துபாய்- அபுதாபி சாலையில் காரில் செல்லும்போது நண்பர் ஜெயகாந்த் ராஜூ ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கியவரான அபுதாபியின் மேனாள் ஆட்சியாளர் ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டே இருந்தார்.
“ரெண்டு வார்த்தையிலே சொல்லலாம். அவர் எல்லா அர்த்தத்திலேயும் ஒரு பிரஜாபதி. பெருந்தந்தை. அவருக்கு பதினேழு பிள்ளைகள். தன்னுடைய குடும்பம், குலம், நாடு மட்டுமில்லாம அரபு உலகத்துக்கே அப்பா ஸ்தானத்திலே இருந்தார். அவரோட மனநிலை எப்பவுமே அணைச்சுப்போகிற அப்பாவோடதுதான். இன்னொரு வகையிலே அவரு ஒரு காந்தி. முரண்பாடுகளை எல்லாம் விட்டுக்குடுத்து, பேசி சரிசெய்றதைத்தான் வாழ்க்கை முழுக்க செஞ்சிட்டிருந்தார். வன்முறையே இல்லாத மனிதரா இருந்தார்”
எல்லா வெற்றிகளுக்கும், சாதனைகளுக்கும் பின்னால் அப்படி ஒரு ஒருங்கிணைவுப் பார்வை இருந்துகொண்டிருக்கும். அது அமெரிக்காவோ இந்தியாவோ அரேபியாவோ. முரண்பாடுகளை அல்லது கசப்புகளை உருவாக்குபவர்களால் மானுடரைத் தொகுக்க முடியாது. காலம் கடந்த பெரும் சாதனைகளை நிகழ்த்தவும் இயலாது. அவர்கள் அந்த எதிர்மறையுணர்வுகளை கொண்டாடும் சிறு குழுக்களின் முகங்களாகவே அறியப்படுவார்கள்.
இரு சொற்கள் வழியாக ஜெயகாந்த் ராஜு அறிமுகம் செய்த ஷேக் சையத் அவர்களின் முகத்தை படங்களில் பார்க்கையில் எல்லாம் ஒரு பரவசம் உருவாகிக்கொண்டே இருந்தது. அபு தாபியில் மட்டுமல்ல துபாயிலும் அவர் வெவ்வேறு வகையில் தென்பட்டுக்கொண்டே இருக்கிறார்.
ஷேக் சையத் அவர்கள் 1918ல் பிறந்தவர். 2004ல் மறைந்தார். அபு தாபியின் அரசகுலமான நஹ்யான் குடியில் அபுதாபியின் ஆட்சியாளர் ஷேக் சுல்தான் பின் கலிஃபா அல் நஹ்யான் அவர்களின் நான்கு மகன்களில் இளையவராகப் பிறந்தார். நஹ்யான் என்பது அபுதாபியின் தொன்மையான ஆளும் குடும்பம். அரபுலகின் முக்கியமான ஆறு அரசகுடிகளில் ஒன்று. பானி யாஸ் என்னும் பழங்குடித் தொகையைச் சேர்ந்தது.
சையத் அவர்கள் 1946ல் பிரிட்டிஷ் பொருளியல் மேலாண்மைக்குக் கீழ் இருந்த அபு தாபியின் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியாளராக இருந்தார்.1966 ல் அபு தாபியின் ஆட்சியாளரானார். 1971 ல் ஐக்கிய அரபு அமீரகம் உருவாவதற்கு வழிகோலியவர் அவரே. அதன் முதல் தலைவராக பதவி ஏற்றார். 2004ல் மறைவது வரை அப்பதவியில் இருந்தார்.
