குரு என்னும் உறவு

திரு ஜெயமோகன் அவர்களுக்கு ,

வணக்கம். நன்றி மற்றும்  வாழ்த்துக்கள் நல்ல ஒரு படத்தை  தந்தமைக்கு . இது நான் கடவுள் படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் அகோரிகளை பற்றி தெளிந்திட ஒரு வினா. ருத்ரன் என்ற அகோரி   குரு என்ற உறவுக்கு ஆட்பட்டவனாய் இருப்பது எல்லா உறவும்  துறக்க வேண்டி வாழ்பவன் என்பதற்கு முரணாக இருக்கின்றது. சற்று தெளிவு படுத்த வேண்டுகிறேன்.

நன்றி,
நரேந்திர பிரபு.

அன்புள்ள நரேந்திரன்,

உங்கள் கேள்வி இயல்பானது. ஆனால் நாம் நம்முடைய அடிபப்டையான ஆன்மீக மரபைப்பற்றி எந்த அளவுக்குப் புரிதலில்லாமல் இருக்கிறோம் என்பதற்கான சான்று அது. நம்முடைய கல்விமுறை, நம்முடைய பொதுவான ஊடகச்சூழல் போன்றவை எல்லாம் இதற்குக் காரணம். 

முதலில் இந்த விஷயத்தைப்பற்றி நீங்கள் சில அடிப்படை வினாக்களை கேட்டுக்கொள்ள வேண்டும். ஏன் உறவுகளை அறுக்கச் சொல்கிறார்கள்? ஏன் உலக வாழ்வைத் துறக்கச் சொல்கிறார்கள்? அதன்மூலம் அவர்கள் அடைவது என்ன?

கு.அழகிரிசாமி எழுதிய ஒரு கதை ‘காலகண்டி’. அதில் அரிச்சந்திர நாடகம் மேடையில் நடக்கிறது. சந்திரமதியை அவள் எஜமானி காலகண்டி கொடுமைப்படுத்துகிறாள். அந்தக்கொடுமைகளை அக்கால நாடகங்களில் கொஞ்சம் நீளமாகவே காட்டுவார்கள். ஊரில் உள்ள மாமியார்க் கொடுமைகளின் சாயல் அதில் இருப்பதனால் பெண்கள் அதில் தங்கள் வாழ்க்கையை அடையாளம் கண்டு கண்ணீர் விடுவார்கள்.

காலகண்டியின் கொடுமைகளைக் கண்டு பார்வையாளர்களான பெண்கள் கொந்தளிக்கிறார்கள். மணை வாரித் தூற்றி சாபம் போடுகிறார்கள். ஒரு கிழவி மட்டும் காலகண்டியை நியாயப்படுத்திப் பேசுகிறாள்.  முதலில் பெண்களுக்கு ஆச்சரியம். பிறகு கோபம். அவர்கள் கிழவியை தூக்கிப்போட்டு மிதிக்கப்போகிறார்கள். கதைசொல்லும் ஆள் அதிலிருந்து கிழவியை காப்பாற்றுகிறார். அதன் பின் ஏன் அப்படிச் சொன்னாய் என்று கேட்கிறார். ”காலகண்டி வேடம் போட்டிருப்பது என் மகன் சாமி ” என்று கிழவி பரிதாபகரமாகச் சொல்கிறாள்.

இதுதான் சிக்கல். ஒரு நாடகத்தைப் பார்க்கும்போதேகூட அதில் நமக்கு ஒரு உணர்ச்சிகரமான பங்கு இருக்கும்போது நம்மால் அதன் உண்மையைப் பார்க்க முடிவதில்லை. இந்த வாழ்க்கை நாடகத்தை அதில் பங்குகொண்டபடி நாம் எப்படி சமநிலையில் நின்று பார்க்கமுடியும்? நாம் இந்த வாழ்க்கையில் பங்கு கொள்ளும்வரை நம்மால் அந்த பங்கைச்சார்ந்து மட்டுமே ஒவ்வொன்றையும் பார்க்க முடியும்.

