சனாதன தர்மம் பற்றிய உதயநிதியின் பேச்சு பற்றி என்னிடம் ஆங்கிலத்தில் எழுதும் கேரள இதழாளர் ஒருவர் தொலைபேசியில் பேசினார். என் கருத்துக்களைச் சுருக்கமாகச் சொன்னேன். அவை வெளியாயின. என் கட்டுரைகளில் எப்போதுமே வாசிப்பில் என்னென்ன குழப்பங்கள் உருவாகும் என ஊகித்து, அவற்றையும் கருத்தில் கொண்டு, முழுமையாகவும் விரிவாகவும் கருத்துக்களைச் சொல்லியிருப்பேன். ஏனென்றால் எல்லா கருத்துக்களையும் இங்கே திரித்துச் சிதறடித்துவிடுவார்கள். ஆனால் பேட்டிகளில் அவ்வாறு அமைவதில்லை. சுருக்கமாகவே அந்தக் கருத்து இருந்தது.
என் கருத்தையொட்டி ஒரு விவாதம் உருவானதை அறிந்தேன் – நான் பயணங்களில் இருந்தமையால் அவற்றைப் பெரியதாக கவனிக்கவில்லை. பல்வேறு இதழாளர்கள் அழைத்து மேலும் கருத்துக்களைக் கோரினர். அவர்கள் இதை ஒரு அரசியல் சார்ந்த விவாதமாக ஆக்க முயல்கிறார்கள் என தோன்றியது. எனக்கு அதில் ஆர்வமில்லை. ஆகவே தவிர்த்துவிட்டேன். நான் அரசியல்வாதி அல்ல. அரசியல் கருத்துக்கள் சொல்வதில்லை.
இன்னொரு பக்கம் எனக்கு அறிவுரைகள், ஆலோசனைகள், விளக்கங்கள் வந்துகொண்டிருந்தன. இந்த வகை விவாதங்களில் எல்லாருமே தங்களை நிபுணர்கள் என்றே எண்ணிக்கொள்கிறார்கள். பலரும் அவரவர் அரசியல், அவரவர் மதநம்பிக்கை, சாதிப்பற்று சார்ந்து எதையாவது சொல்கிறார்கள். வேறுவகையில் என் மதிப்புக்குரியவர்களும் அதிலுண்டு.
இது மதம் சார்ந்த விஷயம் அல்ல, தத்துவம் சார்ந்தது, ஆன்மிகம் சார்ந்தது. இதில் நான் ஒருவரின் குரலை பொருட்படுத்த வேண்டும் என்றால் அவருடைய குருமரபு என்ன, அவருடைய நேரடி ஆசிரியர் எவர் என்பது எனக்கு முக்கியம். அதன் வழியாக ஒட்டுமொத்தமாகவே அவரை நான் கருத்தில்கொள்ள முடியும்.
அவ்வாறல்லாமல் அங்கிங்கே எதையாவது வாசித்துவிட்டுப் பேசும் எவரையும் எவ்வகையிலும் நான் கவனிக்கத் தேவையில்லை. தத்துவத்தில் நேரடி ஆசிரியரின் சொற்களினூடாக அன்றி எந்த தெளிவையும் எவரும் அடைய முடியாது. ஆன்மிக தத்துவத்தை தங்கள் நிலைபாடுகளுக்கேற்ப எவரும் எளிதில் வளைக்கலாம். நேரடி ஆசிரியரில்லாமல் தத்துவம் வாசிப்பவர்கள் வாசிக்க வாசிக்க மேலும் மடையர்களாவார்கள்.
*
நான் ஏற்கனவே திருமாவளவனின் சனாதன எதிர்ப்பு குறித்து என் தளத்தில் எழுதிய கட்டுரையின் சுருக்கமே ஆங்கிலத்தில் நான் சொன்னது. அது இருபதாண்டுகளாக திரும்பத்திரும்ப இந்த இணையப்பக்கத்தில் வெளியாகியுள்ள கருத்துதான். முப்பதாண்டுகளாக நான் சொல்லிக்கொண்டே இருக்கும் கருத்துதான். இதில் ஐயம் கேட்பவர்களுக்கு மட்டுமே விளக்க விரும்புகிறேன். விவாதிக்கத் தகுதியானவர் எவர் என எனக்குத் தெரியும். ( சனாதனம், திருமாவளவன் )
மீண்டும் சுருக்கமாகச் சொல்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் பழைய கட்டுரைகளை வாசிக்கலாம்.
இந்து ஆன்மிகம், இந்து தத்துவம் இரண்டையும் இணைத்து ‘இந்து மெய்ஞான மரபு’ என்று சொல்வது என் வழக்கம். அதில் ஞானத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக அச்சொல்லை பயன்படுத்துகிறேன். அது ஒற்றைப்படையான ஒரு மதக்கட்டுமானம் அல்ல. ஒற்றைக் கருத்துநிலையும் அல்ல. அதற்கு எதுவும் மையமும் அல்ல. அப்படி ஒரு மையத்தை, ஒற்றைத் தன்மையை உருவாக்க முயல்பவர்கள் ஆன்மிகத்தை அல்ல, அரசியலையே நோக்கமாகக் கொண்டவர்கள். அது இந்து மெய்ஞான மரபின் அழிவுக்கே வழிவகுக்கும். இந்து மெய்ஞான மரபில் பற்று கொண்ட எவரும் எதிர்த்தாகவேண்டியது அந்தத் தரப்பு.
