பாலை மலர்ந்தது-2

பாபிலோனிய எழுத்துக்கள்- களிமண்பலகை

உலகநாகரீகம் என ஒன்றைச் சொல்கிறோம். அதில் எல்லா நிலப்பகுதிகளின் பண்பாட்டு வெற்றிகளும் அடங்கும். அதில் நம் பங்களிப்பு, நம் இடம் பற்றிய தெளிவு நமக்கு இருக்கவேண்டும். அது வெறும் பெருமிதமாக அன்றி மெய்யான அறிதலின் அடிப்படையிலானதாக இருக்கவேண்டும். கூடவே உலகப் பண்பாட்டின் ஒட்டுமொத்தத்தில் நம் இடம் பற்றிய புரிதலாகவும் இருக்கவேண்டும்.

அந்த உலகப்புரிதல் இல்லாத நிலையிலேயே நம் பண்பாடு குறித்த மிகையுணர்வுகள் உருவாகின்றன. அவற்றை நாம் எந்த கூச்சமும் இல்லாமல் பொதுவெளியில் முன்வைக்க ஆரம்பித்துவிடுகிறோம். இன்றைய சூழலில் அந்த வகையான பெருமிதம் உலகின் பார்வையில் நம்மை கேலிக்குரியவர்களாக ஆக்கிவிடும். உலகமறியாத ஒருவகை பழங்குடிகள் என்று நம்மை காட்டிவிடும். பழங்குடிகள் அனைவருக்குமே தாங்களே உலகின் தூய்மையான, தொன்மையான, சரியான மக்கள் என்னும் எண்ணம் இருக்கும். பிற அனைவருமே தங்களில் இருந்து உருவானவர்கள் என்னும் நம்பிக்கையும் பலசமயம் அவர்களிடமிருக்கும்.

பண்பாட்டில் முன்னேறிய சமூகங்களை எப்படி அளவிடுவது? அவர்களின் விரிவென்ன என்பதே அளவுகோல். எந்த அளவுக்கு அவர்கள் இன்னொரு பண்பாட்டை ஏற்றுக்கொள்கிறார்கள், எந்த அளவுக்கு உலகப்பண்பாட்டை புரிந்துகொண்டிருக்கிறார்கள், எந்த அளவுக்கு அவர்கள் தங்களை மையமாக்கிச் சிந்திக்காமல் மானுட குலத்தை மையமாக்கிச் சிந்திக்கிறார்கள் என்பதே அது.

அந்த பொதுப்புரிதல் இந்தியாவில் எங்குமில்லாத ஒன்று. வடஇந்தியர்கள் வேதகாலம், இதிகாச காலம், இந்து தொன்மங்கள் பற்றிய மிகையான, அபத்தமான நம்பிக்கைகளை வரலாற்றுப்புரிதலாக எங்கும் சொல்வார்கள். தமிழகத்தில் நாம் உலகிலேயே தொல்குடி தமிழர், தொல்மொழி தமிழ் என கூச்சமே இல்லாமல் சொல்வோம். சிங்கப்பூரிலும், அமெரிக்காவிலும் அதைக்கேட்டு அயலறிஞர்கள் மென்புன்னகை பூத்து பரிவு காட்டுவதைக் கண்டு உளம்கூசும் தருணங்கள் பல எனக்கு அமைந்துள்ளன. நம் அருங்காட்சியகங்களிலேயேகூட அந்த வகையான அசட்டுத்தனங்களை எழுதி வைத்திருப்பதையும் கண்டதுண்டு.

