சில வருடங்களுக்கு முன் நண்பர் வசந்த் இயக்கிய ‘ரிதம்’ என்ற படத்தைப் பார்க்கச் சென்றோம். அது ஒரு இசைபப்டம். ஏ.ஆர்.ரஹ்மானின் மிகச்சிறந்த பாடல்கள் பல கொண்டது. படம் முடிந்து திரும்பும்போது நான் அருண்மொழியிடம் கேட்டேன் ”இதிலே எந்தப்பாட்டு சூப்பர் ஹிட் ஆகும்?” ”காற்றே என் வாசல் வந்தாய்…தான் ஏன்?” என்றாள்.
நான் ”அது உடனே ஹிட் ஆகும். ஏன் என்றால் அதில் தெளிவான உச்சரிப்பு இனிய குரல் நல்ல பாடல்வரிகள் மென்மையான மெட்டு எல்லாம் இருக்கிறது. ஆனால் அதைவிட ‘சலசலவென ஓடும்…என்ற பாட்டுதான் நுட்பமானது. அந்த மெட்டு கேட்கக் கேட்க பெரிதாகியபடியே செல்லும். அதுதான் ஹிட் ஆகும்” என்றேன்.
அதைப்போலவே அந்தப்பாட்டுதான் இப்போது அடிக்கடி ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதுதான் ரஹ்மானின் இசை. கேட்கும்தோறும் அவர் பாடல்களுக்குள் பொறித்திருக்கும் நுட்பங்கள் வெளிப்பட்டபடியே இருக்கும். இதில் என்ன இருக்கிறது என்று தோன்றி மெல்லமெல்ல நம் மனதில் அழியாமல் பதிந்த பல ரஹ்மான் பாடல்கள் உண்டு.
ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி ஷாஜி சொல்லும்போது அவரது இசையமைக்கும் முறையைப் பற்றிச் சொன்னார். பாடகர்களிடம் அவர்கள் சொந்தக் கற்பனையை உபயோகித்துப் பாடச்சொல்கிறார் . இசைக்கலைஞர்கள் தங்கள் கற்பனைப்படி வாசிக்கிறார்கள். சிறந்ததைப் பொறுக்கி பொருத்தி அவர் பாடல்களை உருவாக்குகிறார். நா.முத்துக்குமாரும் அதைச் சொல்லியிருக்கிறார். ரஹ்மான் பல்லவி சரணம் என்று மெட்டு கொடுப்பதில்லை. அரைமணிநேரம் அந்த மெட்டை வாசித்தோ பாடியோ கொடுத்து விடுகிறார். அதற்கு எழுதப்படும் பலநூறு வரிகளில் இருந்து சிறந்ததை எடுத்துக் கொள்கிறார்
இது ஒரு பின்நவீனத்துவ இயல்பு. நவீனத்துவ இசை அந்த ஆளுமையின் தனிப்பட்ட இயல்பின் வெளிப்பாடு. ரஹ்மானுக்கென உறுதியான சட்டகம் ஏதுமில்லை. அவரது ஆளுமைக்குப் பதிலாக ஒரு கூட்டுவெளிப்பாடு அவர் வழியாக நிகழ்கிறது. அவ்வாறு பல்வேறு திறமைகள் முயங்க உயர்தொழிநுட்பம் உதவுகிறது. தமிழ் சினிமா நவீனத்துவத்துக்கே வராமலிருந்த காலத்தில் இசையை பின்நவீனத்துவ காலகட்டத்துக்குக் கொண்டு சென்றதே ரஹ்மானின் சாதனை.
ரஹ்மானின் சையைப்பற்றி விரிவாகப்பேச நான் தேர்ந்த இசை ரசிகன் அல்ல. ஏ.ஆர்.ரஹ்மானுக்குக் கிடைத்திருக்கும் ஆஸ்கார் விருது அந்தத் திறனுக்கான சர்வ தேச அங்கீகாரம். அவருடன் விருது பெற்றுள்ள ரசூல் பூக்குட்டி விருது பெற்றிருப்பது இந்திய திரைத்தொழ்ல்நுட்பம் தனிநபர்களின் ஆற்றலால் குறைவான வசதிகளிலேயே சர்வதேசத்தரத்தை தொட்டிருப்பதன் ஆதாரம்.
ஆஸ்கார் விருது பெற்ற குறும்படம் மற்றும் அதை எடுத்தவர்கள் குறித்து எனக்கு ஒன்றும் தெரியவில்லை. அவர்களுக்கும் ரஹ்மான், ரசூல் பூக்குட்டி ஆகிய இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.