இந்திய மெய்ஞான மரபையும் ஒற்றைப்படையானதாக கருத முடியாது. அது பல நூற்றாண்டுகளாக நீடிக்கும் தீவிரமான தத்துவ விவாதங்கள் வழியாக, பரஸ்பர மறுப்புகள் வழியாக உருவாகி வந்தது. அந்த விவாதம் அடிப்படைக் கேள்விகள் சார்ந்தது என்பதனால் அது ஒருபோதும் முடிவடையவும் வாய்ப்பில்லை. அவ்வாறு பல தரப்புகள், பல வழிகள் ஒன்றையொன்று மறுத்து இயங்கும்போது மட்டுமே மெய்யான ஆன்மிகதத்துவ உசாவலுக்கான வாய்ப்பு ஒரு ஞானப்பயணிக்கு அமைகிறது.
பல ஆயிரமாண்டுகளாக இங்கே இருந்து வந்த ஞானசபைகளின் செயல்முறை இது. அந்த அவைகளில் எல்லா தரப்பினரின் குரல்களும் ஒலித்துவந்தன. ஒரு தரப்பைச் சேர்ந்தவர் தன்னுடையதே உண்மை, அறுதியானது என நம்பலாம். ஆனால் அதை மறுப்பவரை எதிர்ப்பதும் வெறுப்பதும் அறிவின்மை.
தத்துவம் – மெய்ஞானம் ஆகியவற்றில் மிக எளிய அறிமுகம் கொண்ட ஒருவர்கூட ’எதிரித் தரப்பு’ ஒன்று உண்டு என எண்ண மாட்டார். தத்துவத்தில் எதிர்த்தரப்புகளே உள்ளன. ஒலிக்கக்கூடாத தரப்பு, அழிக்கப்படவேண்டிய குரல் என என ஏதுமில்லை. மெய்யியலில் எக்குரலும் ஞானப்பயணியை புண்படுத்துவதோ, அவமதிப்பதோ அல்ல. எதுவும் தடைசெய்யப்படவேண்டியது அல்ல.
ஆகவே நான் ‘மதநிந்தை’ என்னும் கருத்துக்கே எதிரானவன். அந்த மனநிலையைப்போல அறிவுக்கும் ஞானத்துக்கும் எதிரான ஒரு நிலை இல்லை என நினைப்பவன். தொடர்ச்சியாக, முப்பதாண்டுகளாக, எல்லா தருணங்களிலும் இதைச் சொல்லி வந்திருக்கிறேன். ஞான விவாதங்களில் நம்பிக்கையாளர்களின் குரல்களுக்கு இடமில்லை. அறிவார்ந்த விவாதம் எப்போதும் அறிந்தவர்களால் வழிநடத்தப்படவேண்டும். அவர்களின் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தாகவேண்டும்.
*
இந்து மெய்ஞான மரபின் பல்வேறு தரப்புகளை ஒட்டுமொத்தமாக மூன்றாகப் பகுக்கலாம். ஒன்று வைதிகத் தரப்பு. இன்னொன்று எதிர்வைதிகத் தரப்பு. மூன்றாவது, வேதாந்தத் தரப்பு.
வைதிகத் தரப்பு என்பது வேதங்களை முதன்மையானதும் அறுதியானதுமான ஞானமாகவும், பிற அனைத்தையும் அதன் தொடர்ச்சியாகவும் பார்ப்பது. வேதவேள்விகளை முதன்மைப்படுத்துவது. அதையொட்டிய சடங்குகள், ஆசாரங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை உறுதியாகப் பின்பற்றுவது. சடங்குவாதிகள், ஆசாரவாதிகள் என அவர்களைச் சொல்லலாம். பழைய மரபில் அவர்கள் பூர்வமீமாம்சகர்கள் எனப்பட்டனர்.
பூர்வமீமாம்சம் இந்திரன், வருணன் போன்ற வேதக்கடவுள்களை மட்டுமே ஏற்றுக்கொண்டது. சிவன், விஷ்ணு போன்ற முழுமுதல் தெய்வம் என்னும் கருத்தையும், ஆலயவழிபாட்டையும், பக்தியையும் ஏற்றுக்கொள்ளாதது. வேள்வியை முன்னிறுத்தியது. ஆனால் பின்னர் அது சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்தியம், சௌரம் என்னும் ஆறுமதங்களிலும் நுழைந்து அவற்றை உள்ளிழுத்துக் கொண்டது. தன்னை நெகிழ்வாக்கிக் கொண்டு, முழுமுதல் தெய்வம், ஆலயவழிபாடு, பக்தி ஆகியவற்றுக்கும் இடம் கொடுத்தது. அதுவே இன்றைய வைதிகத் தரப்பு.