அபுதாபியில் சாதியாத் தீவில் (மகிழ்ச்சித் தீவு)  அமைந்துள்ள கலாச்சாரத் துணைநகரத்தை பார்த்தபோது எனக்கு எழுந்த முதன்மை வியப்பென்பது அதிலிருந்த சமநிலைதான். முதலில் சுற்றுலா – கலாச்சாரக் கல்வி இரண்டையும் சமமாக அமைத்திருந்த சமநிலையைச் சொல்லவேண்டும். ராட்சத ‘ரோலர்கோஸ்டர்கள்’ உள்ளிட்ட பல கேளிக்கை அமைப்புகள் உள்ளன. பல இன்னும் கட்டுமான நிலையில் உள்ளன. யூனிவர்ஸல் ஸ்டுடியோஸ் போன்றவை விரைவில் வரவுள்ளன என்று தெரிந்தது.

மறுபக்கம் கலாச்சார நிலையங்கள். அவற்றில் தலையாயது லூவர் அருங்காட்சியகக் கிளைதான். என் 29 ஆவது வயதில் நித்ய சைதன்ய யதியின் சேகரிப்பில் இருந்த ஒரு பெருநூல் வழியாக லூவர் அறிமுகமானது. அன்றுமுதல் இன்றுவரை அது எனக்கொரு பித்துதான். அதை நேரில் பார்த்தபின் அப்பித்து இன்னும் பெருகியது. லூவர் அருங்காட்சியகம் உலகக்கலைகளின் பெருந்தொகை. அபுதாபியில் லூவரின் குழந்தையை கண்டேன்.

மார்ச் 2007ல் பிரான்ஸுடன் அபுதாபி போட்டுக்கொண்ட ஓர் ஒப்பந்தப்படி இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. பிரெஞ்சு கட்டிட வடிவமைப்பாளர் ழீன் நுவெல் வடிவமைத்த இந்த அருங்காட்சியகம் சென்ற 2017ல் திறந்து வைக்கப்பட்டது. அரேபிய நிலத்தில் மிக அதிகமாகச் சுற்றுலாப் பயணிகளால் பார்க்கப்படும் இடங்களில் ஒன்றாக இது இன்று உள்ளது.

இரண்டு லட்சத்து அறுபதாயிரம் சதுர அடி பரப்பு கொண்ட மாபெரும் கட்டிடம் இது. இதில் எண்பத்தாறாயிரம் சதுர அடி பரப்புக்கு காட்சிஅரங்குகள் உள்ளன. அரபுலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம். லூவரை நான் பார்த்திருக்கிறேன். ஆயினும் என்னை பிரமிப்பிலாழ்த்தியது இந்த நவீன லூவர்.

முதல் விந்தை அதன் கட்டிட அமைப்பு. சுற்றிலும் கடல். அதன் நடுவே ஒரு மாபெரும் கப்பல் போல அதன் அமைப்பு. அல்லது ஒரு விண்கலம் போல. கவிழ்ந்த ஆமையோடு போன்ற மாபெரும் கூரை. அது சக்கரங்களும் சதுரங்களும் ஒன்றன் மேல் ஒன்றென அமைந்ததுபோல. வெளியே இருந்து தேவையான அளவு மட்டுமே ஒளியை உள்ளே அனுப்புவது அதன் நடைமுறை நோக்கம். அலுமினியம், உருக்கு, கண்ணாடி, மற்றும் செயற்கைநாரிழை கொண்டு கட்டப்பட்டது.

நான் துபாயிலும் அபுதாபியிலும் பார்த்த கட்டிடங்களைப் பற்றி தனியாகச் சொல்லவேண்டும். இவை ‘கட்டிட வடிவமைப்பாளனின் கனவுகள்’ என சொல்லத்தக்கவை. விதவிதமான மாபெரும் கட்டிடங்கள். கட்டிடங்கள் என்பவை அவற்றின் பயன்பாடு என்னும்  அடிப்படையால் கட்டுப்படுத்தப்பட்டவை. அந்த எல்லைக்குள் அவை கொள்ளும் நடனநிலைகள் அனைத்தையும் இங்கே பார்க்கலாம். நெளிந்து, ஒசிந்து, பறந்து, நிலைத்து, பரவி, கூர்ந்து, குவிந்து, குமிழியிட்டு…

