்டும் அமைப்புகள் பல அடுக்குகளிலாக இருந்தன. என்னை பெரிதும் கவர்ந்தவை இரண்டு. ஒன்று, ஆடி நிறுவனம் வடிவமைத்த எதிர்காலக் கார்கள். உள்ளே படுத்துக் கொள்வதற்குரிய இருக்கைகள் மட்டுமே கொண்டவை. ஓட்டுவது முழுக்கமுழுக்க செயற்கை நுண்ணறிவு. பயணம் செய்பவரின் மொழி, விழியசைவு, எண்ணம் ஆகியவற்றைக்கொண்டு தேவையான ஆணைகளை பெற்றுக்கொள்கிறது அது.

இன்னொன்று எதிர்காலத்து மனித உடல். இயந்திரமும் மனிதனும் கலந்தது அது. உயர்தர கார்பனால் ஆன மிக வலுவான, ஆனால் எடையற்ற ஒரு சட்டகம் அந்த மனிதனின் முதுகோடு ஒட்டி, முதுகெலும்பு போலவே அமைந்துள்ளது. கால் முதல் தலைவரை. தோள்கள் முதல் கைவரை. அந்த உடலில் அமையும் எடையை முழுக்க அந்தச் சட்டகம் தாங்கிக் கொள்ளும். ஆகவே அவனால் இருநூறு கிலோ எடையை தூக்க முடியும். ஐநூறடி உயரத்தில் இருந்து குதிக்க முடியும். சிலந்தி போல தொற்றி ஏறமுடியும்.

அந்த அமைப்புக்கு தேவையான ஆற்றல் சூரிய ஒளியால் உருவாக்கி அளிக்கப்படும். அது அம்மனிதனின் மூளையுடன், மூளையின் பல பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரோடுகள் வழியாக தொடர்பு கொண்டிருக்கும். ராணுவத்துக்காக உருவாக்கப்பட்ட ‘உடை’ அது. ஆனால் எதிர்காலத்தில் அனைவரையுமே ‘சூப்பர்மேன்’ ஆக அது மாற்றிவிடக்கூடும். அதனுடன் ஒப்பிட அவதாரில் காட்டப்படும் இயந்திரத்துள் இருந்து இயங்கும் மனிதன் என்பது சற்று மோட்டாவான கற்பனை.

இந்த அருங்காட்சியகத்தின் கண்ணைக்கவரும் இடம் இங்குள்ள ஒரு மாதிரி உயிர்க்காப்பகம். விண்ணில் ஓரு விண்கலத்தில் சேமிக்கப்பட்டுள்ள உயிர்மாதிரிகள் என்பது இதன் கற்பனை. இங்குள்ள உயிர்களில் ஏறத்தாழ அரைலட்சம் மாதிரிகள் இங்கே படிகவடிவில் ஒளிரும் குழாய்களில் அடைக்கப்பட்டு சேமிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றையும் உணரிக்கருவியால் தொட்டு அது என்ன உயிரினம், டி.என்.ஏ அமைப்பு என்ன என்று உணரமுடியும். 

ஒளிரும் படிகவெளி ஒன்றுக்குள் சென்றுவிட்ட கண்பிரமிப்பை உருவாக்கிய இடம் அது. வெறுமே மயங்கி மயங்கிச் சுற்றிவந்தேன். ஒளி மெல்ல மாறிக்கொண்டே இருந்தது. நீலம், இளஞ்சிவப்பு, பொன்னிறம். உள்ளே ஆழ்துயிலில் என உயிர்கள். மெல்லிய நூலிழை போன்ற ஒட்டுயிரிகள் முதல் பேருயிர்கள் வரை. என்றேனும் பூமி மடியுமென்றால் இவை முளைத்தெழும் என உருவகம். நோவாவின் பெட்டகமேதான்

ஆனால் இன்னொன்றும் தோன்றியது. இது நம் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள டி.என்.ஏ அமைப்புதான். சுருள் சுருளாக. ஒரு மனிதனின் உயிரமைப்புக்குள் இந்த புவியின் அனைத்து உயிர்களின் உயிரமைப்பும் அடங்கியுள்ளது. அண்டத்திலுள்ளது பிண்டத்திலும் என்னுமாறு. இங்குள்ள அனைத்துயிரும் ஒன்றே. ஒற்றை உயிர்ச்சுருள். என்னைச் சுற்றி ஒளிகொண்டிருந்தது அதுவே.

