மின்மினிகளுடன்…

சத் தர்சன் முகநூல்

சத் தர்சன் நண்பர் ஆனந்த் அட்டப்பாடியில் அமைத்துள்ள கலாச்சார மையம். அங்கே ஆண்டுமுழுக்க தியானம், யோகம் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் உள்ளன. ஆனந்த் எனக்கு ஆறாண்டுகளுக்கு முன்னரே நித்ய சைதன்ய யதியை அறிமுகம் செய்துகொண்டவர். குர்ட்ஜீஃப் ,ஓஷோ என ஆன்மிகத் தேடல்கொண்டவர்.

விரிதழல் என பெயரிடப்பட்ட இலக்கியப் பயிற்சி முகாம் சென்ற செம்ப்டெம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் அங்கே நிகழ்ந்தது. அறுபதுபேர் பங்கெடுத்தனர்.  சத் தர்ஷன் ஓர் அழகிய மழைக்காட்டுச்சூழல் கொண்டது. அங்கே அப்போது மழையும் இருட்டும் இருந்தது. குளிர்காற்று ஓடிக்கொண்டிருந்தது. அருகே ஓடிய சிறுவாணி ஆற்றில் நிறைய நீர் பெருகிச்சென்றது.

அது அடிப்படையில் ஒரு வாசிப்புப் பயிற்சி. ஆனால் வாசிப்பை பயிற்றுவிக்க முடியாது. அதற்கு குறுக்குவழிகளோ உத்திகளோ இல்லை. வாசிப்பவரின் ஆளுமைதான் வாசிப்பின் அடிப்படை. ஒருவர் அதுவரை வாழ்ந்தது, வாசித்தது, சிந்தித்தது, உணர்ந்தது ஆகியவை இணைந்துதான் ஒரு வாசிப்பை நிகழ்த்துகின்றன. ஆனால் வாசிப்பை மேம்படுத்தும் பயிற்சி ஒன்றுண்டு. அது வாசிப்பை வகுத்துரைப்பதற்கான பயிற்சி. சொல்ல ஆரம்பித்தால் நாம் நம்மையறியாமலேயே நம் வாசிப்பை மேம்படுத்துகிறோம். அதைத்தான் அங்கே இரண்டு நாட்களில் அளித்தேன்.

என் பயிற்சிகள் எவையும் பொத்தாம்பொதுவான அறிவுரைகள் அல்ல. தெளிவான புறவயமான பயிற்சிகளையே அளிப்பேன். அவை உலகின் எந்தப் பற்கலைக் கழகத்திலும் கிடைக்கும் முதல்தரப் பயிற்சிக்கு நிகரானவை, ஏனென்றால் நான் அத்தகையவர்களிடமிருந்தே பயிற்றுமுறையைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். (முதல்தரப் பயிற்சி என்றால் அது புனைவெழுத்தாளனால் மட்டுமே அளிக்கப்படுவது. கல்லூரி ஆசிரியர்களால் அல்ல) இவற்றை கல்லூரிகளில் நிகழ்த்தவேண்டும். நிகழ்த்தியதுமுண்டு. ஆனால் பொதுவாக மாணவர்கள் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களின் உலகம் வேறு.

ஒரு நூலை மதிப்பிடும் முறைமைகளை அறிமுகம் செய்து, ஏழு நிமிடங்களில் ஒரு மதிப்புரையை முன்வைக்கும் முறையை பயிற்றுவித்தபின் ஐம்பதுபேரை பேசவைத்தேன். ஐம்பது நூல்களை சுருக்கமாக மதிப்பிட்டனர். தேவிபாரதியின் மூன்று நூல்கள், பவா செல்லத்துரையின் சிறுகதைத் தொகுதி, வண்ணதாசனின் சிறுகதைத் தொகுதி, சிறில் அலெக்ஸ் மொழியாக்கம் செய்த ராய் மாக்ஸம் எழுதிய உப்புவேலி என பலவகையான நூல்கள்.

அந்த ஏழுநிமிட உரை ஒவ்வொன்றையும் சுருக்கமாக அப்போதே மதிப்பிட்டு அவற்றில் இருந்த பிழைகள், செம்மைசெய்யும் வழிகளை கற்பித்தேன். இது ஐம்பது முறை ஒரே பாடத்தை கற்பது. நடைமுறையில் இருந்து புரிந்துகொள்வது. முதல் ஐந்து உரைகளுக்குப் பின் எல்லா உரைகளுமே கச்சிதமான அழகான மதிப்புரைகளாக அமைந்தன. அதுவே இக்கல்வியின் வெற்றி.

ஆனந்த் (கோடுபோட்ட சட்டை)

சத் தர்சனின் சிறப்பு அங்கே அந்தியில் எழும் மின்மினிப்பூச்சிகள். அவற்றை அமைதியாக அமர்ந்து பார்ப்பதை ஒரு தியானமாக வடிவமத்திருக்கிறார் ஆனந்த். அந்த அரைமணிநேரம் இருளிள் மின்னிக்கொண்டிருப்பது நம் உள்ளம்தான் என்றே தோன்றும்.

ஆனந்தின் அத்தையின் மேற்பார்வையில் சிறப்பான சமையல். குளிர்ந்த சூழலில் இரவுத்தங்கல். இனிய அழகிய இரு நாட்கள்.

முந்தைய கட்டுரையுவன் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஔவையாரம்மன் கோயில்