ஆனால் இக்கட்டிடங்கள் கனடாவின்  ராயல் ஒண்டேரியோ மியூசியம் போல பின் நவீனத்துவ அழகியல் என்று சொல்லிக்கொண்டு விபரீதமான வடிவங்களை செய்து பார்த்தவை அல்ல. அடிப்படையில் மனித கண், மனித மூளை ஆகியவை நாடும் ஜியோமிதி வடிவங்களின் அழகியல் கொண்டவை. ஆகவே வியப்புடன் அழகனுபவத்தையும் அளிப்பவை. அவற்றில் இக்கட்டிடமும் ஒன்று. உள்ளே சென்று அதன் கூரையின் ஒளியமைப்பைப் பார்த்தபோது அது அளித்த வியப்பு மேலும் கூடியது.

லூவரைப்போலவே பல காலப்பகுதிகளாக பிரிக்கப்பட்ட அரும்பொருட்களின் மாபெரும் காட்சியகம் இது. வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த மெசபடோமியக் களிமண் பலகைகள், எகிப்திய மம்மிகள், எகிப்திய பாரோ இரண்டாம் ராம்ஸேயின் சிலை ஆகியவற்றுக்கு நிகராகவே ஆப்ரிக்க மரச்செதுக்குச் சிற்பங்கள், சுடுமண் முகமூடிகள்.

சாக்ரடீஸுடன்

திரும்பத் திரும்ப அருங்காட்சியகங்களைக் கண்டு வருகிறேன். இன்று இங்கே எந்த வரிசையில் என்னென்ன பொருட்கள் இருக்கக்கூடும் என்பது எனக்கு மனப்பாடமாகவே தெரியும். ஆயினும் ஒவ்வொரு முறையும் அருங்காட்சியகம் எனக்கொரு காலப்பயணமாகவே இருக்கிறது. இங்குள்ள ஒவ்வொரு அறையும் ஒரு யுகம். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு காலெடுத்துச் செல்ல முடியும். ஒரு மாபெரும் நூலில் ஊர்ந்துசெல்லும் வாசிக்கத் தெரிந்த எறும்பு.

மாபெரும் நூலின் தாள் புரள்கிறது. கிரேக்க யுகம். சாக்ரடீஸின் முகத்தருகே முகம் வைத்து நிற்கிறேன். அவர் கண்களை என்னால் பார்க்கமுடிகிறது. பைசாண்டிய காலகட்டத்து பரோக் பாணி வண்ணக் கண்ணாடி ஓவியங்கள். மரத்தில் வரையப்பட்ட தெய்வ உருவங்கள். மாதா, குழந்தை ஏசு, புனிதர்கள். மரத்தின் விரிசல்கள், சாயத்தின் உதிர்வுகள் எல்லாம் கலையின் பகுதியென்றே ஆன அற்புதம்.  அதன்பின் மகத்தான மறுமலர்ச்சிக் காலகட்டம். மானுடக்கனவு நுரைத்தெழுந்தது. ஐரோப்பா உளம்பொங்கி மேலே தூக்கப்பட்ட மதுக்கோப்பை என ஆனது…

இந்த அருங்காட்சியகத்தில் நடக்க நடக்க உலகம் விரிந்து விரிந்து எண்ணத்தை நிறைக்கிறது. சீன ஜாடிகள், இந்தியாவில் சோழர்காலத்து நடராஜர். அத்தனை சிலைகளுக்கு நடுவிலும் நடராஜரின் அருள்முகமும் குறுநகையும் மெய்ப்பு கொள்ளச் செய்தன. நம் பெருமை என்பது இதுதான். நாமே உலகம் என்பதல்ல. நம்மை உலகின் எந்தக் கலையகமும், எந்த வரலாற்றகமும் தவிர்க்கவே முடியாது என்பதுதான்.

