வணக்கம் சார்
நலம்தானே? இம்முறை யுவன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது. விருதுக்கு தகுதியானவர்கள் பட்டியலில் அவர் பெயருமுண்டு என்று ஊகித்ததுதான். எவ்வாண்டு என்பதுதான் விஷயம். தகுதியானவரின் தகுதி, தகுதியான விருதினால் மேலும் தகுதி பெறுவது நன்று.
“இளம் வயதிலிருந்தே கதை கேட்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு எனக்கு. அந்த ஆர்வம்தான் கதை சொல்லும் ஆசையாக உருமாறி இருக்கிறதோ என்னவோ” கவிஞர் யுவன் தன் சிறுகதைத்தொகுப்பொன்றின் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுவதை குறித்து வைத்துக் கொள்வோம்.
பொதுவாக மேலுள்ளம் புறவாழ்க்கையோடு எப்போதும் தொடர்பிலிருந்துக் கொண்டேயிருக்கும். கூடவே ஆழுள்ளம் அதுவாகவே இயங்கி கொண்டிருக்கும். இவ்விரண்டுக்குமான தொடர்புகளின் விகிதாச்சாரங்களே மனிதனின் குணாதிசயத்தை முடிவு செய்கிறது. ஆழுள்ளத்தின் சன்னமான குரல்களை அழுத்தமானதான ஆக்கும் வகைப்பாட்டுள் ஒன்றுதான் எழுதிப்பார்ப்பது. ஆகவேதான் எழுத்து எதை சொல்ல வேண்டும், எப்படி பிரதிபலிக்க வேண்டும் என்று வரையறைப்படுத்தப்படும்போது அதற்குள் எழுத்தாளரால் இயங்க முடிவதில்லை. வரையறைக்குட்படும்போது அது ஆற்றொழுக்கானதாக இருந்து விடவும் முடியாது. ஒரு கருவை எழுத்தாக்கும்போது ஆழுள்ளம் மேலெழும்புகிறது. சொல்லப்போனால் கதைக்கான கருக்களை ஆழுள்ளமே முடிவு செய்கிறது. புறநிகழ்வுகள் நினைவுகளாக படியும்போது, ஆழுள்ளம் நமக்கு விருப்பமானவற்றை ஒருபுறமாக அடுக்கி வைத்துக் கொள்கிறது. நிறைவேறாத இவ்விருப்பங்கள் சிலசமயம் உக்கிரமாகவும் வெளிப்படுவதுண்டு. போலவே மறுவினையற்றும் முடிந்து விடுவதுமுண்டு. அதேசமயம் அடக்கவியலாத ஆதங்கம் கனவுகளாக வெளிப்படவும் வாய்ப்புண்டு. ஆனால், கிருஷ்ணன் அவர்களுக்கு சட்.. யுவன் அவர்களுக்கு எழுத்தாக வெளிப்படுவதோடு நிறைவுக் கொள்ளாமல், கனவாகவும் அது தொடர்கிறது. அதையும் அவர் கதையாக்குகிறார்.