இந்து ஞானமரபிற்குள் என்றும் மிக வலுவான வைதிகமறுப்புத் தரப்புகள் உண்டு. சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம் என்னும் நான்கு தரிசனங்களும் அடிப்படையில் வேதமறுப்பு நிலைபாடு கொண்டவை. சார்வாகம், தார்க்கிக மதம் போன்றவையும் அவ்வாறே. சைவ மதத்திலுள்ள ஆறு புறச்சமயங்கள் அடிப்படையில் வேத எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டவை. சைவ புறச்சமயங்களின் நீட்சி என கொள்ளத்தக்க சித்தர் மரபிலும் வலுவான வைதிக எதிர்ப்பு உண்டு.
(இது சார்ந்த திரிபுகளுக்கும் அர்த்தமற்ற தர்க்கங்களுக்கும் அளவே இல்லை. ஆகவேதான் மெய்யுணர்ந்த ஆசிரியர் தேவை என்கிறேன்)
மூன்றாவது தரப்பு ,வேதங்களை ஞானத்தின் தொடக்க நூலாகக் கொள்வது. வேதத்தின் மெய்ஞானத்தை வளர்த்து முன்னெடுத்துச்செல்லும் நோக்கம் கொண்டது. வேள்விகளுக்கு எதிரானது அல்லது வேள்விகளை முதன்மையாகக் கருதாதது. ஆசாரங்களுக்கு, சடங்குகளுக்கு எதிரானது. வேதமறுப்பும் அதில் அரிதாகவேனும் உண்டு. அதை வேதாந்தம் எனலாம்.
சனாதன தர்மம் என்ற பெயர் பலராலும் இந்துமரபை ஒட்டுமொத்தமாகச் சுட்டிக்காட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அது முதல் தரப்பான வைதிக மதத்தை சுட்டவே இன்று பெரும்பாலும் புழக்கத்திலுள்ளது. ஏனென்றால் சனாதனம் என்றால் தொன்மையானது, தொடக்கமற்றது என்று பொருள். தொன்மையை முதன்மையான சான்றாகக் கொள்பவர்கள் வைதிகர்களே. தங்கள் தரப்பு பழமையானது, வழிவழியாக வருவது, ஆகவே மறுக்கப்பட முடியாதது என அவர்களே நம்புகிறார்கள். அவர்களே அச்சொல்லை அழுத்தமாகவும், முதன்மையாகவும் பயன்படுத்துகிறார்கள்.
ஆகவே அவர்களை எதிர்ப்பவர்களும் அதையே பயன்படுத்துகிறார்கள். வைதிக மரபுக்கு எதிரிகள் தாங்கள் இந்துமதப்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக எதிர்க்கவில்லை என்று தெளிவுபடுத்த சனாதன தர்மம் என்னும் சொல்லை கையாள்கிறார்கள். அத்துடன் வழிவழியாக வந்தவை என்று சொல்லி ஆசாரங்களையும், நம்பிக்கைகளையும் முன்வைப்பதை எதிர்ப்பதற்கும் அவர்கள் இச்சொல்லை கையாள்கிறார்கள்.
வேதாந்தத்தின் தொன்மையான நிறுவனங்கள் பலவும் நீண்டகாலம் முன்னரே வைதிகமயமாக்கப் பட்டுவிட்டன. அவை ஆசாரவாதத்தில் மூழ்கி, வேதாந்தத்தின் தத்துவத்தை முழுமையாகக் கைவிட்டுவிட்டன. ஆனால் இந்தியாவில் பதினெட்டாம் நூற்றாண்டில் வேதாந்தம் மறுமலர்ச்சி அடைந்தது. அதன் முகங்கள் என ராமகிருஷ்ண பரமஹம்சர் , விவேகானந்தர், நாராயணகுரு, நடராஜ குரு என பலர் உள்ளனர்.
ஆசாரவாத தரப்புகளின் கடுமையான கண்டனங்கள் எப்போதுமே இந்த புதிய வேதாந்த மரபுக்கு எதிராகவே இருப்பதை காணலாம். ஏனென்றால் மரபான வேதாந்த நிறுவனங்கள் வைதிக நிறுவனங்களாக ஆகிவிட்ட நிலையில் வேதாந்தத்தின் அறிவார்ந்த பார்வையை முன்வைப்பவை புதிய வேதாந்த மரபுகள்தான். ஆசாரவாதத்திற்கும், கண்மூடித்தனமான நம்பிக்கைகளுக்கும், சடங்குவாதத்திற்கும் எதிரான முதற்பெரும் சக்தி இந்தியாவில் புதிய வேதாந்த மரபுகள்தான்.
இந்தியச் சூழலில் சாதிசார்ந்த பிரிவினை, புரோகிதர்களின் மேலாதிக்கம் ஆகியவற்றை நேரடியாகவும் தீவிரமாகவும் முன்வைப்பவர்கள் வைதிகர்கள் என்னும் சனாதனிகள்தான். இன்றளவும் அவர்கள் அதில் எந்தச் சமரசமும் செய்துகொள்ளவில்லை.