வரலாற்றுக் காலத்திற்கு முன்னரே நாகரீகம் ஓங்கிய நிலம் அரேபியா. உலகமெங்கும் பாலைநிலங்களிலேயே பண்பாடுகள் தோன்றின. உலோகங்கள் தோன்றுவதற்கு முன்பு காடுகளை அழிப்பது அனேகமாக இயலாதென்ற நிலையில் மழைகுறைவான, காடு அமையாத நிலங்களிலேயே தொல் மானுடர் வாழ்ந்தனர். மேய்ச்சலே அவர்களின் முதன்மைத் தொழிலாக அமைந்தது. ஓய்வுவாழ்க்கையில் இருந்தே அருங்கலைகளுக்கான அடிப்படை மனநிலைகள் அமைந்தன.

அத்துடன் அரேபியா பிரம்மாண்டமான ஒரு சாலை. இந்தியா, சீனா முதலிய நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்குமான இணைப்புச் சரடு அது. வட ஆப்ரிக்காவுக்கும் பிறநாடுகளுக்குமான இணைப்புப் புள்ளியும்கூட. அதனால் எல்லா அறிவையும் கலைகளையும் வாங்கி தான் வளர்த்துக்கொண்டு உலகுக்குப் பகிர அதனால் இயன்றுள்ளது. குறிப்பாக மருத்துவம், ரசாயனம் இரண்டிலும் அரேபியாவின் பங்களிப்பு முதன்மையானது.

மெசபடோமியாவின் தொன்மையான களிமண்பலகை நூல்கள் முதல் அருங்காட்சியக வைப்பு தொடங்குகிறது. பொன்னூல் வேலைப்பாடு கொண்ட கம்பளங்கள் ஒவ்வொன்றும் மாபெரும் ஓவியத்திரைகளும்கூட. ஆனால் என்னை பிரமிக்கச்செய்து நீண்டநேரம் நிற்கவைத்தவை அங்கிருந்த நூல்கள். துணியும் தாளும் கலந்து உருவாக்கப்பட்ட பெரும் புத்தகங்களில் மிகச்சீராக எழுதப்பட்ட எழுத்துக்கள் கொண்டவை.

எழுத்துருக்கலை சீனாவில் உருவானது. அங்கிருந்து இந்தியா உட்பட எல்லா நாடுகளுக்கும் சென்றதென்றாலும் அது அடுத்தகட்டத்தை அடைந்து ஒரு தனித்த கவின்கலையாக மாறியது அரேபியாவில்தான். அங்கிருந்த ஒவ்வொரு நூலும் ஒரு கனவுக்குள் இழுத்து வீழ்த்திவிடும் வல்லமை கொண்டது. பொன்வண்ணம் பூசப்பட்ட விளிம்புகள். பட்டுத்துணி ஒட்டப்பட்ட மென்மரத்தாலான அட்டைகள். நூல்கள், நூல்கள்….நூல்களுடன் என் வாழ்க்கை பிணைக்கப்பட்டிருப்பது எத்தனை மகத்தான விஷயம். மானுடத்தின் மிகத்தூய கனவின் ஒரு பகுதியே நானுமென உணர்வது எத்தனை இனியது

பொன்னும் வண்ணங்களும் கொண்டு வரையப்பட்ட எழுத்துக்களைப் பார்க்கையில் ஒன்று தோன்றியது, மானுடன் உருவாக்கிய முதன்மையான ஓவிய உருவங்கள் எழுத்துக்களே என. அன்றாடம் பார்ப்பதனால் அவற்றை நாம் கலைப்படைப்புகளாக காணாமலாகிவிடுகிறோம். அரபு மொழியே எழுத்துருக்களில் அழகானது. அது வெவ்வேறு அளவிலான சிறு இறகுகளாலானது என்று எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. இறகுகளில் வண்ணம் தொட்டு தீற்றி எழுதும் முறையால் எழுத்துக்களே இறகுகளாகிவிட்டிருக்கின்றன. அத்துடன் வட்டமாக, சுழலாக எப்படி எழுதினாலும் பொருள் சிதையாமலிருக்கும் இயல்பும் அந்த எழுத்துருவுக்கு உண்டு.