நிலவறைவாசி என்ற கதை என் மனதிற்கு நெருக்கமானது. அதில் அண்ணனுக்கும் தம்பி சங்கரனுக்கும் வருட இடைவெளிகள் அதிகம். அவனை வளர்க்க வேண்டிய பொறுப்பு அண்ணனிடம் வந்து சேர்கிறது. இம்மாதிரியான வாழ்க்கைசூழல்கள் கதை நிகழும் காலக்கட்டத்தில் சாதாரணம்தான். பொதுவாக கொழுந்தனை மகனாக பாவிக்கநேரும்போது சில விஷயங்களில் மனைவி, கணவனுக்கு எதையாவது மூட்டி விட்டுக் கொண்டிருப்பதும் சாதரணம்தான். அவளை எதிர்ப்பதிலும் தவிர்ப்பதிலுமாக கணவன் தனக்குதானே அட்ஜெஸ்ட் செய்துக் கொள்வான். அதாவது தம்பியை வளர்ப்பதில் தன்னை தியாகியாகவும் அதீத அன்புக் கொண்டவனாகவும் கற்பனை செய்துக் கொள்ளும் மனம், அவனே அறியாமல், பொறுப்பின் ஆதங்கத்தை மனைவியின் வசைகளின் அல்லது ஒவ்வாவையின் வழி தீர்த்தும் கொள்கிறது. இந்த இடைவெளிக்குள் கொழுந்தன் வளர்ந்து விடுவான். சூழ்நிலைகளின் காரணமாக சற்று நகர்ந்தும் விடுவான். கணவனும் மனைவியுமாக தாங்கள் அவனை வளர்த்த கதைகளை பேசிபேசி மாய்ந்து வயதான காலத்தை சுவாரஸ்யப்படுத்திக் கொள்வார்கள். நிலவறைவாசியில் அண்ணனுக்கும் தம்பிக்கும் பதினெட்டு வயது வித்தியாசம். தம்பியை வளர்க்கும் பொறுப்பு அண்ணனை பயமுறுத்துகிறது. தம்பிக்கும் இவனிடம் வளருவது சிரமம்தான். மனைவி எதிர்தரப்பினராக இல்லாமல், தம்பிக்கு வக்காலத்து வாங்குபவர். ஆக, பொறுப்பையும் சுமையையும் பேசி பேசி கரைத்து விட வாய்ப்பில்லை. திக்கற்றவர்க்கு கனவே துணை. கடமையுணர்வு பயமாக அழுத்த, மனைவியின் கூற்றிலுருக்கும் உண்மை குற்றவுணர்வாக தோன்ற, கனவு அதனை ஆற்றுப்படுத்துகிறது. கனவில், ஆழுள்ளம் தான் அடுக்கி வைத்தவைகளை கோர்த்துக் கொள்கிறது. அறை நண்பன் சிவகுருநாதனின் தியானம், கூடு விட்டு கூடு பாய்தல் போன்ற சிந்தனைகளுக்கு உட்பட்டோ எதிர்ப்பட்டோ நிற்கவில்லையெனினும், அடுத்த பிறவியில் தான் ஆந்தையாக பிறக்கவிருப்பதாக அவன் சொல்வதை ஆழுள்ளம் குறித்து வைத்துக் கொள்கிறது. அண்டைவீட்டு மாமி மீது எழும் மெல்லிய காமம் அதனுடன் கலந்துபோக, கனவு, சிவகுருநாதனையும் மாமியையும் தம்பதிகளாக்கி விடுகிறது. அந்த தம்பதிகளை கனவில் காணும்போது மாமியின் உடல் மீது கொள்ளும் காமஉணர்வு பொறாமையாக மாறுகிறது. யுவன் இணைக்கும் புள்ளிகள் வடிவமாக ஒன்று சேர்வதாலேயே நிலவறைவாசி மனதிற்கு நெருக்கமானதாக தோன்றியிருக்கலாம்.
தாயம்மாப்பாட்டியின் நாற்பத்தோரு கதைகள் என்றொரு கதை. வருடங்களால் நிறை வாழ்க்கை வாழும் 86 வயது மனுஷி தாயம்மா. தனக்கு கிடைத்த அனுபவங்களை, தான் கடந்த வந்த வாழ்க்கையை, பதார்த்தத்தின் சுவையை உமிழ்நீருடன் உணர்ந்து கன்னக்குறட்டில் அடக்கிக் கொள்வது போல ஆழுள்ளத்தில் அடக்கிய அனுபவங்களை நாற்பத்தோரு கதைகளாக்கி பேரனுக்கு சொல்கிறாள். அதன்வழியே வாழ்க்கைச்சித்திரம் விரிந்தெழுகிறது. அதிர்வுகளற்ற சாதாரண வாழ்க்கைதான். அது கூட நினைத்துப் பார்க்கும்போது சமுத்திரத்தின் அலைகளை போல பேரோசை கொண்டதாக மாறுகிறது. மதம், சாதி, சமூகம், குடும்பம் என எல்லாவற்றிலிருந்து துண்டித்துக் கொண்டு மிஞ்சும் தனிமனிதர்கள் ஒவ்வொருவருமே சமுத்திரம்தான்போல. அக்கதைகளுள் ஒன்றில், அறுவடையை மேற்பார்வை பார்க்க வயக்காட்டுக்கு போகும் கணவருடன் தாயம்மாவும் செல்கிறாள்.
