சனாதனம்- கடிதம்

சனாதனம், சனாதன எதிர்ப்பு

அன்பு ஜெ சார். நலம்தானே.

சனாதனம் பற்றி அமைச்சர் பேசியதை அவர் புரிதலையும் பார்வையையும் கருத்தில் கொண்டு பார்க்க வேண்டுமென்று பதிலளித்திருந்தீர்கள். எது சனாதனம், சனாதனத்தில் ஏற்கவேண்டியவை எவை மறுக்க வேண்டியவை எவை என்ற எந்த விளக்கங்களுமில்லாமல் வாள்களை உருவிக்கொண்டு இரு பக்கத்தாரும் நிற்பது தாங்கள் சொன்னது போல ‘தெருக்குண்டர்களின் அரசியல் விளையாட்டு’ களின் விளைவு. எனவேதான் உங்கள் கட்டுரை தெளிவாகவும் உறுதியான நிலைப்பாடுகளோடும் இருப்பதாக பல நண்பர்கள் சொல்லியும் அவர்கள் குரல் மிகச் சன்னமாகவே ஒலிக்கின்றது.

ஒரு தீவிர வலதுசாரி நண்பரோடு பேசிக் கொண்டிருந்த போது அவர் அரசு அலுவலக வேலைகள் தரம் தாழ்ந்து போனதற்கு காரணம் இடஒதுக்கீடே என்று சொன்னதோடு, சட்டென்று பட்டியலினத்தாரை ஈனச்சாதிகள் என்றும் சொன்னது கேட்டு அதிர்ந்து விட்டேன். சற்று கோபமாகவே நான் எதிர்வினையாற்றிய போது அவர் மூன்று விஷயங்கள் சொன்னார் –

நீங்கள் ஏன் எழுத்தாளர் போலவே பேசுகிறீர்கள்?

நீஙகள் ஏன் எப்போதும் ஜெயமோகனையே மேற்கோள் காட்டுகிறீர்கள்?

நீங்கள் என்ன சொன்னாலும் என்னை மாற்ற முடியாது.

பொதுவாகவே பட்டியலினத்தவர், இடஒதுக்கீடு, திருமாவளவன் செயல்பாடுகள் பற்றியெல்லாம் தமிழக வலதுசாரிகள் பலரின் மதிப்பீடுகள் இவ்வாறுதான் உள்ளது. அரசியல்சரிநிலைகள் பார்த்து கவனமாகப் பேசுபவர்கள் இது போன்ற மதிப்பீடுகளை அடிமனதில் ஒளித்து வைத்துக் கொள்கிறார்கள். மற்ற ஆதிக்க இடைச்சாதிகள் உரக்கவே பேசுகிறார்கள்.

இன்னொரு வலதுசாரி நண்பர். படித்தவர் பெருவணிகர். சமூகவட்டங்களில் உலா வருபவர். அவரும் ஒரு முறை இது போல என்னிடம் ஒரு தீவிர வலதுசாரிக் கருத்தை சொல்லி விட்டு என்னிடம் சவால் விட்டார்,

” இதுக்குப் பதில் சொல்லுங்களேன். நீங்கள்தான் நிறைய நூல்கள் படிப்பவராயிற்றே! பகுத்தறிவாளராயிற்றே!.”

ஆக படிப்பது, பகுத்தறிவு பேசுவது, ஜெயமோகனை அடிக்கடி மேற்கோள் காட்டுவது போன்றவை இன்றைய வலதுசாரி அரசியல் ஆர்வலர்களை மிகவும் எரிச்சலூட்டி, பொறுமையிழக்கச் செய்கிறது.

இது உங்களுக்கும் தெரியுமென்றாலும் விடாது அவ்வப்போது சமூகநடப்புகளின் மேலான தங்கள் கருத்துகளை அறிவார்ந்தும்,  ஆணித்தரமாகவும் பதிவு செய்வதற்கு மிகவும் நன்றி, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். உங்களை விட்டால் இங்கு இதற்கு வேறு ஆளுமைகளே இல்லை. சனாதனம் விவாதம் ஆரம்பித்த நாளிலிருந்து நான் ஆவலுடன் காத்திருந்தது உங்கள் கட்டுரைக்காகத்தான். எழுதியதற்கு நன்றி.

இந்து மெஞ்ஞான மரபுகள், ஆலயங்கள், ஆன்மீகம், அத்வைதம், ஆதீனங்கள் என நீங்கள் எழுதியவை அனைத்தும் வாசித்திருக்கிறேன். உங்கள் வார்த்தைகளிலேயே சொல்வதானால் ‘பாமரத்தனமான ஆத்திகம் மற்றும் சல்லித்தனமான நாத்திகம்’ இரண்டிற்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் காப்பாற்றுவது உங்கள் எழுத்துக்கள்தான்.

ஆலயவழிபாடு, சில தேர்ந்தெடுத்த ஆச்சாரங்கள் சடங்குகளோடு வாழும் ஒரு வயதுமூத்த இந்துவாக என்னுடைய நன்றிகளும் வாழ்த்துகளும்.

ரகுநாதன்

முந்தைய கட்டுரைகவிதைகள் இதழ்
அடுத்த கட்டுரையுவன் – கடிதங்கள்