இங்குள்ள உயிர்களை கைபோன போக்கில் சுட்டி அறிந்து சுழன்றுவருவது ஒரு நல்ல அனுபவம். ஓர் உயிருக்கும் இன்னொன்றுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லையென தோன்றும். தொடர்பு நாமே என்றும் தோன்றும். அனைத்தும் ஒரே மாபெரும் வைரத்தின் ஒளிரும் பட்டைகளே என்றும் உள்ளம் மயங்கும். ஒளி நம்மை கோவையாகச் சிந்திக்க முடியாமலாக்குகிறது. இங்கே ஒரு விலங்கு நுழையுமென்றால் என்னாகும்?

அந்த மாபெரும் கட்டிடத்தின் மேல் வளைவுக்குச் சென்று நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வதென்பது இன்றைய வாழ்க்கை உருவாக்கும் சவால்களில் ஒன்றாக இருந்தது. கடுமையான வெயில். எரியும் வெப்பம் செவிமடல்களை காந்த வைத்தது. ஆனாலும் சமாளித்து அந்த புகைப்படங்களை எடுத்தோம். புகைப்படத்தில் இல்லை என்றால் இல்லை என்பதுதான் இந்நூற்றாண்டின் பொருள்.

பல்லாயிரம் தமிழர்கள் அந்த வெயிலில் அங்கே பணியாற்றியிருக்கிறார்கள். எகிப்திய பிரமிடுகளின் காலம் முதல் இந்த மானுட உழைப்பு மண்மேல் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. அங்கே பணியாற்றியவர்களின் படங்களை வரிசையாக வைத்திருக்கிறார்கள். அவற்றில் உழைப்பாளிகளான தமிழர்களின் படங்களும் உள்ளன.

பொதுவாக வளைகுடா நாடுகளை இந்த உழைப்புடன் தொடர்பு படுத்தி பேசுவது நம் வழக்கம். வளைகுடா நாடுகளில் சவூதி அரேபியா போன்று சிலநாடுகளில் உழைப்பை அடிமைத்தனமாக புரிந்துகொள்ளும் முதலாளிகள் உள்ளனர். பல கொடிய வேலைச்சூழல்களும் உள்ளன. நம்மூரில் சிலர் இங்கு நம்மவர் ஆற்றும் உழைப்பை சற்று ஏளனத்துடன் சொல்லிக் காட்டுவதுமுண்டு. சில சினிமாக்களிலும் அந்தக் கேலி இடம்பெற்றுள்ளது.

பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் என்னும் நாவல் ஒரே வீச்சில் வளைகுடா நாடுகளை வதைமுகாம்களாக இந்திய பொதுப்பார்வை முன் நிறுவிவிட்டது. அது அவரது அனுபவம். ஆனால் பல்லாயிரம்பேர் வளைகுடாவால் வாழ்வு பெற்றுள்ளனர். ஒரு புனைவு உருவாக்கும் அச்சித்திரத்தை எந்த வரலாறும் எதிர்கொள்ள முடியாது என்பதே உண்மை.

அகஸ்டஸ் சீசர், லூவர்

ஆனால் இந்தியச் சூழலில், குறிப்பாக என் கிராமச்சூழலில், நின்றுபார்க்கையில் வளைகுடா பகுதியின் வேலைவாய்ப்புகளே கேரளம் மற்றும் தமிழகத்தின் மிகப்பெரிய நெருக்கடி ஒன்றிலிருந்து நம்மைக் காப்பாற்றியவை. தமிழகத்திலும் கேரளத்திலும் 1930 களில் காந்தியின் தேசியக் கல்வி இயக்கத்தால் மிகப்பெரிய அளவில் ஆரம்பக் கல்விப்புரட்சி உருவானது.