அரேபிய மருத்துவமே இன்றைய நவீன அலோபதி மருத்துவத்தின் தொடக்கப்புள்ளி என்று சொல்லப்படுகிறது. சீன, இந்திய மருத்துவ முறைகளும் வெவ்வேறு ரசாயன ஆய்வுகளும் அரேபியாவில் இணைந்தன. ஐந்தாம் நூற்றாண்டு முதல் கிரேக்க மருத்துவமுறையுடன் அவை இணைந்தன. புதிய பாய்ச்சலை அடைந்து சில நூறாண்டுகளுக்குப் பின் ஐரோப்பாவை அடைந்து நவீன மருத்துவத்தை உருவாக்கினர்.

அப்போது ஐரோப்பா தன் இருண்டகாலகட்டத்தில் இருந்தது. அறிவு என்பதே சாத்தானுக்குரியது என நம்பிய மதவாதிகள் எல்லாவகையான கற்றல்களையும் தடைசெய்திருந்தனர். மருத்துவர்கள் சூனியக்காரர்களாக முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்டனர். ரசாயன – மருத்துவ ஆய்வுகள் ரகசியமாகவே செய்யப்பட்டன. ஆனால் அரேபியா அறிவுத்தாகத்துடன் இருந்தது.

லூவர் அருங்காட்சியகத்தில் மிக முக்கியமான அரேபிய மருத்துவ நூல்களின் கையாலெழுதப்பட்ட நூல்கள் இருந்தன. அவற்றின் உச்சம் அவிசன்னா என்னும் இபி சினா உருவாக்கிய மருத்துவக் கலைக்களஞ்சியத்தின் பிரதிகள். அவற்றில் அறுவைசிகிழ்ச்சையின் மரவெட்டு அச்சுப் படங்களும் உள்ளன. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் அவிசன்னா. இன்றைய மருத்துவத்தின் நிறுவனமேதைகளில் ஒருவர். அராபிய மருத்துவர்களின் நீண்ட வரிசை ஒன்று இன்றும் உலக ஆய்வாளர்களால் பெருமதிப்புடன் குறிப்பிடப்படுகிறது (அராபிய மருத்துவத்தின் வரலாறு)

அந்த மருத்துவ நூல்களின் எழுத்துக்களை கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தேன். கையால் எழுதப்பட்டவை. மரத்தில் மொத்த பக்கமும் சிற்பமாகச் செதுக்கப்பட்டு மையில் ஒற்றி அச்சிடப்பட்டவை. அக்காலத்தில் இத்தகைய நூல்கள் ஒவ்வொன்றும் பெரும் பொக்கிஷங்களாகக் கருதப்பட்டிருந்தன. தலைமுறை தலைமுறையாகக் கைமாறப்பட்டிருந்தன. ஒரு நூலின் உரிமையாளன் அள்ள அள்ள குறையாத ஒரு கருவூலத்தை வைத்திருப்பவனாக எண்ணப்பட்டான். ரெம்ப்ராண்ட் போன்றவர்களின் ஓவியங்களில் மாபெரும் நூல்களுடன் அமர்ந்திருக்கும் அறிஞர்களின் அந்த பெருமிதப்பாவனையை நினைவுகூர்ந்தேன். (அறிஞன் ரெம்ப்ராண்ட்)

இங்குள்ள உலகவரைபடங்கள் மிக வியப்புக்குரியவை. அராபியரும் துருக்கியரும் ஐரோப்பியரும் ஏழு எட்டாம் நூற்றாண்டு முதலே உலக வரைபடங்களை உருவாக்க ஆரம்பித்துவிட்டனர். இன்றுள்ள உலக வரைபடத்தில் 90 சதம் அப்போதே வரையப்பட்டுவிட்டது. மிகப்பெரிய வரைபடங்கள், ஒரு சுவர் அளவுக்கே பெரியவை வரையப்பட்டுள்ளன.

