யுவன், கடிதங்கள்

அன்பின் ஜெ.

விஷ்ணுபுரம் விருது – 2023-ஆம் ஆண்டுக்கான விருது யுவன் சந்திரசேகர் அவர்களுக்கு என்கிற அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்தது. விருதாளர்களில் மிக மூத்தவரான ஆ.மாதவன் பிறந்து ஏறக்குறைய முப்பதாண்டுகள் கழித்து பிறந்த யுவன் இந்த இந்த விருதைப் பெறுபவர்களிலேயே மிகவும் இளையவர்.

விக்கி அண்ணாச்சியையும் சேர்த்துக் கொண்டு கணக்கிட்டால் விருதாளர்களில் பெரும்பாலானவர்கள் நாடு விடுதலை அடைந்ததற்குப் பின் பிறந்திருக்கிறார்கள் என்பதும் இதுவரை ஒரேயொரு பெண்கூட இந்த விருதைப் பெறும் வாய்ப்பை பெறாமல் போனது ஏனென்றும் யோசிக்க வைக்கிறது.

விருதைப் பெற்றவர்களில் சாரு, யுவன் ஆகியோரின் கதைகளில் சென்னை நகரத்தை காண முடிகிறது, ஓரளவு ஞானக் கூத்தன் கவிதைகளில் சிங்காரச் சென்னை வந்து எட்டிப் பார்க்கிறது. ஆனால் எவருமே சென்னையை பிறந்த இடமாக, சொந்த ஊராக கொண்டிருக்கவில்லை

எனினும் இவ்வாறு விருது பெற்ற பலரும் தங்களுடன் அவ்வாறான வெளிப்பாட்டின் தொடக்கத்திலேயே அறிமுகமும், நட்பும் கொண்டிருந்ததும் சாருவுடன் யுவன் மணிக்கணக்காக பேசி இருந்திருப்பதெல்லாம்தான் இந்த இலக்கியத்தின் பயன்மதிப்பை உணர்த்தக் கூடியவை.

இலங்கையிலிருந்து இணைய இதழை வெளியிட்டுக் கொண்டிருக்கும் (மருத்துவரும்) நண்பருமான இலக்கியவாதி சுமார் ஒருமாதம் முன்பு (வாட்ஸப் காலில்) பேசிக் கொண்டிருக்கும்போது பல்லாண்டுகளாக நினைத்துக் கொண்டிருக்கும் கோவை விஷ்ணுபுரம் விருது விழாவுக்கு வருவதற்கு பயணத் திட்டங்களில் இருப்பதை சொன்னபோது – கிட்டத்தட்ட விழா தேதியை, விருது பெற இருக்கும் “யுவன்” பெயரை என்னிடம் மிகச் சரியாக சொன்னார்.

யார், யாருக்கு அவ்வாறு விருது கிடைக்க இருக்கும் என்றொரு பட்டியலை நானேகூட.மனதுக்குள் போட்டு வைத்துள்ளேன். 1966-ல் பிறந்த எஸ்.ரா.வும், 68-ல் பிறந்த மனுஷ் என கொஞ்சம் காலம் போகட்டும், அதற்குள் பிற மூத்த இலக்கியவாதிகள் – அவர்கள் உயிருடன் இருக்கும்போதே – கௌரவிக்கப்பட்டு விட வேண்டும் என்பது தேர்வுக் குழுவின் முன்னுள்ள சவால் என் யூகிக்கிறேன்.
ஆனால் exam result leak-ஆவதைப் போல் சக்திவேல் சில நாட்களுக்கு முன்பே வெளிப்படையாக இங்கு தளத்தில் எழுதிவிட்டதைப் பார்த்து வியப்பாக இருந்தது. (அந்த கட்டுரையை இன்று தேடினேன், எடுக்க முடியவில்லை – நீக்கப்பட்டிருக்கிறது என்று கருதுகிறேன்).

இதொரு ரிலே ரேஸ் போல் தெரிகிறது, 90-களில், இரண்டாயிரமாவது ஆண்டுகளில் பிறந்த ஏராளமான இளம்  இலக்கிய ஆர்வலர்கள், கவிஞர்களாக, சிறுகதை ஆசிரியர்களாக, விமர்சகர்களாக என வந்து கொண்டே இருக்கிறார்கள்.
ஹெர்மன் ஹெஸ்ஸே-வின் “சித்தார்த்தன்” நாவலின் ஆங்கிலம், தமிழ், உருது மொழிபெயர்ப்புகளை படித்து அந்த கதாபாத்திரங்களின் மெய்யியல் தளத்தில் மூழ்கும் அளவுக்கு திகைப்பு அதிகமாகி விட்டது. கேரளாவின் தலைச்சேரியில் இருக்கும் ஹெர்மன் ஹெஸ்ஸே சொஸைட்டி ஆஃப் இந்தியா அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குள்ளச் சித்தன் சரித்திரம், யுவன் சிறுகதைகள் முழுத் தொகுப்பு ஆகியவற்றை படித்து இருபதாண்டுகள் இருக்கும். இடையில் அவ்வப்போது பருவ இதழ்களில் வந்தவற்றை படித்ததோடு சரி, நாவலாக எதையும் வாங்கவில்லை. இந்த வகையில் படிக்காமல் தவறவிட்டதை ஈடுகட்ட யுவனை அவருடைய “எதிர்க்கரை”யிலிருந்து தொடங்கலாம் என்றிருக்கிறேன். அதற்குரிய மனநிலையை விருது அறிவிப்பு கொடுத்திருக்கிறது.

