காபி, கடிதங்கள்

’காபி’யம்

ஜெ

நாயர்களெல்லாம் காபி பற்றி பேசும் காலம் வந்துவிட்டதே. கலிகாலத்தில் இனிமேல் எதையெல்லாம் பார்க்கவேண்டுமென்றே தெரியவில்லையே!

சுதா

*

பேரன்பிற்குறிய ஜெயமோகன் அவர்களுக்கு

காப்பியம் கட்டுரை ஒரு நல்ல அனுபவம் கொண்டது ஜெ. “எனக்கு எஸ்பிரஸ்ஸோ காபியய் பிடிக்காது ஆகவே அதை சீண்டவில்லை” என்ற வரியை பார்த்தபோது கொஞ்சம் தூக்கி வாரி போட்டது. (இதைப் போன்ற பலவற்றை நீங்கள் பிடிக்காது என்று சொல்லப்போக, மனதில் போய் ஏறி உட்கார்ந்து கொண்டு என் உடலும் உள்ளமும் பிடிக்காது என்று சொல்லும் வரை விடாது, அதோடு போராடுவது ஒரு பெரிய அக்கப்போர் என்பதால் )நல்ல வேளை அந்த காப்பி தெய்வம் சரியான தருணத்தில் காட்சி தந்துவிட்டது. இதைப் போன்று அந்த தெய்வம் காட்சி தரும் அனுபவம் பலருக்கும் இருக்கும்.

இங்கு கொரியாவில் எஸ்பிரஸ்ஸோ, அமெரிக்கானோ காப்பிப்பழக்கம் அதிகம் தான். நம்மவர்கள் இதில் எல்லாம் தலையிடுவதில்லை. நம்மவர்களுக்கு எங்கு சென்றாலும் காப்பியில் இனிப்பு இருந்தாக வேண்டும் காப்பிதூள் சிறிதும் இல்லை என்றால்கூட பரவாயில்லை. இங்கு ஹைக்கிங் செல்லும் பெரும்பாலான கொரியர்கள் கையில் இந்த காபி மெஷினுடன் வருவார்கள், மலை உச்சிக்கு சென்ற பிறகு அங்கு அமர்ந்து அப்போதே காபி கொட்டையை அரைத்து, பிளாஸ்க்கில் கொண்டு வரும் சுடு தண்ணீருடன் பேப்பர் பில்டரை பயன்படுத்தி ஒரு காபி போட்டு குடித்துக் கொண்டே, பச்சை பச்சையாக கீழிறங்கி செல்லும் மலையலைகளை காப்பியின் மண ருசியுடன் ரசித்துகொண்டிருப்பார்கள். அப்படி ஒருவர் மழையுச்சியில் எனக்கு எதேச்சையாக ‌கொடுத்த காபியில் தான் அந்த தெய்வத்தை நான் தரிசித்தது. அந்த மணம் என்னை கிரங்கடித்தது. அந்த இடத்தில் அத்தருணத்தில் அந்த அலாதி ருசி என்னை எடுத்துக் கொண்டது.

என் இன்றைய தினசரி காலையே jeyamohan.in இணைய பத்திரிக்கையுடன் ஒரு எஸ்பிரஸோவின் மணத்துடன் தான் தொடங்குகிறது. உங்களுக்கு caffein DeCaffein என்று இரண்டு காப்பி பீன்கள் இருப்பது தெரியும் என்று நினைக்கிறேன். இரண்டையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். சாயந்திரத்திற்கு மேல் caffein உள்ள காபி குடிப்பதால் உங்கள் இரவு தூக்கம் கெட வாய்ப்புள்ளது. பகலின் ஒரு பொழுதுக்கு மேல் என்றால் DeCaffein காப்பி போட்டு குடித்துக் கொள்ளுங்கள். இரண்டும் ஒரே சுவை ஒரே மணம் கொண்டது தான், இரவு தூக்கம் கெடாது.