சுயநலம் சார்ந்து, குடும்பம் சார்ந்து, சாதி சார்ந்து, மதம் சார்ந்து, மொழி சார்ந்து, தேசம் சார்ந்து நம் பார்வைகளை வடிவமைக்கிறோம். ‘நான் இன்ன ஆள்’ என்ற அடையாளம்தான் நம் சிந்தனைகளை உருவாக்குகிறது. அந்த அடையாளத்தை வைத்துக் கொண்டு நாம் எப்படி வாழ்க்கையின் சாராம்சத்தை, பிரபஞ்சத்தை அறிய முடியும். 

வாழ்க்கையில் நாம் பற்றுகொண்டு அதில் ஈடுபடும்போது காமம் [விருப்பு] குரோதம் [வெறுப்பு] மோகம் [ அடையும் ஆசை] ஆகியவற்றை அடைகிறோம். அந்த உணர்ச்சிகளை ஒட்டி மட்டுமே நாம் உலகைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சொல்லப்போனால் நாம் உலகத்தை பார்ப்பதே இல்லை. எங்கும் நம்முடைய காமகுரோத மோகங்களை மட்டுமே உலகநிகழ்வாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
 
ஆகவேதான் மெய்மைக்கான தேடலை நிகழ்த்துபவர்களுக்கு துறவு ஒரு வழிமுறையாக முன்வைக்கப்பட்டது. எந்த அளவுக்கு துறக்கிறோமோ அந்த அளவுக்கு நம் சிந்தனைகள் சுதந்திரமாக ஆகின்றன என்பதை நாமே காணலாம். சாதாரணமாகவே குடும்பம் உள்ள ஒருவரை விட குடும்பம் இல்லாதவரின் பார்வை இன்னும் சுயநலமற்றதாக இருக்கிறது. எதிர்காலம் பற்றிய கவலை இல்லாதவருடைய பார்வை எதிர்காலத்தை எண்ணி அஞ்சிக்கொண்டிருப்பவர்களின் பார்வையை விட சுதந்திரமானது

வசதிகளையும் அதிகாரங்களையும் குடும்பவாழ்க்கையையும் துறந்த காந்தியவாதிகளும் கம்யூனிஸ்டுகளும் அந்த அளவுக்கு சுதந்திர நோக்கும் நடுநிலைமையும் கொள்கைகளில் அர்ப்பணிப்பும் கொண்டவர்களாக ஆகியிருப்பதை நாமே கண்டு கொண்டிருக்கிறோம். சமண, பௌத்த, கிறிஸ்தவ மதங்களிலும் இதனாலேயே துறவு பெரும் முக்கியத்துவம் பெற்றது.

துறவு என்பது முதலில் குடும்ப உறவுகளைத் துறப்பதில் தொடங்குகிறது. பிறருக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்தும் சுமைகளில் இருந்து விடுபட்டுக்கொள்வது. உறவினரைப் பொறுத்தவரை தன்னை இறந்தவனாக அறிவித்துக்கொள்வது. துறவு பூணும்போது செத்தவர்களுக்கான எள்ளும் தண்ணீரும் இறைத்து முறைப்படி இறுதிச்சடங்குகளைச் செய்வதும் உண்டு. அதன் பின் உலகியல்சார்ந்த இன்பங்களைத் துறப்பது. உலகியல் நோக்கங்கள் இலக்குகள் ஆகியவற்றை துறப்பது. …அது ஒரு  நீண்ட பயணம்.

துறப்பது  உலகியலை. ஏன் என்றால் உலகியல் பற்று காமகுரோத மோகத்தை உருவாக்கி  நம் பார்வையில் களிம்பாக படரும் என்பதனால். ஆனால் குரு உலகியல் உறவல்ல. ஒருவன் தேடிக்கொள்ளும் ஞானகுரு அவனை உலகியலை துறந்து பரமார்த்திகப் பாதையில் இட்டுச்செல்லக்கூடியவர். அவர் ஏற்கனவே உலகியலைத் துறந்து மெய்மையைக் கண்டவர். அவருடன் சீடனுக்கு உள்ள உறவு காமகுரோத மோகங்களை உண்டுபண்ணும் உலகியல் உறவல்ல.

