பாலை மலர்ந்தது- 3

தொழில்நுட்பம் உருவாக்கும் கேளிக்கைகள் இரு வகை. ஒன்று, நாம் பங்கேற்கும் நிகழ்வுகள். சாகசங்கள், கொண்டாட்டங்கள் என அவை இரு வகை. மலையுச்சியில் இருந்து ரப்பர் நாடாவை கட்டிக்கொண்டு குதிப்பது, ஆழ்கடல் நீச்சல் என பலவகை சாகசங்கள் உண்டு. இசைநடனங்கள், கூட்டுக்குடி நிகழ்வுகள், சூதாட்டங்கள் என கொண்டாட்டங்களும் பல. 

நாம் பார்வையாளர்களாக இருக்கும் கேளிக்கைகள் இரண்டாம் வகை. அவற்றில் நாம் வெளியே நிற்பவர்கள் மட்டுமே. அதாவது அகன்று அமைந்து ரசிப்பவர்கள்.  கண்காட்சிகள், அருங்காட்சியகங்கள் கூட ஒருவகையில் இரண்டாம் வகைக் கேளிக்கைகள்தான்.  நாம் செய்வதற்கொன்றுமில்லை, ஆனால் அது ஒரு விலக்கம் அல்ல, விடுதலை. நாம் அவற்றை நம் நோக்கில் அணுகவும், புனைந்துகொள்ளவும் அவை இடமளிக்கின்றன.

எனக்கு பொதுவாக இரண்டாம் வகைக் கேளிக்கைகளிலேயே ஆர்வம்என் கண்கள் கண்டு, செவிகள் உணர்வனவற்றை நான் என் கற்பனையில் பலமடங்கு விரித்துக்கொள்வேன். ஒரு கணத்துக்குள் ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்து மீள்வேன். அத்தகைய ஒரு காட்சி முன் என் அகம் அமைதியடைந்து, ஓயா எண்ணங்களின் ஓட்டம் அறுபட்டு விட்டதென்றால் அதன்பின் நான் நிலைமீளும்போது வேறொருவராக ஆகியிருப்பேன். என் நினைவில் இன்றுவரை நீடிப்பவை வெவ்வேறு இடங்களில் நான் ஆழமாக உணர்ந்தறிந்தவையே.

உண்மையில் கலையார்வம் கொண்டவர்களுக்கான கேளிக்கைகள் இரண்டாம் வகைப்பட்டவையே. இவற்றில்தான் அழகு உள்ளது. இயற்கையை, பிரபஞ்சத்தை, மானுட சாத்தியங்களின் முடிவின்மையை நம்மால் உணர முடிகிறது. ஆனால் கற்பனையற்ற, கலையுணர்வவற்ற, கலாச்சாரம் சார்ந்த பயிற்சியற்றவர்களுக்கு இந்த வகை கேளிக்கையை நாம் பரிந்துரைக்க முடியாது. அவர்களுக்கு இவை வாசல்களை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கும் உலகங்கள். வெறும் பொருட்கள்.

இன்று இரண்டாம் வகை கேளிக்கைகள் பொதுவாக சிறுவர்களுக்காக என வகுக்கப்பட்டுள்ளன. ஏனென்றால் இன்றைய இளைஞர்கள் நாடுவது முதல்வகையை. அதுவும் சரிதான். சிறுவர்கள் கற்பனை நிறைந்தவர்கள். அவர்களால் காட்சிகளில் இருந்து நெடுந்தொலைவு செல்ல முடியும். இளைஞர்கள் பொதுவாக கற்பனை மிகக்குறைவானவர்கள். ‘யதார்த்தம்அவர்களுக்கு தேவைப்படுகிறது. அதிலும் சாகசம், கொண்டாட்டம் ஆகியவற்றை நாடும் இளைஞர்கள் பெரும்பாலும் உடல்வலிமையை சோதனை செய்துகொள்ளவும், வெளிப்படுத்தவும் விரும்புபவர்கள் மட்டுமே. இளமையின் ஒரு நிலை அது. அதற்குமேல் ஒன்றுமில்லை. 