இந்துமதத்தின் மூலநூல்களான சுருதிகளில் சாதி-இன பேதங்கள் பேசப்படவில்லை என்றும், சாதிபேதங்களெல்லாம் ஆசாரங்களே ஒழிய அடிப்படைக் கொள்கைகள் அல்ல என்றும், அவற்றைக் கடந்து இந்து மரபின் மெய்ஞானமே இன்றைய உலகுக்கு உரியது என்றும் சொல்பவர்கள் புதியவேதாந்த மரபைச் சேர்ந்தவர்கள் மட்டுமே. ஆசாரவாதிகளான சனாதனிகள் அல்லது வைதிகர்கள் அவ்வாறு எந்நிலையிலும் ஒத்துக்கொண்டதில்லை. மட்டுமல்ல, அதன்பொருட்டு அவர்கள் புதியவேதாந்திகளை வசைபாடவும் தவறுவதில்லை.
இன்று, சனாதனம் மீதான எதிர்ப்பு எழுந்ததும் இந்துமதத்தின் ஆசாரங்கள் அல்ல இந்துமெய்ஞானம் என்றும், பண்டைய நம்பிக்கைகளின் பொருட்டு இந்து மெய்ஞானத்தைக் குறைசொல்லமுடியாது என்றும், அவை காலத்தில் மாறிக்கொண்டிருக்கின்றன என்றும் சொல்பவர்கள் அச்சொற்களை மெய்யான சனாதனிகளான வைதிகர் எவரேனும் ஏற்பார்களா என எண்ணிப்பார்க்கலாம். அவர்களைக்கொண்டு அவ்வாறு சொல்ல வைக்க முயற்சியும் செய்யலாம்.
*
இந்தியச் சிந்தனைச் சூழலிலும், இந்து மெய்ஞானப் பரப்பிலும் வைதிகமரபு என்னும் சனாதனத் தரப்புக்கு எதிரான கடுமையான எதிர்ப்பும் விமர்சனமும் எப்போதும் நிகழவேண்டும் என எண்ணும் தரப்பைச் சேர்ந்தவன் நான். ஏனென்றால் அது ஆசாரவாதம். சடங்குவாதம். தொன்மையை அப்படியே பேணும் நம்பிக்கை கொண்டது. பழைய மரபில் இருந்த மானுடவிரோத எண்ணங்களையும், செயல்களையும் நீட்டிக்க விரும்புவது.
வைதிக மரபு அல்லது சனாதன மரபு பண்டைய இனக்குழு வாழ்விலிருந்த அனைத்தும் நீடிக்கவேண்டும் என்றும், ஏனென்றால் அவை வழிவழியாக வந்தவை என்றும் வாதிடுவது. அந்த இனக்குழு வாழ்வு இன்றில்லை என்றும், அந்த இனக்குழு வாழ்வின் வாழ்க்கைமுறைகள் பலவும் இன்றைய உலகின் நவீன அறவியலுக்கு ஒவ்வாத அநீதிகள் என்றும் ஏற்க பிடிவாதமாக மறுப்பது. மிகக்குறுகலான, முற்றிலும் தேங்கிப்போன வாழ்க்கைப்பார்வை கொண்டது.
அத்தரப்பின் குரல் மேலோங்கினால் ஆன்மிகம், தத்துவம் இரண்டும் தேக்கமடையும். சமூக வாழ்க்கை இருள்மூடும். கடுமையான சமூக அடக்குமுறைகளும் சுரண்டல்களும் உருவாகி சமூகத்தின் பொருளியல் வாழ்க்கையே சிதைவுறும். எல்லா மதப்பழமை வாதத்திற்கும் இது பொருந்தும். எல்லா மதப்பழமைவாதங்களும் தேக்கமுற்ற பார்வை கொண்டவைதான். மானுடவிரோத அணுகுமுறை கொண்டவைதான். அவை ஓங்கிய எந்த நாடும் வாழ்ந்ததில்லை. கண்முன் பல உதாரணங்கள் உள்ளன.
*
நான் வைதிக மறுப்பாளன், சனாதனத் தரப்பை எற்காதவன். ஆனால் சனாதனம் என் எதிர்த்தரப்பு. எதிரித்தரப்பு அல்ல. நான் வேதமரபை நிராகரிப்பதில்லை. என் கட்டுரைகளில் அதைக் காணலாம். நான் வேதங்களிலுள்ள தொன்மையான ஞானத்தின் பரிணாமத்தை அறிவார்ந்து அணுகி அறிபவன், அவற்றின் ஞானமெனும் சாராம்சத்தை ஏற்பவன். ஆகவே நான் மூன்றாவதான வேதாந்த தரப்பினன்.
