அணி (புதிய சிறுகதை)
அன்புள்ள ஜெ
முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் ஆசிரியராகப் பணிபுரிந்தபோது உண்மையான ஒரு கல்வியாளனாகச் செயல்பட்டேன். சில புதிய விஷயங்களைச் செய்தேன். கிராமப்புற மாணவர்களுக்காகப் பணிபுரிந்தேன். என்னுடைய நேர்மைமேல் ஐயம் எழுந்தது. நான் இதேபோல ஓர் அக்கினிப்பரீட்சைக்கு தள்ளப்பட்டேன். இதேபோல என்னுடைய நேர்மையை நிரூபித்தேன். அதற்கு இரண்டு ஆண்டுகள் சஸ்பென்ஷன். நிறைய இழப்புகள். என்னுடன் கூடவே நின்றவர்களே என்னை இகழ்ந்தார்கள். நண்பர்கள் அவநம்பிக்கை அடைந்தார்கள். என் மாமனாரே என்னை சந்தேகப்பட்டார். என் அப்பாவே கூட உண்மையாடா என்று கேட்டார்.
ஆனால் உண்மை வென்றது. உண்மை வென்ற பிறகு நான் வெற்றிகரமாக மீண்டு வந்தேன் . இனிமேல் இதெல்லாம் வேண்டாம் என்று என் மனைவி சொன்னாள். இல்லை, நான் இதை உண்மையில் நம்பினேன் என்றால் இதிலேயே உறுதியாக இருப்பேன் என்று சொல்லி அதை தொடர்ந்து செய்தேன். வெற்றி தேடி வந்தது. மீண்டு வந்தபிறகுதான் உண்மையான மதிப்பு உருவானது. என் சொல்லுக்கு செவிகள் கிடைத்தன. நான் சும்மா பேசுபவன் இல்லை என்று நிரூபணம் ஆகியது.
இது ஒரு முக்கியமான விஷயம். நாம் பேசிக்கொண்டே இருந்தால் அதற்கு மதிப்பில்லை. நம் பேச்சுக்கு என்ன மதிப்பு என்று நாமேதான் உருவாக்கவேண்டும். நம் பேச்சு நமக்கு வாழ்க்கையேதான் என்று நாம் நிரூபிக்கவேண்டும். அதைத்தான் கூழங்கை தம்புரான் செய்கிறார். அதேபோல ஒரு அக்கினிப்பரீட்சையும் அதன் விளைவான காயமும் நானும் அடைந்தேன். அந்த அளவுக்கு இல்லை என்றாலும் அது முக்கியமான ஒன்று.
இன்றைக்கு அதை நினைத்துக்கொள்கிறேன். அக்கினிப்பரீட்சைக்கு ரெடியா என்றுதான் உலகம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
அன்புடன்
எம்.அருணாசலம்
அன்புள்ள ஜெ,
அணி சிறுகதையை உங்கள் தளத்தின் வாசித்தேன்,
ஒரு சித்தாந்தமும்.. அதை தொடர்ந்து இருக்கும் பக்தியும்.. அசைக்க முடியாத நம்பிக்கையும். அதைப் புரிந்து கொள்ளாத அந்தக் கூட்டத்தில் இருக்கும் சந்தர்ப்பவாதிகளும்.. இந்தக் கதையின் சூழ்நிலையும்.. கனக சபாபதியின் நிலையும்.. முதலில் நினைவுபடுத்துவது காந்தியையும் சத்யாகிரகத்தையுமே
அப்பன்டிக்ஸ் அறுவை சிகிச்சைக்காக முன்னமே ஆங்கிலேயர்களால் விடுவிக்கப்பட்ட காந்தி தன் தண்டனை காலம் முடியும் வரை தனக்குத் தானே சிறைவாசம் போல் இருந்ததும்.. கனகசபாபதி நடந்து கொண்டதும் ஒருவகைப் பட்டது…
இவ்விரண்டும் ஒருவித முட்டாள்தனமாகவோ… அல்லது மற்றவர் மனதில் நடத்தும் மாற்றங்களாகவோ பார்ப்பதும் கூட அவர்களை அவர்களே மதிப்பீட்டின் துலாபாரத்தில் நிறுத்துவதாக பார்க்கிறேன்…
இவ்வகை சிந்தனையை உருவாக்கிய உங்கள் கதைக்கு என் நன்றி
இப்படிக்கு அன்புள்ள,
புவனேஷ்