அன்புள்ள ஆசிரியர்க்கு,
வெளிநாடுகளில் பல வருடங்கள் இருந்து விட்டதால் பல வாய்ப்புகளை இழந்து விட்டு, முதல் முறையாக திரு. எம். கோபாலகிருஷ்ணன் கருத்தரங்கில் கலந்து கொண்டேன். உங்கள் தளத்தில் வந்த அறிவிப்பால் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன்.
அகர முதல்வன் தனி பட்டாளத்தானாக (one man army) அருமையாக சபை நடவடிக்கைகளை கோர்த்துக்கொண்டிருந்தார். விழாவில் அனைவர்க்கும் ருசியான இலவச உணவு இன்ப அதிர்ச்சி! தத்தம் ஆற்றலுக்கேற்ப அனைவரும் கருத்தரங்கை சிறப்புப்படுத்தினர்.
இது போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து உங்கள் தளத்தில் தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்.
அன்புடன்
ஜெ. ஜெயகுமார்
அன்புள்ள ஜெயக்குமார்
முன்பு எல்லா இலக்கிய நிகழ்வுகளையும் இந்தத் தளத்தில் அறிவித்துக்கொண்டிருந்தேன். அதுவே பாதி இடத்தை எடுத்துக் கொண்டது. ஆனால் அதைவிட ஒரு சிக்கல் உருவானது. ஓர் இலக்கியக்கூட்டத்திற்கு, என் அறிவிப்பைக் கண்டு, சென்ற வாசகர் ஒருவர் கடுமையான கடிதம் எழுதியிருந்தார். நிகழ்ச்சி நேரம் மாலை ஆறுமணி என அழைப்பிதழில் இருந்தது. ஆனால் தொடங்கியது ஏழரைக்கு. ஏனென்றால் தலைவர் என ஒரு விஐபி வரவில்லை. வரவேற்பாளர் அந்த விஐபியை புகழ்ந்து ஒரு மணிநேரம் பேசினார். அதன்பின் தலைவர் சம்பந்தமில்லாமல் ஏதோ பேசிவிட்டு உடனே சென்றுவிட்டார். அதன்பின் விழா ஆரம்பிக்கையில் ஒன்பது மணி ஆகியிருந்தது. நண்பர் கிளம்பி வீட்டுக்கு வந்து என்னை வசைபாடியிருந்தார்.
மறுநாளே இன்னொரு கடிதம். இது ஒரு ‘தீவிர’ இலக்கிய விழாவின் நிகழ்வு. இதுவும் தாமதமாக தொடங்கியது. வரவேற்புரை மிக நீளம். பங்கேற்பாளர் பேச்சுக்கள் இருவகை. ஒன்று மிக நீளமாக சிற்றிதழ் மொழியில் எழுதிக்கொண்டுவந்து முக்கி முக்கி வாசித்தனர். அல்லது ‘ஜாலியா இயல்பா பேசுவோம்’ என சொல்லிவிட்டு சம்பந்தமே இல்லாமல் உளறி, அரட்டையடித்து நேரவிரயம் செய்தனர். சென்றவர் நொந்துபோய் இனிமேல் இப்படி எங்களை ஏமாற்றவேண்டாம் என எனக்கு எழுதினர். “நீங்கள் கொஞ்சமேனும் சிபாரிசு செய்யாத கூட்டங்களை அறிவிக்காதீர்கள்” என அறிவுரை சொல்லி எழுதியிருந்தார் அந்த வாசகர். கணையாழிக் காலம் முதல் இலக்கியம் வாசிப்பவர் அவர். ஆகவே அன்றோடு எல்லா கூட்டங்களையும் அறிவிப்பதை நிறுத்திக் கொண்டேன்.
இலக்கியக் கூட்டங்கள் சார்ந்த அறிவிப்பை வெளியிடும்போது நான் அவற்றுக்கு ‘முழுமையாக’ பொறுப்பேற்றுக்கொள்ள முடியாது. எந்த விழாவும் ‘சொதப்புவதற்கான’ வாய்ப்பு எப்போதும் உண்டு. ஒரு பேச்சாளராவது உளறாமல் ஒரு நிகழ்வு நடந்து முடிவது அரிதினும் அரிது. நன்றாகப் பேசுபவர்கள் கூட சிலசமயம் குழப்பியடிப்பதும் உண்டு. நிகழ்வு திசைமாறிச் செல்வதும் வழக்கமே. ஆகவே முழுமையாக எவரும் இவற்றை கட்டுப்படுத்த முடியாது. எந்த வாக்குறுதியையும் அளிக்க முடியாது.
