எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புகளையும் கொண்டாடும் பொருட்டும், புதிய வாசகர்களுக்கு அவற்றை சிறப்பாக அறிமுகம் செய்யும் வண்ணமும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா), தொடர்ந்து இசைக்கோவைகளை வெளியிட்டு வருகிறது.
அந்த வரிசையில், “சங்கீதத்தைப் பற்றிப் பேசுவதுகூட ஒரு சொகம்தான், தனக்கு மொத்தம் நான்கு தலைகள் முதல்த்தலை சங்கீதம்தான்” என்று சொன்ன எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு, கோபல்ல கிராமம் நாவலில் வரும் கும்மிப்பாட்டுக்கு இசை அமைத்து நடனம் அமைத்து வெளியிடத் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
எந்த ஒரு விஷயத்தையும் கலை நிகழ்ச்சிகள் வழியாகவும், வாய்மொழி வழியாகவும்தான் மக்களிடம் சென்று சேர்க்கமுடியும் என்று சொல்பவர் கி.ரா. அவர் சொன்ன வழியிலேயே, அவரது ஊரான கோவில்பட்டிக்கே சென்று, ஒரு தேர்ந்த கலைக்குழுவை அமர்த்தி கும்மியடிக்க வைத்து, காலில் சலங்கை கட்டி நடனமாடி, பறை இசைத்து முழுநீள இசைக்கோவையாக வெளியிட இருக்கிறோம்.இயக்குனர் K.P. வினோத் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். நைனாவின் இளைய புதல்வர் பிரபு அவர்களைத் தொடர்புகொண்டு தக்க நாளையும், இடத்தையும் தேர்வுசெய்ய உள்ளார்.
அது ஒரு புறம் நடந்துகொண்டிருக்க, இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம், நானூறு / ஐநூறு வருட பழமையான பாடலை இவர்கள் பாடினால் மண்மணம் மாறாமல் குரலில் பிரதிபலிக்குமென பாடவைத்து, நாட்டுப்புற வாத்தியங்கள் மட்டும் வைத்து இசையமத்து அவரது பணியை செய்துள்ளார். ‘ஜெயில்’ படத்தில் ‘நகரோடி நகரோடி’ எனப் பாடி நம் மனதைக் கவர்ந்த அனன்யா பட் நாட்டுப்புற பாடலை பாடிய அனுபவத்தையும், தான் கல்லூரியில் படித்த கோபல்ல கிராமம் நாவலின் சென்னிமா தேவியை இன்னும் மறக்கவில்லை என்று சொல்லும் பாடகி ராஜலக்ஷ்மி அவர்கள் அவரது எண்ணத்தையும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நண்பர்களில் ஒருவரான விஷ்ணுப்ரியா அவர்கள் பாடிய பாடலுடன் தனுக்குள்ள அணுக்கத்தையும் எங்களிடம் பகிர்ந்துகொண்டார்கள்.
முழு இசைக்கோவையை வெளியிடும் முன், பாடகர்களின் அனுபவங்களையும், ராஜன் சோமசுந்தரம் அவர்களின் காலத்தையும் சரித்திரத்தையும் தன் இசையின் வழியாக பதிவு செய்யும் புதுப்புது முயற்சிகளையும் பிரதிபலிக்கும் இந்த Trailer-ஐ கி.ரா-அவர்களின் பிறந்த நாளான செப்-16-ல் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறோம்.
அன்புடன்,
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)