அன்புள்ள ஜெ
யுவன் சந்திரசேகர் விஷ்ணுபுரம் விருதுக்குரியவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி. சுருதி டிவி தொகுத்துள்ள அவருடைய உரைகளை கேட்டுக்கொண்டிருக்கிறேன். மிக இலகுவாக பேசுகிறார். இலக்கியப்பாவனைகள் இல்லை. ஆனால் மிகக் கறாரான வேல்யூஸும் முன்வைக்கிறார். அவருடைய கதைகளை இன்னும் வாசிக்கவில்லை. அவருடைய இந்தப்பேச்சு மாதிரித்தான் அக்கதைகளும் சுவாரசியமாகவும் ஃப்லோவுடனும் இருக்கும் என நினைக்கிறேன். முக்கியமான பல எண்ணங்களை உருவாக்குபவர் என்னும் மனப்பதிவு உருவானது. அவருக்கு என் வாழ்த்துக்கள்.
மா.கிருஷ்ணமூர்த்தி
அன்புள்ள ஜெ
யுவன் சந்திரசேகருக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிப்பைப் பார்த்தேன். நீண்டகாலமாக அவருடைய கதைகளை உயிர்மை, காலச்சுவடு இதழ்களிலே பார்த்து வாசித்து வருகிறேன். அவருக்கு முக்கியமனா விருதுகள் எவையும் இதுவரை அளிக்கப்பட்டதில்லை என நினைக்கிறேன். அதற்கு என்ன காரணமென தெரியவில்லை . அவர் கதைகள் ஈஸியான ஓட்டத்துடன், பல தனிக்கதைகளின் தொகுப்புகளாக உள்ளன. அந்தக்கதைகளுக்கு இடையே அவர் பல ரகசியமான தொடுப்புகளை வைத்துள்ளார். அவை வாசிக்கையில் ஒரு திகைப்பும் அதன்பிறகு ஒரு புதிய திறப்பும் அளிப்பவையாக உள்ளன. யுவன் சந்திரசேகரின் கதைகளை தொடர்ந்து வாசிக்கவேண்டும் என்னும் எண்ணம் ஏற்பட்டது. அவரைப்பற்றி நிறைய வாசகர்கள் நிறையவே எழுதியிருக்கிறார்கள் என்று இணையத்திலே பார்த்தேன். சிறப்பு. அவருக்கு என் வாழ்த்துக்கள்.
அ. முரளி
அன்புள்ள ஜெ
யுவன் சந்திரசேகரின் பகடையாட்டம் நாவல் எனக்கு மிகவும் பிடித்தமான படைப்பு. அது ஒரு மிஸ்டிக் நாவல். அது திபெத் பிரச்சினையை ஒட்டி எழுதப்பட்டது. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வாழ்க்கைகளில் நடக்கும் சம்பவங்கள் எப்படி ஒன்றுடனொன்று இணைந்துள்ளன என்று அது அற்புதமாகக் காட்டுகிறது. ஆச்சரியமென்னவென்றால் நான் நள்ளிரவில் சுதந்திரம் (லாரி காலின்ஸ் டமினிக் லாப்பியர்) வாசித்தபோதும் இதே உணர்வை அடைந்தேன். சம்பந்தமில்லாத பல நிகழ்வுகள் எப்படி ஒன்றாகச் சேர்ந்து சரித்திரமாக ஆகின்றன என்று அந்த நூலும் காட்டியது. வரலாறு உருவாகும் விதம் பகடையாட்டம் கதையிலே உள்ளது.
என்.சிதம்பரம்
யுவன் – விஷ்ணுபுரம்- கடிதங்கள்