சுதந்திரத்திற்குப் பின் தமிழகத்தில் காமராஜ், கேரளத்தில் இ.எம்.எஸ் ஆகியோரால் இன்னொரு மாபெரும் கல்விப்புரட்சி உருவாக்கப்பட்டது. (இரு மாநிலங்களிலும் அதை வடிவமைத்தவர்கள் இரு தமிழர்கள். இங்கே நெ.து.சுந்தரவடிவேலு. அங்கே நடராஜப்பெருமாள் பிள்ளை.)

அப்புரட்சியின் எதிர்விளைவு தெரிய ஆரம்பித்தது 1980களில். படித்த இளைஞர்திரள் ஒன்று உருவானது. அவர்கள் விவசாயத்தில் இருந்தும் பாரம்பரியத் தொழில்களிலிருந்தும் வெளியேறினார்கள். ஆனால் அப்போது இந்திய அதிகார அமைப்பு நிலைகொண்டுவிட்டது. அதில் வேலைவாய்ப்பு மிகக்குறைவு. தனியார்த்தொழில் அன்று முளைவிடவே இல்லை. சேவைத்துறை போன்றவை உருவாகவே இல்லை.

மொண்ணையான பொருளியல் கொள்கை, சிவப்புநாடா நிர்வாகம், இந்திராகாந்தியின் சமையற்கட்டு அரசாட்சி ஆகியவற்றால் இந்தியாவின் வளர்ச்சிவிகிதம் இரண்டு சதவீதத்திற்குள் சுருண்டு கிடந்த காலகட்டம். ஆகவே அனேகமாக வேலைவாய்ப்பென்பதே இல்லை.

சித்தநாதபூபதியுடன்,பின்னணியில் சாளரங்களாகத் தெரிபவை கவிதையின் வரிகள்.

(பாலைவனச்சோலை, பசி, வறுமையின் நிறம் சிவப்பு, பட்டம் பறக்கட்டும் போன்ற படங்களை இன்றைய தலைமுறை உதாரணமாக கொள்ளலாம். இலக்கிய ஆர்வமுள்ளவர்களுக்கு பல நல்ல கதைகள், இலக்கியங்கள் உள்ளன. பாலகுமாரன், சுப்ரமணிய ராஜு போன்றவர்கள் எழுதியவை. ஆனால் நவீனத் தமிழிலக்கியம் உருவாக்கிய மிகச்சிறந்த  ‘வேலையின்மையின் பிரகடனம்’ என்றால் கலாப்பிரியாவின் எட்டையபுரம் என்னும் நீள்கவிதைதான்)

அந்த வேலையில்லாத் திரள்தான் நக்சலைட் இயக்கமாகியது. அந்த இளைஞர்களை ஒருங்கிணைத்து ஒரு ‘முழுப்புரட்சி’க்காக ஜெயப்பிரகாஷ் நாராயணன் அறைகூவினார். அதை அஞ்சிய இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்து இந்தியாவின் இருண்ட காலகட்டத்தை உருவாக்கினார். அக்காலகட்டமே கொந்தளிப்பானது. நிராசையும் கசப்பும் மண்டியது.

அந்த அத்தனை இடர்களையும் சட்டென்று தீர்த்து வைத்தது வளைகுடா வேலைவாய்ப்புகள்தான். 1990களில் ராஜீவ் காந்தியும் சாம் பிட்ரோடாவும் இந்தியாவில் புதிய பொருளியல் அலையை உருவாக்கும் வரை இந்திய வேலைவாய்ப்புச் சந்தையை உயிர்ப்புடன் வைத்திருந்தது வளைகுடாதான்.

வளைகுடாப் பகுதியின் உழைப்பு நம்மவர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கியது. புதிய தொழில்கல்வியையும் வழங்கியது. நம் கட்டுமானமுறைகளே மாறியது வளைகுடாப் பகுதி அளித்த கட்டுமானக் கல்வி வழியாகவே. ஒரு தலைமுறையே அதனூடாக எழுந்து அமர்ந்தது.