குறிப்பாக அராபிய வரைபடங்கள் மிகத் துல்லியமானவை.  அவற்றில் தேங்காய்பட்டினத்தையும் கன்யாகுமரியையும் தேடிப்பார்ப்பது பரவசமளித்தது. இக்காலகட்டத்தில் இந்தியர்களின் உலக வரைபட அறிவு என்பது அனேகமாக பூஜ்யம் என்பதை கருத்தில்கொள்ளவேண்டும். நம் வரைபடங்கள் அனைத்திலும் பரதகண்டம் என்பது ஒரு வட்டு போல மட்டுமே வரையப்பட்டுள்ளது. வெள்ளையர் வந்தபின்னரே நாம் உலக வரைபடத்தைப் பற்றிய அறிவை அடைந்தோம்.

அபுதாபியின் லூவர் ஓரிருநாட்கள் தொடர்ச்சியாகச் சென்று பார்க்கப்படவேண்டிய ஓர் இடம். நவீன ஓவியங்களின் தொகுப்பும் மிகச்சிறப்பானது. ஹெலெனியக் காலம் முதல் வரிசையாக ஐரோப்பிய ஓவியக்கலையின் வளர்ச்சியை கனவுபோல பார்த்துக்கொண்டு நடக்கமுடியும். சுழற்சி முறையில் லூவரில் இருந்து அசல் ஓவியங்கள் கொண்டு வந்து காட்சிக்கு வைக்கப்படுகின்றன. நாங்கள் செல்லும்போது லியனார்டோ டாவின்ஸியின் ஜான் த பாப்டிஸ்ட் ஓவியம் வைக்கப்பட்டிருந்தது.

டாவின்ஸியின் மோனாலிஸா ஓவியம்போலவே முக்கியமானது ஜான் ஓவியம். வழக்கமாக காட்டுமிராண்டிக் கோலத்தில் வரையப்படும் ஜான் இந்த ஓவியத்தில் இளமையாக, பெண்மைச் சாயலுடன் இருக்கிறார். பைபிளின்படி அவர் வெட்டுக்கிளிகளை உண்டு, தோலாடை அணிந்து வனாந்தரத்தில் அலைந்து கொண்டிருந்தவர். டாவின்ஸி ஏன் இப்படி வரைந்தார் என்பது மர்மம்தான். வரைந்து முடிக்கவுமில்லை என்று சொல்லப்படுகிறது.

ஜப்பானிய ஓவியர் ஹொகுசாய் வரைந்த பேரலை ஓவியம் இருந்தது. குளோட் மோனே உள்ளிட்ட நவ ஐரோப்பிய ஓவியர்களின் புகழ்பெற்ற ஓவியங்களின் அசல் வடிவங்கள் இருந்தன. கைதிருந்தா குகை மனிதன் செய்த கல்லம்புகளில் இருந்து பின்நவீனத்துவ ஓவியங்கள் வரை ஒரு நீண்ட பயணம். நினைவில் எவை நின்றிருக்குமென நினைக்கவேண்டாம். நினைவு நாமறியாத ஒரு பெருந்தொகை. அத்துடன் இவற்றைப் பார்க்கப்பார்க்க நாம் நம்மையறியாமலேயே செம்மைப்பட்டுக்கொண்டிருக்கிறோம். கூர்மையாகிக்கொண்டிருக்கிறோம்.

லூவர் தன் கிளையை அபுதாபியில் தொடங்கியபோது பிரான்ஸில் கடும் எதிர்ப்புகள் வந்தன. ஏனென்றால் அபுதாபி இஸ்லாமிய நாடு. அங்கே உருவங்களுக்கு எதிரான மதப்பிடிவாதம் இருக்கலாம், அருங்கலைப்பொருட்கள் அழிக்கப்படலாம் என பிரஞ்சு கலை ஆர்வலர் அஞ்சினர். ஆனால் இன்றைய அபுதாபி தன்னை உலகம் நோக்கித் திறக்க முயலும் ஒரு தேசம். அந்த உலகக் கலையிலக்கியப் பரப்பில் தனக்கான இடத்தை தேடிக்கண்டடைய துடிக்கும் கலாச்சாரம் ஒன்று அங்கே உருவாகி வருகிறது.

