இனிமைகள், கடிதங்கள்

சின்னஞ்சிறு இனிமைகள்

அன்புள்ள அண்ணா ,

இன்று சின்னஞ்சிறு இனிமைகள் சரியான நேரத்தில் தளத்தில் வந்தது. கணிப்பொறி வேலை அதுவும் வீட்டிலிருந்தே என்பது ஒரு விதமான இயந்திர வாழ்க்கைக்கு போய்விட்டது. வீட்டில் மிகப்பெரிய இனிமையாக மனைவியும் 20 மாத குழந்தையும் இருந்தாலும் வேலை மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஒருவிதமான மனசோர்வை அளிக்கறது.

Financial Independence, Retire Early (FIRE) எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக தொடவேண்டும் என்ற எண்ணம் அதிகமாக வருகிறது ஆனால் அது எந்த அளவு சாத்தியம் என தெரியவில்லை. (இப்படி சொல்லிகொண்டே  இருப்பவர்கள் ஒருபோதும் நடைமுறை படுத்தமாட்டார்கள் என்ற நினைப்பும் வருகிறது)

சின்னஞ்சிறு இனிமைகள்நீங்கள் இதை பலமுறை சொல்லியிருந்தாலும் இன்றைய மனசோர்வில் (வேலைபளு மற்றும் கீழ் முதுகு சவ்வு பிறழ்வு) இருக்கும்போது இதை படிப்பதே மனதிற்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது. முடிந்தவரை நானும் கடைபிடிக்க முயற்சி செய்கிறேன்.

என்னை காணவருபவர்களின் நடத்தையை கவனிப்பேன். நானே ஒருடெம்ப்ளேட்உருவாக்கியிருந்தேன். ஜகதி ஶ்ரீகுமார், நாகேஷ், கவுண்டமணி, சிவாஜி, நாகையா என பல நடிகர்களின்மாடல்கள்’. அப்படி கிட்டத்தட்ட எண்பது மாடல்கள் வைத்திருந்தேன். அவற்றில் அன்று வந்தவரை எங்கே சேர்க்கலாம் என ஆராய்ந்து அந்த அட்டவணையில் குறித்து வைப்பேன்.ஆகவே எப்போதுமே ஒரு மர்மச் சிரிப்புடன், கொண்டாட்டமாகவே இருப்பேன்.”

இது நாங்கள் கல்லூரி நாட்களில் நண்பர்களோடு செய்வது. நீங்கள் இன்னும் எவ்வளவு இளமையாக சிந்திக்கிறீர்கள் என்பதே வியப்பாக உள்ளது.

நீங்களும் அக்காவும் அடுத்த மாதம்  அமெரிக்கா வருவது மிகுந்த சந்தோசமாக உள்ளது அண்ணா.

சந்திக்க ஆவலுடன்

கோபி 

*

அன்புள்ள ஜெ

சின்னஞ்சிறு இனிமைகள் ஓர் அழகான கட்டுரை. நான் பலருக்கு அதை அனுப்பினேன். வாழ்க்கையின் முக்கியமான பாடம் அது. அதை தியானம், அகப்பயிற்சி என்றெல்லாம் சொல்லிக்கொள்ளவேண்டியதில்லை. ஆனால் அது ஒரு வகையான தியானமேதான். வாழ்க்கையில் நாம் எதை தினமும் எண்ணிக்கொள்கிறோமோ அதுவே பெருகுவதை காண்கிறோம். குறிப்பாகச் சமூகவலைத்தளம் என்பது மனச்சோர்வை அளிப்பதாகவே இருக்கிறது. காலையில் அதில் உலவினால் அந்த நாளே சோர்வாக ஆகிவிடுகிறது. மாலை என்றால் தூக்கம் வராமலாகிவிடுகிறது. அதை விட்டொழிப்பது பற்றி பேசிக்கொண்டே இருப்பவர்கள் யார் என்று பார்த்தால் எல்லாருமே சமூக வலைத்தள நட்சத்திரங்கள். அவர்களா விட முடியவில்லை. விட்டுவிட்டால் ஒரு பெரிய நிம்மதி உருவாகிறது. நான் சென்ற ஓராண்டாக வீட்டுக்குள் மரவேலைகள் செய்கிறேன். அருகே ஒரு ஆசாரியிடம் கற்றுக்கொண்டேன். எனக்கு தேவையான வேலைகளைச் செய்ய ஆரம்பித்தவன் இப்போது மற்றவர்களுக்கும் பல வேலைகளைச் செய்கிறேன். என் ஆபீஸ் வேலைக்கு மேலே இந்த வேலை ஒரு பெரிய இன்பமாக உள்ளது. இது அளிக்கும் விடுதலையைச் சொல்லிப்புரியவைக்கவே முடியாது.

வாசன்

முந்தைய கட்டுரைஅஞ்சலி – சை. பீர்முகமது
அடுத்த கட்டுரைகலைச்செல்வியின் ஆலகாலம் -வளநாடு சேசு