தொடர்- கடிதம்

நித்யா – மாணவர் ஷௌகத் அலியுடன்

இரு சங்கிலித்தொடர்கள்

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம்.

தங்களின் விரிவான பதில் என் இன்றைய நாளை மிகவும் அழகாக்கியது. ஆனால் அதைவிட அழுத்தமான அலைக்கழிப்புக்கு உள்ளாக்கியது.

நான் யாருக்கோ கேட்பது போல கேட்டிருந்தாலும், என்னை சரியான இடத்தில் சரடு எடுப்பது போல எடுத்தது தங்களின் இந்த வரிகள் உலகியலின் பொதுவழி என்பது தனக்கு வந்த மரபை இன்றைய சூழலுடன் இணைத்துக்கொண்டு  வாழ்வது. நவீன அறம், ஒழுக்கம், நாகரீகத்துடன் முரண்படாமல் தனக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வது. அதையே நீங்கள் சொல்கிறீர்கள்.’ நான் எங்கு நின்று கொண்டு அந்த கேள்வியைக் கேட்டேன் என்பதற்கு மிகச்சரியான விதத்தில் என்னை நோக்கி திரும்பிய கணை இது.  முதலில் ‘அப்படியெல்லாம் நான் இல்ல’ என சொல்ல எத்தனித்தேன் . ஆனால் ஆழ் மனம் என்னை அகத்தாய்வு செய்து ‘ஆமாம் நீ தான் அது’ எனறு சொன்னது .

அடுத்த வரி அதற்கு வெளியே இரண்டாவது வழி ஒன்றுண்டு. மிகச்சிலருக்கே உரியது அது. அதை அறிவின் வழி எனலாம்.’. இது என் தோள் தொட்டு  ‘வருகிறாயா, இல்லையா?’ என்பது போல இருந்தது.

மரபின் மூன்று கூறுகளையும் , மரபுச் சங்கிலி வகைகளையும் கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல சொல்லி
இந்தஅறிவின் பாதையை தெரிவுசெய்ய ஒரு முழுமையான நோக்கு தேவை. தொடர்ச்சியாக கற்றுக்கொண்டிருக்கும் மனநிலையும் உழைப்பும் தேவை. உரிய ஆசிரியர்களை கண்டடைந்து கற்றுக்கொள்ளும் தன்னடக்கமும் தேவை‘ என்ற தங்களின் இந்த வரிகள். நீ எங்கு இருக்கிறாய் எங்கு செல்ல போகிறாய் என்று என்னை மறுபடியும் கேட்டது.

இன்று காலையில் இருந்து பல முறை அகமகிழ்வுடனும் , சிலிர்ப்புடனும், கொந்தளிப்புடனும் தங்களின் பதிலையே வாசித்துக்கொண்டிருந்தேன்.

என்ன கொடுமை, பைனான்ஸ் நடத்துகிறான், வட்டிக்கு விடுகிறான், இலக்கியத்திலும் ஈடுபடுகிறான்என்று ஜெயகாந்தன் சொல்லியதாக அண்ணன் பவா  சொல்லக் கேட்டு..என் அப்பா அவர்கள் இருக்கும் போது என் மாத சம்பளத்தில் ஒரு சிறு தொகையைப் போட்டு உறவினர்கள் சிலரோடு சேர்ந்து ஆரம்பித்த ‘நிதியகத்தில்’ (விவசாயம் சார்ந்த கூலித்தொழிலாளர்களை, சின்னஞ்சிறு வேலைகள் செய்வோரை  எதிர்பார்த்து செயல்படும்) இருந்து வட்டியில் ஒரு ரூபாய் கூட வேண்டாம் என்று வெளியில் வந்தவன் நான்.
அது ஒன்றும் சாதனை அல்ல . ஆனால் என்னளவில் அது ஒரு உடைப்பு. ஆனால் இப்போது  என் முதல் ஆசிரியரான தந்தையையும் குறை சொல்லமாட்டேன். ஜே.கே வின் பாணியில் சொல்வதென்றால் ‘அது அந்த நேரத்து அவரின் நியாயம்’

இன்றைய தங்களின் எனக்கேயான பதில் என் வாழ்வில் பல தரிசனங்களையும் உடைப்புகளையும் நிகழ்த்தி வேறுபாதைக்கு இட்டு செல்லும் என நம்புகிறேன் . அது அறிவும் ஞானமும் கலந்த பொன்னிறப்பாதையாக இருக்க தங்களின் ஆசியை வேண்டுகிறேன் .

அன்புடன் ,
கே.எம்.ஆர்.விக்னேஸ்

முந்தைய கட்டுரைசங்கம், காதல், கடிதம்
அடுத்த கட்டுரையுவன், கடிதங்கள்