வெறும் கேளிக்கைகள் அறிவுடையோருக்கு எளிதாகச் சலித்துவிடும்.  அதில் சற்றேனும் கற்றல் இருக்கவேண்டும். மெய்யான சவால் அந்தக் கற்றலில்தான் உள்ளது. பல ஆண்டுகளாக அதில் குடித்துவிட்டு சினிமாப்பாட்டுக்கு ஆடிக்களிப்பவர்களை பார்க்கிறேன். அவர்களில் நுணுக்கமான தொழில்நுட்பத்திறன் கொண்டவர்களைக் கண்டதுண்டு. அறிவும் நுண்ணுணர்வும் கொண்ட எவரையும் இது வரை சந்தித்ததில்லைபலநூறு பேரை பார்த்தும்கூட.

விதிவிலக்கான சாகசங்களும் உண்டு. மலையேற்றம், கானுலா போன்றவை சாகசங்கள் என்றாலும் என் உளம்கவர்ந்தவை. ஏனென்றால் அவற்றில் கற்றலெனும் அனுபவமும் உள்ளது. காணும் வெறும்நிலையும் இயல்வதாகிறது. பயணங்களில் சாகசமும் தியானமும் ஒருங்கே அமைகிறது. ஆகவேதான் யோகிகளும் கலைஞர்களும் பயணங்களில் இருக்கிறார்கள். எப்போதுமே பயணங்களில் இருப்பதே சிறந்த வாழ்வு என எனக்குள் இளமையிலேயே பதிந்துவிட்டிருக்கிறது.

கேளிக்கை எனும்போது ஓர் எதிர்மறைத்தன்மை நம் உள்ளத்தில் உருவாகிறது. அது பிழையானது, பாவமானது, ஊதாரித்தனமானது என்றெல்லாம். வேலை அல்லாத மகிழ்வெல்லாமே கேளிக்கைதான்.  வேலையில் நாம் அளிப்பது உள்ளது. கேளிக்கையில் நாம் பெற்றுக்கொள்கிறோம். முடிவில்லாமல் பெற்றுக்கொள்ள முடியாது, அளித்தாகவேண்டும். ஆகவேதான் கேளிக்கை எல்லைக்குட்பட்டது என முன்னோர் வகுத்தனர். ஆனால் உயர்நிலைக் கேளிக்கைகள் நம்மை அகம்நிறையச் செய்பவை, ஆற்றல் பெறச்செய்பவை.

நவீனத் தொழில்நுட்பம் இன்று கேளிக்கைகளை உயர்கலைகளின் தரத்துக்குக் கொண்டுசென்றுள்ளது.  கலைகளை மிகத்தீவிரமாக ரசிக்கச் செய்கிறது அது. இயற்கையின் ஒரு துண்டை வெட்டி கொண்டுவந்து நம் கண்முன் நிறுத்துகிறது. இயற்கையில் நாம் சாதாரணமாகக் காணமுடியாத ஒரு பகுதியை காணச் செய்கிறது.  காணவே முடியாத கோணங்களை அளிக்கிறது.

அபுதாபியில் இன்று சர்வதேசத்தரத்திலான கலை இயற்கை காண்பிடங்கள் உருவாகியுள்ளன. அதிலொன்று கடல் உலகம் (Sea world) என்னும் அமைப்பு, நீர்க்காட்சிச்சாலை (அக்வேரியம்) என எளிதாகச் சொல்லலாம். ஆனால் இது அதன் மிகப்பிரம்மாண்டமான வடிவம். நீரின் அலைகளாலான சுவர்கள் நடுவே நடந்துகொண்டே இருக்கலாம். எது நீர், எது நீரின் காணொளி வடிவம் என அறியமுடியாது. 

அபுதாபியின் யாஸ் தீவில் அமைந்துள்ள இந்த கடல்காட்சியகம் 2007 ல் திட்டமிடப்பட்டு ம் 23 மே 2023ல் கட்டி முடிக்கப்பட்டது. கடலை அறிய ஆர்வம் கொண்டவர்களின் ஆய்வுக்களம் இது. வெறுமே கடலை ஒரு கனவென நிறைத்துக்கொள்ள விழைபவர்களுக்குரிய இடமும் கூட. நான் இரண்டாம் வகை. அந்த நீர்க்கனவுக்குள் நுழைந்து திளைத்துக்கொண்டே இருந்தேன். ஆழ்கடலுக்குள் இப்படி வெறும் கனவாகவே இறங்கிச் செல்லமுடியும் என்பது ஒரு தொழில்நுட்ப விந்தைதான்.

மிகப்பெரிய கண்ணாடித்தொட்டி ஒன்று இந்த கூடத்துக்குள் உள்ளது என்று சொல்லலாம். உண்மையில் மிகப்பெரிய நீர்த்தொட்டிக்குள் இந்த கூடம் உள்ளது என்று சொல்வதே சரியானது. பல மாடிகளிலாக நீண்டு பரவியிருக்கும் ஒற்றை பெருந்தொட்டி. அதற்குள் பல்லாயிரம் மீன்கள். 