ஆனால் நான் எதிர்பார்ப்பவை இவை.
அ. நிகழ்ச்சி அமைப்பாளர் என ஆளுமை அல்லது அமைப்பு ஒன்று இருக்கவேண்டும். நிகழ்வை அவர் கட்டுப்படுத்தவேண்டும். அவர்மேல் அல்லது அந்த அமைப்பின் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கவேண்டும். மேடையில் ஒருவர் மிதமிஞ்சி நேரம் எடுத்துக் கொண்டால், சம்பந்தமில்லாமல் பேசினால், அதை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட நபரோ அமைப்போ அங்கே இருக்கவேண்டும். தேவையென்றால் சம்பந்தப்பட்டவர்களை மேடையைவிட்டு இறக்கிவிடவும் துணியவேண்டும். அப்படிப்பட்ட ஒரு பொறுப்பேற்றல் இல்லா நிகழ்வை நான் அறிவிப்பதில்லை.
ஆ. நிகழ்வின் நோக்கம் முழுக்கமுழுக்க அவையினரை நோக்கியதாகவே இருக்கவேண்டும். அவையினருக்கு கற்பித்தல் – மகிழ்வூட்டல் இரண்டும் நிகழவேண்டும். ஆனால் தன்னை, அல்லது மேடையில் வேறுசிலரை முன்வைக்கும் நோக்கம் மட்டுமே கொண்ட நிகழ்வுகளே இங்கே மிகுதியானவை. வெறும் புகழ்மொழிகளாகக் கொட்டுவார்கள். உபச்சாரங்களே ஒலித்துக்கொண்டிருக்கும். அவையினர் எதன்பொருட்டு அங்கே அமர்ந்திருக்கவேண்டும், அவர்கள் பெறுவதென்ன என்னும் கேள்வியே நிகழ்வின் அமைப்பாளர்கள் மற்றும் பேச்சாளர்களிடம் இருக்காது. அத்தகைய நிகழ்வுகளை முழுமையாகவே புறக்கணிக்கும் மனநிலை கொண்டிருக்கிறேன்.
இ. அதிகப்பிரசங்கிகள் என சில ஆளுமைகள் இன்று உண்டு. பேசித்தள்ளுவார்கள். எதையும் பெரிதாக அறிந்திருக்கவும் மாட்டார்கள். பேச ஆள் கிடைக்காமல் இவர்களையே மீண்டும் மீண்டும் அழைக்கும் வழக்கம் உண்டு. இந்த அதிகப்பிரசங்கிகளில் ஒரே ஒருவர் பெயர் பங்கேற்பாளர் பட்டியலில் இருந்தாலும் அந்த விழாவை நான் முன்வைப்பதில்லை.
ஈ. உரையாடல் அல்லது கேள்விநேரம் என்ற பெயரில் அவையினரை பேசவிடுவது பல இடங்களிலுண்டு. உரையாடல் உண்டு என்றால் அது முழுமையாக உரையா டல் நிகழ்வாக அமைக்கப்பட்டிருக்கவேண்டும். அப்படியென்றால் பங்கேற்பாளர்கள் , அவையினர் தேர்வு செய்து அழைக்கப்பட்டிருக்கவேண்டும். எவரும் எழுந்து எதையும் பேசலாம் என ஓர் அவை இருக்க இயலாது. இருந்தால் அதைக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருக்கும் தலைவிதி நமக்கில்லை. பொதுவாக இங்கே ‘மைக்பிடுங்கி’ என ஒரு கூட்டம் உண்டு. எந்த நிகழ்வுக்கும் சென்று தங்கள் வழக்கமான சலித்துப்போன சொற்களை அள்ளிக்கொட்டுவார்கள். மைக்கை இன்னொருவர் பிடுங்குவது வரை விடமாட்டர்கள். மாபெரும் நேரவிரயம் இவர்கள். இவர்களை அனுமதிக்கும் நிகழ்வுகளை நான் அறிவிப்பதில்லை. ஒருமுறை ஒர் அமைப்பு இவர்களை அனுமதித்தது என்றால் அதன்பின் அந்த அமைப்பின் எந்த நிகழ்வையும் நான் பொருட்படுத்த மாட்டேன்.