அதை நாஞ்சில்நாடன் சொன்னார். துபாயின் கட்டிடங்களை நிமிர்ந்து பார்த்துக்கொண்டிருந்தவர் உணர்ச்சிகரமாக “எத்தனை வீடுகளிலே அடுப்பெரிய வைச்சிருக்கு! எத்தனை குடும்பங்களை மேலே வரச்செஞ்சிருக்கு!” என்றார்.

மதியம் சித்தநாதபூபதியின் இல்லத்தில் சாப்பிட்டோம். அதன்பின் துபாயின்  முகம்மது பின் ரஷீத் லைப்ரரி (Mohammed Bin Rashid Library -MBR)  சென்றோம். நூல்களை வாசிக்கப் பயன்படும் விரிதாங்கியின் வடிவில் அமைந்தது இந்தக் கட்டிடம். அணுக அணுக பெரியதாகிக்கொண்டே செல்லும் கட்டிடம். உள்ளே நிகழ்வரங்குகள், நூலகக் காட்சிசாலை, நூலகம் ஆகியவை உள்ளன. ஜூன்  2022 ல்தான் இது திறக்கப்பட்டது. ஆகவே எல்லா நூல்களுமே புத்தம் புதியதாக உள்ளன.

நூல்கள் வழியாக ஒரு சிறு உலா. கைக்குத் தோன்றியதை எடுத்து படித்துக்கொண்டே சென்றேன். பீட்டில்ஸ் இசைக்குழுவின் எழுச்சி வீழ்ச்சி பற்றி ஒரு நூல். உலகளாவ காமிக்ஸ் என்னும் கலைவடிவம் உருவாகி வந்ததன் வரலாறு. எகிப்திய மம்மிகள் கண்டடையப்பட்டதன் வரலாறு. அரபு, ஆங்கிலம் இரு மொழிகளிலும் ஏராளமான நூல்கள் இருந்தன. ஓர் அதிநவீன நூலகத்திற்குரிய எல்லா வசதிகளும் உண்டு.

ஆனால் அரபுலகில் பெரும்பாலானவர்கள் அங்கே வேலைசெய்து வாழவந்தவர்கள். அவர்களுக்கு வாசிக்க நேரமிருக்குமா என்பது ஐயமே. அரபுக்குடிகளில் கணிசமானவர்கள் கல்விக்கு வெளிநாடு செல்பவர்கள். அரபுலகில் அடுத்த நகர்வு என்றால் ஐரோப்பா- அமெரிக்காவுக்கு அறைகூவல் விடுமளவுக்கு உயர்தர கல்விநிலையங்களை உருவாக்குவதுதான். அதற்கான செல்வ வளம் இங்குள்ளது. மையத்திட்டமிடலும் உள்ளது.

பெரும் பல்கலைக் கழகங்கள் இங்கு உருவாகுமென்றால் அரபுலகுக்கு இயற்கைச்சக்தி அளித்த எண்ணைவளம் மானுடத்திற்கு மேலும் பயன்படுவதாக ஆகும். எதிர்காலத்தில் அரபுநிலம் அடுத்தகட்ட வரலாற்றுக்குச் செல்லவும் உதவும். பெரும் கனவுகள் கொண்டுள்ள அரபு ஆட்சியாளர்களின் பெயர்கள் மானுட வரலாற்றில் என்றென்றும் நிலைகொள்ளவும்கூடும்.

அதற்கான தருணம் இது. அமெரிக்கா உட்பட பல மேலைநாடுகள் தங்கள் பல்கலைகளை வணிகநோக்குடன் நடத்தத் தொடங்கியுள்ளன. பணமிருந்தால் எவரும் பட்டம் பெற்றுவிடலாம் என்னும் நிலைமை உருவாகி வந்துள்ளது. பற்பல கோடி ரூபாய் இந்திய – சீன நாடுகளில் இருந்து மேற்கு நோக்கி கல்வியின் பொருட்டு பாய்ந்து கொண்டிருக்கிறது. உண்மையில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் குடியேறுவதற்கான ஒரு சாக்காகக்கூட இக்கல்வியை பலர் பயன்படுத்துகின்றனர்.