யுவனுடைய மீமெய்மையை உள்செறிக்க ”ஹெஸ்ஸே” நல்ல வாய்ப்பாக அமைத்துக் கொடுத்திருக்கிறார். அதொரு நற்சகுனம், யுவனை வாசித்துவிட்டு கோவையில் சந்திப்போம். டிசம்பரில் விஷ்ணுபுர விருது விழாவுக்குப் போவது நேர்த்திக் கடனைப் செலுத்துவதைப் போன்றது.

அதுவே எங்கெங்கோ இருக்கும் ஆயிரம், இரண்டாயிரம் தமிழ் இலக்கிய ஆர்வலர்களை விழா நடைபெறுமிடத்தில் கூட வைக்கிறது. யுவனுக்கும், விருது தேர்வுக் குழுவுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

கொள்ளு நதீம், ஆம்பூர்.

பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருதுபெரும் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். யுவன் சந்திரசேகர் நாவல் முழுவதும் மாதம் ஒன்றாக வாசித்து உரையாட வேண்டும் என்ற நோக்கில் சென்ற வருடம் “யுவசுக்கரி” என்ற குழுவை சுக்கிரி குழுமத்தில் இருக்கும் சில நண்பர்கள் இணைந்து உருவாக்கி, யுவனின் அனைத்து நாவல் களையும் வாசித்து உரையாடினோம். யுவனின் ஒன்பது நாவல்கள் மற்றும் மணற்கேணி என்ற குறுங்கதை தொகுப்பு உட்பட மொத்தம் பத்து நாவல்களை வாசித்து முடித்துவிட்டோம்.

ஆரம்பத்தில் யுவனின் படைப்பின் கலைத்து போடும் உத்தி, கால்களே இல்லாமல் ஆங்காங்கே அந்தரங்கத்தில் நிற்கும் கதைகள், கதையில் வரும் கதை சொல்லி சொல்லும் கதைக்குள் இருக்கும் கதை சொல்லி சொல்லும் கதை, சுற்றி நிகழ்வனவற்றை சொல்லி முழு கதையையே வாசக இடைவெளியாக உருவாக்கி அளிக்கும் கூறுமுறை, என்று ஒரு முழு குழப்பம் அனைவருக்கும் உண்டானது. தொடர்ந்து நண்பர்கள் உரையாடி உரையாடி ஒருவாராக யுவனை தொகுத்துக் கொண்டோம் ( யுவனை தொகுத்துக் கொண்டோம் என்று சொன்னால் யுவனுக்கே ஆச்சரியம் வரலாம்) யுவனின் சுவாரசியமான எழுத்தே எங்களை உற்சாகம் கொண்டு முன் நகரவைத்தது.

“வெளியேற்றம்” “குள்ள சித்திரன் சரித்திரம்” போன்ற நாவல்கள் உருவாக்கி காட்டும் மாற்று மெய்மை ஒரு புறம் என்றால் இசை கலைஞர்களையும் இசை வெளியையும் பற்றி பேசும் “கானல் நதி” “நினைவுதிற்காலம்” இன்னொரு உச்சம். யுவனின் நாவல்களை பற்றி மட்டும் தனியாக ஒரு சில கடிதங்கள் எழுதலாம் என்றிருக்கிறேன்.

எழுத்தாளர் சுந்தர ராமசாமியை பற்றி கூறும் போதெல்லாம் நீங்கள் குறிப்பிடுவது ஒன்று உண்டு, எழுத்தாளர்களிலேயே அவர் அழகன் என்று. அப்படி ஒரு அழகை நாங்கள் யுவனில் காண்கிறோம் . யுவன் சந்திரசேகர் உண்மையிலேயே மிக அழகானவர், அவருக்கே உரிய பிரத்தியேகமான அந்த கலகல சிரிப்பு சேரும்பொழுது இன்னும் பொழிவுகொள்கிறார்.

சதீஷ்குமார்

தென்கொரியா

முந்தைய கட்டுரைமேலாங்கோடு சிவாலயம்
அடுத்த கட்டுரைஇரு சங்கிலித்தொடர்கள்