காஞ்சிரம்

காடு நாவலில் வரும் ஒரு மரத்தைப்பற்றி பலர் எனக்கு கடிதம் எழுதிகேட்டிருந்தார்கள். காஞ்சிரம். அப்போது நான் அறிந்த ஒரு விஷயம் தமிழ்நாட்டில்மக்கள் பெரும்பாலும் நெருக்கமான தெருக்கள் அமைந்த ஊர்களிலேயே வசிக்கிறார்கள்.ஊரிலும் சுற்றி இருக்கும் பொட்டலில் சிலவகை மரங்களே உள்ளன. ஆகவேபெரும்பாலானவர்களுக்கு நிறைய வகையான மரங்களையும் செடிகளையும் தெரிவதேயில்லை.என்னுடையது போல மலையடிவாரக் கிராமத்தில் தோட்டம் சூழ்ந்த ஊரில் வாழ்வது இயற்கையைஅறிவதற்கான ஒரு முக்கியமான வாய்ப்பு.

காடு நாவலில் காஞ்சிர மரம் ஒரு யட்சிக்கதையின் பகுதியாக வருகிறது. காட்டில் ஒருமாபெரும் காஞ்சிர மரம் நிற்கிறது. அதில் ஒரு நீலி வசிக்கிறாள். மகாராஜாவுக்குபடுத்துத் தூங்க கட்டில் செய்வதற்காக அந்த காஞ்சிர மரத்தை வெட்டி உருட்டிச்செல்கிறார்கள். நீலியும் கூடவே சென்றுவிடுகிறாள். இளையராஜாவை அவள் தன்வசியத்துக்குள் அடக்கி விடுகிறாள்.

காஞ்சிரம் எங்கள் வீட்டுத் தோட்டத்திலும் நின்றது. அது பழைமையான வலுவான மரம்.அதன் காய்களை நாங்கள் பொறுக்கி லேசாக நசுக்கி கையில் வைத்திருப்போம். எவராவது சற்றுவாய் திறந்து நின்றிருந்தால் வாய்க்குள் திணித்து விடுவோம். காஞ்சிரம் உச்சகட்டகசப்புள்ள ஒரு தாவரம். அதன் இலைகள் காய்கள் எல்லாமே கசப்பு. வேர் கசப்பினாலேயேஆனது.

எங்கள் பாட்டி படுத்திருந்த ஒரு தட்டுபடி — அதாவது நான்குகால்கள் கொண்ட பலகை-காஞ்சிரத்தால் ஆனது. காஞ்சிரப்பலகையில் செய்யபப்ட்ட கட்டில் வாதத்துக்கு நல்லமருந்து என்று நம்பப்பட்டது. பழைய வீடுகளில் எல்லாம் காஞ்சிரக்கட்டில் கண்டிப்பாகஇருக்கும். ராதாகிருஷ்ணனின் பாட்டி ஏழுவருடம் காஞ்சிரக்கட்டிலில்தான் கிடந்தாள் –கடும் கசப்பின்மீது மரணத்தை காத்து….

காஞ்சிரத்துக்கு சம்ஸ்கிருதத்தில் குங்கலனம் என்று பெயர். விஷமுஷ்டி என்றும்சொல்வார்கள். அறிவியல் பெயர் Strychnos nux -vomica- loganiaceae. மரங்களைலக்கினங்களுடன் இணைப்பது ஆயுர்வேத மரபு. காஞ்சிரம் அஸ்வதி லக்கினத்தைச் சேர்ந்ததுஎன்பார்கள். அஸ்வதி லக்கினத்தில் பிறந்தவர்களின் மரம் இது என்பார்கள்.

மலைப்பிராந்தியங்களில் தன்னிச்சையாக வளரும். 18 மீட்டர் வரை பெரிதாகும்.வெயில்காலத்தில் இவை இலைக்ளை உதிர்த்துவிடும். இரட்டை இலையமைப்பு கொண்டவை. ஒருமூட்டில் இரு இலைகள். அவை எதிரெதிராக இருக்கும். இலை நீள்வட்ட வழிவமானது. இலையில்மூன்றுமுதல் ஐந்துவரை தடித்த நரம்புகள் இருக்கும்

பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை இவை பூக்கும். இப்போது பாறையடிமலைச்சரிவில் ஒருகாஞ்சிரம் பூத்திருக்கிறது. வெண்மையும் பச்சையும் கலந்த நிறமுள்ள குழாய்வடிவப்பூக்கள். வெந்தயம்போல மணக்கும். பூக்கள் கிளை நுனிகளில் இலைகளின் இடுக்குக்குள்இருக்கும். காஞ்சிரம்காய் நன்றாக உருண்டிருக்கும். மிகச்சிறிய நார்த்தங்காய் போல.உள்ளே நல்ல சதைப்பற்றும் அதற்குள் விதைகளும் இருக்கும். பழுக்கும்போது ஆரஞ்சு நிறம்கொள்கிறது.

