ஓயாமல் ஒவ்வொரு கணமும் எண்ணிக்கொண்டிருப்பவர்களின் உள்ளே இருந்துகொண்டிருக்கும் உள்ளே ஆனவனை, உள்ளவனை, தொலைவிலிருப்பவனை, அருகிலிருந்து அனைத்துக்கும் உதவும் சேவகனை, தென்னன் பெருந்துறையில் கோயில்கொண்டவனை வேதங்களாக ஆனவனை, பெண்ணை உடலில்பாதியாக்கியவனை, எளியவனாகிய என்னை ஆட்கொண்ட நாயகனை, தாய்வடிவமாக ஆன தத்துவத்தை, ஏழுலகும் தானே ஆனவனை, அவ்வுலகங்களை ஆள்பவனை பாடியபடி ஆடுவோம் அம்மானை!
சொல்லிச்சொல்லி எஞ்சும் ஒன்றின் முன் வைக்கப்பட்ட சொற்கள். உள்ளமெல்லாம் கனிய எண்ணுபவர்களின் உள்ளே குடிகொள்பவன். அனைத்துக்கும் உள் ஆக ஆனவன். உள்ளவன். உள்ளுவதும் ஆனவன். உள்ளல் என்றால் இருத்தல் என்றும் எண்ணுதல் என்றும் உட்பக்கமாக ஆதல் ஒரே சமயம் பொருள் தரும் தமிழ்மொழி இயல்பாகவே வேதாந்த மெய்ப்பொருளை தன்னுள் கொண்டிருக்கும் மாயத்தில் மாணிக்கவாசகரின் கவிதை திளைக்கிறது.
சேய்மையிலிருப்பவனை, செம்மையானவனை, வேண்டியதெல்லாம் அளிக்கும் சேவகனானவனை, எக்கணமும் சென்று காணும்படி திருவன்ணாமலையில் பருவடிவமாக அமர்ந்தவனை எங்குமிருக்கும் நுண்ஒலிவடிவமாகியய் வேதம் ஆனவனை, வேதப்பொருளாக ஆனவனை, வேத நாயகனை சொல்லி வணங்குகிறது மணிவாசகரின் கவிதை.
பெண்ணை இடம் சேர்த்தவனை, அவ்வண்ணமே என்னையும் ஆட்கொண நாயகனை, ஆட்கொண்டு எனக்கு அன்னை வடிவமாக ஆன தத்துவசாரத்தை அறிகிறது அவரது மனம். ‘தத்’வம். எது அதுவாக ஆனதோ அது. அவனே ஏழுலகும் தானே ஆனவன். அவற்றை ஆள்பவன்.. அவனைப்பாடி அம்மானை ஆடுவோம் என்று துள்ளுகிறது மனம்.
ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானை,
சேயானை, சேவகனை, தென்னன் பெருந்துறையின்
மேயானை, வேதியனை, மாதிருக்கும் பாதியனை,
நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனை,
தாயான தத்துவனை, தானே உலகேழும்
ஆயானை, ஆள்வான, பாடுதுங்காண் அம்மானாய்
விசித்திரமான முரண்கள் வழியாக ஓடுகிறது இக்கவிதை. ஒன்றைச் சொன்னதுமே அவ்வாறு வகுத்துவிடமுடியாத அதன் இயல்புகண்டு அதனால் விடப்படுவதும் அவனே என்று சொல்லி முன்னகர்கின்றன சொற்கள். சிலையாக வழிபடப்படுவதும் அவனே. சொல்லால் வழிபடப்படுவதும் அவனே.அ வனே பிரபஞ்சம். அப்பிரபஞ்சத்திற்கு அப்பால் ஒரு கட்டளை வல்லமை இருக்குமென்றால் அதுவும் அவனே.
எல்லையின்மையை அதைச்சொல்லும் சொல்லின்மையை உணர்ந்தபின் ஆடுவதோ ஓர் எளிய அம்மானை. கொண்டும் கொடுத்தும் பெற்றும் இழந்தும் ஆடும் பொருளற்ற ஆட்டம். அவனை உணர்ந்து அவனை நினைத்து ஆடினால் அதன் ஒவ்வொரு ஆடலும் பிரபஞ்சலீலையாகிவிடும் போல. ஆடுக அம்மானை.
மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் அருளிய திருஅம்மானை
[மறுபிரசுரம். முதற்பிரசுரம் 2009 பெப்ருவரி]