தமிழக தலித் இலக்கிய அலை உருவான காலகட்டத்தில் சிவகாமி பழையன கழிதலும் என்னும் நாவல் வழியாக முக்கியமான ஒரு தொடக்கத்தை நிகழ்த்தினார். தலித் வாழ்க்கையின் பண்பாட்டுச்சித்திரத்தை விமர்சனமும் அங்கதமும் கொண்ட மொழியில் முன்வைப்பவை அவருடைய நாவல்கள். இந்தியப்பெண்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் முக்கியமான நாவல்களில் ஒன்று என்று ஆனந்தாயி நாவலை ஞானி மதிப்பிட்டார். தமிழில் தலித் அழகியலை பின்நவீனத்துவக் கதைசொல்லும் முறையில் பல இடைவெட்டுகளுடன் வரலாற்றுக்குறிப்புகளுடன் எழுதிய படைப்பாளிகளில் ஒருவர் சிவகாமி. அதிகார அமைப்பின் இயக்கத்தையும் உண்மைக்கு முன்னும் பின்னும் போன்ற நாவல்கள் வழியாக சித்தரித்துள்ளார்.