கொஞ்சம் சிந்தித்தாலே புரியக்கூடிய சாதாரண விஷயம்தான் இது. எளிய இந்தியர்கள் எவருமே நம் சித்தர்களையோ ஞானிகளையோ சூ·பிகளையோ நோக்கி இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க மாட்டார்கள். இது ஒருவர் எதையும் உருப்படியாக தெரிந்துகொள்ளாமல், அதற்கான அக்கறையோ கவனமோ இல்லாமல்,தன்னை  நுண்ணிய சிந்தனையாளர் என்று எண்ணிக்கொள்ளும்போது எழும் ஐயம் மட்டுமே.  ஒருவகை அசட்டுத்தனம், அவ்வளவுதான். இன்னும் பட்டவர்த்தனமாகச் சொல்லப்போனால் ஞானத்தேடல் கொண்டவன்  குமுதம்விகடன் படிப்பதை தவிர்ப்பது நல்லது என்னும்போது ஏன் பகவத் கீதையும் புத்தகம்தானே என்று கேட்கும் விதண்டாவாதம்.

ஏன் குரு தேவை என்று கேட்கலாம். சிந்தனைகளை நூல்கள் அளிக்கும். சிந்திப்பதை ஒரு மனிதர்தான் கற்றுத்தர முடியும். ஞானம் கொண்ட ஒரு மனிதர் கண்முன் நிற்கும் ஞானமேதான். அவர் சொல்வது ம்ட்டுமல்ல அவருடன் இருப்பதே கூட கல்விதான். இலக்கியம், இசை, ஓவியம் போன்றவற்றில்கூட குரு என்னும் இடம் இன்றியமையாதது என்பதைச் சாதாரணமாகக் காணலாம். சுயமாக கற்றுக்கொள்ள முடியாத நுண்மை ஒன்று மெய்ஞானத்தில் உள்ளது, குரு மட்டுமே அங்கே கொண்டு செல்ல முடியும். ஒரு குரு நம்மை அறிந்தவர். நம் எல்லைக¨ளையும் சாத்தியங்களையும் உணர்ந்து நம்மை இட்டுச்செல்லக்கூடியவர்.

இம்மாதிரி விவாதங்களின் ஈடுபடுவதற்கு முன்பு நம் மரபில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை புரட்டிப்பார்க்க வேண்டும். மேலைநாட்டை எதற்கெடுத்தாலும் உதாரணம் காட்டுபவர்கள் அங்கே இத்தகைய ஒரு கேள்வியை ஒருவன் சாக்ரடீஸ் அல்லது பிளேட்டோ என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்காமல் எழுப்பிக்கொண்டால் அவனை எந்த அளவுக்கு மதிப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அடிப்படைக் கல்வி கொண்ட ஒருவனுக்கே சிந்திப்பதற்கான குறைந்தபட்ச தகுதி உள்ளது.

தமிழில் சிந்திக்க ஆரம்பிக்கும் ஒருவன் குறைந்தபட்சம் குறளையாவது படித்துப்பார்க்க வேண்டும். துறவு என்ற  தலைப்பில் பத்து குறள்களை எழுதியிருக்கிறார் வள்ளுவர். கடைசிக்குறள் இது

பற்றுக பற்றற்றான் பற்றை அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு

”பற்றை விடவேண்டுமென்றால் பற்றறவவன் மீதான பற்றை பற்றிக்கொள்ளுக” என்று வள்ளுவர் சொல்கிறார். இங்கே பற்றற்றான் என்ற சொல்லுக்கு இறைவன் என்றே பரிமேலழகர் போன்றோர் உரை கூறுகின்றனர். ஆனால் பற்றறுத்த ஞானாசிரியன் என்ற பொருளும் பொருந்துவதே. பற்றற்றவனை பற்றுதல் என்பது பற்றறுக்கும் வழியேதான் என்பதற்கு மேல் உங்கள் கேள்விக்கு ஓர் ஆணித்தரமான பதில் தேவையா என்ன?