இந்த வகையான தொட்டிகளுக்குள் நமக்கு பெரும் அழகனுபவத்தை அளிப்பவை திரண்டி அல்லது திரச்சி மீன்கள். (Manta Ray) மாபெரும் பறக்கும் ஆலிலைகள் அவை. அவற்றின் விளிம்புகள் நடக்கும் பெண்ணின் பாவாடை விளிம்பு போல, திரைச்சீலைபோல, நீர்ச்சுழலின் கரைவிளிம்புபோல அலைபாய்ந்து கொண்டே இருக்கின்றன. அவை மிதக்கின்றனவா தீராநடனம் ஒன்றில் இருக்கின்றனவா என்று தோன்றிவிடும்.

சிறியவகை சுறாக்கள் தனித்து அலைந்தன. வெள்ளியிலைச்சுழல்களாக, வெள்ளிக்காசுகளின் அலைகளாக மீன்கள். பல்லாயிரம் விழிகளின் இமைப்புகள். கண்ணெதிரே உருமாறிக்கொண்டே இருக்கும் கூட்டுவடிவங்கள். நடுவே ஒரு தழல்துளி என தனித்து பறந்துகொண்டிருந்த சிறிய மீன்கள். பொன்னொளிர் உடல்கொண்ட சிறிய மீன்கள். மிகப்பெரிய மீசையுடன், திகைக்கும் விழிகளுடன் கண்ணாடிப்பரப்பருகே வந்து சட்டென்று திரும்பிக்கொள்பவை.

நீலநீர்வெளியின் அடியில் நடக்கையில் நீந்துவதுபோலிருந்தது. வேறொரு கோளுக்கு வந்துவிட்டது போலிருந்தது. அண்மையில் நின்றிருந்தவர்களெல்லாம்கூட நீலத்தில் கரைந்துவிட்டிருந்தார்கள். அங்கே ‘ஆப்தவாக்கியம்’ ஆக எழுதப்பட்டிருந்தது ‘உலகமெங்கும் ஒரே கடல்’ என்னும் வரி. அது ஒரு மந்திரம். நாம் ஒவ்வொரு கடலும் அந்தந்த நாட்டுக்குரியதென, நிலத்தைச் சார்ந்ததென பிரித்துக்கொண்டுள்ளோம். அது ஒரு மாமாயை. இந்த மண்ணுலகம் கடலின் உள்ளங்கையில் இருக்கும் ஒரு கூழாங்கல். எல்லா கடலும் நமதே. கடல்வாழ் உயிர்களெல்லாம் நாமே.

ஓங்கில் (Dolphin) காட்சி ஒன்றும் கடல்நாய் (Seal) காட்சி ஒன்றும் இருந்தன. டால்ஃபினை பார்க்கையில் எல்லாம் வரும் மனப்பதிவு ஒன்று, நினைவு ஒன்று. அது சிரிப்பதுபோலத் தோன்றும். கூடவே பள்ளியில் எனக்கு மூன்றாண்டு மூத்தவராகப் படித்த நண்பர் வர்கீஸின் அக்காவான டெல்ஃபின் என்னும் அழகியின் நினைவு. அழகிக்கு இப்போது 65 அகவை நிறைந்திருக்கும். ஓங்கிலும் ஒரு நாய். கடல்நாயின் உடல்மொழியிலேயே நாய்த்தன்மை இருந்தது. அவை நீரில் நீந்தும் விரைவு கண்ணாடிச்சுவருக்கு அப்பால் தெரிந்தபோது திகைப்பு உருவானது.

துள்ளிக் குதித்தன. எம்பி எம்பி விழுந்து நடனமாடின. வால்களை ஆட்டிக்காட்டின. ஒவ்வொரு வித்தைக்குப் பின்னரும் வந்து மீன்களை பரிசுகளாகப் பெற்றுக்கொண்டன. அவை அந்த வித்தைக்குப் பழகிவிட்டிருப்பதை காணமுடிந்தது. நிகழ்வு தொடங்குவதற்கு முன்னரே மறுபக்கம் நீரில் துள்ளி துள்ளி ‘எங்கப்பா வித்தை, கதவை திறங்க’ என்று பொறுமையிழந்து கொண்டிருந்தன.