“கிணற்றடி மேடையில் உட்கார்ந்து எதையாவது படிச்சிக்கிட்டிருப்பேன். ஒரு தடவை ஏ.வி.ராமைய்யா எழுதின புஸ்தகம் ஒண்ணு. அதுல வத்தலக்குண்டு அப்டியே தத்ரூபமா வர்றது. ஒரு ஷணம் குழப்பமாயிடுத்து எனக்கு. நா இருக்கறது நெஜத்தோப்புலயா, ராமய்யா எழுதின தோப்பிலயா..”
இதேபோல நிசமா கனவா என்று குழப்பிக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் நமக்கும் வாய்த்துக் கொண்டேதானிருக்கிறது. ஒன்றுக்கொன்று நெருக்கமாக, ஒன்றோடொன்று பிணைந்துக் கொண்டு பிரிக்கவியலாத கனவுகளின் முடிச்சுதான் வாழ்க்கை. அல்லது வாழ்க்கையின் முடிச்சுதான் கனவு.
கனவுகளை போலவே, மனப்பிறழ்வுகளும் யுவனின் கதையில் இயல்பாக கையாளப்படுகிறது. ஒளிவிலகல் அப்படியான ஒரு கதை. அதில் மனப்பிறழ்வு கொண்ட ஒருவனை அவனது மனைவி மனநல மருத்துவரிடம் அழைத்து வருகிறாள். இதுவும் கனவு சம்பந்தப்பட்டதுதான். அதுவும் தொடரும் போடப்பட்ட தொடர்கதைகள் போல விட்ட இடத்திலிருந்து தொடரும் கனவுகள். ராகவன் என்ற தன் பெயரே தன்னுடைய பெயரல்ல என்று நம்புமளவுக்கு கதாபாத்திரங்களால் கனவு நிரம்பி வழிகிறது. அந்த கனவுகளில் ஒன்றில் இவர் சுயம்வரத்துக்கு போகிறார். மருத்துவர் இதை ஏன் உன் மனைவியிடம் சொல்லக் கூடாது..? என்று கேட்க “எந்த பெண்ணாவது தன் கணவன் வேறு ஒரு பெண்ணை மணம் புரிந்துக் கொள்வதை ஏற்றுக் கொள்வாளா கூறுங்கள்..? என்கிறார். அதாவது மருத்துவரிடம் தன்னையுமறியாமல் ஒப்புக் கொடுக்கிறார். கனவுக்கும் சன்னதத்துக்கும் இடைப்பட்ட வெளி. காணுதலுக்கும் உணர்தலுக்குமான விலகல் அது. நான் சுயநினைவோடு இருக்கிறேன் என்று எண்ணுவது கூட சில சமயங்களில் பிரேமையாக இருக்குமோ என்று எண்ண வைத்து விடுகிறது.
“நச்சுப்பொய்கை”யில் தனக்குள் மீதுாறும் பெண்தன்மை கேலியாக்கப்படுவதற்காக வருந்திய மச்சக்காளை தற்கொலை செய்ய புறப்படுகிறான். வயிறார உண்டு புதுச்சட்டை அணிந்து, சைக்கிளை சுத்தபத்தமாக துடைத்து பெடலை மிதித்துக் கொண்டு தற்கொலைக்கு கிளம்புகிறான். வழியோரம் மரத்தடியில் கட்டப்பட்டிருந்த காராம்பசுவுக்கு குழை ஒடித்து போடுகிறான். கடுமையான வெயில் வேறு. தற்கொலைக்கு போகும் வழியில் சற்று ஓய்வெடுக்கலாம் என்று தோன்ற குங்கிலியச் சாமியார் மடத்துக்குள் நுழைகிறான். அங்கிருக்கும் சாமியாரிடம் தன் குறையை கூறி அழ, அவரோ “நீ ஒன்றும் சொல்லாதே. சொல்ல சொல்ல துக்கம் கூடத்தான் செய்யும்” என்று கூறி விட்டு தன் கதையை கூறுகிறார். வசதியான குடும்பத்தை சேர்ந்த அவர், தங்கையை பிரிட்டிஷ் அதிகாரி ஒருவரிடம் அனுப்ப வேண்டிய நிர்பந்தத்தை தாளமுடியாமல் வீட்டை விட்டு கிளம்பியவர். வழியில் ஒரு பரதேசியை கண்டுக் கொள்ள, பரதேசி தன் கதையை கூறுகிறார். காசிக்கு சென்று திரும்பும்போது ரயிலில் சந்திக்கும் தொழுநோயாளிகள் கூட்டம் தன்னை அருவறுக்க வைத்ததாகவும், அங்கு தொழுநோயாளி பெண்ணொருத்தியின் மார்பிலிருந்து சுரக்கும் அமிர்தம் மற்றோரு ஜீவனுக்கு உயிருட்டிக் கொண்டிருந்ததை ஒருவன் சுட்டிக் காட்டியதாகவும் அவன் மணிக்கட்டு வரை மட்டுமே கைகளை கொண்டிருந்தாகவும் கூறுகிறார். அவனுடன் ஒரு பெண்ணுமிருக்கிறாள். தன்னை அவர்களின் சீடராக ஏற்றுக் கொள்ளுமாறு கோருகிறார்.
கைகளற்ற அந்த மனிதர், சிறுவயதிலிருந்து வளர்த்தெடுத்த அண்ணியின் மீது இச்சை கொண்ட கதையை கூறுகிறார்.
“நான் உன் தாயில்லையா ராமதாசா?” என்று அண்ணியின் கேள்வியில் வெகுண்டு, தன் கைகளை தானே அறுத்துக் கொள்கிறார். அவருடனிருக்கும் பெண்ணுக்கும் ஒரு கதையுண்டு. நிர்கதியான தருணமொன்றில் கைகளற்றவன் அவளுக்கு அடைக்கலம் கொடுக்கிறான்.
அவ்விருவரின் வீட்டில் இரவு படுத்துறங்க ஒருவன் வருகிறான். அவன் தனது மனைவியின் உடல் சார்ந்த தவிப்பையும் தேடலையும் கூறி வருந்துகிறான். பதற்றம் கொண்டவனாக அலையும் அவன் ஷெனாய் வாத்தியத்தின் இசையில் கட்டுண்டு போகிறான்.
“மனித குலத்தின் துக்கமனைத்தும் அவருடைய பத்து விரல்களில் புகுந்து ஒரு முழ நீளமேயிருந்த ஊதுகுழலுக்குள் பாய்ந்து குழலின் புனல்வாய்வழி சொட்டி ஆவியாவதை உணர்ந்தேன். எனக்கென்று பிரத்யேக துக்கம் ஏதும் கிடையாது.. யாருடைய துக்கமுமே அவர்களுடையது அன்று..” என்று தோன்றுகிறது அவனுக்கு.
அந்த முஸ்லிம் மேதை அயானலிகானை தனிமையில் சந்திக்கச் விழைகிறான். அவருக்கும் ஒரு கதையுண்டு. அது வேறு கதை. கிருஷ்ணரின் கதை. அவரின் அறைக்கு சென்று சந்திக்கும்போது அவர் யார் தம்பி நீ? என்கிறார். அவரிடன் அத்தனையும் கொட்டி விடலாம் என்று தோன்றுகிறது அவனுக்கு. அதே நேரம் சற்றுமுன்தானே எனக்கென்று துக்கம் ஏதுமில்லை என்று கண்டுப்பிடித்தேன் என்றும் நினைத்துக் கொள்கிறான். அவருடன் உடனிருக்கும் சரபேஸ்வரர் கோவில் பட்டர் மாயக்குளத்தில் மூழ்கிப் போன இளவல்களை மீட்கும் அனைவரும் அறிந்த தர்மனின் கதையை கூறுகிறார்.
/தர்மன் தான் விரும்பிய வரத்தைக் கேட்ட சப்த அதிர்வில்,அதுவரை நஞ்சாய் இருந்த பொய்கையின் நீர் குடிதண்ணீராய் மாறியதல்லவா? அந்த மந்திரக் கணம் அப்போதைய கணம் மட்டும்தானா இல்லை கடந்து போகும் எல்லாக் கணங்களுமே மந்திர கணங்கள்தானா?/ என்று கதை முடியும்.
தத்ரூபமான கலைஞர்தான் யுவன். அவரின் அசரடிக்கும் படைப்பு இது. எது வலிமையற்றதோ, பலவீனமானதோ, சாத்தியங்களற்றதோ அதிலிருந்து சாத்தியங்கள் கிளைக்கின்றன. அவை சாதாரண தருணங்களை மந்திரக்கணங்களாக்குகின்றன.
