க.நா.சு காணொளி அரங்கு, அமெரிக்கா – யுவன் சந்திரசேகர்
யுவன் நூல்கள் விருது சார்ந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையில்- சீரோ டிகிரி
அன்புள்ள ஜெ
யுவன் சந்திரசேகர் பற்றி உங்கள் வழியாகவே அறிந்துகொண்டேன். தொடர்ச்சியாக நீங்கள் அவரைப் பற்றி எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள். தொண்ணூறுகளில் இலக்கிய மும்மூர்த்திகள் என்று ஒரு லிஸ்டைப் போட்டுவிட்டார்கள். அதனால் மறைக்கப்பட்டவர்களிலொருவர் யுவன் என நினைக்கிறேன். நமக்கு என்றைக்குமே இந்த மூன்று என்பது முக்கியமான கணக்குதானே. நாலு ஐந்து எல்லாம் வெளியே போய்விடும். யுவன் அண்மைக்காலமாக நிறையக் கவனிக்கப்படுகிறார். அது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
யுவன் சந்திரசேகர் மாற்றுமெய்மையை அறிமுகம் செய்தார் என்று சொல்கிறார்கள். ஆனால் இங்கே புதுமைப்பித்தன் எல்லாவற்றுக்கும் தொடக்கம். புதுமைப்பித்தனின் அன்றிரவு போன்ற கதைகளின் அமைப்பும் அவருடைய சில மர்மக்கதைகளின் மனநிலையும்தான் யுவன் கதைகளிலுள்ளன. (ஒரு கதையில் ஒருவர் இமயமலையில் உறைநிலையில் இருப்பார்) அதன் பிறகு லா.ச.ரா நிறைய எழுதியிருக்கிறார். பச்சைக்கனவு ஒரு நல்ல உதாரணம். அந்த மரபிலே வருபவர் யுவன் சந்திரசேகர். அந்த வகை இலக்கியம் என்றைக்குமே இங்கே உண்டு.
யுவன் சந்திரசேகரின் படைப்புகளிலே உள்ள சிறப்பு அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலுள்ள சித்திரங்களும் அவருடைய சகஜமான நடையும்தான். ஒரேசமயம் பல புள்ளிகளைத் தொட்டுக்கொண்டு செல்லும் அவருடைய கதைகள் முக்கியமானவை. கூடுதலாக அவர் கதைகளிலே ஒரு ஜென் சார்ந்த பார்வையும் உண்டு. யாத்ரிகன் அவருக்குப்பிடித்த வார்த்தை என நினைக்கிறேன். அவையெல்லாம் சேர்ந்து உண்டான ஒரு அழகுதான் அவர் கதைகள்.
வாழ்த்துக்கள்
எம்.ஆ.மணி
*
யுவன் சந்திரசேகர் காணொளிகள். சுருதி டிவி
அன்புள்ள ஜெ,
யுவன் சந்திரசேகரின் நீர்ப்பறவைகளின் தியானம் என்னும் தொகுப்பு எனக்கு மிகவும் பிடித்தமானது. அதை பலமுறை படித்திருக்கிறேன் அதிலுள்ள. “நான்காவது கனவு” கதையின் ஜாமங்கள், “காணாமல் போனவனின் கடிதங்கள்” போன்ற கதைகள் எனக்கு கொஞ்சம் புரிந்தும் கொஞ்சம் புரியாமலும் இருந்தன. முக்கியமாக இலக்கியத்திலுள்ள சிக்கலும் மொழிப்பிரச்சினையும் இல்லை. குமுதம் விகடன் கதைகளைப்போல வாசிக்கலாம். ஆனால் மறந்துபோகாமல் மனசிலே நின்றுகொண்டே இருக்கும். இந்தக்கதைகளெல்லாமே ஒன்றுடனொன்று கலந்துவிட்டன. எந்தக் கதையில் எந்தச் சம்பவம் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் அதுவே ஒரு சிறப்பான அனுபவம் என நினைக்கிறேன்.
ரவீந்திரன் மனோ
*
அன்புள்ள ஜெ
யுவன் சந்திரசேகர் மொழியாக்கம் செய்த ஜென் கவிதைகளின் தொகுதி என் வாசிப்பில் எப்போதுமே இருந்துகொண்டிருக்கும். அவை தமிழிலேயே எழுதப்பட்ட கவிதைகள் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டதுண்டு. அற்புதமான கவிதைகள் அவை. ஜென் என்றால் மனதின் ஒரு துளி என்று எனக்குப் படும். அந்த அனுபவம் அக்கவிதைகளிலே உண்டு
விஷ்ணுபுரம் விருதுபெற்ற யுவன் சந்திரசேகருக்கு வணக்கம்
ராஜ் முகுந்தன்