நீர்வெளியை கடந்து வெளியே வந்தபோது சுற்றிலும் வெளித்த வானம், ஓங்கிய கட்டிடங்கள். அந்த நீலம் கண்களை விட்டு அகல நீண்டநேரம் ஆகியது. மதிய உணவை அங்கேயே உண்டோம். மிகப்பெரிய திரைப்பட அரங்கு போல மலைகளை, அருவிகளை உருவாக்கி வைத்திருந்தனர். நடுவே அமர்ந்து சாப்பிட்டோம்

கடற்காட்சியகத்தில் இருந்து நேரடியாக மணல்வெளி. அபுதாபியே ஒருகாலத்தில் கடலுக்குள் இருந்ததுதான். அந்த மணலின் வெண்மையும் மென்மையும் அதையே காட்டுகிறது. பலகோடியாண்டு கடலுயிர்களையே நாம் எண்ணை என எடுத்துக் கொண்டிருக்கிறோம். நம் வண்டிகளில் வெடிப்பதும் உறுமுவதும் விசையாவதும் கடலே

பாகிஸ்தானிகளே இங்கே ஊழியர்கள் அனைவரும். வண்டியில் வந்து அழைத்துச் சென்றனர். வெண்மணல் பரப்பில் சென்றதும் ஒரு ‘திகிலனுபவம்’ அளிக்க முயன்றனர். ஏற்கனவே ஜெயகாந்த் ராஜு எச்சரித்திருந்தார். ‘நாகர்கோயில் தெருக்களில் ஆட்டோவில் போவதை விட கடினமாக இருக்குமா என்ன?’ என்று கேட்டிருந்தேன். ஜேம்ஸ்பாண்டே திகைத்த இடம் அது (பார்க்க நான்காவது கொலை)

நினைத்ததுபோலவே நாகர்கோயில் அளவுக்கே இருந்தது. மணல்மேடுகளின்மேல் வண்டியை மூர்க்கமாக ஓட்டி ஏற்றினார். செங்குத்தாக இறக்கினார். சுழற்றியடித்தார். மணல் எங்களுக்குப் பின்னால் பறந்து கொண்டே இருந்தது. மணல்வெளியில் ஒரு சாகசப்பயணம் – லாரன்ஸ் ஆஃப் அரேபியா போல. இந்த மணல்மேடு முழுக்க லாரன்ஸ் ஆஃப் அரேபியா நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது. சைதன்யா அந்த படத்தின் இசைக்கருவை தன் செல்பேசியில் போட்டு பலமுறை கேட்டாள்.

பாலைவெளியின் முழுவிரிவையும் அங்கேதான் பார்த்தேன். அராபிய நிலம் வெண்மணலால் ஆனது. நான் சென்ற இன்னொரு பாலைநிலம் நமீபியா. அது குங்குமச்சிவப்பு மணல்மேடுகளால் ஆனது. மதியவெயிலில் பொன்னலைகளென ஆவது. (கருநிலம் நமீபிய பயணம் 2012) அதன்பின் 2013ல் துபாய்- குவைத் வந்தபோது நண்பர் ஆசிப் மீரான், ஷென்ஷி ஆகியோருடன் ஓமான் செல்லும் பாதையில் சற்று தொலைவு சென்று இந்த வெண்பாலையை பார்த்திருக்கிறேன்

பாலைநடுவே ஒரு மணல்முகாம். அங்கே ஒட்டகைகளில் ஏறி ஒரு சுற்று சுற்றிவரலாம். நான் 1982ல் ஒட்டகையில் ஏறினேன். இனி இப்பிறவியில் ஏறுவதில்லை என முடிவெடுத்தேன். அருண்மொழியும் சைதன்யாவும் ஏறிக்கொண்டார்கள். ஒட்டகையின் தனிச்சிறப்பு அது முதலில் பின்னங்கால்களை விரித்து எழும் என்பது. அதை எதிர்பாராத நாம் குப்புறக் கவிழ்ந்து உடனே பின்பக்கம் சரிவோம். அதன்பின் அந்த கொழுப்புருளைமேல் நடனமாடிக்கொண்டு அமரவேண்டும்

2012ல்தான் நான் ஜெய்சால்மருக்கு நண்பர்களுடன் ஒரு பயணம் மேற்கொண்டேன். அங்கே நண்பர்கள் ஒட்டகச்சவாரி செய்தனர். எடைமிக்க ராஜமாணிக்கம் ஏறியபோது அந்த ஒட்டகம் பிளிறியது. ஒட்டகம் யானைபோல ஓசையெழுப்பும் என அப்போது அறிந்தேன். அதன் வாயை கட்டியிருந்தது ஏன் என்றும் (அருகர்களின் பாதை- ஜெய்சால்மர்)