சையத் அவர்கள் ஆட்சிக்கு வந்தது ஒரு சிறு அரண்மனைப் புரட்சி வழியாக. அவருக்கு முன் ஆட்சியாளராக இருந்த அவருடைய தமையன் ஷேக் ஷக்புத் அவர்களை நீக்கி ஆட்சிக்கு வந்தார். ஷேக் ஷத்புத் பழையபாணி பாலைநிலத்துக் குடித்தலைவர் மட்டுமே. முறையான நவீனக் கல்வி அற்றவர். மாறி வரும் உலகப்பொருளியல் – அரசியல் சூழலை உள்வாங்க அவரால் இயலவில்லை. அரசு மக்கள்நலத்திட்டங்களிலும் தொழில்களிலும் முதலீடு செய்யவேண்டும் என்பதையே அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே சையத் அவர்களின் அன்னை அவர்களின் ஆலோசனைப்படி ஓர் அரண்மனை அதிகார மாற்றம் நிகழ்ந்தது. சையத் அபுதாபியின் அரசரானார்.
சையத் அவர்களும் முறையான கல்வி கொண்டவரல்ல. ஆனால் அரபு நிலத்தில் நவீன உலகை மிகச்சிறப்பாகப் புரிந்துகொண்டவர் அவர். அவர் ஆட்சிக்கு வந்த காலங்களில்தான் அரபு நிலமெங்கும் எண்ணை கண்டடையப்பட்டது. அதை பிரிட்டிஷார் மற்றும் அமெரிக்கர் உதவியுடன் எடுக்கவும், அச்செல்வத்தை புதிய ஓர் உலகின் அடித்தளமாக நிறுவவும் தேவையான தொலைநோக்கு ஷேக் அவர்களுக்கு இருந்தது.
அபுதாபி எண்ணைவளம் மிக்க நாடு. ஆனால் துபாய் உட்பட பிற அரபுநாடுகள் பலவும் அப்படி அல்ல. ஷேக் சையத் அவர்கள் தன் எண்ணைவளத்தை பிற அரபு நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள அவரே முன்வந்தார். அனைத்து அரபுச் சிறு நாடுகளுக்கும் நட்புக்கரம் நீட்டினார். அவர்களின் ஐயங்களை களைந்தார். செல்வம், நிலப்பரப்பு, மக்கள் தொகை ஆகியவை மிகுந்த அபுதாபி தங்களை விழுங்கிவிடும் என்று அஞ்சிய பிற அமீர்கள் ஒருங்கிணைவுக்கு எளிதில் ஒப்புக்கொள்ளவில்லை. இப்போதுகூட குவைத் போன்றவை தங்கள் எண்ணை வளத்த பகிர்ந்துகொள்ள அஞ்சி விலகி நின்றிருக்கின்றன.
1971ல் சையத் அவர்களின் அழைப்பை ஏற்று அபுதாபியுடன் அஜ்மன், துபாய், ஃபுஜைரா, ராஸ் அல் கைமா, ஷார்ஜா, உம்ம் அல் குவைன் ஆகிய நாடுகள் இணைந்து ஏழுநாடுகளின் கூட்டமைப்பான ஐக்கிய அரபு அமீரகம் உருவானது. அதன்பின் இன்று வரை தொடர்வளர்ச்சிதான். எண்ணைவளமற்ற அரபு நிலங்கள் கூட இந்த கூட்டமைப்பால் திகைக்கவைக்கும் வளர்ச்சியை அடைந்துள்ளன. அத்துடன் அமீரகம் ஒரு பெரிய நாடாக ஆனமையால் அதன் அரசியல் முக்கியத்துவமும் கூடியுள்ளது.
இப்போது முகமது பின் சையத் அல் நஹ்யான் அபுதாபியின் ஆட்சியாளராக உள்ளார். இவர் சையத் அவர்களின் மூன்றாவது மகன். சையத் அவர்களின் மறைவுக்குப் பின் அவர் மகன் ஷேக் கலிஃபா அவர்கள் பதவிக்கு வந்தார். புற்றுநோயால் அவர் மறைய முகமது பின் சையத் பதவிக்கு வந்துள்ளார்.