விளைவாக, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் போலிக்கல்விநிறுவனங்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. அங்குள்ள புகழ்பெற்ற கல்விநிறுவனங்களே மதிப்பற்ற போலி துணையமைப்புகளை உருவாக்கி கல்விக்கொள்ளையில் ஈடுபடுகின்றன. அத்துடன் நீடு புகழ் பெற்ற கல்விநிறுவனங்களே கட்டற்ற தனியார் மயத்தால் கடும் தரவீழ்ச்சியில் உள்ளன. இன்று அரபுலகில் தரமான கல்விநிறுவனங்கள் உருவாகுமென்றால் அது உலகுக்கு ஒரு மாற்றாக அமையக்கூடும்.

நூலகத்தின் மேல்மாடியிலுள்ள நூல் அருங்காட்சியகம் ஒரு பெரிய சேமிப்பு. அரபுலகிலுள்ள தொன்மையான நூல்கள் இங்குள்ளன. கையெழுத்து நூல்கள், தொடக்க கால அச்சுநூல்கள், அரிய நூல்கள். நூல் என்னும் வடிவத்தின் வெவ்வேறு சாத்தியக்கூறுகள். இந்நூல்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக நோக்கி அவற்றின் முக்கியத்துவத்தை அறிய நீண்டநேரமாகும். எங்களுக்கு பொழுதில்லை. உடனே அடுத்த இடம்.

நான் 2013ல் இங்கே வந்தபோது புர்ஜ் கலிஃபாவை பார்த்தேன். அதன்பின் மீண்டும் 2016ல் ஒருமுறை. அருண்மொழிக்கும் சைதன்யாவுக்கும் முதல்முறை. சைதன்யா பார்க்கும் முதல் பெரும் கட்டிடம் இது என எண்ணுகிறேன். சைதன்யா அந்தக் கட்டிடத்தை பல கோணங்களில் ஏற்கனவே காணொளிகளிலும், மிஷன் இப்பாஸிபிள் படத்திலும் பார்த்திருந்தாள். எத்தனை முறை காணொளிகளில் கண்டிருந்தாலும் நேரில் பார்க்கையில் இயற்கையும் கலையும் அளிக்கும் அனுபவம் புதியதுதான்

கட்டிடங்களாலான ஒரு காட்டுக்குள் சட்டென்று ஓங்கி நின்றிருக்கும் பெருமரம் அக்கட்டிடம். உலகின் மிகப்பெரிய வணிகமையமான துபாய் மால் என்னும் கடைக்குள் சென்று அதை அடையவேண்டும். சித்தநாத பூபதிக்கு கார் நிறுத்த இடம் அமையவில்லை – சனிக்கிழமை மாலை. ஆகவே எங்களை ஓர் இடத்தில் இறக்கி விட்டார். மின்தூக்கி அருகே நாங்கள் தடுமாறிக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு நண்பர் என்னை அடையாளம் கண்டுகொண்டார். வாசகர், குடும்பத்துடன் வந்திருந்தார். அவர் எங்களை புர்ஜ் கலிஃபாவின் மின்தூக்கி அருகே கொண்டுசென்று விட்டார்.