கூடாரங்கள் நடுவே மேடை. அங்கே இரவு கலைநிகழ்வுகள். உணவு. அங்கே சென்றதுமே அரபு ஆடைகளை அணியக்கொடுத்தார்கள். நான், சைதன்யா, அருண்மொழி மூவருமே அணிந்துகொண்டோம். அந்நிலத்தின் பகுதியாக அமையும் உணர்வு. கூடவே அருண்மொழியின் தஞ்சைப்பகுதியின் இஸ்லாமிய உலகுக்குள் நுழைந்துவிட்ட உணர்வு. அவளுக்கு அவள் சிறுவயதில் அறிந்து நெருக்கம் கொண்டிருந்த  ஏகப்பட்ட பாயம்மாக்கள் நினைவில் கொப்பளித்தனர். சைதன்யாவுக்கு அவளுடைய நெருக்கமான தோழி அஃப்ரீன் ஆக மாறிவிட்ட உணர்வு.

மாலையில் அரபு உணவு. மாமிசம் மிதமாக மணம் சேர்த்துச் சமைக்கப்பட்டது. எனக்கு அவ்வகை ஊனுணவு பிடிக்கும். இனிப்புகளை தவிர்த்துவிட்டேன். எடை குறைக்கும் முயற்சி. கூடவே பலவகையான சுட்ட காய்கள், சுட்ட கிழங்குகள். அராபிய உணவு என்பது ஒரு காலத்தில் தீயில் சுடப்பட்ட மாமிசம், மீன், காய்கறிகள்தான்.

ஒரு நடனம். எகிப்து அல்லது ஓமான் போன்ற ஏதோ நாட்டைச்சேர்ந்த இளைஞர். உயரம் என்பதை விட நீளம் என்று சொல்லலாம். ஒரு மனிதரைப்பிடித்து தலையையும் காலையும் பற்றி கால்வாசி இழுத்து நீட்டினால் எப்படி இருப்பாரோ அப்படி இருந்தார். வண்ணப்பாவாடை ஒன்றை கட்டி வந்து சுழன்று ஆடினார். அவர் ஆட ஆட அது சுழன்று பறந்தது. திரச்சி மீனின் சிறகுகளின் விளிம்பு போல அலையடித்தது

சட்டென்று அது ஒளிகொண்டது. அவர் பொன்வண்டாக, மின்மினியாக, பட்டாம்பூச்சியாக மாறிக்கொண்டே இருந்தார். பின்னர் அரங்கிலிருந்த இளைஞர்களை மேடைக்கு அழைத்தார். சைதன்யா சென்றதும் அந்தப் பாவாடையை இடையில் கட்டி ஆடச்சொன்னார். சைதன்யா சுழன்றாடினாள். ஆனால் சீக்கிரமே தலைசுற்றிவிட்டது. அவரே பிடித்துக் கொண்டுவந்து அமரச்செய்தார்.

பாலை நிலத்தின் அலைகளின் மேல் அரைநிலவு நின்றிருந்தது. நிலவில்லாத பாலையை எண்ணவே கூடவில்லை. அரபுக்களுக்கு நிலவு ஏன் அத்தனை முக்கியமானது என அங்கிருந்தால் தெரிந்துகொள்ள முடியும். நிலவில் மணலில் ஒரு சிறு நடை. மணலின் சிறிய அலைகள் கூட பெரிய மணல்மேடுகளின் அதே வடிவில் இருந்தன. அது காற்றின் அலை. காற்றி தன் தற்படத்தை மணலில் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

வீடு திரும்பும் வரை நிலவு உடனிருந்தது. அன்றிரவு கண்ணுக்குள் அலைகள். நீரலைகள், மணல் அலைகள். எப்போதெல்லாம் மழைக்காடுகளுக்கு செல்கிறேனோ அப்போதெல்லாம் பசும்காட்டை அலையென உணர்வேன். மலைகளையும் அலைகளென்றே உணர்வேன்.

(மேலும்)

முந்தைய கட்டுரைஏ.எம்.ஏ.அஸீஸ்
அடுத்த கட்டுரைஅமெரிக்கா, கனடா- பயணமும் நிகழ்வுகளும்