*
இலக்கிய நிகழ்வு என்பது ஒரு முக்கியமான பண்பாட்டு நடவடிக்கை. யூடியூபிலேயே உரைகள் உள்ளன. கட்டுரைகளை வாசிக்கவும் செய்யலாம். கருத்துக்களை அறிய நிகழ்வுக்குச் செல்லவேண்டும் என்பதில்லை. ஆனால் இலக்கிய நிகழ்வில் நாம் சகவாசகர்களைச் சந்திக்கிறோம். அவர்களுடன் ஒன்றாக இருப்பதே நமக்கு ஒரு திரளுணர்வை அளிக்கிறது. நாம் ஓர் அறிவார்ந்த இயக்கம் என்னும் தன்னுணர்வை அளிக்கிறது. அது அளிக்கும் ஊக்கம் சாதாரணமானது அல்ல.
இங்கே இலக்கியம், சிந்தனை என்பதெல்லாம் மிகச்சிறு வட்டத்துக்குள் நிகழ்பவை. வெளியே சாதிவெறி, மதவெறி இரண்டும் அரசியல் வேடம்கட்டி ஆடுகின்றன. அங்கே நமக்கு இடமில்லை. நாம் அன்னியர்கள். நமக்கு பலசமயம் அவர்களிடம் பேசவே சொற்களில்லை. தனிமைச் சிறையில் இருப்பவர்களுக்கு வரும் சோர்வு அவ்வப்போது இலக்கியவாசகர்களுக்கும் வரும். இலக்கிய நிகழ்வுகள் அச்சோர்வை போக்கி பல நாட்கள் நீடிக்கும் ஊக்கத்தை அளிப்பவை.
இலக்கியவாதிகளை பொறுத்தவரை தன் வாசகர்களை கண்ணெதிரே சந்திக்கும் நிகழ்வுகள் இவை. வாசகர்களை சந்திப்பது அளிக்கும் நிறைவு மிகமிக அரிய ஓர் உறுதிப்பாடு. மிக முதிய வயதில், ஆஸ்துமா நோயாளியான அசோகமித்திரன் , புறச்சென்னையிலிருந்து இலக்கிய நிகழ்வுகளுக்கு வந்துசென்றுகொண்டிருந்தது அதன்பொருட்டே. அத்துடன் வாசகர்களுக்கு ஓர் எழுத்தாளரைச் சந்தித்து “நான் உங்கள் வாசகன், நான் உங்களை தொடர்கிறேன்” என்று சொல்வதும் ஓர் அரிய அனுபவம்.
அனைத்துக்கும் மேலாக இளம் வாசகர்களுக்கும், இளம் எழுத்தாளர்களுக்கும் இலக்கியமென்னும் இயக்கத்தை கண்கூடாகக் காணும் இடம் இலக்கிய நிகழ்வுகள். நான் இதில் ஒரு பகுதி, நான் ஆகவேண்டிய ஆளுமை இவர் என ஓர் இளம் உள்ளம் அடையும் எழுச்சி இலக்கியச் செயல்பாட்டுக்கான பெரும் தூண்டுதல்.
ஆகவே இலக்கிய நிகழ்வுகளை முறையாக, அவையினரை மட்டுமே கருத்தில்கொண்டு, அவர்களை நிறைவுசெய்யும்பொருட்டு நிகழ்த்தியாகவேண்டும். அவ்வாறு நிகழ்த்துபவர்கள் நமக்குரியவர்கள். அவ்வாறன்றி திட்டமிடாமையால், திறனின்மையால், தன்னலநோக்கால் இலக்கியநிகழ்வுகளை சீரழிப்பவர்கள் இலக்கிய இயக்கத்துக்கு எதிரானவர்கள். முற்றாகப் புறக்கணிக்கத்தக்கவர்கள்.
ஜெ