மாலை அபுதாபியின் புகழ்பெற்ற மசூதியான ஷேக் சையத் மசூதியை பார்க்கச் சென்றோம். 1994 முதல் 2007 வரை இந்த மாபெரும் மசூதியின் கட்டுமானப்பணிகள் நடைபெற்றன. 2007ல் இது திறக்கப்பட்டது. 950 அடி அகலமும் 1380 அடி நீளமும் கொண்ட கட்டிடம் இது. மசூதியின் சுற்றுப்புறம் முப்பது ஏக்கர் பரப்பளவு கொண்டது.

அபுதாபியின் மேனாள் அரசரும், ஐக்கிய அரபு அமீரக நிறுவனருமான ஷேக் சையத் அவர்களின் நினைவாக உருவாக்கப்பட்டது இந்த மசூதி. இங்கே அவருடைய அடக்கவிடம் 2004ல் உருவாக்கப்பட்டது. சிரிய கட்டிட வல்லுநர் யூசுப் அப்டெல்கே வடிவமைத்த கட்டிடம் இது.

(பிரான்ஸ் அழைக்கிறது- ஓவியம்)

இந்த மசூதியின் நிறம் பகலில் வெண்மை என்றும் இரவில் நீலம் என்றும் நினைவில் பதிகிறது. இஸ்லாமியப் பாணி வளைவுவாசல்களும் கும்மட்டங்களும் வெண்பளிங்குத் தூண்களும் சுவர்களும் கொண்டது. இங்குள்ள கண்ணாடித்தொங்கல் விளக்குகளும், கம்பளங்களும் உலகிலேயே மிகப்பெரியவை எனப்படுகின்றன. கண் நிறைக்கும் ஆடம்பரம் – அழகு எங்கே ஆடம்பரமாகிறது என எவராலும் சொல்லிவிடமுடியாது. அரியவை எல்லாம் ஆடம்பரங்களே.

ஜெயகாந்த் ராஜுவும் நானும் அருண்மொழியும் சைதன்யாவும் கல்பனா ஜெயகாந்தும் அந்த மாபெரும் இறைமாளிகையில் சுற்றிக்கொண்டிருந்தோம். பைசாண்டிய காலகட்டத்தின் பரோக் பாணி கலைதன் கண்ணாடி ஓவியங்கள் வழியாகக் கனவுகண்டதை இன்றைய தொழில்நுட்பம் வழியாக சென்றடைந்துவிட்ட ஓர் இடம் என அந்த மசூதியைச் சொல்லத் தோன்றியது.

கிரேக்கச் செவ்வியல் கலை என்பது கடலில் ஒரு கைப்பிடி அள்ளி அதில் கடலை காட்டமுயல்வது. பரோக் கலை என்பது கடலையே காட்டிவிட முயலும் எத்தனம். சிக்கல், ஊடுபாவு, செறிவு, நுணுக்கம், விரிவு, வண்ணப்பொலிவு அனைத்திலும் கூடுமானவரை உச்சம் தொட முயல்வது. அது ஒருவகை ஆடம்பரம், ஆணவம். ஆனால் இன்னொரு கோணத்தில் பார்த்தால் தன் ஆகச்சிறந்ததை உருவாக்கி இறைவன் முன் வைக்க மானுட உள்ளம் பொங்கி எழுவதன் வெளிப்பாடு அது

(மேலும்)

முந்தைய கட்டுரைஒயில் கும்மி
அடுத்த கட்டுரைநவகாளி யாத்திரை – நிவேதிதா