நான் வேதங்களில் நினைப்பெட்டா காலம் முதல் உருவாகி வந்திருக்கும் மாபெரும் ஆன்மிகமான ஆழ்படிமத் தொகையை பெரும் மானுடச் செல்வமெனக் கருதுபவன். அவற்றை பயில முயல்பவன். ஆனால் அதனுடன் இணைந்த ஆசாரவாதத்தை, சடங்குவாதத்தை நிராகரிப்பவன். நான் நாராயணகுருவின் மரபில் வந்த வேதாந்தியான நித்யசைதன்ய யதியை ஆசிரியராகக் கொண்டவன் .இந்தத் தரப்பு இந்திய சிந்தனையின் மிக வலுவான, மிக முற்போக்கான ஒன்று என்பதை கொஞ்சம் வாசிப்பவரேகூட அறிந்துகொள்ளமுடியும்.
என் தரப்புக்கு எதிராக ஓர் ஆசாரவாதி முன்வைக்கும் கடுமையான கண்டனங்களை, முழு மறுப்பையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அந்தத் தரப்பு என்றும் இங்கே இருக்கும் என்றும் நான் அறிவேன். அவர்கள் இந்து மரபின் நிலைச்சக்தி. எதையும் மாற்றாமலிருக்க முயல்பவர்கள். ஆகவே சில அடிப்படையான விஷயங்கள் காலத்தில் மறையாமலிருப்பதும் அவர்களால்தான். சென்ற காலங்களில் மிக எதிர்மறையான சூழலில் இந்து மெய்ஞான மரபின் மூலநூல்களும், ஆழ்படிமங்களும் அழியாமல் காக்கப்பட்டது அவர்களின் பிடிவாதத்தால்தான்.
எந்த ஒரு இயக்கத்திலும் நிலைச்சக்தி, இயக்க சக்தி (Static – Dynamic) என இரண்டு விசைகள் இருக்கும். நிலைச்சக்தி முற்றிலும் இல்லாமலானால் அந்த இயக்கம் நிலைகொள்ளாமல் சிதறிப்பரவி அழியும். நிலைச்சக்தி மேலோங்கினால் அவ்வியக்கம் தேங்கிச் சிதையும். இயக்க சக்தியே ஓங்கி நின்றாகவேண்டும். இந்து மரபில் அது நவவேதாந்தத்தின் தரப்புதான்.
அத்துடன் இரண்டாம் தரப்பினரான வைதிகமறுப்பாளரின் குரலை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவ்வாறொன்று இந்தியச் சூழலில் என்றும் இருந்துகொண்டிருக்கும். இந்து மரபுக்குள் என்றும் அது ஒலித்துக் கொண்டிருக்கும். அது ஒருபோதும் இல்லாமலாகக் கூடாது. அது ஒடுக்கப்படுமென்றால், அது அழியுமென்றால், இந்து மரபு ஆசாரவாதம் நோக்கிச் செல்லும். அதன் அறம் தேக்கமுற்று அழியும்.
வேதகாலத்திலேயே வைதிக மறுப்பு வலுவாக இருந்துள்ளது. வேதங்களில் பிரஹஸ்பதியின் மரபு வேள்விவாதத்திற்கு எதிரானதாகச் சொல்லப்பட்டுள்ளது. கணாதர், அஜித கேசகம்பிளி என பல வேள்விமறுப்பாளர்கள் வேதங்களிலேயே உள்ளனர். மகாபாரதத்தில் வேதமறுப்பு மிக வலுவாக முன்வைக்கப்படுகிறது. மகாபாரதப்போர் முடிந்து யுதிஷ்டிரர் பதவியேற்றதுமே சார்வாகர் வந்து அந்த வெற்றியை நிராகரிக்கிறார்
சமண பௌத்த மதங்களில் வைதிக எதிர்ப்பு மிக வலுவாக இருந்தது. இன்றும் அம்மதங்கள் இங்கே உள்ளன. சைவத்தின் சமயப்பிரிவுகளில் பலவற்றில் வைதிக எதிர்ப்பு வீறுடன் இருந்தது. எம்.என்.ராய், தேவிப்பிரசாத் சட்டோபாத்யாய, கே.தாமோதரன் போன்ற அறிஞர்கள் இந்த மரபை ஆராய்ந்து விரிவாக எழுதியுள்ளனர்.
அதன்பின் இந்திய மறுமலர்ச்சியின்போது ஆங்கிலக் கல்வி வழியாக சீர்திருத்தப் பார்வையாகவும் தாராளவாதப் பார்வையாகவும் மார்க்ஸியப் பார்வையாகவும் வைதிக எதிர்ப்பு மீண்டும் உருவாகி வந்தது. நேரு, ராம் மனோகர் லோகியா, அம்பேத்கர், கே.தாமோதரன், இ.எம்.எஸ். நம்பூதிரிப்பாடு என அதன் சிந்தனைசார்ந்த முகங்கள் பல. சமூகசீர்திருத்தப் பிரச்சாரகராக ஈ.வெ.ரா அவர்களின் தரப்பும் அதுவே.
அவர்களின் முழுமையான வைதிக மறுப்புக்கான அடித்தளங்கள் இரண்டு உள்ளன. ஒன்று, சமூகப்பார்வை. வைதிகமரபின் பழமைவாதப் பிடிவாதம். அது மானுடவிரோதமாகவே ஆகிவிட்டிருக்கிறது. சகமனிதனை அது விலங்கைவிட கீழாக நடத்துகிறது. அந்த நோக்கால் பலநூறாண்டுகள் அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு அந்த மரபை முழுமையாக நிராகரிக்க முழு உரிமை உண்டு.