இன்றைய வளர்ச்சியைப் பார்க்கையில் அதிலென்ன வியப்பு என தோன்றலாம். எண்ணை வளம் வளர்ச்சியை உருவாக்குவதற்கென்ன என்று கேட்கலாம். நான் சொல்வது செல்வச்செழிப்பை, வாழ்க்கை வசதியை அல்ல. வாழ்க்கையின் தரத்தை. அது மக்களின் பண்பாட்டுத் தரத்தால் உருவாவது. சையத் அவர்களின் பல பொன்மொழிகளை பார்த்தேன். திரும்பத் திரும்ப கல்வி, தொழில்நுட்பம் ஆகியவற்றை வலியுறுத்துபவராகவே அவர் இருந்திருக்கிறார்.
ஐக்கிய அமீரகம் இன்று சையத் முன்வைத்த ஒருங்கிணைவு நோக்குள்ளதாக உள்ளது. பண்டைக்கால பாரசீகம், துருக்கி போல உலகநாகரீகம் , உலக அறிவு அனைத்தையும் தன்னுள் வரவழைத்து தொகுத்துக் கொள்ளும் விடாய் கொண்டதாக உள்ளது. தன்னுள் சுருங்கிக்கொள்ளாமல் முளைத்து வளரும் மரம் போல கணந்தோறும் கிளைவிரித்து விரிவதாக உள்ளது.
செப்டெம்பர் 24 அன்று அமீரகத்தில் ஓர் இலக்கியக் -கலைவிழாவை ஒருங்கிணைத்துள்ளதாக நாகர்கோயிலைச் சேர்ந்தவரான சான்யோ டாஃப்னி அழைத்தார். நானும் அருண்மொழியும் அக்டோபர் 1 அன்று அமெரிக்கா செல்கிறோம். ஆகவே சைதன்யாவுக்கு ஒரு பயணம் அமையட்டும் என அவளையும் சேர்த்துக்கொண்டேன். அமீரகம் செல்லும் செய்தி அறிந்ததும் நண்பர் ஜெயகாந்த் ராஜூ அழைத்தார். ஆகவே பயணத்தை 21 அன்று அதிகாலையில் இருந்து அமைத்துக் கொண்டோம். 20 நள்ளிரவு திருவனந்தபுரம் சென்று 21 அதிகாலை விமானத்தில் துபாய் சென்றோம்
விமான நிலையத்துக்கு சான்யோ டாஃப்னி, தேவா சுப்பையா, சங்கர் மாகாதேவன் ஆகியோர் வந்திருந்தார்கள். ஜெயகாந்த் ராஜூ அபுதாபியில் இருந்து வந்திருந்தார். சேர்ந்து காலையுணவை உண்டபின் அபுதாபியில் ஜெயகாந்த் ராஜூவியின் இல்லத்துக்குச் சென்றோம். ஜெயகாந்த் ராஜூவின் மனைவி கல்பனா ஜெயகாந்த் நல்ல கவிதைகள் எழுதுபவர். அவருடைய தொகுதி வெளியாகியுள்ளது. குறிப்பிடத்தக்க கவிதைகள் கொண்டது.
ஜெயகாந்த் ராஜூவின் வீட்டில் மதிய உணவு உண்டபின் அபுதாபியில் உருவாகி வரும் நவீன கலையிலக்கியத் துணைநகரம் ஒன்றைப் பார்க்கச் சென்றோம். அப்படியோர் எண்ணம் ஒரு மையக்கிழக்கு, அல்லது கிழக்காசிய நாட்டில் உருவாவதே விந்தைதான். சுற்றுலாப்பயணிகளுக்குரிய இடங்கள் ஒருபாதி என்றால் இன்னொரு பகுதி முழுக்க முழுக்க கலை- அறிவியல் – பண்பாடு சார்ந்தது. உலகவரலாற்றுச் சின்னங்கள் மற்றும் ஐரோப்பியக் கலையின் மிகச்சிறந்த பகுதி ஒன்றை அபுதாபியிலேயே காணமுடியும் என்பது பெருமிதமளிப்பது. இந்தியாவில் அப்படி ஒரு மனவிரிவும் அதற்கான செல்வமும் உருவாகும் நாள் ஒன்று அமையவேண்டும்.
(மேலும்)