யுவன் -கடிதங்கள்

யுவன் நூல்கள் விருது சார்ந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையில்- சீரோ டிகிரி

அன்புள்ள ஜெ

யுவன் சந்திரசேகர் மீது அண்மைக்காலத்தில் உருவாகி வந்திருக்கும் வாசகர் கவனம் மகிழ்ச்சி அளிக்கிறது. என் பார்வையில் தமிழில் இசை பற்றி எழுதியவர்களில் மிகச்சிறந்த எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு, யுவன் சந்திரசேகர் இருவரும்தான். தி.ஜானகிராமன் இசை பற்றி எழுதவில்லை, இசை ஒரு பின்னணி மட்டும்தான். வெறுமே உணர்ச்சிகளைத்தான் இசையுடன் இணைத்துச் சொல்கிறார். இசைகேட்டு கண்ணீர்விடுவது மட்டும்தான் அதிலுள்ளது. ரங்கண்ணா அற்புதமான கதாபாத்திரம். ஆனால் அதற்கு இசை தேவையில்லை.

இசைக்கலைஞர்களின் மனம், இசைச்சூழல், இசையின் நுணுக்கங்கள் எல்லாம் அற்புதமாக வெளிப்பட்ட நாவல் என்றால் தில்லானா மோகனாம்பாள்தான். ஆனால் அது இலக்கியமல்ல. இலக்கியத்திற்குரிய ஆழமும் செறிவுக்கு அதுக்குக் கிடையாது. ந.சிதம்பர சுப்ரமணியனின் இதயநாதம் ஒரு நல்ல நாவல். ஆனால் அதுவும் ஆழமானது அல்ல. யுவன் சந்திரசேகரின் கானல்நதி இலக்கியத்தரமான இசைநாவல். இசையின் உலகத்தையும் இசைநுட்பங்களையும் வாழ்க்கையுடன் ஆழமாக இணைத்துப் பேசும் படைப்பு அது. பேட்டி போலவே ஓடும் நாவல் எனக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லை. அது வாழ்க்கையாக ஆகாமல் நின்றுவிட்டது என நினைக்கிறேன். யுவன் சந்திரசெகர் விருதுபெற்றதுக்கு வாழ்த்துக்கள்

ஆர்.தட்சிணாமூர்த்தி

யுவன் சந்திரசேகர் காணொளிகள். சுருதி டிவி

அன்புள்ள ஜெ

யுவன் சந்திரசேகர் விருது பெற்றதை சூழல் ஒட்டுமொத்தமாகக் கொண்டாடிக்கொண்டிருப்பதைக் காண்கிறேன். எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. அவரும் எந்த விவாதத்திலும் சிக்காமலேயே இருந்துவிட்டார். புனைகதையுலகில் அவருக்கென ஓர் இடம் உள்ளது. அவருடைய சிறப்பு உரையாடல்கள்தான். தமிழிலக்கியத்தில் பலர் நல்ல உரையாடலை எழுதாதவர்கள். நெரேஷனை நம்பியே கதையை கொண்டுசெல்பவர்கள். யுவன் கதைகளிலுள்ள பேச்சுக்கள் சுவாரசியமானவை. அவ்வகையில் அவர் தி.ஜானகிராமனின் உலகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு விருது அளிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வு

சிவக்குமார் எம்

அன்புள்ள ஜெ

யுவன் சந்திரசேகர் விஷ்ணுபுரம் விருது பெறுவது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. என்னுடைய ஆதர்ச எழுத்தாளராக அவரையே நான் கருதி வருகிறேன். இது வரை இயல் உட்பட எந்த முக்கியமான விருதும் அவருக்குக் கிடைக்கவில்லை. (சாகித்ய அக்காதமி எல்லாம் பிறப்பால் பிராமணர்களுக்குக் கொடுக்கக்கூடாதென்று முடிவெடுத்திருக்கிறார்கள்) யுவன் விஷ்ணுபுரம் விருது பெறுவது நீண்டநாட்களாக இருந்த பெரும் மனக்குறையை நீக்குவதாக உள்ளது. இலக்கியத்தில் அவருக்கு இருக்கும் இடம் இப்போது வந்துகொண்டிருக்கும் குறிப்புகளிலிருந்தே தெரிகிறது. மகிழ்ச்சியாக உள்ளது.

ஸ்ரீனிவாஸ்

யுவன், கடிதங்கள்

யுவன், கடிதங்கள்

யுவன் சந்திரசேகர்- கடிதங்கள்

யுவன் சந்திப்பு – சக்திவேல்

யுவன் – விஷ்ணுபுரம்- கடிதங்கள்

யுவன், விஷ்ணுபுரம் விருது -செய்திகள்

யுவன் சந்திரசேகர், விஷ்ணுபுரம் விருது, வாழ்த்துகள்

முந்தைய கட்டுரைபுத்தரிடம் – ஷாகுல் ஹமீது
அடுத்த கட்டுரைமின்மினிகளுடன்…