நவகாளி யாத்திரை – நிவேதிதா

சிறுமியின் தஞ்சை

அன்புள்ள ஜெ

சில நாட்களுக்கு முன் சாவி அவர்கள் எழுதிய நவகாளி யாத்திரை புத்தகத்தை படித்து முடித்தேன். எண்பத்தொன்று பக்கங்கள் கொண்ட அந்த புத்தகத்தை நான்கு நாட்களாக போராடி படித்து முடித்தேன். ஏனெனில் முதல் நாள் புத்தகத்தை எடுக்கும் போது, சும்மா புரட்டி புரட்டி, முன்னும் பின்னும் பார்த்தேன். அதன் பிறகு , எவ்வளவு பக்கங்கள் உள்ளது என்று பார்த்தேன். முதலில் அங்குகோபுலு ஓவியங்களுடன்என்று இருப்பதைக் கவனித்தேன். எனக்கு கோபுலுவின் ஓவியங்கள் மிகவும் பிடிக்கும். எங்கள் வீட்டில் இருக்கும்கோபுலு ஜோக்ஸ்புத்தகம் எனக்கு மிகப் பிடித்தமானவை. அடிக்கடி அதை புரட்டி பார்ப்பேன்.

பிறகு நவகாளி யாத்திரை புத்தகத்தை அப்புறம் படித்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். ஒரு நாள் போயிற்று இரண்டு நாள் போயிற்று, அந்த புத்தகத்தின் அட்டையில் இருக்கும் சிறு நாயின் படத்தை பார்த்த ஞாபகம் இருந்து கொண்டே இருந்தது. ஒருவழியாக அந்த புத்தகத்தில் என்னதான் இருக்கிறது என்று பார்க்கலாம் என்று படித்தேன். எதேர்ச்சியாக பின் அட்டையை கவனித்தேன் அதில் உங்கள் பெயர் இருந்தது. ஆர்வம் இன்னும் மேலாயிற்று. நான்கு நாட்களில் அந்த புத்தகத்தை படித்தேன். எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது, இரண்டே  நாட்கள் மகாத்மா காந்தியுடன் இருந்து, சாவி அவர்கள் எப்படி எண்பத்தொன்று பக்கங்கள் எழுதினார்? புத்தகத்தில் இருந்தஅச்சா குத்தாஎன்ற பகுதி என்னை லேசாக கண்கலங்க வைத்தது. சிறிது நகைச்சுவைகளுடன் அவருடைய பயணமானது அற்புதமாக இருந்தது.

சில நாட்களுக்கு முன் என் அப்பா, “ஜெயமோகன் அங்கிள் மிக வேகமாக நடப்பார் அவருடன் நடக்க நான் ஓட வேண்டியதாக இருக்கும்என்று கூறினார் அதற்கு நான், “இப்பொழுது நீயும் சாவியை போல வேகமாக நடந்து பயிற்சி எடுக்க வேண்டும். நீ சாவி என்றால் அங்கிள் காந்தியாக தான் இருக்க வேண்டும் என்று சிரித்தேன். பதிலுக்கு அப்பா சிரித்துக் கொண்டே, என்னை முறைத்தார். நவகாளி யாத்திரை புத்தகத்தில், ஹிந்து முஸ்லிம் பகை எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை உணர்தேன். அதுவும் இல்லாமல், காந்தி மகாத்மா எவ்வளவு ஊர்களுக்கு கால்நடையாக காலணி இல்லாமல் நடந்திருக்கிறார் என்பதை படிக்கும் போதும் மிக ஆச்சரியமாகவும் சோகமாகவும் இருந்தது. ஏனெனில் இப்போதைய கால கட்டத்தில் காலணி சிறிது கிழிந்து போனாலும், வேறு காலணி மாற்றி கொள்கிறார்கள்.

சாவியும் மற்றவர்களும் ரயிலில் மறைந்திருந்த காட்சி எனக்கு பிடித்த பாகங்களில் ஒன்றாக இருந்தது. என் அப்பா இந்த புத்தகத்தை நன்றாக படிக்க சொன்னார். நானும் படித்தேன் ஆனால் அப்பா சொல்வதை பார்த்தால் அந்த புத்தகத்தில் ஒரு பெரிய மர்மம் இருப்பது போல இருந்தது. ஆனால் எனக்கு ஒரு பயண கட்டுரை போல் தான் இருந்ததுஇதுவரையில் அதை நினைத்து கஷ்டமாக இருக்கிறது.. என் மனதில் ஏதாவது முக்கியமான கருத்தை விட்டு விட்டோமோ என்ற எண்ணம் தான் இருக்கிறது.. அப்படி ஏதாவது இருந்தால் பதில் அனுப்பும் போது சொல்லுங்கள்மறுமுறை எப்போவாவது படிக்கும் போது ஏதாவது புதிதாக இருப்பது போல் எனக்கு உணர்ந்தால்மற்றொரு கடிதம் எழுதுகிறேன் 

 நன்றி!!! 

அன்புள்ள மாணவி,

வீ நிவேதிதா  

  

அன்புள்ள நிவேதிதா,

நலம்தானே?

சாவியின் நவகாளி யாத்திரை காந்தியுடன் கூடவே சென்று பதிவுசெய்தது என்பதனால் முக்கியமானது. ஆனால் அதில் முழுமையான வரலாற்றுச் சித்திரம் இல்லை. அதை வாசிக்க லாரி காலின்ஸ்- டொமினிக் லாப்பியர் எழுதிய ‘நள்ளிரவில் சுதந்திரம்’ என்னும் நூலை வாசிக்கலாம். கொஞ்சம் பெரிய நூல். ஆனால் ஒரு துப்பறியும் நாவல் அளவுக்கே விறுவிறுப்பாக, கதைபோல வாசிக்கத்தக்கது.

இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தபோது இந்தியாவும் பாகிஸ்தானும் இரு நாடுகளாகப் பிரிந்தன. அதையொட்டி பெரும் மதக்கலவரம் நிகழ்ந்து பல லட்சம்பேர் கொல்லப்பட்டனர். அப்படி கலவரம் நிகழ்ந்த கிழக்கு வங்காளப் பகுதிகளுக்கு காந்தி கால்நடையாக, தனியாக பயணம் செய்தார். இரு தரப்பும் அவரை முதலில் வெறுத்தன. மெல்லமெல்ல அவரை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அமைதி திரும்பியது. இந்திய வரலாற்றின் அற்புதங்களில் ஒன்று அது.

அந்நிகழ்வைத்தான் நவகாளி யாத்திரை என்று சாவி எழுதியிருக்கிறார்

ஜெ

நவகாளி யாத்திரை வாங்க

நவகாளி யாத்திரை மின்னூல் வாங்க

முந்தைய கட்டுரைபாலை மலர்ந்தது-2
அடுத்த கட்டுரைஆபரணம்- கடிதம்