பெண்களுக்கான யோகம்

பெண்கள் மட்டும்: யோகப்பயிற்சி முகாம்

வணக்கம் சார் ,

இன்று நாம் காணும் யோக கல்வியில்,  ஆசனங்களையும், சில மூச்சு பயிற்சிகளையும், அடிப்படை தியானங்களையும் கலந்து உருவாக்கி வைத்துள்ளதும், பெரும்பான்மையானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான,  வடிவம்  NON- TRADITIONAL YOGA  என்றும், வெறும் பயிற்சிகளாக இல்லாமல் அதன் தத்துவார்த்த தளம், ஒவ்வொரு முறை பயிற்சி செய்யும் பொழுதும்  சாதகருக்கு உடல் முதல் ஆழ்மனம் நிகழக்கூடிய சாதக பாதகங்கள் அவற்றை கையாளத்தேவையான ஆசிரியருடனான உரையாடல், வாழ்நாள் முழுமைக்குமான வாழ்வியல் கல்வி என ,முழுமையான யோகத்தை  TRADITIONAL YOGA என்றும் இரண்டு விதமான போக்குகள் இருப்பதை ஏற்கனவே கடந்த இருபது வருடங்களாக எல்லா வகையிலும் சொல்லி வருகிறோம்.

இதில் பெண்களுக்கான இடமென்ன?  இன்று யோகம் என்பது பெண்களுக்கு என்னவாக சென்று சேர்ந்திருக்கிறது? உண்மையில் பெண்களுக்கான யோகம் என்பது எதன் அடிப்படையில் அமையவேண்டும்? எல்லோருக்குமான ஒட்டுமொத்த பயிற்சிகள் என ஒன்று ஏன் இருக்க முடியாது? என்கிற பல கேள்விகளுக்கு,  யோகமரபை இன்றுவரை கொண்டுவந்து சேர்த்த  யோகியரும், ஞானியரும், நவீன மருத்துவத்தையும் முற்றறிந்த அறிஞர்களும், மிக விரிவாக உரையாடியுள்ளனர்.

உதாரணமாக, சுவாமி சத்யானந்த சரஸ்வதியின் மேற்பார்வையில் எழுதப்பட்ட  நூல்.

NAWA YOGINI TANTRA- YOGA FOR WOMEN

Swami mukthananda

உடலியல் ரீதியாக என்னவெல்லாம் சாத்தியங்கள், ஆணுடலிலிருந்து   பெண்ணுடல்  எவ்வகையில்லெல்லாம் வேறுபட்டது, அதனடிப்படையில் உள்ளுறுப்புகளின் இயக்கங்கள், ஐம்புலன்களின் வழியாக நுகரப்படும் அனைத்தும் எவ்வகை உணர்வாக, மாறுகிறது, எங்கே சேகரமாகிறது. அதனை செரிமானம் செய்வது எது?  என அறிவியல் ரீதியாக அணுகி படிப்படியாக அவளுள் உறையும் ஆன்மீகத்தளம் வரை செல்வதை பற்றி மிகச்சில நூல்களே பேசுகிறது, மற்ற அனைத்து யோக நூல்களும் இறுக்கமாக உடையணிந்த பெண்களின் ஜிம்னாஸ்ட்டிக் புத்தங்களே.

ஆகாரம், பயம், மைதுனம், நித்திரை, என்பதை நமக்கும் மிருகங்களுக்கும் சமமென வகுத்துள்ளது இயற்கை, புத்தி எனும் கருவியால் மேலெழ பணிக்கப்பட்டிருக்கிறோம். எனினும், முந்தைய தலைமுறைகளை விட, இன்றைய பெண்களே பயத்தை நிர்வகிப்பதில் மேலும் சிக்கல்களை ஏற்படுத்திக்கொள்கின்றனர். நுகர்வை வைத்து பயத்தை ஒத்திப்போடும் பெண்களே இங்கே அதிகம்,  அல்லது ஒவ்வொரு நாளும் அதை உள்ளே ஏதேனும் ஒரு தளத்தில் அழுத்தி வைக்காத ஒரு பெண்ணும் இருக்க முடியாது.

பயம் போன்றே, உணவும், மைதுனமும், உறக்கமும். இவற்றை மிகச்சரியாக நிர்வகிக்க,  மரபார்ந்த யோகம் ஒரு கல்வி திட்டத்தை கொண்டுள்ளது.

இன்று வரை வந்து சேர்ந்த யோக மரபுக்கு  முக்கிய காரணம், அதில் உள்ளடக்கமாக அமைந்திருக்கும், ஆயுர்வேத, தாந்த்ரீக, உளவியல், கருத்துக்களே, இன்று முறைப்படி செய்யக்கூடிய பயிற்சிகள் அனைத்துமே, இன்றைய நமது சிக்கல்களை தீர்ப்பதற்காக மட்டுமல்ல,  நாளைய சவால்களை எதிர்கொள்ளவும், நேர்மறை ஆற்றலால் நிறைந்து வாழவும் வழிவகுப்பவை. அல்லது அப்படியான பாடத்திட்டம் ஒன்று நம்மிடம் இருக்க வேண்டும்.

இதை பதஞ்சலி  ‘ஹேயம்  துக்கம் அனாகதம்’ என்கிறார், அதாவது  இனி வரக்கூடிய துன்பத்தையும்  இன்றே தவிர்த்தல்.

இப்படியான பாடத்திட்டம் ஒன்றை சில வருடங்களாக சிறிய குழுவிற்கு அறிமுகம் செய்து அதன் பலன்களை முழுவதுமாக பெற்று அனுபவிக்கும் நண்பர்களையும் அறிவோம்,

ஒரு உதாரணம் நண்பர் சுபஸ்ரீயின் இந்த கட்டுரை,

அருமணி

இதில் அவர் புதிய ஆசனம் கற்றுக்கொண்டார் என்பதை விட, ஆழத்தில் இருந்த ஒன்று என்னவாக மாறுகிறது என்பதே அதன் சாரம்.

மரபிலிருந்து பெற்றுக்கொண்ட இக்கல்வியை நாம் நடத்தும் முகாம்கள் வழியே  நண்பர்களுக்கு வழங்கலாம் என எண்ணுகிறேன். ஒவ்வொரு நாளும் அவர்களை ஆற்றல் மிக்கவர்களாக, மேலெழச்செய்யட்டும். பெண்ணென அவர்கள் எங்கே நிறைவர்களோ, அங்கு திகழட்டும்.

யோகியரும், ஞானியரும், கனிந்து வழங்கியது அதன் பொருட்டே.

அன்புடன்

சௌந்தர் .G

பெண்கள் மட்டும்: யோகப்பயிற்சி முகாம்

முந்தைய கட்டுரைஇரு சங்கிலித்தொடர்கள்
அடுத்த கட்டுரைஅனல்நிறுவுகை – கடிதம்