காஞ்சிரத்தின் மிகச்சிறந்த பயன்களில் ஒன்று அதை கரையான் அரிப்பதில்லை என்பது.மண்சுவரின்மீது காஞ்சிரத்தடியை அடிக்கட்டையாக வைத்து அதன் மீது பிற மரங்களை வைத்துகட்டிடம் கட்டுவது வழக்கம். மண்ணுடன் தொடும் மரப்பகுதிகளை எல்லாம் காஞ்சிரத்தில்அமைப்பது பழைய வழக்கமாக இருந்தது.

காஞ்சிரம் வேர்முதல் அனைத்துமே சிறந்த மருந்து. காஞ்சிரக்கொட்டை ஆளைக்கொல்லும்விஷம். அதன் வேரும் பட்டையும் காயும் ஆயுர்வேதம் ஹோமியோபதி சீன மருத்துவம்அனைத்திலும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. கபத்தைக் கட்டுவதும் வாதத்தைஇல்லாமல்செய்வதும் இதன் விளைவுகள் என்று நூல்கள் சொல்கின்றன. இதய நோய்க்கும் இதுமருந்து. ஆனால் அளவறிந்து பயன்படுத்தவேண்டும்.

தமிழில் காஞ்சிரம் எட்டி என்றும் சொல்லபப்டுகிறது. எட்டிக்காய் என்ற சொல் மிககசப்பானது, வெறுக்கத்தக்கது என்ற பொருளில் மொழியில் இருக்கிறது என்றாலும்எட்டிக்காயை பார்த்தவர்கள் மிகச்சிலரே இருப்பார்கள். எட்டிக்காய் ஒரு கவித்துவஉருவகமாகவே இன்று உள்ளது. தமிழில் மருத்துவத்தையும் கல்வியையும் இலக்கியத்தையும்ஒரேசமயம் நிகழ்த்திய சமணர்களே இத்தகைய மூலிகைகளை படிமமாக ஆக்கிய முன்னோடிகள்எனலாம்

கைத்துக் கடிதுஅடும் காஞ்சிரம் தின்பவன் தீங்கனியைத்
துய்த்துச் சுவைகண்டபின்விடுமோசுரராய் நரரோடு
ஒத்துத் திரிபவர்க்கு அன்புசெய்வார்உமதுஉண்மைகண்டால்
வைத்துப் பிரிவர்களோபிண்டி நீழல்எம்மாமணியே.

கசந்து விரைவில் கொல்லும் காஞ்சிரத்தை தின்பவன் தீங்கனியைசுவைத்து சுவைகண்டபின் விடுவானா? மனிதர்களைப்போன்ற ஆசாபாசங்களில் உழலும் தேவர்கள்மேல் பக்தி செய்து வாழ்பவர்கள் உன்உண்மையைக் கண்டறிந்தபின் விடுவாரா அசோகமரத்தடியில்அமர்ந்த பிரானே”

அவிரோதி ஆழ்வார் என்னும் சமண முனிவர் இயற்றிய திருநூற்றைந்தந்தாதிப் பாடல்இது.

‘கல்பாந்த காலம் தேனிலிட்டாலும் காஞ்சிரம் இனிக்குமோ’ என்று மலையாளப் பழமொழிஉண்டு. ‘காஞ்சிரமும் மாமரமும் மண்ணில் எடுப்பது ஒரே நீரைத்தானே’ என்று ஒரு பழமொழி. ‘காஞ்சிரத்தில் படர்ந்தால் சீனிவள்ளியும் கசக்கும்’ என்றும் ‘காஞ்சிரத்துக்குயிலின் பாட்டு கசக்குமா’ என்றும் பழமொழிகள் உண்டு.

கசப்பில் வேரோடி, கசப்பாய் தடி யெழுந்து, கசப்பு தளிர்விட்டு, கசந்து பூத்துநிற்கும் காஞ்சிரத்தை நான் பல சமயம் ஆச்சரியத்துடன் எண்ணிக்கொண்டதுண்டு. பெரியகாஞ்சிர மரத்தடியில் பெரும்பாலும் யட்சி பிரதிஷ்டை இருக்கும். அநீதியாகக்கொல்லப்பட்டு ஆறாச்சினத்துடன் மண்ணுக்குச் சென்றவர்கள் யட்சிகளாகிறார்கள். கசப்பேஉருவான காஞ்சிரம் மரங்களில் ஒரு யட்சிபோலும்.

[மறுபிரசுரம் / முதற்பிரசுரம் பெப்ருவரி 2009]

http://mooligaivazam-kuppusamy.blogspot.com/2008/09/blog-post_11.html
http://www.jainworld.com/JWTamil/jainworld/thirunutranthati/index.html
http://58.1911encyclopedia.org/Nux_Vomica

முந்தைய கட்டுரைஒலியும் மௌனமும்- கடிதம்
அடுத்த கட்டுரைவிழா பதிவு -கடிதம்