தலைக்குமேலொரு கனவு -கடிதம்

காடு அமேசானில் வாங்க

காடு வாங்க

அன்புள்ள ஜெ

காடு நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். நான் அடைந்த உணர்ச்சிகளை என்னால் சொல்லிக்கொள்ள முடியாது. சுருக்கமாகவேனும் உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று எனக்கு பட்டது. நான் மதுரை அருகே வாழ்பவன். ஆண்டில் எப்படியும் நான்குமுறையாவது கன்யாகுமரி அல்லது குற்றாலம் பகுதிக்குச் சென்றுவிடுவேன். என்ன காரணமென்றால் வறனுறல் அறியாச் சோலைதான்.

ஒரு காலத்தில் தமிழகம் எப்படி இருந்தது என்று தெரியாது. இன்றைய தமிழகம் பசுமையே இல்லாத புழுதிக்காடுதான். பசுமை என்றால் அது உடைமுள்ளுதான். இந்த வெறுமையை பார்த்துப்பார்த்து கண்பழகிப்போனதனால் நமக்கு வேற்றுமை தெரிவதில்லை. ஆனால் வெளியே இருந்து வருபவர்கள் உடனே சொல்வது நம்மூரின் வெறுமையைத்தான். மஞ்சள் டிஸ்டெம்பர் பூசிய வீடுகள், வெறிச்சிட்ட வானம், முள்காடு இதுதான் நம் மண்.

இந்த வெறுமை எல்லாருக்கும் பிரச்சினையாக இல்லை. ஒரு மரம் முளைத்தால் உடனே வெட்டிவிடுபவர்கள்தான் இங்கே அதிகம்பேரும். வீட்டுச்சுற்றுப்புறம்  ‘பளிச்னு’ இருக்கவேண்டும் என்றுதான் சொல்கிறார்கள். என்னைப்போன்ற சில கோட்டிகளுக்குத்தான் பச்சை தேவைப்படுகிறது. பச்சைக்காக கண் ஏங்குகிறது. என்னுடன் வேலைசெய்பவர்களுக்கெல்லாம் குற்றாலம் பிடிக்காது. போனால் உடனே சளி பிடித்துவிடுகிறது என்று சொல்வார்கள்.

இந்த மேற்குமலைத்தொடரின் பசுமைக்காடு நம் தலைக்குமேல் ஒரு கனவு மாதிரி இருந்துகொண்டிருக்கிறது. ஒரு பெரிய இளமைக்கனவு. அந்தக் கனவை காதலென்னும் கனவுடன் இணைத்துள்ள கதைதான் காடு. அதனால்தான் அந்த நாவலை அப்படி ஒரு மோகத்துடன் திரும்பத் திரும்ப வாசித்தேன். அதிலேயே மூழ்கிக்கிடக்கிறேன். அது எனக்கொரு வாழ்க்கையனுபவமாகவே உள்ளது.

இதையே ஒரு ரியலிஸ்டிக் நாவலாக எழுதியிருக்கலாம். ஆனால் இதிலுள்ள கவித்துவம் குறைந்துவிடும். இதில் தொன்மம் இருக்கிறது. மரபிலக்கியம் இருக்கிறது. ஆன்மிகம் இருக்கிறது. நகைச்சுவையும் பகடியும் இருக்கிறது. பல ஊடுவழிகளுடன் நாவல் விரிந்து விரிந்து செல்கிறது. படிக்கப்படிக்க தொலைந்துவிடும் இடம் இது. மேற்குமலைக்காடுகளும் இதைப்போலத்தானே?

அருள் சக்தி

காடு- கதிரேசன்

கீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்

காடு இரு கடிதங்கள்

காடு – ஒரு வாசிப்பும் மறு வாசிப்பும்- கலைச்செல்வி

காடு – கடிதம்

முந்தைய கட்டுரைகனடாவில் ஒரு வானொலிப் பேட்டி
அடுத்த கட்டுரைகடமையும் உரிமையும்- ரம்யா