யுவன் நூல்கள் விருது சார்ந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையில்- சீரோ டிகிரி
அன்புள்ள ஜெ
யுவன் சந்திரசேகரின் கதைகளை தொடர்ச்சியாக வாசித்து வரும் வாசகன் நான். அவரைப்போலவே அவர் கதைகளைப்பற்றியோ வேறெந்த கதைகளைப் பற்றியோ எவரிடமும் நான் பேசியதில்லை. நான் அவரை கண்டடைந்தது அவர் எழுதிய பகடையாட்டம் என்னும் நாவல் வழியாக. பலவகையிலும் உம்பர்ட்டோ இகோ வின் நேம் ஆப் த ரோஸ் நாவலுடன் ஒப்பிடத்தக்க ஒரு நாவல் அது. மொத்தச் சரித்திரத்தையும், பண்பாட்டையும், இலக்கியத்தையும் புனைவிலேயே உருவாக்கிவிடமுடியும் என்ற புனைவிலக்கியவாதியின் திமிர் வெளிப்பட்ட அற்புதமான படைப்பு. அதன்பிறகு அவருடைய எல்லா நாவல்களையும் வாசித்து வருகிறேன். அவருக்கு என் வணக்கம்
ஆறுமுகம் .பி.ஆர்
இந்த வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி . Well deserved and long overdue .இவரின் ஜென் கவிதைகளும் நினைவுதிர்காலம் நாவலும் வாசித்திருக்கிறேன் . கானல்நதி வாசிக்க வேண்டும் .அவர் கையாளும் களங்களும் , தன்னை படைப்பில் புனைந்துகொள்ளும் விதமும் எனக்கு உவப்பானவை . ஒரே சமயம் தீவிரமும் விளையாட்டுதன்மையும் கொண்டவை .யுவனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் !
கார்த்திக் வேலு
அன்புள்ள ஜெ
இலக்கியம் என்றால் அதிதீவிரமான பேச்சு மட்டுமே என்று இருந்த சூழலில் இயல்பாக இலக்கியத்தை சிரிக்கவும் விளையாடவும் விட்ட கலைஞன் யுவன் சந்திரசேகர். அவருக்கு விருது அளிக்கப்பட்டிருப்பது போல அண்மையில் என்னை மகிழ்ச்சி அடையச்செய்த செய்தி வேறு கிடையாது. யுவன் சந்திரசேகருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். விருது கிடைத்த எல்லா படைப்பாளிகளைப் பற்றியும் வணங்கி மகிழ்கிறேன் என்றுதான் சொல்கிறோம். யுவனைப்பற்றி மட்டும் குடோஸ் ப்ரோ என்று சொல்லமுடியும். அதனால்தான் மகிழ்ச்சி
சரவணன்