இன்னொன்று, தத்துவப்பார்வை. வைதிகமரபின் மூலநூல் சார்ந்த பிடிவாதச் சிந்தனைப்போக்கு (Canonism) புதிய பார்வைகளை மறுப்பது. எனவே தாராளவாத, ஜனநாயகச் சிந்தனைகளுக்கு எல்லாவகையிலும் எதிரானது. நேருவோ, லோகியாவோ வைதிகமரபை நிராகரிப்பதும் இயல்பானதே. அக்குரல்கள் எழவேண்டும், வலுவாக அத்தரப்பு நிலைகொள்ளவேண்டும் என்றே விழைகிறேன்.
நாராயணகுருவின் முதன்மை மாணக்கரான சகோதரன் ஐயப்பன் வேதவிரோதத் தரப்பைச் சேர்ந்தவர். புதிய கேரளத்தின் முதல் நாத்திகர், முதல் மரபு எதிர்ப்பாளர் அவர். இன்னொருவர் நாராயணகுருவின் அணுக்க மாணாக்கரான சி.வி.குஞ்ஞிராமன்.
*
தமிழகத்தில் நமக்கு எழுதப்பட்ட வரலாறு தொடங்கும்போதே இங்கே வைதிகம் இருந்துள்ளது. புறநாநூறு முதல் அதற்கான சான்றுகள் உள்ளன. அதை நான் விரிவாக எழுதியுள்ளேன். கூடவே புறநாநூறு முதல் வைதிக எதிர்ப்புக்கான தடையங்களும் உள்ளன. வைதிக அந்தணரை நிராகரிக்கும், கேலிசெய்யும் குறிப்புகளும் சங்கப்பாடல்களில் உள்ளன.
சிலப்பதிகாரத்தில் வேளாப்பார்ப்பார் (வேள்விசெய்யாத அந்தணர்) என்னும் தரப்பினரை இளங்கோ பதிவுசெய்கிறார். அவர்கள் வேள்விக்கு எதிரானவர்கள். மது, இசை முதலியவற்றில் ஈடுபட்டு வாழ்ந்தவர்கள். மணிமேகலையில் தமிழகத்தில் அன்றிருந்த பல்வேறு தத்துவத் தரப்புகள் விரிவாகப் பேசப்படுகின்றன. அவற்றில்பல வைதிக எதிர்ப்புத் தன்மை கொண்டவை.
தமிழகத்தில் பொது யுகம் 7 வரை சமண பௌத்த மதங்களே ஓங்கியிருந்தன. அவை முழுமையான வைதிக எதிர்ப்புத்தன்மை கொண்டவை. அவர்களின் நூல்கள் ஏராளமானவை. தமிழ் அறத்தின் முகமான திருவள்ளுவர் தமிழகத்தில் இருக்கும் தொன்மையான தரவுகளின்படி ஒரு சமணர். ஆசாரிய குந்துகுந்தர் என்னும் சமணமுனிவரின் மாணவர்.
ஏழாம் நூற்றாண்டு முதல் பக்தி இயக்கம் தமிழகத்தில் ஓங்கியது. சைவ வைணவ ஞானிகளால் உருவாக்கப்பட்ட பக்தி இயக்கம் பின்னர் இந்தியா முழுக்கச் சென்றது. பக்தி இயக்கம் வைதிக எதிர்ப்பு இயக்கம் அல்ல. வேதங்களை அது ஞானநூலாக ஏற்றுக்கொண்டதுதான். உதாரணமாக, சைவ பக்தி இயக்கம் சிவனை வேதமுதல்வன் என்று சொல்கிறது. ஆனால் அது வைதிக ஆதரவு இயக்கமும் அல்ல. அது வேள்விகளுக்கு எதிராக பக்தியையும் ஆலயவழிபாட்டையும் முன்வைத்தது. அவை இரண்டுமே வைதிக மரபுக்கு வெளியே இருந்தவை. வைதிகமரபு தன்னை பக்தி மற்றும் ஆலயவழிபாடு நோக்கி நகர்த்திக்கொண்டு பக்தி இயக்கத்தின்மேல் ஏறிக்கொண்டது. அவ்வாறுதான் அது தமிழகத்தில் பௌத்த, சமண மதங்களை வென்று மையப்போக்காக ஆகியது.
வைதிகம் உருவாக்கிய பல ஆசாரங்களையும் நம்பிக்கைகளையும் திரும்பத் திரும்ப பக்தி இயக்கம் நிராகரிப்பதைக் காணலாம். பக்தி இயக்கத்தின் மாறாத கரு என்பது வேதம் பயின்று, வேள்விசெய்யும் அந்தணர்கள் காணமுடியாத சிவனையும், விஷ்ணுவையும் சாதாரணமான வேடனோ விவசாயியோ தீவிரமான பக்தி வழியாக காண்பது என்னும் கதைதான். பக்தி இயக்கத்தின் முதன்மை ஞானிகள் பலரும் பிராமணரல்லாதவர்கள். அவர்களில் பலர் அடித்தளச் சாதியினர். நந்தனார் என்னும் தலித் பக்தரை ஆலயத்திற்குள் அனுமதிக்க பிராமணர்கள் மறுக்க, அவர் சிவனை கண்டு வழிபடுவதற்காக சிதம்பரம் ஆலயத்தின் நந்தி விலகி வழிவிட்டது என்ற கதையே ஓர் உதாரணம்.
