யுவன் நூல்கள் விருது சார்ந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையில்- சீரோ டிகிரி
யுவன் சந்திரசேகர் காணொளிகள். சுருதி டிவி
அன்புள்ள ஜெ
இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது யுவன் சந்திரசேகருக்கு அளிக்கப்பட்ட செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். யுவன் சந்திரசேகர் என் வாழ்க்கையில் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். இந்த கடிதத்தை நான் எழுதும்போதுகூட என்னுடைய அனுபவங்களைப்பற்றி நான் மொத்தமாக ஒன்றும் சொல்லமுடியாத நிலையில்தான் இருக்கிறேன். என் வாழ்க்கையில் பல நிகழ்வுகள்.எதிர்பாராத நிகழ்வுகள் என்று சொல்லவேண்டும். ஆனால் வாழ்க்கையிலுள்ள எல்லா நிகழ்வுகளும் எதிர்பாராத நிகழ்வுகள்தான்.
நாம் சில நிகழ்வுகளைக் கவனிக்கிறோம். பெரும்பாலான நிகழ்வுகளைக் கவனிக்காமல் போகிறோம். கவனிக்கும் நிகழ்வுகள் எல்லாமே புதியவையாகவும் திகைப்பூட்டுபவையாகவும் உள்ளன. வாழ்க்கையை பொருத்தவரை எதையுமே எதிர்பார்க்கமுடியாது என்பதே நிஜம். அப்படி பல நிகழ்வுகள் வழியாக நான் நிலைகுலைந்து போயிருந்தேன். அப்போதுதான் யுவன் சந்திரசேகரின் நாவல்களை வாசித்தேன். குள்ளச்சித்தன் சரித்திரம் என் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்தது. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத இதெல்லாம் சம்பந்தமுள்ளவை என நம்ப ஆரம்பித்தேன். அதேசமயம் அந்த சம்பந்தம் என்ன என்று நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது என்றும் நினைக்க ஆரம்பித்தேன். அது எனக்கு ஒரு ஆறுதலை அளித்தது. வாழ்க்கையை கூர்ந்து பார்க்கவும் கொஞ்சம் வேடிக்கைபார்க்கவும் ஆரம்பித்தேன். அதன்பிறகு வாழ்க்கை இலேசாக ஆகிவிட்டது. என் பெயர் தேவையில்லை.
ஆர்
அன்புள்ள ஜெ,
யுவன் சந்திரசேகருக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து கொண்டாட்டமாக உணந்தேன். நான் யுவன் சந்திரசேகரை இதுவரை பார்த்ததில்லை. காணொளிகளில் மிக உற்சாகமாக அவர் பேசுவதைக் கேட்கும்போது எனக்கு அவர் மிக நெருக்கமானவராகத் தெரிகிறார். வாழ்க்கையைப் பற்றி பேசுவதுதான் இலக்கியம். எந்த பாவனைகளுமில்லாமல் வாழ்க்கையப் பற்றிப்பேசுவது அவருடைய நாவல்கள். மிகச்சிறப்பான எழுத்துக்குப் பொருத்தமான விருது. நன்றி
பழ. சிவசண்முகம்
அன்புள்ள ஜெ,
நான் யுவன் சந்திரசேகரின் வெளியேற்றம் நாவலை மட்டுமே வாசித்திருக்கிறேன். அந்த தலைப்புக்காகவே அந்நாவலை வாசித்தேன். நான் இரண்டுமுறை வீட்டைவிட்டு வெளியேறி அலைந்து திரிந்தவன்.அந்த அனுபவங்களில் நிறைய கசப்புகள்தான். ஆனால் எங்கே ஒரு தனியான ஆளைப்பார்த்தாலும் அவன் எதற்காக வீட்டை விட்டு வெளியேறினான் என்றுதான் யோசிப்பேன். அப்படி ஒரு பார்வையில் நான் வாசித்த நாவல் அது. மனிதர்கள் வெளியேறிச் சென்றுகொண்டே இருக்கிறார்கள். அந்நாவலை நான் இப்போதுகூட விட்டுவிட்டுத்தான் வாசிப்பது. முழுசாக வாசித்தேன் என்று சொல்லமுடியாது. ஆனால் கைவசம் வைத்திருக்கிறேன்
ராஜன் மகாலிங்கம்
யுவன் – விஷ்ணுபுரம்- கடிதங்கள்