Cheers ஜெ

சதீஷ்குமார்

தென் கொரியா

*

அன்புள்ள ஜெ-க்கு,

நலமா?

“காபி”யம் கட்டுரை வாசித்தேன்.   காபி எனக்கும் பிடிக்கும்.  ஐந்து வருடங்களுக்கு முன்,  மூன்று நாட்கள் தங்கி பார்த்த கும்பகோணம் கோவில்களில், சோமேஸ்வரர் கோவில் வாசலில் உள்ள “கெளரி கிருஷ்ணா” என்ற உணவு விடுதியில் கொடுக்கும் காபியின் சுவை, இன்றும்,  நினைவில் இருக்கிறது.  நாங்கள் மூவர் சென்றிருந்தோம். அனைவருக்குமே காபி பிடித்திருந்தது. மூன்று நாட்களும் அங்கேயே உணவுடன் காபியும் சாப்பிட்டோம். காபி கொண்டு வரும்போதே அதன் வாசனையில் எச்சில் ஊறும். அது எவ்வாறு என்று கடை சிப்பந்தியிடம் கேட்டோம். அன்றைக்கு தேவையான காபி பொடியை, காபிக் கொட்டையிலிருந்து அன்று மட்டுமே அரைப்பார்கள் என்றார்.

ஸ்டார்பக்ஸில் தயாரிக்கும் கப்புசினோவும் பிடிக்கும்.  இத்தாலியில் பியல்லாவில் 2005 களில் குடித்த கப்புசினோவும் பிடித்தமானது. இது தவிர நான் குடித்த எந்த காபியும் நினைவில் இருப்பதில்லை.

சில மாதங்களுக்கு முன், டீ போலவே, காபி பைகள் ஏன் இருக்க கூடாது, என்று தேடியதில் அமெசானில் கிடைத்தது.   10 காபி பைகள் கொண்ட சிறு அட்டை பெட்டிகள். இந்த காபி சிறு பையின், முகத்துவாரத்தை நீக்கி,  ஒரு டம்ளரிலோ, கோப்பையிலோ வைக்குமாறு, பக்க வாட்டு காகித கொக்கிகளில் வைத்து,  கெட்டிலில் இருந்து, சுடு நீரை ஊற்றினால் காபி தயார்.  இது ஐந்து சுவைகளில் உள்ளது.  நீங்கள் இதைதான் சொல்கிறீர்களா என்று தெரியவில்லை.

இரண்டிரண்டாக ஐந்து வண்ணத்தில் ஐந்து சுவைகளிலும் இருக்கும்.

Blue Tokai Coffee Roasters Coffee Easy Pour Over Coffee Drip Bags Assorted Light To Dark Roast|Pack Of 10 Sachets|Carry Anywhere |100% Arabica Specialty Coffee,Groud https://amzn.eu/d/hIGCmwn

ஒரு வண்ண சுவை பிடித்த பிறகு, அந்த வண்னத்திலேயே 10ம் வாங்கலாம். உதாரணமாக, கீழேயுள்ளது செந்நிற(Orange) வண்ண பாக்கெட்டுகள்.

Blue Tokai Coffee Roasters Easy Pour Over Coffee Drip Bags (Medium Roast) | Thogarihunkal Estate | Fruity & Medium Bodied | Pack of 10 | 100% Arabica Specialty Coffee | Ready to Brew in 2min | Just pour hot water https://amzn.eu/d/1nzD6r0

வயிறு உபாதை காரணமாக, காபியும் டீயும் ஒரு மாதத்திற்கு மேலாக சாப்பிடுவதில்லை. சுறுசுறுப்பாகவே இருக்கிறேன். ஆனால், கெளரி கிருஷ்ணா காபியின் சுவையை நினைத்தபடி.

ஜானகிராமன்.

முந்தைய கட்டுரைஒளி, ஒரு நினைவு
அடுத்த கட்டுரையுவன், வாசகர் கடிதங்கள்