யுவனின் கதைகள் சில சமயம் கதைகளா அல்லது சம்பவங்களா, அல்லது சம்பவங்களை ஒன்றுக்குள் ஒன்றுக்குள் ஒன்றாக இட்டுக் கொண்டே செல்லும் உத்தியா..? அல்லது இயல்பாகவே அவ்வாறுதான் தோன்றுகிறதா..? என்றெல்லாம் எண்ண வைப்பதும் உண்டுதான். ஆனால் யுவனின் புனைவுத் தர்க்கங்கள், உண்மை என்ற ஒன்றை கரைத்து ஒன்றுமற்ற வெளியாக நிறைந்து விடுகின்றன. கதைகளுக்கு அவர் நேரிடையாக பெயர் போடுவது கூட உண்மை என்ற ஒன்று ஸ்திரத்தோடு இருக்கவே இயலாது என்பதன் குறியீடு போலவே தோன்றுகிறது.
கடல் கொண்ட நிலம் என்றொரு கதை. அதில் வரும் தொண்டுநகர் என்ற ஊர் மதுரையின் பூர்விக பகுதிகளில் ஒன்று. ஆங்கிலேயர் காலத்தில் அதன் பெயர் குறவன்சாவடி, சுதந்திரத்தையொட்டிய ஆண்டுகளில் பண்டிதபுரம் என்றழைக்கப்பட்டிருக்கிறது. ஒரே பகுதி மூன்று பெயர்களுக்கு மாறியதை பின்னணியாகக் கொண்டு கதை நகர்த்தப்படுகிறது. பெயர் மாற்றத்திற்கான காரணங்களை ஆராய முற்படும்போது சந்தர்ப்பங்கள் எதேச்சையாக அமைந்துக் கொண்டே போவது சற்று நெருடலாக தோன்றினாலும் அது முக்கியமான கதைதான். ஒரே சம்பவம் அங்கு வாழ்ந்த உறுமிக்கலைஞரின் வார்த்தைகளிலும், ஓய்வுப் பெற்ற காவலதிகாரியின் பேச்சிலும் வெவ்வேறு விதமாக வெளியாகிறது. “ராஜாங்கத்துக்கு எதிரா சதி பண்ணுனாங்கன்னு நாப்பதுகள்ல ஒரு பீப்பிக்காரனையும் கூத்தாடியையும் போலிஸ் கொன்னுடுச்சு.” என்கிறார் அந்த அதிகாரி. அப்படியானால் எழுத்தாளர்களையெல்லாம் பிறகான காலங்களில் பைத்தியக்காரக்கூட்டம் என்று கூறுவார்களோ…?
வெளியேற்றம் சிறுகதையில் காதலியை விபத்தில் பலிக் கொடுத்து விடுகிறான் ஒருவன். தொடர்ந்து கிணற்றில் விழுந்துக் கிடக்கும் யாரோவொரு பிணம். தொடர்ந்த இரண்டு மரணங்களை எதிர்க்கொள்ளவியலாது எங்கோ கிளம்புகிறான். புகைவண்டியில் பயணத்தில், புரட்சிக்கார இளைஞன் ஒருவனை அவன் மனைவியின் கண்ணெதிரில் போலிஸ் அழைத்துக் கொண்டு போகிறது. பெரியவர் ஒருவர் தனது அனுபவங்களை கூறிக் கொண்டு வருகிறார். அனுபவத்துக்குள் அனுபவமாக, கேரளத்தில் அவரும் அவர் நண்பரும் மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு செல்லும் வழியில் யானையின் தாக்குதலிலிருந்து தப்பிப் பிழைத்த சம்பவத்தை விவரிக்கிறார். அந்த நண்பர் அரசியல் கட்சி ஒன்றுக்கு நன்கொடை அளிக்காத காரணத்தால் பிறகு கொல்லப்பட்டு விட்டாராம். யானையிடமிருந்து தப்பி பிழைத்து சகஜமான பிறகு, “அந்த துர்கணத்தில் நீ எங்கே ஓடிப்போய் விட்டாய்..,?” என்று தன் நண்பனை அவர் வினவியதாகவும், அவர் மரணத்துக்கு முன் நட்பாவது ஒன்றாவது என்று விழுந்து விழுந்து சிரித்ததாகவும் அந்த பெரியவர் கூறுகிறார். அந்த பெரியவரின் கையிலிருந்து நழுவிய புத்தகத்திலிருக்கும் பத்து வரி கதைகளில் இளஞ்சீடரொருவர், மற்றொரு சீடரிடம் கொண்ட மனவிலகல் காரணமாக வெளியேறவிருப்பதாக குருவிடம் தெரிவிக்கிறான். குருவோ,”குருகுலத்தை விட்டு வெளியேறி எங்கே போவாய்? எல்லா இடமும் குருகுலம் என்பதை உணரவில்லையா நீ? என்கிறார். அவன் பயணத்தை ரத்து செய்து விடுவதாக கதை முடிகிறது.
