யுவன், கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

யுவன் சந்திரசேகருக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்படும் செய்தி எனக்கு முதலில் கொஞ்சம் திகைப்பைத்தான் அளித்தது. அவரை நான் மூத்த எழுத்தாளராக நினைக்கவில்லை. அவருடைய வயது என்ன என்று பார்த்தபோதும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. மானசீகமாக அவரை அப்படி வைத்திருக்கிறேன். என்னை மாதிரி 90களில் இருந்து படிப்பவர்களின் சிக்கல் இது. அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி எல்லாம் முதல் தலைமுறை. வண்ணதாசன், நாஞ்சில்நாடன் இரண்டாம் தலைமுறை. யுவன் சந்திரசேகர் மூன்றாம் தலைமுறை. விருது மூன்றாம் தலைமுறை வரை வந்துவிட்டது. சிறப்பான விஷயம்.

இந்த விருதுகளில் பெரியதாக தேர்வுசெய்ய எல்லாம் ஒன்றுமில்லை. யார் யார் என்பது எல்லாருக்கும் தெரியும். சாதனைகளெல்லாம் புறவயமானவை. எந்த வரிசையில் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. யுவன் சந்திரசேகருக்கு இதுவரை பெரிய அளவில் விருதுகள் ஏதும் கிடைத்ததில்லை. நீங்களே ஒருமுறை எழுதியதுபோல இமையம் தமிழில் ஞானபீடம் தவிர எல்லா விருதுகளையும் பெற்ற எழுத்தாளர். ஆனால் அவர் தன்னை தமிழகம் அங்கீகரிக்கவில்லை என நினைக்கிறார். யுவன் சந்திரசேகருக்கு மனக்குறையே இல்லை.

யுவன் சந்திரசேகரின் கவிதைகளைத்தான் நான் முதலில் படித்தேன். வெளியேற்றம் வரை அவருடைய நாவல்களை வாசித்திருக்கிறேன். கண் அறுவைசிகிச்சைக்குப்பிறகு படிப்பு குறைந்துவிட்டது. சகஜமாகப் பேசிக்கொண்டிருக்கும் பாவனையில் எழுதும் எழுத்தாளர் என நினைக்கிறேன். அவருடைய எழுத்தின்மேல் எனக்கிருக்கும் பிரியம் இந்த நாளில் நினைவுகளை தூண்டுகிறது. அவருடைய கதைகளில் வரும் அவர் அல்லது அவரைப்போன்ற கிருஷ்ணன் எனக்கு மிகவும் பிடித்தமான கதாபாத்திரம்.

அன்புடன்

சங்கர நாராயணன்

*

அன்புள்ள ஜெ

யுவன் சந்திரசேகருக்கு அளிக்கப்பட்ட விஷ்ணுபுரம் விருது மனநிறைவை அளித்தது. நமக்குப்பிடித்த எழுத்தாளருக்கு விருது அளிக்கப்படும்போது மிகுந்த நிறைவு உருவாகிறது. யுவன் சந்திரசேகர் என்ன செய்கிறார்? அவர் ஒருபக்கம் உலகாவழ்க்கைக்கு அர்த்தமில்லை என்ற சித்திரத்தை நாவல்கள் மற்றும் கதைகள் வழியாக உருவாக்குகிறார். மறுபக்கம் அடியில் இன்னொரு அர்த்தம் இருக்கிறது என்று ஒரு கற்பனையுலகை உருவாக்குகிறார். மாற்றுமெய்மை என அதை அவர் சொல்கிறார். அற்புதமான கதைகள் அவை. அவருக்கு என் வாழ்த்துக்கள்

எம். அன்பழகன்

*

அன்புள்ள ஜெ

நலம்தானெ?

யுவன் சந்திரசேகருக்கு அளிக்கப்பட்டுள்ள விஷ்ணுபுரம் விருதுக்கு வாழ்த்துக்கள். விஷ்ணுபுரம் விருது பெற்றவர்களை எடுத்துப்பார்த்தேன். பெரும்பாலானவர்கள் எந்த விருதும் கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்ட எழுத்தாளர்கள். இப்போது கோவையை மையமாகக் கொண்டு ஏராளமான விருதுகள் வழங்கப்படுகின்றன. அவைகூட யுவன் சந்திரசேகருக்கு அளிக்கப்படவில்லை. அவர் ஒரு கர்மயோகி போல எழுதிக்கொண்டிருக்கிறார். விஷ்ணுபுரம் விருது அவருக்கு முதல்முதலாகக் கிடைப்பதுகூட சிறப்புதான். விஷ்ணுபுரம் அமைப்பு வழியாக ஒர் இலக்கிய இயக்கத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறீர்கள். முக்கியமான இலக்கியவாதிகளை கௌரவிக்கிறீர்கள். இளம்படைப்பாளிகளை அடையாளம் காட்டுகிறீர்கள். இது ஒரு பெரிய பணி.

தில்லை நடராசன்

முந்தைய கட்டுரைப.சிவகாமி
அடுத்த கட்டுரை’காபி’யம்