காண்டேகரின் யயாதி – மணிமாறன்

அன்புள்ள ஜெ,

இப்போதுதான் வி.எஸ்.காண்டேகரின்யயாதிபடித்து முடித்தேன். கண்ணீரைப் பின் தொடர்தல் வழியாகவே நான்ஆரோக்ய நிகேதனம்“, “நீலகண்ட பறவையைத் தேடி“,
மண்ணும் மனிதரும்“, “பதேர் பாஞ்சாலி“, “பன்கர்வாடிபோன்ற அருமையான நாவல்களை கண்டடைந்தேன். அவ்வழியாகவே இப்போது யயாதியையும் சென்றடைந்தேன்.

நான் ஏற்கனவே மாமலரை படித்திருந்ததால், காண்டேகரின் யயாதியை படிக்கும் போது, தொடக்கத்தில் மட்டும் சிறிது தடுமாற்றம் ஏற்பட்டது. மாமலரின் யயாதியும் தேவயானியும் சர்மிஷ்டையும் கசனும் ஏற்கனவே என் மனதில் நிறைந்திருந்தார்கள்.

ஆனால் அந்த சிறு தடுமாற்றத்திற்கு பிறகு, காண்டேகர் அவர்கள் உருவாக்கிய இவ்வுலகினுள் முழுமையாகவே ஒன்றிவிட்டேன். அதற்கு பெரிதும் உதவியாக இருந்தது கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் மொழியாக்கம்.

வி.எஸ்.காண்டேகர் ஒரு ஆகூழன். எத்தனையோ பேராசான்களுக்கு கிடைக்காத கொடுப்பினை இவருக்கு கிடைத்திருக்கிறது. மொழிப்பெயர்பாளர்களால் கொத்து புரோட்டா போடப்பட்ட எத்தனையோ படைப்புகளை பார்த்திருக்கிறேன், ஆனால் கா.ஸ்ரீ்.ஸ்ரீ.யின் இந்த மொழியாக்கம் தெள்ளத்தெளிவான மொழிநடையை கொண்டிருக்கிறது. ஒரு மொழிபெயர்ப்பை படிக்கிறேன் என்ற எண்ணமே உருவாகவில்லை, அவ்வளவு அருமையாக இருந்தது.

யயாதியின் தாயார் ஒரு அரிய கதாபாத்திரம். மென்மையாக தோன்றி பயங்கரமாக உருமாறுகிறாள். தன் கணவன் சாவுப்படுக்கையில் கிடக்கையில் உள்ளங்கலங்கி இருப்பவள், அவன் இறந்த பிறகு மிக விரைவாக மீண்டெழுந்து, புதிய மிடுக்கையும் முழு விடுதலையையும் அடைந்து, தன்னைத்தானே வளர்த்தெடுக்கிறாள்.

அவள் அலகாவுக்கு கொடுத்த தண்டனையை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. என்னதான் மகன் வளர்ந்து பேரரசன் ஆனாலும் அவனுடைய சிண்டு இவள் கையில்தான் உள்ளது என்பதை யயாதியும் நானும் ஒரே நேரத்தில் உணர்ந்தோம்.

அதுமட்டுமல்லாமல் அரசிக்கு அலகா போன்ற சேடிப்பெண்கள் ஒரு பொருட்டே இல்லை என்பதை காண்டேகர் கூறிச்செல்லும் போது மன்னர் காலத்தில் எளியவர்களின் நிலை என்ன என்பதையும் உணர முடிந்தது.

காமம் தலைக்கேறி, கள்மயக்கில் யயாதி செய்யும் அட்டுழியங்கள் பெரும் அதிர்ச்சியை அளித்தன. தனக்காக உயிரை கொடுத்த நண்பனின் குடும்பத்தையே ஒற்றை ஆளாக சிதைக்கிறான். புருவின் அலகா கூட மயிரிழையில் தான் தப்பிக்கிறாள்.

தேவயானியின் மண்டக்கனம் பெரும் மன அழுத்தத்தை கொடுத்தது. சட்டென்று வெண்முரசின் குந்தி கண்முன் வந்துபோனாள்.

கண்ணீரைப் பின் தொடர்தலில் நீங்கள் குறிப்பிட்டது போல, பென்சிலால் அடிக்கோடு இடுவதற்கு ஏற்றாற் போல் பல பொன்மொழிகள் இருந்தன. சான்றாக

//இரவில் அவன் பழங்களைப் புசிக்கும்போது நான் அவனிடம் பேசிக் கொண்டிருப்பேன். அழகான இனிய பழத்தில் ஒரு நாள் புழு நெளிந்தது. அவனுடைய நகைமுகம் திடீரென்று மாறியது. மான் போல் பரந்தவையும், சிங்கம் போல் அச்சமற்றவையுமான கண்களை என் புறமாகத் திருப்பி, “இளவரசே, வாழ்க்கை இது தான். இது அழகியது, இனியது, ஆனால் இதில் எப்பொழுது எங்கிருந்து புழு வந்து நெளியும் என்பதைச் சொல்ல முடியாதுஎன்றான்.//

ஆக மொத்தத்தில், யயாதி நல்லதொரு நாவலை படித்த நிறைவை கொடுத்தது. நான் இப்போது பன்னாலால் பட்டேல் எழுதியமனோதிடம்“(வாழ்க்கை ஒரு நாடகம்) படிக்க போகிறேன்.

மணிமாறன்

முந்தைய கட்டுரைக. சீ. சிவகுமார், ஒரு நிகழ்வு
அடுத்த கட்டுரைபிரபந்தக் கல்வி, கடிதம்