புர்ஜ் கலிபா 2,722 அடி உயரம் கொண்டது. அதாவது முக்கால் கிலோமீட்டருக்கும் மேல். உலகின் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்று. 2004ல் தொடங்கப்பட்டு 2009ல் கட்டி முடிக்கப்பட்டது இது.  2010ல் திறந்து வைக்கப்பட்டது. முதலில் ஃபுர்ஜ் துபாய் என பெயரிடப்பட்டிருந்தது. பின்னர் அபுதாபியின்  ஆட்சியாளராக இருந்தவரும், ஐக்கிய அமீரக நிறுவனர் ஷேக் சையத் அவர்களின் மகனுமான கலிஃபா பின் சையத் அவர்களின் பெயரால் புர்ஜ் கலிஃபா என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

பெரும் கட்டிடங்களை அமைக்கும் நிபுணரான ஆட்ரியன் ஸ்மித் (Adrian D. Smith) இக்கட்டிடத்தின் வடிவமைப்பாளர். Skidmore, Owings & Merrillஎன்னும் நிறுவனமும் வடிவமைப்பில் இணைந்துகொண்டது.  புர்ஜ் கலிஃபா ஒரு செங்குத்தான நகரம். இதில் முப்பதாயிரம் வீடுகள் உள்ளன. அலுவலகங்கள், விடுதிகள் என பல அமைப்புகள் செயல்படுகின்றன. அதாவது ஏறத்தாழ நாகர்கோயிலில் நாலிலொரு பங்கு.

புர்ஜ் கலிபா கட்டிடம் எனக்கு மழைக்காடுகளின் சில மரங்களைத்தான் நினைவூட்டியது. ஒன்றின் நடுவில் இருந்து இன்னொன்று என கிளைகள் மேலே மேலே பொங்கி எழுந்து செல்வதுபோன்ற வடிவம் கொண்டது. உச்சிமுனை வானைத் தொடுவதுபோல் எழுந்து நின்றிருந்தது. கனடாவின் சி.என்.டவர்ஸ் போன்ற கட்டிடங்கள் வெறும் கான்கிரீட் பூதங்கள். ஈஃபில் கோபுரமே ஒரு இரும்பு கூம்பு மட்டுமே. எனக்கு உயர்ந்த கட்டிடங்களில் கண்ணுக்குப் பிடித்தது கொலாலம்பூரின் பெட்ரோநாம் இரட்டைக்கோபுரங்கள். அடுத்தபடியாக இது.

கொலாலம்பூரின் கோபுரங்கள் இந்தியக் கட்டிடக்கலையில் நாகர பாணி கோபுரங்களின் அமைப்பு கொண்டவை. நூற்றுக்கணக்கான சிறிய சிகரங்களை அடுக்கி அடுக்கி உருவாக்கப்பட்ட சிகரம். நாகர பாணி கோபுரங்களை ஐரோப்பாவின் தேவாலயங்களின் ஊசிக்கோபுர அமைப்புடன் இணைத்தது போலிருந்தது ஃபுர்ஜ் கலிஃபா.

புர்ஜ் கலிஃபாவின் உச்சியிலமைந்த மாடியில் கீழே தெரிந்த நகரின் ஒளிப்படுகையை பார்த்தபடிச் சுற்றிச்சுற்றி வந்தோம். சூழ்ந்திருக்கும் ஒவ்வொருவர் முகத்திலும் ‘இதோ வாழ்வில் ஒரு நாள்!’ என்னும் பாவனை இருந்தது. சிறிய கட்டிடங்கள் ஒளிக்கூம்புகளாக பரவியிருந்தன. நகரில் ஒளி உருகி ஓடைகளாக வழிந்தது. ஒளிப்புள்ளிகள் மின்னி மின்னி அமைந்தன.  ஒரு கனவு. விழிவிரிய பார்த்துக்கொண்டிருக்கும் வாய்ப்புள்ள கனவு.

நனவில் கனவை திரும்ப உருவாக்கிக் கொள்ள எப்போதுமே கலை முயன்றுகொண்டிருக்கிறது. மனிதன் நனவை கனவால் மட்டுமே கடக்க முடியும். நனவின் எல்லைகளை கடக்கவேண்டுமென்றால் கனவை நனவால் எட்ட முயன்றுகொண்டே இருக்கவேண்டும். அவ்வாறுதான் மானுடம் இதுவரை வந்தடைந்துள்ளது

(மேலும்)

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர்: பா.ராகவன்
அடுத்த கட்டுரைஅமெரிக்கா பயணம்