ஆனால் ஆன்மீகப் பயணத்தின் இறுதிப்படிகளில் குரு நம்மை விட்டுவிடுவார். நடக்க ஆரம்பித்த குழந்தையை அம்மா விட்டுவிடுவதுபோல. அதன் பின் சீடன் அவனது மெய்ஞானத்தையும் மீட்பையும் அவனே கண்டடைய வேண்டியதுதான். அந்தப்பயணம் முற்றிலும் தனியானது. அங்கே குரு என்றல்ல இறைவனும்கூட இல்லை.
*
உங்கள் கேள்விக்கு சற்றே கடுமையான முறையில் பதில் சொல்லியிருக்கிறேன். அது என் சினத்தால் அல்ல. அந்தக் கடுமையின் மூலமே இப்போது நீங்கள் இருக்கும் ஒரு அபாயகரமான சகதியை உங்களுக்குச் சுட்டிக்காட்ட முடியும் என்பதனால்தான்.

சிந்தனை என்பது ஒருவனின் தலைக்குள் சும்மா ஊறிக்கோண்டிருக்கும் ஒன்று அல்ல. எல்லா அடிப்படைக் கேள்விகளும் தொன்மையானவை. மானுட அனுபவமும் தேடலும் அவற்றை எதிர்கொண்டு உருவாக்கிய ஞானத்தின் ஒரு பெரும் பின்புலம் நமக்கு உள்ளது. அந்தப் பின்புலத்தை கல்விமூலம் அறிந்தவனால் மட்டுமே மேற்கொண்டு எதையாவது சிந்திக்க முடியும். ஆகவே ஓயாத கல்வி என்பது சிந்தனைக்கு இன்றியமையாதது.

அதிலும் தத்துவத்தில் அடிப்படை நூல்களுடனான பழக்கம் என்பது மிக மிக ஆதாரமான ஒன்று. அந்நூல்கள் நாம் சிந்திக்கும் தளத்தில் இதுவரை என்ன நிகழ்ந்திருக்கிறது என்பதைக் காட்டுவன. அத்துடன் அர்த்த பூர்வமாகச் சிந்தனை செய்வதன் அடிப்படை நியதிகளையும் நமக்குக் கற்பிப்பவை. உதாரணமாக நீங்கள் உங்கள் கேள்வியைக் கேட்டதுமே  உங்கள் மனதில் அடுத்த கேள்வி எழுதிருக்க வேண்டும் தாயின் உறவை ஒருவன் ஏன் அறுக்கிறான்? அதே காரணம் குருவுக்கும் பொருந்துமா? அப்படிக் கேட்டிருந்தால் மிக எளிதாக நீங்கள் நான் சொன்ன அனைத்துக்கும் வந்து சேர்ந்துவிடமுடியும்

ஒரு அடிப்படைப்பிரச்சினை சார்ந்து குறுக்குக் கேள்வி ஒன்றை கேட்டுவிடும்போது இளமையில் நாம் சிந்திப்பதாக பிரமை ஏற்பட்டு விடுகிறது. இதுதான் இளமையில் நாம் சிக்கும் சேறு. அப்பிராயத்தில் அதில் கழுத்துவரை புதைந்திருந்த ஒருவன் என்பதனால் நான் இதை அனுபவபூர்வமாகவே சொல்லமுடியும். படிக்கும் பழக்கமோ சிந்தனைப்பயிற்சியோ இல்லாத நம்முடைய இதழாளர்கள்  அந்தப்போக்குக்கு உடனடி முன்னுதாரணங்களாகவும் அமைவார்கள்.

