விழியின்மை, ஒரு கடிதம்

சனாதனம், சனாதன எதிர்ப்பு

ஜெமோ,

ஒரு தகவல். வேளாப்பார்ப்பார் பற்றிய செய்தி சிலப்பதிகாரத்தில் இல்லை. இதையெல்லாம் சரிப்பார்த்துவிட்டு எழுதவும். சாங்யதர்சனம் உட்பட அறுமதங்களும் வேத அடிப்படை கொண்டவையே. தகவல்களை சரிபார்க்கவும்.

எஸ்.

அன்புள்ள எஸ்,

தனிப்பட்ட முறையில் எழுதியமையால் பெயரைச் சுட்டவில்லை.

முதலில் சிலப்பதிகாரம் வாசியுங்கள். தத்துவத்தில் எதையாவது தெளிவாகப் புரிந்துகொள்ள முயலுங்கள். எந்த ஒரு விவாதத்திலும் புகுந்து, ஒரு சில பிழைகளை தோண்டி எடுத்து ‘அதெல்லாம் ஆதண்டிக் இல்லை’ என்று சொல்வது உங்களைப் போன்றவர்களின் பொதுப்பழக்கம். ‘ஆதண்டிக்’ அறிவு உங்களைப் போன்றவர்களுக்கே சாத்தியம் என்னும் நம்பிக்கையே அதிலுள்ளது. அதை உங்களுக்குள் சொல்லி நிறைவுற மட்டுமே அந்த பேச்சால் இயலும். தகவல்பிழைகள் என நீங்கள் சொல்வன பெரும்பாலும் உங்கள் புரிதல்பிழைகள். அவற்றைச் சுட்டிக்காட்டினாலும் உங்களால் ஏற்கமுடியாது.

இந்தவகையில் வந்த எல்லா கடிதங்களையும் நான் உடனே அழித்துவிட்டேன். இப்படி வெட்டிவிவாதங்களுக்கு எனக்கு நேரமில்லை. இது ஒருவகை சொறிந்து சுகித்தல் அன்றி வேறல்ல.நான் உங்களுக்கு எழுத ஒரே காரணம்தான். என்னைவிட இளைஞர். வயதானவர் என்றால் சரி ஒழிகிறது என விட்டுவிடலாம்.

நீங்கள் எழுதிய எல்லா கடிதங்களையும் பார்த்தேன். உங்கள் வாசிப்பு, மூளையுழைப்பு முழுக்க பிராமணர்களின் உயர்வை நிலைநாட்டுவதற்காக மட்டுமே. இந்தியா, இந்துமதம் இரண்டும் பிராமணர்களை மையமாகக்கொண்டது என நிறுவ ஓயாமல் போராடுகிறீர்கள். ஆனால் நீங்கள் இந்தியாவில் இல்லை, இந்தியரும் அல்ல. கடுமையான இந்து ஆசாரவாதியாக கற்பனை செய்துகொள்கிறீர்கள். ஆனால் கடல்தாண்டியவர், ஆசார அனுஷ்டானங்களை பேணாதவர் நீங்கள்

இப்படி நிறுவி எதை அடையப்போகிறீர்கள்? எவ்வளவு பிரம்மாண்டமான அறிவு விரயம், உணர்வு விரயம். எவ்வளவு பெரிய ஆன்மிக இருளுழல்வு. உங்களுக்குள் இருக்கும் எந்தக் குற்றவுணர்சியை அல்லது நிறைவின்மையை இதைக்கொண்டு நிரப்பிக்கொள்கிறீர்கள். இது உங்களை எந்த வகையிலும் நிறைவுறச் செய்யாது. மேலும் கசப்பும் துயரும் கொண்டவராகவே ஆக்கும்.

பிராமணரே உயர்ந்தவர், அவர்களுக்கே சிந்தனை சாத்தியம், இந்து மதமே அவர்களின் சொத்து என்றே ஆகட்டும். அதனால் உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது? நீங்கள் சென்றடைவது என்ன? என்றாவது யோசிப்பீர்கள் என்றால் நல்லது. நாம் இங்கே தொடர்பை நிறுத்திக்கொள்வோம்

ஜெ

முந்தைய கட்டுரைபெண்கள் மட்டும்: யோகப்பயிற்சி முகாம்
அடுத்த கட்டுரையுவன் சந்திரசேகர்- கடிதங்கள்