பக்தி இயக்கம் எந்த வகையிலும் வேள்விகளைச் செய்யவோ வேள்விகளைக் காணவோ முடியாத சூத்திர – தலித் மக்களின் இயக்கமாகவே இருந்தது. அது உழைப்பாளிகளின் மரபு என்னும் பொருளில் சிரமண மரபு என்றே சொல்லப்பட்டது. வைதிக மரபு முன்வைத்த கடுமையான சாதியாசாரங்கள் பலவற்றை அது நிராகரித்தது. சடங்குகளை விலக்கி தூய பக்தியை முன்வைத்தது. வேதத்தை முதல்நூலாகச் சொன்னாலும் வைணவ இயக்கத்தை உருவாக்கிய ராமானுஜர் தலித் மக்களை திருக்குலத்தார் என்று சொல்லி வைணவர்களாக ஆக்கினார் என்பது வரலாறு. அவ்வகையில் தமிழ் பக்தி இயக்கத்தை ஒரு வைதிக மறுப்பு இயக்கம் என்று சொல்லலாம்.
தமிழகத்தின் சைவ மதம் என்பது பல அடுக்குகள் கொண்டது. மொத்தம் 12 பிரிவுகள் அதிலுள்ளன. அவற்றில் வலுவான பிரிவான சித்தாந்த சைவம் ஆறுபிரிவுகளை தனக்கு அன்னியமான புறச்சமயங்கள் என்று வகுக்கிறது. அறு பிரிவுகளை அகச்சமயம் என சொல்கிறது. அவற்றில் பல பிரிவுகள் வைதிக மறுப்புத்தன்மை கொண்டவை.
அத்துடன் சித்தாந்த சைவமே கூட வேதாந்தம் போல வேதங்களை தொடக்கநூலாக, புனிதநூலாக கருதுகிறதே ஒழிய மூலநூலாக கொள்வதில்லை. சைவ ஆகமங்களும், அவற்றின் வழிவந்த சிவஞானபோதம் போன்ற தத்துவநூல்களுமே அவற்றின் முதன்மை நூல்கள். தமிழ் சித்தாந்த சைவத்தின் மையங்களான சைவ மடங்களுக்கு நடைமுறையில் வைதிக ஏற்பு இல்லை. அவற்றின் துறவிகள் சூத்திரர்கள்.வைதிக மரபின்படி சூத்திரர்கள் துறவுபூண உரிமை அற்றவர்கள்.
சைவத்தில் இருந்து கிளைத்தது வள்ளலாரின் இயக்கம். அது தொடக்கத்தில் சித்தாந்த சைவம்போல வேதங்களை மூலநூலாக ஏற்றாலும் பக்தி இயக்கத்தின் மனநிலை கொண்டிருந்தது. விரைவிலேயே அது முழுமையாக வைதிகமரபை நிராகரித்து ஜோதி தரிசனத்தை முன்வைப்பதாக ஆகியது. வள்ளலாரிடம் தமிழ் சித்தர் மரபின் தாக்கமும் உண்டு. சித்தர்மரபில் பலர் வைதிக எதிர்ப்பாளர்கள்.
தமிழகத்தின் மைய மதநம்பிக்கை பக்தி இயக்கம் சார்ந்தது. பக்தி இயக்கத்தினுள் ஒரு சிறுபகுதியாக சனாதனம் என குறிப்பிடப்படும் வைதிகம் இங்கே நீடிக்கிறது. மறைமுகமாக மட்டுமே அதன் செல்வாக்கு உள்ளது. மக்களுக்கு அதனுடன் நேரடியான உறவில்லை.
அத்துடன் இந்து மதநம்பிக்கை என்பது இந்தியாவெங்கும் ஒரு குறிப்பிட்ட இயங்கியல் கொண்டது. அது மூன்று அடுக்குகளாகச் செயல்படுகிறது. உச்சத்தில் அது பிரம்மம் அல்லது பரம்பொருள் என்னும் அருவமான தூய தெய்வத்தை வழிபடுகிறது. மையத்தில் சைவ வைணவப் பெருமதங்கள் உள்ளன. அடித்தட்டில் நாட்டார் தெய்வங்களும் குடித்தெய்வங்களும் உள்ளன. நாட்டார் தெய்வங்களும் குடித்தெய்வங்களும் முழுமையாகவே வைதிக மரபுக்கு வெளியே உள்ளவை. பல தெய்வங்கள் வைதிகமரபுக்கு எதிரானவை.
