யுவன் சந்திரசேகர் – கடிதங்கள்

யுவன் நூல்கள் விருது சார்ந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையில்- சீரோ டிகிரி

யுவன் சந்திரசேகர் காணொளிகள். சுருதி டிவி

வணக்கம்.

அன்புடன் நலம்தானே…?

இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருதுக்குரியவராக  பிரியமான  யுவன் சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தனித்துவமான  நடையில்  சுவாரசியத்துடன்    கதை சொல்லும் முறையை  இன்றுவரை கையாண்டு வருகிறார். யுவன் சந்திரசேகர்.அவரின் ஒவ்வொரு படைப்பும் ஒரு புது அனுபவம்.

ஒவ்வொரு விஷ்ணுபுர விழாவிலும் கோவையில் அவரை சந்திக்கும் போது இவருக்கு எப்போது என எண்ணுவேன் ..அந்த இனிய தருணம் இப்போது வாய்த்திருக்கிறது . மகிழ்ச்சி ..  அவருக்கு என் அன்பான பாராட்டுகள் வாழ்த்துகள்.

உங்களுக்கு நன்றி.

அன்புடன்

ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்

*

அன்புள்ள ஜெ

யுவன் சந்திரசேகருக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்ட செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். தமிழிலக்கியச்சூழலில் கொண்டாடப்படவேண்டிய விஷயங்களில் ஒன்று இது. யுவன் தமிழிலக்கியத்தில் முப்பதாண்டுகளாக செயல்பட்டு வரும் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர். இலக்கியத்தை மட்டுமே நம்பிச் செயல்படுபவர். அத்தகைய ஒருவருக்கு அளிக்கப்படும் விருது முக்கியமான ஒன்று.

நான் யுவன் சந்திரசேகர் படைப்புகளில் முதலில் வாசித்தது ஜிம் கார்ப்பெட் எழுதிய எனது இந்தியா என்ற நூலுக்கு அவர் செய்த மொழியாக்கத்தைத்தான். மிகச்சரளமான மொழியாக்கம். இயல்பாக வாசிக்க முடிந்தது. ஆனால் ஆங்கிலத்தில் வாசித்துக்கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வையும் அந்த மொழியாக்கம் வழியாக அடைந்தேன். இது எப்படி நிகழ்கிறது என்ற ஆச்சரியம் எனக்கு இருந்துகொண்டே இருந்தது

அதன்பிறகுதான் நான் யுவன் சந்திரசேகர் எழுதிய பகடையாட்டம் என்னும் நாவலை வாசித்தேன். அது ஒரு தமிழ் நாவல். ஆனால் அதில் உள்ள கதாபாத்திரங்களில் சிலர் தமிழில் பேசுகிறார்கள். சிலர் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். ஒரு புராதனமான நூலில் இருந்து செய்யப்பட்ட மொழிபெயர்ப்ப்பு அதில் உள்ளது. சில பகுதிகள் திபெத்திய மொழியில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட பேச்சு போல தோன்றின

இந்த மாயத்தை அவர் நாவலில் நிகழ்த்தியிருந்தார். அப்போதுதான் அந்ந புனைவுத்திறன் தெரிந்தது. அவர் நாவல்களின் அழகு இத்தனை வகையான மொழிகள் அதற்குள் இருப்பதுதான். நாம் வேறுவேறு குரல்களை அவர் நாவல்களில் கேட்டுக்கொண்டே இருக்கிறோம் என்று தோன்றும்.

யுவன் சந்திரசேகருக்கு வாழ்த்துக்கள்

பிரபாகர் மணி

*

அன்புள்ள ஜெ

யுவன் சந்திரசேகருக்கு அளிக்கப்பட்ட விஷ்ணுபுரம் விருது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழிலக்கியத்தின் சாதனையாளர்களில் ஒருவர் அவர். ஒரு இலக்கியச்சாதனை என்றானாலும் அதற்கான வாசிப்பையும் புகழையும் அடையும் என்று இந்த விருது உறுதிசெய்கிறது.

நானக் சிங் எழுதிய வெண்குருதி என்ற நாவலை நான் வாசித்துவிட்டு அடுத்தவாரம் வாசித்த நாவல் கானல் நதி. என் மனதுக்குள் இருநாவல்களுக்கும் இடையே ஓர் இணைப்பு உருவாகியிருந்தது. அது என்ன என்று தெரியவில்லை. ஆனால் நான் அறியாத வங்காளத்தில் வாழ்ந்து வந்த அனுபவத்தை கானல்நதி நாவல் அளித்தது. சங்கீதமும் நீரோட்டமும் சம்பந்தமுள்ளவை. கங்கையையும் சங்கீதத்தையும் சேர்த்து அந்நாவலில் உணரமுடிந்தது

ஜே. மாணிக்கம்

*

யுவன், கடிதங்கள்

யுவன், கடிதங்கள்

யுவன் சந்திரசேகர்- கடிதங்கள்

யுவன் சந்திப்பு – சக்திவேல்

யுவன் – விஷ்ணுபுரம்- கடிதங்கள்

யுவன், விஷ்ணுபுரம் விருது -செய்திகள்

யுவன் சந்திரசேகர், விஷ்ணுபுரம் விருது, வாழ்த்துகள்

முந்தைய கட்டுரைஇரா.முருகன் கருத்தரங்கம் உரைகள்
அடுத்த கட்டுரைஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில்