ஆலயங்களின் அழகில்- கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

ஒரு பதிற்றாண்டுக்கும் மேலாக தங்களைப்  பின் தொடர்ந்தாலும், நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள ஏனோ தருணம் அமையாமல் தள்ளிப் போய்க்கொண்டிருந்தது. அண்மையில் வெளியான நண்பர்களின் ஹம்பி பயணம் பற்றிய பதிவை  தங்களின் தளத்தில் கண்டபின், ஒரு வேகத்தில் அடுத்த வகுப்பில் கலந்துகொள்ள விண்ணப்பித்தேன். கடந்த வாரம் நடைபெற்ற ஆலயக்கலை முகாமில் நானும் கலந்துகொள்ள வாய்ப்பமைந்தது.

அந்த மூன்று நாட்களும் ஒரு இனிய புதிய அனுபவம். சிற்பவியல், வரலாறு, கட்டிடக்கலை, பக்தி இலக்கியம், தொன்மங்கள் என பலவற்றின் உதவியோடு ஆலயங்களைப்பற்றி அறிவது என்பது நம்மை வேறொரு தளத்திற்கு இட்டுச்செல்வது. சிற்பங்களையம் கோவில்களையும் உருவாக்கி குடமுழுக்கின்போது அவற்றிற்கு கண்திறப்பு செய்தால் மட்டும் போதாது. அவற்றைக் காண மனிதர்களுக்கும் ஒரு கண்திறப்பு நிகழவேண்டியுள்ளது எனத்தோன்றியது. அத்தகைய ஒரு கண் திறப்பு நிகழ்வே ஆலயக்கலை முகம். ஆசிரியர் ஜெய்குமாருக்கு நன்றி.

நல்ல ஒத்த ரசனையுள்ள பல நண்பர்களைக்  காணமுடிந்தது ஒரு பேறு. இத்தனை நாட்கள் ஏன் விஷ்ணுபுரம் நிகழ்ச்சிகளில் நேரிடையாக  கலந்துகொள்ளவில்லையென ஒரு வருத்தம் தோன்றியது (பலநாட்களாக கலந்துகொள்பவர்களைக் கண்டு சோற்று பொறாமையும் கூட). நல்ல ஒருங்கமைப்பும் சுவையான உணவும் ஏற்பாடு செய்திருந்த அந்தியூர் மணி அண்ணாவுக்கு நன்றி. இதையெல்ல்லாம் சாத்தியப்படுத்திய தங்களுக்கு அன்பும் வணக்கங்களும்.

அடுத்தடுத்த சந்திப்புகளை எதிர்நோக்கி,

இரா. செந்தில்.

முந்தைய கட்டுரைபெண்கள் யோகம்- கடிதம்
அடுத்த கட்டுரைமைக்கல் ஜெயக்குமார்