ஆகவே தமிழகத்தில் வைதிகம் போலவே வைதிக எதிர்ப்பும் என்றும் வலுவாக உள்ளது. வைதிக எதிர்ப்பாளர்கள் வைதிக மதத்தை சனாதன தர்மம் என்று குறிப்பிடுகிறார்கள். அந்த எதிர்ப்புக்கான வரலாற்றுப் பின்னணி உள்ளது. சமூகக் காரணங்களும் உள்ளன.
*
இந்த பின்னணியிலேயே நான் முன்பு திருமாவளவனின் சனாதன எதிர்ப்பு இயக்கத்தை ஆதரித்தேன். அது ஒலித்தாக வேண்டிய தரப்பு என்று குறிப்பிட்டு எழுதினேன். அதையே உதயநிதி பேசியது குறித்தும் சொன்னேன்.
வடஇந்தியாவில் தென்னிந்தியா போல வைதிகமரபுக்கு எதிரான குரல்கள் வலுவாக இல்லை. விவேகானந்தரில் இருந்து தொடங்கும் நவவேதாந்தத்தின் தரப்பும் அங்கே தீவிரமாக இல்லை. பக்தி இயக்கத்தின் வைதிக எதிர்ப்பு காலப்போக்கில் மழுங்கிவிட்டது. நாட்டார் வழிபாட்டின் வைதிக எதிர்ப்பு ஒருங்கிணைக்கப்படவில்லை.
ஆகவே அங்கே வைதிகமே இந்துமதம் என்னும் எண்ணம் ஆழமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்துமதம் என்பது ஒற்றைப்படையான ஒரு அமைப்பு என்றும், அதில் ஒரே ஒரு கருத்துத் தரப்பே உள்ளது என்றும் அங்கே நம்பப்படுகிறது. அதை நிலைநிறுத்த அங்குள்ள ஆதிக்கசக்திகளும் அரசியல் சக்திகளும் இணைந்து முயல்கின்றன.
உதாரணமாக, ஒருவரை பிடித்து ஜெய்ஸ்ரீராம் என சொல்லவைக்கிறார்கள். சொல்லாவிட்டால் அடிக்கிறார்கள். ஒரு தென்னகத்து தீவிரச் சைவன் உயிர்போனாலும் அதைச் சொல்ல மாட்டான். அவன் இந்துதான். நான் அப்படிச் சொல்ல மாட்டேன். நான் வேதாந்தி. நானும் இந்துதான். ஆனால் நாங்கள் கொல்லப்படுவோம். விவேகானந்தரோ நாராயணகுருவோ வள்ளலாரோ இன்றிருந்தால் அவர்கள் இக்கும்பலால் கொல்லப்பட்டிருப்பார்கள்
இந்துமதமும் சனாதன மரபும் ஒன்று என்று சொல்லி, சனாதனத்துக்கு, அதாவது வைதிகத்திற்கு எதிரான தத்துவ நிலைபாடுகளையும், சமூக இயக்கங்களையும் இந்துமதத்திற்கு எதிரனதாக சித்தரிக்கும் போக்கு இந்து மெய்ஞான மரபுக்கே மிகமிக ஆபத்தானது. அது இந்து மெய்ஞான மரபின் உள்விவாதங்களை அழிக்கும். அதிலுள்ள சீர்திருத்தப் போக்குகளை ஒடுக்கும். இந்து மெய்மரபை பழமைவாதத்திலும், ஆசாரவாதத்திலும், சடங்குவாதத்திலும் கட்டிப்போடும். அது இந்து மதம் செய்துகொள்ளும் தற்கொலை.
இந்தியச் சூழலில் இந்து அல்லாத மதங்களில் இருந்தும், தாராளவாதிகளில் இருந்தும், மார்க்ஸியர்களில் இருந்தும் உருவாகும் எதிர்க்குரலும் மிக முக்கியமானது. அந்த விமர்சனமே இந்துமதத்தின் பழமைவாதத்தையும் அதன் மனித எதிர்ப்பு மனநிலைகளையும் கட்டுப்படுத்தும் சக்தி. எந்தக்குரலும் ஒடுக்கப்படலாகாது. எந்த கருத்தும் அவமதிப்பாக கொள்ளப்படலாகாது.
அதை எதிர்ப்பவர்கள் எதிர்க்கலாம். சனாதனிகளுக்கும் அந்த உரிமை உண்டு. வாதங்களில் தோற்கடிக்க முயலலாம். மிரட்டுவதும் வசைபாடுவதும் எவ்வகையிலும் ஏற்புடையவை அல்ல. அந்த விவாதச்சூழல் எப்போதும் இருந்தாகவேண்டும். புதிய தரப்புகள் உருவாகி வரவேண்டும்.
இந்து மதத்தின் வழிகாட்டிகளாக கற்றறிந்த அறிஞர்களும் ஞானிகளும் அமையவேண்டுமே ஒழிய அரசியல்வாதிகளும் தெருக்குண்டர்களும் அமையக்கூடாது. அனைத்து நதிகளும் கடலுக்கே செல்கின்றன என்று நமக்குக் கற்பித்தவர்கள் இந்து மெய்ஞானிகள் என்பதை நாம் மறக்கக்கூடாது.