ஆனால்  அது சிந்தனையே அல்ல. சிந்தனை என்பது விரிவான காரண காரிய உறவை ஒவ்வொரு விஷயத்துக்கும் பின்புலமாக விரிவாக்கிக் கொள்வதாகும். ‘பெற்றோர் உறவை துறவி அறுக்கிறான், குரு என்பதும் உறவு தானே’ என்று நீங்கள் சொன்னதுமே நான் பெற்றோர் உறவின் இயல்புகள் என நீங்கள் நினைப்பது என்ன, குரு உறவின் இயல்புகள் என நீங்கள் நினைப்பது என்ன, துறவு என்றால் எதற்கு என எண்ணுகிறீர்கள், எந்த அடிப்படையில் இரண்டும் ஒரே வகை உறவு என்று நினைக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டால் நீங்கள் அவற்றை உங்கள் கோணத்தில் விரிவாக விளக்க முடியவேண்டும்.

அப்படி விரிவான விளக்கத்தை நீங்களே செய்துகொள்வதற்கு ஆன்மீகம், தத்துவம், மதம், இலக்கியம் மற்றும் உங்கள் அனுபவம் ஆகியவை ஆதாரமாக அமைய வேண்டும். அதுவே சிந்தனை. சிந்தனை எப்போதுமே பிறருக்கு எதிராக இருக்காது. ஒரு சிந்தனையாளனின் மறு தரப்பு அவனுள்தான் இருக்க வேண்டும். அதுவே அவனை நகர்த்திக் கொண்டுசெல்லும்

ஆகவே சிந்திப்பதை ஓர் எளிய விவாதமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அதன் இழப்பு உங்களுக்கே.

ஜெ

**

சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை

என்பதுதான் குறள். சரியாக மேற்கோள்காட்டவும்

XXX
அன்புள்ள XXX,

நன்றி. குறள் மீதிருக்கும் ஆர்வத்துக்கும் மகிழ்ச்சி.

அந்தக்குறளுக்கு ‘என் செய்யும்’ என்றுதான் பொருள். எவன் செய்யும் என்று ‘வ’ எழுவது என்செய்யும் என்று வரும்போது வெண்பா தளை தட்டுவதனால்தான். திருக்குறளின் மூலம் அதற்காக பிற்பாடு பிரதிசெய்தவர்களால் திருத்தியமைக்கப்பட்டிருக்கலாம் என்றே நான் எண்ணுகிறேன். ஏனென்றால் எவன் என்ற சொல்லுக்கு ‘என்ன’ என்ற பொருள் வருவதில்லை. அரும்பத உரைகளில் அதை அப்படியே தாண்டிச் செல்கிறார்கள்.

ஆகவே சொல்லும்போது ‘என் செய்யும்’ என்று சொல்வதே சரியானது. வ என்ற எழுத்து ஒலியின்மை கொள்கிறது என்று சொல்லலாம். என்னைப்பொருத்தவரை இது ஒரு பெரிய சிக்கலாக நான் எடுத்துக்கொள்வதில்லை. திருக்குறளின் இன்றைய பிரதி என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் செம்மை செய்யப்பட்டது. இன்று  அதற்கு ஆதாரமாக அமைந்த மூல ஏடுகள் கிடைப்பதில்லை.

ஒரு கட்டுரையில் எவன் செய்யும் என்று சொல்லி பொருள்குழப்பம் கொடுத்து அதை மீண்டும் விளக்குவதை விட என் செய்யும் என்றே சொல்லிச்செல்லலாம் என்பது என் எண்ணம்.

குறள் போன்ற நூல்கள் மீது எளிமையான வாசிப்புக்கு அப்பால் ஏதும் நிகழாத சூழல் இங்குள்ளது. இம்மாதிரி எழுத்து எண்ணுவதையும் அதை இலக்கண விதியாக எடுத்து அலைவதையும் மதநூல்களுக்கு விட்டுவிடலாமே. திருக்குறளுக்கும் முல்லாக்களும் மீமாம்சகர்களும் கிளம்பினால் நாடு தாங்காது

ஜெ  
 
மறுபிரசுரம்/முதற்பிரசுரம் 2009 மார்ச் 29

யாதெனின் யாதெனின்…

குரு என்னும் சுடர் : பேராசிரியர் ஜேசுதாசன் நினைவில்….

குருகுலமும் கல்வியும்

முந்தைய கட்டுரைவெண்முரசு -மதிப்புரை
அடுத்த கட்டுரைராமநாதபுரத்தில்