அனுபவித்த தருணங்களும், அனுபவிக்க வாய்ப்பற்ற தருணங்களுமாக கருப்பும் வெளுப்பும் கலந்த கிரே வண்ணத்தால் அவரின் கதைகள் நிறைகின்றன. எழுத்தாளராக இருப்பதால் ஊருலகத்தில் பெரிய மதிப்பெல்லாம் இல்லை என்றாலும் எழுத்தாளர் எழுத்தாளராகவே இருப்பதற்கு இப்படியாக வாழ்ந்து விடும் தருணங்களின் சுவைகளுக்குள் சிக்கிக் கொள்வதுதான் என்று தோன்றுகிறது. அதனால்தான் யுவன் போகிறபோக்கில் சொல்வதுபோல கதைகளை சொல்லிக் கொண்டேயிருக்கிறார். கவிஞரின் பரிணமாக வளர்ச்சி அல்ல எழுத்தாளர் என்பது. கவிஞரின் சாயல்கள் உரைநடையில் தென்படுவதில்லை. சம்பிரதாயமான அறிமுகங்கள் என்றெல்லாம் ஏதுமில்லை. ஒரே இழையை அடுத்தடுத்த கதைக்குள் கோர்த்து கொண்டே போவதுதான் இந்த கதைச்சொல்லியின் வழி என்கிறார்.
என்னுடைய கதையொன்றை வாசித்த ஒரு நண்பர் அதில் வரும் பாத்திரமொன்றுடன் என்னை சம்பந்தப்படுத்தி பேசிக் கொண்டே செல்ல, நீ என்னை முடிவு செய்யாதே என்பது போன்ற எரிச்சல் ஏற்பட்டது என் நினைவுக்கு வருகிறது. ஆனால், எழுத்தாளர் ஒருவரின் ஒட்டுமொத்த தொகுப்பை வாசித்து நிமிரும்போது, அதிலிருந்தே அவரை உருவாக்கிக் கொள்ள முடிகிறதுதான். இதிலும் யுவன் உருவாகிறார். கிருஷ்ணனாக, அதிலும் வசுதேவரை தேடும் கிருஷ்ணனாக.
நச்சுப்பொய்கையில் வரும் அந்த ஷெனாய் வாத்தியகாரர் அயானலிகான் “எனக்கு ஆறு பையன் என்று சொன்னேனல்லவா.. அது தவறு. எனக்கு ஏழு பையன்கள். எழுபத்தைந்து வருடங்களாக அவனுக்காகதான் தினம் தவறாமல் அதிகாலையில் சாதகம் செய்கிறேன். ஜனங்களின் முன் கச்சேரி செய்கிறேன். அவன் பாலகிருஷ்ணன். சுருதியின் அமைதிக்குள் என் மனம் தஞ்சம் புகுந்ததுதும் அவன் வந்து என்னெதிரில் சம்மணமிட்டு அமர்ந்துக் கொள்வான். ஆயர்ப்பாடியில் குழந்தை அலைகிறானே என்று விசனப்பட்டு என்னோடயே இருந்து விடேன் என்றால் கேட்க மாட்டான்.. நீ சுருதி கூட்டு வருகிறேன் என்று சொல்லி விடுவான்” என்பார்.
வசுதேவரும் கிருஷ்ணனை தேடிக் கொண்டுதானிருப்பார் என்பதை யுவன் உணர்ந்திருக்கிறார்.
அவருக்கு என் வாழ்த்துகள்.